வணக்கம், நலந்தானே!



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

பரீட்சைக்குப் பின் பாடம்!


பள்ளிக்கூடத்தையும் வாழ்க்கையையும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் நமக்கு நிறைய பாடங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதன் பிறகு நமக்கு அந்தந்தப் பாடங்களில் பரீட்சை வைக்கிறார்கள்.ஆனால், வாழ்க்கையிலோ நிறைய சோதனைகள், சவால்கள், பரீட்சைகள். இவற்றை நமக்குக் கொடுத்து உலகுக்கெல்லாம் மூத்த ஆசிரியனான இறைவன், இவற்றுக்குப் பின்னால் நமக்குப் பாடம் போதிக்கிறான்! அதாவது, பரீட்சைக்குப் பிறகு பாடம்!

‘எனக்கு ஏன் இத்தனை சோதனைகள்?’ என்று அங்கலாய்ப்பவர்களுக்கு, பெரியவர்கள், ‘படித்தவனுக்குதானே பரீட்சை?’ என்று கேட்டு ஆறுதல்படுத்துவார்கள். அதாவது ‘சோதனைகள் தரும் போதனைகளால் உன்னைப் பக்குவப்படுத்திக்கொள்’ என்பது அந்த அறிவுரையின் உள்ளீடு. வாழ்க்கைப் பரீட்சையில் நாம் மூன்றுவகையான நபர்களை மறக்கவே கூடாது.

முதலாவது, நமக்கு சோதனையான காலகட்டத்தில் நம்முடனேயே துணையிருந்து நமக்கு ஆறுதலும், தேறுதலும் அளிப்பவர்கள். இவர்கள் உதவியால் நாம் சோதனையை வென்று, புதுப் பொலிவு பெற முடியும். இரண்டாவது அந்த சோதனை மிக்க காலத்தில் நம்மை விட்டு சுயநல நோக்கோடு விலகிவிடுபவர்கள். இவர்கள் திரும்பவும் வருவார்கள். சோதனையை வென்று நாம் உயரத்தில் இருக்கும்போது தம்மையும் கைத்தூக்கிவிடுமாறு கேட்டு கரம் நீட்டுவார்கள்.

இவர்களுக்குப் பெருந்தன்மையோடு கைகொடுத்து அவர்களுக்கும் உதவவேண்டும் என்ற மனப் பக்குவத்தை நமக்கு அளித்தவர்கள் இவர்கள். மூன்றாவது, நமக்கு அந்த சோதனையான காலகட்டத்தை உருவாக்கியவர்கள்! இவர்கள் மீண்டும் நம் வாழ்வில் குறுக்கிடமாட்டார்கள்; அப்படியே குறுக்கிட்டாலும், நாம் அவர்களைவிட்டு விலகி போய்விட வேண்டும் என்ற படிப்பினையை நமக்கு அளித்தவர்கள் அவர்கள்.

ஆமாம், வாழ்க்கை என்பது மிகவும் கடினமான பரீட்சை காலமாகத்தான் விளங்குகிறது. இந்த வாழ்க்கைப் பரீட்சையில் சிலர் தோல்வியுறக் காரணம் என்ன?அவர்கள் பிறரை பார்த்து காப்பி அடிப்பதால்தான். காப்பி அடித்தால் தேர்வில் தோல்வியுறுவானேன்?

இது பள்ளிக்கூடப் பரீட்சையல்ல; வாழ்க்கைப் பரீட்சை. இந்தப் பரீட்சைக்கான கேள்வித்தாள்களை உருவாக்குபவர் இறைவன். அவர் ஒவ்வொரு மனிதரையும்
தனித்தனியே உய்விக்கப் பார்க்கிறார்.

அதனால் அவர் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித்தாள்களைத் தயாரித்து பரீட்சை வைக்கிறார். தனித்தனி கேள்வித்தாள் பெற்றவர்கள், தவறான விடைகளைக் காப்பியடித்தால் எப்படி வெற்றி காண இயலும்? ஆகவே சுயமாக சிந்தித்து, தம் சோதனைகளிலும் பிறர் அனுபவங்களிலும் நாம் பாடம் பயில வேண்டும். அதைத்தான் இறைவன் எதிர்பார்க்கிறார்.

பிரபு சங்கர்

(பொறுப்பாசிரியர்)