மகாபாரதம் ஒரு முன்னோட்டம்



நண்பர்களே,
ஒரு மர்ம நாவலை படிப்பது போலவோ, ஒரு காதல் கதையை படிப்பதுபோலவோ இதிகாசங்கள் எளிமையானவை அல்ல. குறிப்பாய் மகாபாரதம் என்கிற இந்த இதிகாசம் கடினமானது. பல பெயர்களும், பல இடங்களும் பல சம்பவங்களும் அதிகமாகப் புழங்கும் இதிகாசம் இது. வெறும் சுவாரஸ்யத்திற்காக எந்த நிகழ்வும் சொல்லப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு அசைவும் நீதி நெறியை தன்னுள் கொண்டது. எனவே, பெயர்களை, இடங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மை தேவைப்படுகிறது.

இந்த என் எழுத்திற்கு ஆதரவாக ஸ்ரீசக்ரா பப்ளிகேஷன்ஸ் மகரிஷி ஸ்ரீவேத வியாஸ பகவானின் மகாபாரதம், வர்த்தமான பதிப்பகத்தின் வியாஸ பாரதம், பகவான் நாமா பப்ளிகேஷனின் மகாபாரதம் மூலம், திரு.சோ அவர்களின் மகாபாரதம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இவருடைய பார்வையில் மகாபாரதம், அவருடைய எண்ணத்தில் மகாபாரதம் என்று எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. நான் முடிந்தவரை மூலத்தை ஒட்டியே நடக்கிறேன். ஆனால், அதன் வசனங்கள் மிக நீண்டவை. இன்றைய பத்திரிகை உலகில் அவற்றை அடக்கி வைப்பது சிரமம்.

இது கடினமான பணி. இன்னும் இளம் வயதிலேயே நான் ஆரம்பித்திருக்க வேண்டும். இருப்பினும் இன்றைய என் மனோநிலை இதை எழுத உவப்பாய் இருக்கிறது. விவாதம் எளிது. விமர்சனம் சுலபம். என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொள்வதற்குத்தான் அமைதி தேவைப்படுகிறது. பரத கண்டத்தின் மிகப்பெரிய பிரமாண்டமான வரலாற்றுச் சாயலை ஒரு துகளாக நான் நின்று அறிய முற்படுகிறேன். என் அறிதலின் முயற்சியே என் எழுத்து. உங்களுக்கும் அவ்விதமே ஆகட்டும். வாருங்கள், 50ம் பக்கம் போவோம்.

- பாலகுமாரன்