வணக்கம், நலந்தானே!



ஆன்மிகப் பயிற்சி  என்ற அடிப்படை ஒழுக்கம்

ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!


வக்கிரம் என்பது ஒவ்வொரு மனித மனதுக்குள்ளும் ஒளிந்து கொண்டிருக்கக் கூடிய அரக்கன். வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலாவது எந்த வயதிலாவது அந்த அரக்கன் கொஞ்சமாவது வெளிப்படத்தான் செய்வான். கல்வி, செல்வம், காமம் சார்ந்ததாக அந்த வக்கிரத்தைப் பொதுவாகப் பாகுபடுத்தலாம். கல்வியாலும், செல்வத்தாலும் செருக்குற்று பிறர் மனம் வருந்தச் செய்வது அந்த வக்கிரத்தின் வெளிப்பாடு. இந்த இரண்டு விஷயங்களிலும் அவ்வாறு செருக்கடையவும், அதன் தொடர்பாக வக்கிரம் கொள்ளவும் கல்வியில் சிறந்த தேர்ச்சி, செல்வத்தின் செழிப்பு என்ற அடிப்படை ‘தகுதி’கள் இருக்கின்றன என்று ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், காமத்துக்கு அப்படி ஒரு தகுதி என்று எதைச் சொல்வது?

இந்த வக்கிர அரக்கனைக் கட்டுப்படுத்தவல்ல ஒரே ஆயுதம் ஆன்மிகப் பயிற்சிதான். நம் மனதும், மூளையும் வலுவாக இருக்கும்வரை எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம்; பட்டங்கள் பெறலாம்; கல்வியில் ‘கரை’ கண்டவனாகவும் திகழலாம். அதேபோல நம் மனமும், உடல் ஆரோக்கியமும் வலுவாக இருக்கும்வரை நிறைய உழைக்கலாம்; நிறைய சம்பாதிக்கலாம்; செல்வந்தனாகப் புகழடையலாம்.

ஆனால், காமத்துக்கு மனசு மட்டும்தான் ஒரே காரணமாக இருக்க முடியும். பால்ய பருவத்திலிருந்தே இந்த ‘மன வக்கிரம்’ தோன்றிவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர், நண்பர்கள், மேலதிகாரி, சக ஊழியர்கள், மனைவி என்று அமைபவர்கள் எல்லோருமே அந்த வக்கிர உணர்வுத் தூண்டலுக்கு ஏதாவது ஒரு வகையில் காரணமாக அமைந்துவிடுகிறார்கள். இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்தந்த வயதில் நாம் மேற்கொண்டிருக்கும் பொறுப்பிற்கே முக்கியத்துவம் கொடுத்து வக்கிர உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க வேண்டும்; அல்லது தள்ளிப்போடவாவது வேண்டும்.

இதற்கு ஆன்மிகப் பயிற்சி பெரிதும் உதவும். எல்லா வயதிலும், மேலே சொன்ன நம்மைச் சார்ந்தவர்கள் ஆன்மிக உணர்வுக்கும் தூண்டுகோல்களாக அமைபவர்களாக இருப்பார்கள். பொதுவாகவே, இயல்பாகவே இறை சிந்தனை இருக்குமானால், அது ஒழுக்கத்துக்கான ஆதார பயிற்சி என்பதை உளமாற உணர்ந்தோமானால், கல்வி, செல்வம், காமம் முதலான எல்லா வக்கிரங்களையும் நம்மால் அடக்கி ஆள முடியும்.     

(பொறுப்பாசிரியர்)
பிரபு சங்கர்