ஆயிரம் கோடி மன்மதன்களும் ஈடாவரோ அழகு முருகனுக்கு!



பக்தித் தமிழ் 30

தமிழ்க் கடவுள் முருகன். அழகு என்ற பொருளிலேயே அமைந்த அந்தக் கந்தன் பெருமையைப் பல தமிழ்ப் புலவர்கள் அழகழகாகப் பதிவு செய்துள்ளார்கள். சரவணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ‘கந்த புராணம்’ என்கிற அருமையான காப்பியமொன்றும் உள்ளது. சிறுவயது சுப்பிரமணியனைப் பற்றிப் பல பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இவை தவிர, கார்த்திகேயன் புகழ் சொல்லும் தனிப் பாடல்களும் ஏராளம்.

கொஞ்சம் பொறுங்கள். முருகன், கந்தன், சரவணன், சுப்பிரமணியன், கார்த்திகேயன்... ஒரே ஒரு பத்திக்குள் இவருக்கு இத்தனை பெயர்களா! இன்னும் இருக்கிறது! திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கும் முருகனைப் பற்றித் திருச்சிற்றம்பல நாடிகள் எழுதிய ‘திருச்செந்தூர் அகவல்’ என்ற நூலில் வரும் வரிகள் இவை:
ஓம் எனும் தாரக ஒண்பொருள், சிவனுக்(கு)
ஆம் என மொழிந்தே அருள் குரு ஆனோன்,

பொற்பு உறு பொதிய வெற்பு உறு முனிக்கு
நல் பொருள் விளக்கும் ஞான தேசிகன்,
பொய்வழிச் சமணப் புலை இருள் நீக்கிச்
சைவம் வளர்க்கும் சம்பந்த மூர்த்தி,
முருகன், குமரன், மூ இரு முகன், மால்
மருகன், சிவன் அருள் மைந்தன், கந்தன்,

மலைமகள் பாலன், வயம்கிளர் வேலன்,
கலை பயில் புலவன், கார்த்திகேயன்,
வளை ஒரு மருப்பு, வாரண முகவற்(கு)
இளையவன், குமரன், மயில் ஏறும் பெருமாள்,
சூர சங்காரன், சுப்பிரமணியன்,

வீரருள் வீரன், விரை கமழ் கடம்பன்,
சேந்தன், வள்ளி, தெய்வயானை
காந்தன், செவ்வேள், காங்கேயன், சிலம்பன்,
ஆயிரம் நாமத்து ஐயன், துய்யன்,
சேய், அருள் கோமான், சேவல் துவசன்,

வரம் கிளர் கருணைப் பரங்கிரி உறைவோன்,
மா இனம் வளர்க்கும் ஆவினன் குடியோன்,
நந்து ஊர் அலைவாய்ச் செந்தூர்க் கடவுள்,
பாரகம் விளக்கும் ஏரகத்து அமர்வோன்,
மால் அயன் இறைஞ்சும் சோலைமா மலை   
                    யோன்!
‘ஓம்’ என்கிற தாரக மந்திரத்தின் செறிவான அர்த்தத்தைச் சிவனுக்கு விளக்கினான் கந்தன். அதனால், தந்தைக்கே பாடம் சொன்ன குரு ஆனான்!
சிறப்பு நிறைந்த பொதிகை மலையில் உறையும் தமிழ் முனிவர் அகத்தியர். அவருக்கு நல்ல தமிழை விளக்கிச் சொல்லி ஞான தேசிகன் ஆனான்.
பிற வழிகளில் சென்றுகொண்டிருந்த மக்களைச் சைவம் என்கிற நல்வழிக்குத் திருப்பிய சம்பந்த மூர்த்தி அவன்! இன்னும் அவனுடைய பெயர்கள்:

முருகன், குமரன், ஆறுமுகன், மால் மருகன் (திருமாலின் மருமகன்), சிவக் குமாரன் (சிவனின் மகன்), கந்தன், மலைமகள் (பார்வதி) பாலன், வேலன் (கையில் வேலை ஏந்தியவன்), ஒற்றைத் தந்தம் கொண்ட யானை முகன் தம்பி, குமரன், மயில் ஏறும் பெருமாள், சூரனை வதைத்தவன், சுப்பிரமணியன், வீரர்களில் வீரன், மணம் கமழும் கடம்ப மாலையை அணிந்தவன், சேந்தன், வள்ளி மணாளன், தெய்வயானை மணாளன், செவ்வேள், காங்கேயன், சிலம்பன், ஆயிரம் பெயர்களைக் கொண்ட ஐயன், துய்யன், சேயோன், அருள் கோமான், சேவற்கொடியோன், திருப்பரங்குன்றத்தில் வாழ்பவன், ஆவினன்குடியில் அருள்பவன்...

