ஸ்ரீ ராம தரிசனம் பேசும் சிலைகள்!



தில்லைவிளாகம்

சீதை, லட்சுமணன், அனுமன் உடன் வர, பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை நோக்கி நடந்தார் ராமன். ஆர்ப்பரிக்கும் கடலலையின் சப்தங்களையும் தாண்டி குயில்களின் கூவலும், மயில்களின் அகவலும் நிறைந்த ஆரண்யத்திற்கு நுழைந்தனர். பரத்வாஜர் தியானத்திலிருந்து எழுந்து குடிலின் வாயிலுக்கு வந்தார். சிஷ்யர்கள் புடை சூழ்ந்து ஸ்ரீராமருக்காக காத்திருந்தார். ராமரையும், சீதையையும், லட்சுமணரையும், அனுமனையும் கண்டவர்கள் ‘ராமா... ராமா...’ என்று அரற்றினார்கள்.

சிலர் அருகே செல்லாமல் தாம் இருக்கும் இடத்திலேயே விழுந்து வணங்கினார்கள். பரத்வாஜர் ராமரின் கரம் தொட்டு வரவேற்றார். நால்வருக்கும் தாகத்திற்கு குளிர் நீர் தந்தனர். சகலவிதமான கனிகளும், விதவிதமாக சமைக்கப்பட்ட உணவுகளையும் கொண்டு வந்தனர். ராமர் பிரமித்துப் போனார். அவர்கள் வயிறு நிறைய புசித்தால்தான் தனது அகம் நிறையும் என்று கெஞ்சினார், பரத்வாஜர். முகம் மலர்ந்து சம்மதித்தார், ராமர். இன்னுமோர் விண்ணப்பமாக ராமர் அங்கு தங்கி ஓய்வெடுத்து செல்ல வேண்டுமென அன்போடு கேட்டுக் கொண்டார் மகரிஷி.

ஆஞ்சநேயரைப் பார்த்தார் ராமர். அவரின் மனதை அறிந்த அனுமன், ‘‘எனக்குப் புரிகிறது ஐயனே. இது வனவாசத்தின் இறுதி நாட்கள். தாங்கள் வருவீர்கள் என்று தெரியாமல் தங்கள் தம்பி பரதர் ஏதேனும் தவறான முடிவுக்கு சென்று விடக்கூடும் என்றும், அதற்கு இங்கு ஏற்படும் காலதாமதமும் காரணமாகக்கூடும் என்றும் நீங்கள் அஞ்சுகிறீர்கள். தாங்கள் பிராட்டியோடும், லட்சுமணரோடும் வந்து கொண் டிருக்கிறீர்கள் என்று பரதரிடம் சொல்லி விடுகிறேன்” என்றார், ஆஞ்சநேயர்.

 பரத்வாஜர் விநய ஆஞ்சநேயரையும், வெற்றியோடு திரும்பும் வீரகோதண்ட ராமனையும், பிராட்டியையும், இளவல் லட்சுமணரையும் கண்டவர், அக்கோலத்தை அப்படியே தம் மனதில் நிறுத்திக் கொண்டார். எத்தனை அபூர்வ கோலம் இது என மனச் சித்திரமாக தீட்டினார். அதை தம் சீடர்களின் மனதிலும் பதித்து வைத்தார். அந்த நால்வரும் அந்தக் கானகத்திற்கு வந்து சென்ற விஷயத்தை, காலம் காலமாக சங்கிலித் தொடர் போல சொல்லிக் கொண்டே வந்தனர். வால்மீகியும், கம்பனும்கூட, அவர்கள் பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு வந்து சென்றதை கவிபாடி களித்தனர்.

அவர்களது அந்த அழகிய கோலத்தை சிலை வடித்து பூஜித்து வந்தனர். காலம் கரைந்தது. அந்த அபூர்வ சிலைகளை பூமாதேவி தனக்குள் ஏற்றுக் கொண்டு மறைத்தாள். அவற்றை வெளிப் படுத்த சரியான காலத்திற்காக காத்திருந்தாள். வெள்ளையர்களின் கிடுக்கிப் பிடியில் பாரதம் சிக்குண்ட காலம் அது. மிகச் சரியாக 1862-ம் வருடம். அந்த பரத்வாஜரின் ஆசிரமப் பகுதி மறைந்து இப்போது தில்லைவிளாகம் எனும் சிற்றூராக மாறிவிட்டிருந்தது. கடலின் அலை ஓசையும், ஆன்றோர்களின் வாக்குகளுமே ராமன் வந்து சென்றதற்கு நிரந்தர சாட்சி சொல்லிக் கொண்டிருந்தன.
வேலுத்தேவர் என்பவர் ராமனின் மீது அளவிலா பக்தி கொண்டிருந்தார்.

