விரும்பிய வரங்களை வழங்கும் வரலட்சுமி விரதம்



சக்தி வழிபாட்டின் ஒரு அங்கமாக ஆவணி மாதம், சுக்கில பட்சம் வெள்ளிக்கிழமை ஒவ்வொரு இல்லத்திலும் கொண்டாடப் படும் முக்கிய விரதம் வரலட்சுமி விரதம். இந்த தினத்தில்தான் மகாலட்சுமி பாற்கடலில் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ரிக்வேதம் ‘ஆக்கத்திற்கும், அருளுக்கும் தெய்வம் லட்சுமி’ என்றும், யஜுர் வேதம், ‘சூரிய மண்டலத்தின் நடுவில் இருப்பவள் லட்சுமி’என்றும், அதர்வண வேதம் ‘மகாலட்சுமி நன்மை செய்பவள்’ என்றும் வர்ணிக்கின்றன.

அழகு, கருணை, இயற்கை, நாணம், அன்பு, செழிப்பு, இசை, பஞ்சபூதங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கைகள், மனம், புத்தி, பிராணன் ஆகியவை அனைத்தும் மகாலட்சுமியின் அறிகுறிகளாக விளங்குகின்றன. மகத நாட்டை சேர்ந்த குண்டினபுரம் என்ற ஊரில் தெய்வ பக்தியும், நற்பண்புகளும் வாய்ந்த சாருமதி என்ற பெண் வாழ்ந்து வந்தாள்.

 அவள் தன் கணவன், மாமனார்-மாமியாரை வெறும் உறவினர்கள் என்று கருதாமல், இறைரூபமாகவே உளமாற நினைத்து அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தாள். அவளது உயர்ந்த ஆன்மிக மனப்பான்மை, கூட்டுக்குடும்ப நேர்த்தி, லட்சுமி தேவிக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

ஆதலால் லட்சுமி தேவி ஒருநாள் சாருமதியின் கனவில் தோன்றி அருள்புரிந்தாள். அப்போதி லிருந்த சாருமதி வரலட்சுமி  விரதத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள். குடும்ப ஒற்றுமைக்காக, மேன்மைக்காக இந்த நோன்பு பரம்பரை பரம்பரையாகப் பல குடும்பங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

விரதம் மேற்கொள்ளும் முறை என்ன?


வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழைமரம், மாவிலை தோரணம் கட்டவேண்டும். அங்கு சுவரில் படமாகவோ அல்லது வெள்ளியாலோ வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்கவேண்டும்.

தேவிக்குத் தோடு, மூக்குத்தி, சங்கிலி, வளையல் ஆகியவற்றைப் பூட்டி தாழம்பூப் பின்னலிட்டு  பூச்சூட்டவேண்டும். வாழையிலையின் மீது ஒருபடி அரிசியைப் பரப்பி, அதன்மீது தேங்காய், மாவிலைக் கொத்து, எலுமிச்சை, காதோலை கருகமணியோடு உதகும்பம் வைத்து பொன்னையும், பழங்களையும்,

மாந்துளிர்களையும் வைத்து புதிய வஸ்திரத்தை சுற்றி வரலட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும். ஐந்து வகையான ஆரத்திகளோடு பூஜை செய்ய வேண்டும். நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எழுந்தருளும்படி வரலட்சுமியிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அறுகம்புல் கொண்டு அஷ்டலட்சுமியை பூஜிப்பது நல்ல பலனைத் தரும். கலசத்தின்முன் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், பூ ஆகியவற்றைப் படைத்துத் தேவையான அளவு நோன்பு கயிற்றையும் வைத்து வழிபடுவது வழக்கம்..

கலச பூசைப்பிறகு விநாயகருக்கு பூஜை செய்ய வேண்டும். பின்னர் பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு தாம்பூலம், தேங்காய் முதலியவற்றைக் கொடுத்து மஞ்சள் கயிற்றை அவர்களது வலது கையில் கட்டவெண்டும். லட்சுமி தேவிக்கு இனிப்புக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்து, பாத்யம், அர்க்யம் முதலிய பதினாறு வகையான உபசாரங்களையும் செய்ய வேண்டும்.

பூஜை முடிந்தபின் இரவில் கலசத்தை அரிசிப் பாத்திரத்தில் வைத்தால் அன்னபூரணியின் அருள் என்றும் நிலைக்கும் என்பது ஐதீகம். கலசத்தில் வைத்துப் பூஜித்த தேங்காயை அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்துப் பாயசம் செய்து வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடவேண்டும். வரலட்சுமி விரத பூஜையின்போது லட்சுமி தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடுவதும் ஸ்தோத்திரங்களை மனமுறுகச் சொல்வதும் வழக்கம்.

விரத பலன்கள்

லட்சுமி தேவி தன் பக்தர்களுக்கு உயர்ந்த ஞானத்தையும் அளித்தருள்கிறாள். அவள் வித்யா சக்தி. தன் பக்தர்களை ஸ்ரீமத் நாராயணனுக்கு அறிமுகம் செய்து அவர்களுக்காகப் பரிந்துரைக்கிறாள். வரலட்சுமி விரதம் இருந்தால் விரும்பிய நலன்களை பெற்றுப் பெருவாழ்வு வாழலாம்.

தேனி.பொன்கணேஷ்