திருச்சிற்றம்பல நாடிகள் (எப்போதும் திருச்சிற்றம்பலத்தையே நாடிய அடியவர்) கந்தனின் அழகுப் பெயர்களைக் காரணத்தோடு அடுக்கிக்கொண்டே செல்கிறார். ‘ஆயிரம் நாமத்து ஐயன்’ என்று புகழ்கிறார்.முருகனைச் சந்த நயத்தோடு பாராட்டிப் பணிந்தவர் திருப்புகழ் தந்த அருணகிரிநாதர். கந்தன் மீது அவர் இன்னும் பல நூல்களைத் தந்திருந்தாலும், இந்த ஒரு நூலின் பெருமை தனித்துவமானது. எந்தப் பாடலைத் தொட்டாலும் பக்தி நயம் சொட்டும் அற்புதப் படைப்பு அது!

அனங்கன் நொந்து நைந்து வெந்து குந்து
சிந்த
அன்று கண் திறந்து இருண்ட கண்டர்
தந்த அயில் வேலா,
அடர்ந்து அடர்ந்து எதிர்ந்து வந்த வஞ்சர்
அஞ்ச
வெம் சமம் புரிந்த அன்பர் இன்ப, நண்ப,
உரவோனே,
சினங்கள் கொண்டு இலங்கைமன் சிரங்கள்
சிந்த
வெம் சரம் தெரிந்தவன் பரிந்த இன்ப
மருகோனே,
சிவந்த செம் சதங்கையும் சிலம்பு, தண்டையும்
புனைந்து
செந்தில் வந்த கந்த, எங்கள் பெருமாளே!

அனங்கன் என்கிற மன்மதன் நொந்துபோகும்படி அவனை நெற்றிக்கண் திறந்து எரித்தவன், நீலக் கழுத்தைக் கொண்ட சிவபெருமான். அவனுடைய மகனாக வந்த முருகனே, கையில் கூர்மையான வேலை ஏந்தியவனே, நீ சிறந்த வீரன். உன்னை எதிர்த்துப் பல வஞ்சகர்கள் மொத்தமாகச் சேர்ந்து போரிட்டார்கள். ஆனால், நீயோ அவர்கள் அஞ்சி நடுங்கும்படி தாக்கினாய், வென்றாய். ஆனால், அன்பர்களைப் பொறுத்தவரை நீ மிகவும் இனிமையானவன், எங்கள் நண்பன்!

கோபப்பட்டு, இலங்கை வேந்தனுடைய பத்துத் தலைகளும் சிதறும்படி வெம்மையான அம்புகளைத் தொடுத்தவன் திருமால். அவனுடைய அன்புக்குரிய மருமகன் நீ! சிவந்த, சிறப்பான சதங்கை, சிலம்பு, தண்டை ஆகியவற்றை அணிந்துகொண்டு திருச்செந்தூரில் எங்களுக்காக வந்து எழுந்தருளியிருக்கிற கந்தனே, எங்கள் பெருமாளே!

முருகனின் அழகு பக்தரான அருணகிரிநாதரை வசப்படுத்தியதில் பெரிய ஆச்சர்யமில்லை, போர் செய்ய வந்த சூரபத்மனே அவரிடம் மயங்கிப்போகிறான் என்றால் நம்புவீர்களா?
கந்த புராணத்தில் முருகனின் அழகைப் பற்றிச் சூரபத்மன் சொல்வதாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் தந்துள்ள இந்த அழகிய பாடலைப் பாருங்கள்:

