முருகன் அருள் பெற்ற மகான்கள்



முருகன் அருள் பெற்றவர்களே அவனை உணர்ந்து தாம் பெற்ற அனுபவத்தை நமக்கு காட்டுபவர்கள். இலக்கியங்களாலும், இனிய உபதேசங்களாலும் நம்மை முருகன் திருவடிக்கு அழைத்துச்செல்வதால் அவர்களே நமக்கு நல்லாசிரியர்கள். அவர்களில் சிலரை இங்கே தரிசிப்போம்.

அகத்தியர்

இவர் செந்தமிழ் முனிவர். கந்தமூர்த்தி செந்தமிழ் நாட்டை அகத்தியருக்குக் கொடுக்க, அகத்தியர் பாண்டியனுக்குக் கொடுத்தார் என்று திருநெல்வேலித் தலபுராணம் கூறுகிறது. ஒரு காலத்தில் நைமிசாரண்ய முனிவர்களுக்கும் அகத்தியருக்கும் கருத்து வேறுபாடு விளைந்தது. அதனால் நைமிசாரண்யத்தைவிட்டு அகத்தியர் பொதியமலையை அடைந்தார். அங்கு ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு கந்தமூர்த்தியை வழிபட்டு வந்தார். ஒருநாள் மாலை நேரத்தில் தெய்வமணம் வீசியது. அது எதன் மணம் என்று அறியாத அகத்தியர் ஆறு

முகனைப் பிரார்த்தித்தார். அவனருளால் அது தெய்வத் தமிழ் மணம் என்று சிந்தை தெளிந்து அறுமுகப் பெருமானையே ஆசானாகக்கொண்டு ஓதியுணர்ந்து இலக்கணமும் தந்து எழில்பெறத் தமிழை வளர்த்தார்.

சிவபெருமான் திருக்கல்யாணத்தின்போது தெற்கு (தமிழ் நாடு) நோக்கி வந்த அகத்தியர், கிரவுஞ்ச மலையின் மாயையில் சிக்குண்டு தவித்தார். பிறகு சிவபெருமான் திருவருளால் தெளிந்து “ஏ கிரவுஞ்சமே, அரன் அடிமையாகிய என்னை மயக்கியமையால் நீ குமாரக்கடவுளின் வேலாயுதத்தால் பிளக்கப்படுவாயாக’’ என்று சாபங்கொடுத்தார்.

அங்ஙனமே குமாரக்கடவுள் கிரவுஞ்ச மலையைப் பிளந்தார் என்கிறது காசிகாண்ட வரலாறு. கொல்லாபுரத்தில் அகத்தியர், திருமகளை ‘எல்லாச் செல்வமும் தந்தருளுக’ என வேண்டிப் பூஜித்தார். திருமகள் அவர்முன் எழுந்தருளி ‘‘உனக்கு வேண்டிய எல்லாவற்றையும் குமரவேளே கொடுப்பார்’’ எனக் கூறி மறைந்தனள். அகத்தியர் அங்ஙனமே குமரவேளை வழிபட்டு எல்லாச் செல்வமும் எய்தினர்.

நக்கீரர்

கடைச்சங்கப் புலவராய் அமர்ந்திருந்து இறையனார் அகப் பொருளுரை முதலியன கண்டு, தமிழுக்குப் பெரும் பணி புரிந்தவர். சிவபூஜை செய்யும்போது சிந்தை சிறிது கலைந்து போக, அதனால் சிறைப்பட்டு, திருமுருகாற்றுப்படை பாடி, முருகன் அருளால் விடுதலை பெற்றார். இதுவே சிறைவீடு செய்த பாட்டாக இம்மை மறுமை இன்பங்களைப் பயக்கும் எளிய சாதனமாக இயங்குவதை இன்றைய உலகம் அறிந்து பயன்படுத்தி வருகிறது.

இவர் வரலாற்றின் விரிவைத் திருவிளையாடற்புராணத்தில் கீரனைக் கரையேற்றிய படலத்தும், சீதக்காளத்திப் புராணத்தும் நன்கு அறியலாம். திருமுருகாற்றுப்படை  பாடிய பெருந்தேவனார். குறுந்தொகையில் கடவுள் வாழ்த்தாக முருகனைப் புகழ்ந்து பாடி இருமையின்பமும் எய்தினர்.

ஔவையார்

முருகனால் சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என்று நகையாடி வினவப்பெற்று நல்ல பயனைப் பெற்றார். பொய்யாமொழிப் புலவர். முருகனாகிய முட்டையைப் பாடி அவர் பேரருளில் திளைத்தமையைத் தொண்டை மண்டல சதகம் விளக்கும்.

அருணகிரி நாதர்

திருவண்ணாமலையில் வடக்குக் கோபுரத்துக்கு அருகில் உள்ள முருகன் கோயிலில் பன்னெடு நாட்கள் தவம் கிடந்து, முருகன் எழுந்தருளியுள்ள தலங்கள் அனைத்திற்கும் சந்தப்பாமாலை சாத்தி நாட்டை உய்வித்தார். முருகப்பெருமான் அருளால் திருப்புகழ் (1327 பாடல்கள்), கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், கந்தர் அலங்காரம், திருவகுப்பு, திருவெழுகூற்றிருக்கை, மங்கள ஆரத்தி ஆகிய நூல்களை இயற்றினார்.

