வணக்கம், நலந்தானே!



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

பிறந்த நாள் எச்சரிக்கை!


பிறந்த நாள் விழா கொண்டாடுகிறோம். உற்சாக மாக, ஊர்கூட்டி, ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்துகூட கொண்டாடுகிறோம். கொண்டாட்டம், சந்தோஷம் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், இந்த பிறந்த நாள் நமக்கு உணர்த்துவது என்ன தெரியுமா? ‘வயது கூடக்கூட, ஆயுள் குறைகிறது’ என்பதுதான்! பாலக, வாலிப வயதில் அந்தந்த பருவத்துக்கேற்ற மகிழ்ச்சியில் மனம் திளைப்பதிலும், உற்றார், உறவினர், நண்பர்களுடன் களிப்பதிலும் தவறில்லை, அது இயல்புதான், இயற்கைதான்.

ஆனால், மேலும் மேலும் வயதாகும்போது பிறந்த நாள் நமக்கு உணர்த்துவதை நாம் மறந்துவிடக்கூடாது. அதாவது, அதுவரை சுயநலத்தை நாம் போற்றியிருந்தாலும், தனக்கு, தன் குடும்பத்துக்கு என்று மட்டுமே வாழ்ந்திருந்தாலும், நமக்கு வயது கூடக்கூட பொதுநலம் பற்றியும் நாம் சிந்திக்கத்தான் வேண்டும்.

இப்படி சிந்திப்பதற்கு நாமாக முயற்சிக்காவிட்டாலும், கடவுள் என்னவோ எச்சரிக்கை செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆமாம், நமக்கு வயதாவதை நாமே மறந்துபோய்விடும் நேரத்தில் கடவுள் நமக்கு சில அறிகுறிகள் மூலமாக அதை உணர்த்தத்தான் செய்கிறார். துரதிருஷ்டவசமாக அதையும் நாம் கருத்தில் கொள்ள தவறுகிறோம் அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கிறோம்.

தலைமுடி நரைத்தல், கண் பார்வை மங்குதல், கேட்கும் திறன் குறைதல், பற்கள் விழுதல், சருமம் சுருங்குதல் என்று அடுத்தடுத்து வயது ஏறஏற பல எச்சரிக்கைகளை இறைவன் விடுத்துக்கொண்டுதான் இருக்கிறான். தலைக்கு ‘டை’ அடித்துக்கொண்டு, கண்ணாடி மாட்டிக்கொண்டு, ஒலிவாங்கிக் கருவியைப் பொருத்திக்கொண்டு, சருமப் பூச்சுகளைப் பூசிக்கொண்டு அந்த எச்சரிக்கைகளை நாம் புறக்கணிக்கிறோம் அல்லது அந்தக் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள பெருமுயற்சி எடுத்துக்கொள்கிறோம்.

ஆனால், ஒவ்வொரு பிறந்த நாளன்றும் கொண்டாட்டத்தையும், வந்து குவியும் பரிசுப் பொருட் களையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு நமக்கு ஆயுள் குறையும் உண்மையை உணரத் தலைப்பட்டோமானால், சுயநல வட்டத்திலிருந்து நம்மால் மீள முடியும்;

 சமுதாயத்துக்கு - நம்முடைய இந்த வளர்ச்சியை, வசதிகளை, சுதந்திரத்தை, வழங்கிய நாம் சார்ந்திருக்கும் நம் சமுதாயத்துக்கு - நம் பிரதி உதவியைச் செய்ய முடியும். அதைவிட முக்கியம், நமக்கு எச்சரிக்கை விடுக்கும் இறைவனை நிந்திக்காமல், அப்படி அறிவுறுத்தும் அவனுடைய மாண்பைப் போற்றுவதுதான், அவருக்கு நன்றி செலுத்துவதுதான்!

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)