ஆயிரம் கோடி காமர்
அழகு எலாம் திரண்டு ஒன்று ஆகி
மேயின எனினும் செவ்வேள்
விமலமாம் சரணம் தன்னில்
தூய நல் எழிலுக்கு ஆற்றாது
என்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற்கு எல்லாம்
உவமை யார் வகுக்க வல்லார்?
முருகனுடைய அழகுக்கு மன்மதனை உவமையாகச் சொல்லலாமா?
‘ம்ஹூம், சாத்தியமில்லை’ என்கிறான்

சூரபத்மன். ‘ஒன்று, இரண்டு அல்ல, ஆயிரம் கோடி மன்மதன்கள் இந்த உலகில் பிறந்து, அவர்கள் எல்லாருடைய அழகையும் ஒன்றாகத் திரட்டிச் செய்த ஓர் உருவம் இருந்தால்கூட, சிவந்த வேலாகிய இந்த முருகனுடைய தூய்மையான பாதத்தின் அழகுக்கு முன்னே அது நிற்காது! தொன்மையான புகழைக் கொண்ட இந்தக் கந்தனின் அழகு வடிவத்துக்கு உவமை சொல்ல யாரால் முடியும்?’ என்று சூரபத்மன் வியந்து நிற்கிறான்.

சங்க இலக்கியத்திலும் சரவணன் பெருமை உண்டு. குறிப்பாக, நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை முழுவதும் கந்தனிடம் நம்மை ஆற்றுப்படுத்தும் காவியம்தான்.
முருகன் தன் அழகிய மார்பில் கடம்ப மாலை அணிந்திருக்கிறான். அது எப்படிப்பட்ட மாலை? நக்கீரர் அழகு மிளிர விவரிக்கிறார்:

கார் கொள் முகத்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள் உறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண் நறும் கானத்து
இருள்படப் பொதுளிய பராஅரை மராஅத்து
உருள்பூத் தண் தார் புரளும் மார்பினன்!

மேகம் கடலுக்குச் சென்று தண்ணீரை முகந்துகொள்கிறது. அதனால், அது கருமை நிறத்தைப் பெற்றுக் கர்ப்பம் அடைகிறது. அதனை மின்னல் வெட்ட, வானத்தில் மழையாகப் பெய்கிறது. அப்படிப் பெய்த முதல் மழை காட்டைக் குளிர்ச்சியாக்குகிறது, நல்ல மணம் வீசச் செய்கிறது. அந்தக் காட்டில் அடர்த்தியான, செறிவான, பெரிதான செங்கடம்ப மரம் இருக்கிறது. அதில் அழகிய பூக்கள் மலர்கின்றன. அவற்றைத் தொகுத்துக் கட்டிய மாலையை அணிந்த திருமார்பு முருகனுடையது!

முருகனைச் சிறு பாலனாக சந்தித்துச் ‘சுட்ட பழம்’ பெற்ற சிறப்புக்குரியவர் ஔவையார். அவரும் பல அழகான கந்தன் பாடல்களைத் தந்துள்ளார். அத்தகைய பாடல்களில் ஒன்றைச் சிறு கற்பனைக் கதையோடு பார்ப்போம். ஔவையார் ஒரு மன்னனைச் சந்திக்கச் செல்கிறார், அவன் பக்தியில் கவனம் இல்லாமல் தன்னுடைய படை பலத்தின்மீது கர்வம் கொண்டிருப்பதை அறிகிறார். அவனுக்கு அறிவுரை சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால், மன்னன் திருந்தவில்லை, ‘யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்று நான்கு வகைப் படைகளும் என்னிடம் உள்ளன, என்னை யாரால் வெல்ல முடியும்?’ என்கிறான்.

‘மன்னா, உனக்கு மட்டுமில்லை, நினைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் நான்கு வகைப்படைகள் கிடைக்கும்’ என்கிறார் ஔவையார்.‘என்ன சொல்கிறீர்கள் ஔவையே? நால்வகைப் படைகள் எல்லாருக்கும் எப்படிக் கிடைக்கும்?’‘முருகனை நினைத்தால் கிடைக்கும்!’
‘அது எப்படி?’ ஔவையார் விளக்குகிறார்:

மதுர மொழி நல் உரையான் புதல்வன் மலர்ப்
பாதத்தை
முதிர நினையவல்லார்க்கு அரிதோ முகில்
போல் முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்
சென்ற
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல
மன்னனே!
மன்னா, இனிமையான சொற்களை நன்கு உரைக்கக்கூடிய சிவபெருமானின் புதல்வன் முருகன், அவனுடைய மலர்ப் பாதங்களை ஒருவர் எந்நேரமும் நினைத்துக்கொண்டிருந்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