‘என் ராமனை பரத்வாஜர் கண்டதுபோல நானும் காணமுடியாதா’ என்று ஏங்கினார். தூக்கத்திலும் அதே எண்ணம், தவிப்பு. அவருடைய கனவில் பூமி பிளந்தது. அதற்குள் ராமர், லட்சுமணர், சீதாப் பிராட்டி, ஆஞ்சநேயர் நால்வரும் அழகாக மேலெழுந்தார்கள். ‘எனக்கொரு ஆலயம் எழுப்புங்கள்’ என்பதுபோல அவர்கள் அவருக்கு உணர்த்தினார்கள். இது வெறும் கனவல்ல என்று மட்டும் அவர் மனதுக்குள் திடம் பெற்றிருந்தார். கனவில் கண்ட காட்சியின் ஆதாரத்தில் ஊர் மக்களை அவர் அழைத்துச் சென்றார்.

அவர் காட்டிய இடத்தை தோண்ட ஆரம்பித்தார்கள். சில அடிகளில் செங்கற்கள் உடைந்து சிதறின. கைகளால் மண்ணை அள்ளி எடுக்க சட்டென்று ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. வேலுத்தேவர் மணல் துகள்களை விலகிப் பார்க்க அதிர்ந்து போனார். பச்சை நரம்பு ஓடும் விக்ரக கால்களைக் கண்டதும் அப்படியே உடம்பு உதறிப்போட்டது. முழு விக்ரகத்தையும் கையில் எடுக்கும்போது விரல் நகமும், முகத்தின் பிரகாசமும் பார்த்து அதிசயித்தார்கள். இன்னும் அகழ்ந்தெடுக்க சீதாப் பிராட்டியார், லட்சுமணர், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ருக்மணி - சத்யபாமா, சக்கரத்தாழ்வார், சந்தான கிருஷ்ணன் என்று அடுத்தடுத்து சிலைகள் கிடைத்தன. ஊரார் மகிழ்ச்சியில் திளைத்தனர். அயோத்திக்கே சென்று விட்டதுபோல் உணர்ந்தனர்.

ஒரு சிறு கீற்றுக் கொட்டகையினுள் விக்ரகங் களை வைத்து வழிபட்டனர். அதே ஊரைச் சேர்ந்த அய்யாவு அய்யங்கார் என்பவரைக் கேட்டபோது சுவாமிகளின் பெயர்களை சொன்னார். தினமும் அதற்குரிய நியமங்களோடு பூஜை நடந்து வந்தது. ராமன் அழகிய ஆலயத்துக்குள் அமரும் நாள் அருகி வந்தது. 1905ம் வருடம் லால்குடியைச் சேர்ந்த பொறியாளர் கோபாலகிருஷ்ணன் என்பவர் தனக்கொரு வாரிசு இல்லையே என வருந்தினார். கீற்றுக் கொட்டகை ராமனே கதி என்று கிடந்தார். வெகுவிரைவில் ராமர் அழகான ஆண் குழந்தையை அருளினார்.

அந்தச் செய்தியைக் கேட்டவர் நேராக தில்லைவிளா கத்திற்கு வந்தார். தனது சொந்த செலவிலேயே கருங்கல் கோயிலை கட்டித் தந்தார். 1913-ம் வருடம் வெகுவிமரிசை யாக கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலின் புகழ் எட்டுத் திக்கிலும் பரவியது. தில்லைவிளாகம் என்றாலே எல்லோருக்குள்ளும் கோதண்டராமரின் நினைவு தான் வந்தது.