 திருச்செந்தூர் வென்றிமாலைக் கவிராயர்’இவர் திருச்செந்தூரில் தோன்றி, முருகன் அருளால் ‘வென்றிமாலைக் கவிராயர்’ என்ற பட்டமும் பெற்று, திருச்செந்தூர்ப் புராணமும் இயற்றிய வன்மையைச் செந்தமிழ்நாடு அறியும்.

கச்சியப்ப சிவாச்சாரியர்

காஞ்சி குமரகோட்ட காளத்தியப்ப சிவாச்சாரியருடைய குமாரர். முருகனால் ‘கந்தபுராணம் பாடுக’ என ஆணையிடப்பட்டவர். இவருடைய புராணத்துக்கு முருகனே ‘திகடசக்கர’ என அடியெடுத்துக் கொடுத்தார். கந்தபுராணத்தை அரங்கேற்றும் பொழுது ‘திகழ் தசக்கரம்’ எனப் பிரித்து உரை விளக்கினார். அவையில் இருந்த புலவர் ‘இதற்குப் புணர்ச்சி விதி யாது?’ என வினவ, முருகனே புலவராக எழுந்தருளி வீரசோழிய விதியைக்கொண்டு அமைதி வகுத்தனர் என்பர்.

குமரகுருபரர்

ஸ்ரீவைகுண்டத்தில் சண்முகசிகாமணிக் கவிராயருக்கு அருமை மகவாகத் தோன்றியவர். ஐந்தாண்டு வரை பேச்சிழந்தவராக இருந்து முருகனருளால் பேச்சு வரப்பெற்று கந்தர் கலிவெண்பா என்னும் சாத்திர தோத்திர நூலை இயற்றியவர். பல செந்தமிழ்ச் சிறுநூல்களை ஆக்கித் தந்தவர். கந்தக் கடவுளின் கருணையை விளக்கும் கவிதைநலம் சிறக்கப்பெற்றவர். ஸ்ரீகாசி மடத்தை நிறுவிய முதல்வர்.

தேவராய சுவாமிகள்

கந்தர் சஷ்டிக் கவசம் என்ற பாராயண நூலைப் பகர்ந்தவர். மக்களுக்கு இன்றியமையாத நலங்கள் பலவற்றையும் முருகன் நல்லருள் கொடுக்குமென்று இந்நூல் கூறுகிறது. முருகனுடைய ஆறெழுத்தருமறை இந்நூலுள் பலவிடங்களிலும் பலமுறைகளில் மாற்றி அமைக்கப்பெற்றுள்ளது.

ராமலிங்க சுவாமிகள்

திருவருட்பா வாயிலாக செந்தமிழ் நாடு இவரை நன்கு அறியும். எங்கெல்லாம் அன்பு வெள்ளமும் அருள் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அங்கெல்லாம் ராமலிங்க சுவாமிகளுடைய அருட்பா முழங்கிக் கொண்டிருக்கும். இவர் பிள்ளைப் பருவத்து, நிலைக்கண்ணாடியிலே முருகன் உருவம் முழுவதையும் தரிசித்தார் என்பது வரலாறு. இவர்களுடைய கந்தக்கோட்டப் பதிகம் முருகன் அருள் பெறுவார்க்குச் சிறந்த துணை.

ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்

யாழ்ப்பாணத்திலே பிறந்தவர். பாம்பனிலே வசித்தமையால் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பெற்றார். இவருடைய இயற்பெயர் குமரகுருநாத சுவாமிகள் என்பது. சிறந்த முருகனடியவர். இவர் செய்த அற்புதங்கள் மிகப்பல. முருகனைப் பற்றி ஆயிரக்கணக்கான பாடல்களை அருளிச் செய்துள்ளார்.

ஷண்முக கவசம் சிறந்த பாராயண நூல். மயூர பந்தம் இவர் எடுத்துக்கொடுத்த புது மையான சித்திரக்கவி. இவருடைய மொழிகள் ஒவ்வொன்றிலும் முருகப்பெருமானுடைய திருவருட்பொலிவு இன்றும் இருப்பதைக் காணலாம். ஷண்முக கவசம், குமாரஸ்தவம், பகை கடிதல், பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம், திருவடித் துதி, திருவலங்கற்றிரட்டு, ஸ்ரீஷண்முக நாமாவளி, ஷண்முகக் கோட்டம் திருப்பதிகம் 1, 2 ஆகிய நூல்களை இவர் இயற்றியிருக்கிறார்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்


திருவாமாத்தூரில் தோன்றியவர். முருகனருளால் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் புனைந்தவர். புலவர் புராணம், திருவலங்கல்திரட்டு முதலிய சிறந்த நூல்கள் இவரால் இயற்றப் பெற்றவை.

இவ்வண்ணம் இன்றுவரை யிலும் முருகக் கடவுளை வழிபட்டு இருமையின்பங்களையும் எய்தினோர் பலராவர். செவ்வாய்க் கிரகத்தின் ஆட்சி ஸ்தானமாகிய செந்தமிழ்நாட்டில் செவ்வேள் என்றும் கண்கண்ட தெய்வமாக விளங்குவதைக் கண்டு காட்டுபவர்கள் இவர்களே.

தொகுப்பு: ஸ்ரீசரண்