முதலில், மேகத்தைப் போல் முழக்கமிட்டபடி நிலம் அதிர நடந்துவரும் யானைப்படை கிடைக்கும். அதாவது, முருகனின் தமையன் விநாயகன் அவர்களுக்கு அருள்வான். அங்கிருந்து ஒரு காத தூரத்தில், முருகனுடைய தேர் அவர்களை ஏற்றிச் செல்ல வரும். ஆகவே, அவர்களுக்குத் தேர்ப்படையும் கிடைத்துவிடும். இன்னொரு காத தூரத்தில், மாணிக்கவாசகருக்குக் கிடைத்ததுபோல் குதிரையும் வரும். அதன் பின்னே காலாட்படையாக, அதாவது, நடந்துகொண்டு, முருகன் பெயரைப் பாடிக்கொண்டு ஔவை என்கிற இந்தக் கிழவியும் வருவேன். முருகனை நினைத்தால் எல்லாம் கிடைக்கும், நீயும் அவனை வணங்கி நலன் பெறுவாய்! பாரதியாருக்கும் முருகன் மீது தனிப் பிரியம். பல அருமையான பாடல்களைக் கந்தன்மேல் பாடியுள்ளார். அவற்றில் மிகப் பிரபலமான ஒரு

வர்ணனைப் பாடல்:
வில்லை ஒத்த புருவம் வளைத்தனை, வேலவா,
 அங்கோர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆனது, வேலவா!
சொல்லினைத் தேனில் குழைத்து உரைப்பாள்
சிறு வள்ளியைக் கண்டு
சொக்கி மரமென நின்றனை தேன்
 மலைக் காட்டிலே!
கல்லினை ஒத்த வலிய மனம் கொண்ட
பாதகன், சிங்கன்
கண் இரண்டு ஆயிரம் காக்கைக்கு இரை
இட்ட வேலவா!
பல்லினைக் காட்டி வெண் முத்தைப்
பழித்திடும் வள்ளியை, ஒரு
பார்ப்பனக் கோலம் தரித்துக் கரம்
தொட்ட வேலவா!

வேலவா, வில் போன்ற புருவத்தை நீ வளைத்தாய், அங்கே ஒரு மலை நொறுங்கிப் பொடிப்பொடியாக ஆகிவிட்டது. கல் போன்ற கடினமான மனம் கொண்ட கொடியவன் சிங்கன், அவனுடைய ஆயிரக்கணக்கான கண்களைப் பறித்துக் காக்கைக்குத் தின்னக் கொடுத்தாய்! ஆனால், அத்தகைய வீரம் கொண்ட நீ, தேன் நிறைந்த மலைக் காட்டில் சிறு வள்ளியைக் கண்டாய், தேனில் குழைத்த சொற்களைப் பேசும் அவளைப் பார்த்துச் சொக்கிப்போய் மரமாக நின்றுவிட்டாய்!

அந்த வள்ளியைத்திருமணம்செய்து கொள் வதற்காக, பார்ப்பனர்போல் வேடமிட்டு நீ வந்தாய். வெண்முத்து களைப் போன்ற பற்களைக் கொண்ட அவளை மணந்து
கொண்டாய்! முருகனின் பெருமைகளைச் சொல்லிப் பாரதியார் வணங்க, அவனை வணங்குவதால் கிடைக்கும் நலன்களை நாமக்கல் கவிஞர் அழகாக எழுதுகிறார்:
முருகன் என்ற சிறுவன் வந்து முணுமுணுத்த சொல்லினால்

முன் இருந்த எண்ணம் யாவும் பின்னம்
உற்றுப் போனதே!
அருகு வந்து மனம் உவந்தே அவன் உரைத்த
ஒன்றினால்
அடிமை என் மனத்து இருந்த அச்சம்
அற்றுப் போனதே!
இளமை அந்த முருகன் வந்து என்னோடு
என்று சொல்லவே

என்னுளத்து இருந்த பந்தம் ஏதுமற்றுப்
போனதே!
வளமை உற்ற இளமை பெற்று வலி மிகுந்தது
என்னவே
வந்ததே சுதந்திரத்தில் வாஞ்சை என்ற
ஞானமே!