தில்லைவிளாகம் எப்போதும் சிலுசிலுவென்று கடற் காற்று தவழ்ந்து செல்லும் இதமான பூமி. வழி முழுக்க தென்னையும், வாழையும், மாந்தோப்புகளும் பரவியிருக்கின்றன. மிக ரம்மியமான சூழலில் அமைந்திருக்கிறது  தில்லைவிளாகம் கோதண்ட ராமர் கோயில். அழகான முகப்பு கோபுரம் தாண்டி உள்ளே செல்கையில் நீண்ட பாதையைத் தாண்டி நேராக கருவறை அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபத்தில் பெரிய திருவடி எனும் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். கருவறையில் கற்சிலைகளே கிடையாது. பூமியிலிருந்து வெளிப்பட்ட பஞ்சலோக சிலைகளே மூலவராக அருள்பாலிப்பதுதான் இத்தலத்தின் முதன்மையான சிறப்பு.

ஸ்ரீராமர் கோதண்டத்தை கையில் ஏந்தி இன்முகத்தோடு கோதண்டராமராக காட்சியளிக் கிறார். அன்றலர்ந்த தாமரையாக திருமுகம் மலர்ந்திருக்கிறது. வனவாசம் முடித்து நாடு திரும்பும் பூரண மகிழ்ச்சி முகம் முழுதும் பொங்கிப் பரவியிருக்கிறது. கோதண்டத்தை தாங்கி நிற்கும் ஒயிலும், இடுப்பின் குழைவும் சிலிர்ப்பூட்டும் பேரழகு. கைவிரல் நகங்கள், நரம்புகளின் புடைப்புகள், மச்சங்கள், வலது காலில் ஓடும் பச்சை நரம்புகளெல்லாம் பார்க்கும்போது விக்ரகம் உயிர் பெற்றதோ என்ற பிரமிப்பு மூச்சை நிறுத்திவிடும் போலுள்ளது.

நாம் பேசினால் பதிலுக்குப் பேசுவாரோ என்று கூடத் தோன்றுகிறது. பொதுவாக     கோதண்டராமர் வலது கையில் அர்த்த சந்திரபாணம் என்ற பிறைநிலா வடிவ முனை கொண்ட பாணம்தான் இருக்கும். ஆனால், இங்கு ராமசரம் எனும் பாணம் தரித்திருப்பது மிகவும் அபூர்வமானது. ஏவப்பட்ட பிறகு அழித்து விட்டு மீண்டும் இவரிடமே திரும்பும் வியத்தகு ஆற்றல் கொண்டது இது.

சீதை அன்பும், கனிவும், இனிமையும் பொலிய பேரழகு பிராட்டியாக சேவை சாதிக்கிறாள். இளையாழ்வார் லட்சுமணர் பணிவோடு அண்ண லுக்கு அருமைச் சகோதரனாக நின்றிருக்கிறார். ராமதாசனான அனுமன் தன்னை சிறியோனாக நினைத்து மிக பவ்யமாக வாய் பொத்தி, விநயமாக தலை தாழ்த்தி நிற்கும் பாங்கு வேறெங்கும் காணமுடியாதது. பதினான்கு வருட வனவாசத்திற்குப் பிறகு வெற்றியோடு திரும்பியதால் வேண்டும் வரங்களை வாரிவாரி வழங்குகிறார், வீரகோதண்ட ராமர். கருவறையே ஒரு ராஜதர்பார் போன்று விளங்குகிறது. எப்போதும் சலசலத்து ஓடும் ஆற்றைப்போல ஒரு சிலிர்ப்பு அந்தச் சந்நதியில் துடித்துக் கொண்டே இருக்கிறது. நம்மையறியாமல் ஆனந்தப் பூரிப்பு நம்மையும் சூழ்ந்து கொள்கிறது.

  குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்திலுள்ள ராமர் தீர்த்தத்தில் நீராடி, சந்தான கிருஷ்ணனை கணவனும், மனைவியுமாக கையில் ஏந்தி மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். பிறகு, வெகுவிரைவில் குழந்தையோடு தில்லைவிளாகத் திற்கு வந்து நன்றிக் கடன் செலுத்துவது இங்கு சகஜமானது.  பெரியதுமல்லாது சிறியதுமல்லாது நடுவாந்திரமான கோயில் இது. கோயிலை வலம் வந்து வணங்கும்  போது, ராமரின் அருளலைகள் நமக்குள் தளும்பத் தளும்ப நிரம்புவதை மிக எளிதாக உணரலாம். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில், பட்டுக்கோட்டை - வேதாரண்யம் வழித்தடத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

- கிருஷ்ணா
படங்கள்:  சி.எஸ்.ஆறுமுகம்