அழகன் அந்த முருகன் வந்து என் அருகு
இருந்த போதிலே
ஐம்புலன்களுக்கு ஒடுங்கி அஞ்சி அஞ்சி
அஞ்சி நான்
பழமை என் உடற்கண் வைத்த பற்று யாவும்
அற்றதால்
பாரில் என்னை யாரும் கண்டு பணியுமாறு செய்ததே!
அன்பன் அந்த முருகன் வந்து அழைத்து
இருத்தி என்னையே
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று அகம்
குழைந்து சொன்னதால்
துன்பம் மிக்க அடிமை வாழ்வில் தோய்ந்து
இருந்த என் மனம்
சோகம் விட்டு விடுதலைக்கு மோகம்
முற்று விட்டதே!

இளமை, அழகு, அன்பு என்ற சொற்களையே முருகனுக்கு அடையாளமாக்குகிறார் நாமக்கல் கவிஞர். முருகன் வந்து என் காதில் சில சொற்களை முணுமுணுக்க, அதுவரை நான் நினைத்திருந்தது எல்லாம் மாறிவிட்டது என்று நெகிழ்கிறார். அதுவரை, நான் உலக வாழ்க்கைக்கு அடிமையாக இருந்தேன். ஆனால், முருகன் என் அருகே வந்து, மனம் கனிந்து சில நல்ல மொழிகளைச் சொல்ல, என்னுடைய மனத்தில் இருந்த அச்சம் தீர்ந்தது.

‘நீ என்னோடு இரு’ என்று அவன் சொல்ல, என்னுடைய பந்தங்கள் அறுந்தன, எனக்கு வளம் பெருகியது, இளமையாக உணர்ந்தேன், வலிமை கூடியது, ஞானம் பெருகியது. ஐம்புலன்களுக்கு அஞ்சி என் உடல்மீது நான் வைத்த பற்று, முருகனால் தீர்ந்தது. அதன் பிறகு, எல்லாரும் என்னைக் கண்டு பணிவாக வணங்குகிறார்கள். ‘பயப்படாதே’ என்று முருகன் சொன்ன அந்தச் சொல், அடிமை வாழ்வில் இருந்த என் மனத்தை விடுதலை பெறச் செய்தது!

நாமக்கல் கவிஞருக்குப் பல
ஆண்டுகள் முன்பாக, வள்ளலாரும் இதேபோன்ற அனுபவத்தைப் பெற்றுள்ளார்.
அவரது பாடல் இது:
விண்ணவர்க் கோன் அரும் துயரம் நீங்கிடவும்
மாது தவ விளைவும் நல்கும்
கண் அகன்ற பேர் அருளின் கருணையினால்
குஞ்சரியைக் காதலோடு
மண் உலகோர் முதல் உயிர்கள் மகிழ்ந்திடவும்
மணம் புரிந்த வள்ளலே என்
திண்ணிய தீ வினை ஒழிப்பாய், சிங்கபுரி
தனில் அமர்ந்த தெய்வக் குன்றே!

பொதுவாகக் ‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். ஆனால், இங்கே வள்ளலார் குமரனையே ‘தெய்வக் குன்று’ என்கிறார்.
முருகா, தேவர்கள் தலைவன் இந்திரன், அவனுடைய அரிய துன்பத்தை நீ நீக்கினாய். அவனுடைய மகளாகிய அமுதவல்லியின் காதலை ஏற்றுக்கொண்டு கருணை செய்தாய், இந்தப் பூமியில் வசிக்கிற எல்லாரும் மகிழும்படி அவளைத் திருமணம் செய்துகொண்டாய். அத்தகைய பெருமையுடையவனே, என்னுடைய தீய வினைகள் ஏராளம், அவற்றைப் பொறுத்துக்கொண்டு என்னை வாழவைப்பாய், சிங்கபுரியில் எழுந்தருளியிருக்கும் குன்று போன்ற இறைவனே! முருகன் என்றும் அன்பு வடிவமானவன், தமிழில் வணங்க இன்னும் மகிழ்வோடு அருள்வான்!

ஓவியங்கள்: வேதகணபதி
(தொடரும்)