பூஜ்ஜிய ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர்



எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புங்கள்

மனதின் போக்கு / சுபாவம்

வாழும் கலை

சென்ற இதழில் உணர்ச்சி வேகங்களை கையாளுவதைப் பற்றி படித்தீர்கள். மனதின் தன்மை, வெவ்வேறு உணர்ச்சிகளைப் பற்றியும் அதனால் ஏற்படும் நன்மை, தீமைகளையும் இனி காண்போம். கோபம், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள், அன்பு, திருப்தி போன்றவற்றைப் பற்றி ஒரு ஆழ்ந்த அறிவு, அவற்றை கையாளும் முறையை அறியும் பொழுது வாழ்வில் ஒரு உன்னதம் ஏற்படும் என்பது உறுதி.மனதில் இருந்து தான் எல்லா வகையான உணர்ச்சிகளும் எண்ணங்களும் எழுகின்றன என்பதால் முதலில் மனதின் சுபாவத்தை அறிவோம்.

இந்த நொடியில் உங்கள் மனதில் என்ன நிகழ்கிறது? அதை நீங்கள் அறிந்து இருக்கிறீர்களா? ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அடுத்தது என்ன? என்ன பேசப்பட போகிறது? நான் என்ன சொன்னாலும், அதை ஒன்று நீங்கள் ஆமோதிப்பீர்கள் அல்லது நிராகரிப்பீர்கள் அல்லவா? இரண்டு நிலைகளிலும் நான் சொல்வது என்ன என்பது முக்கியமில்லை, அப்படித்தானே?

நம் ஆமோதிப்பையோ, நிராகரிப்பையோ பற்றி நாம் அறிந்து இருக்கிறோமா? இது மிகவும் முக்கியம். நான் என்ன சொல்கிறேன் என்பதை பாருங்கள். சில வாக்கியங்களை நான் கூறியுள்ளேன். ஆனால், நான் அவ்வாக்கியங்களை முடிக்கும் முன்னரே, உங்கள் மனது அதைப் பற்றிய உரையாடலை மேற்கொண்டு இருக்கிறது. நான் மனதில் பேசுகிறேன். நீங்களும் மனதில் பேசுகிறீர்கள். அதை கவனித்தீர்களா?

உங்கள் மனது ஆமாம், ஆமாம், சரி, இல்லை இல்லை, எப்படி இப்படி இருக்க முடியும் என்று
பலவாறு கூறுகிறது அல்லவா?

ஞானம் என்பது மனதின் இந்த விசித்திரப் போக்கை பற்றிய விழிப்புணர்ச்சியே! நம் மனதில் இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது? மற்ற விஷயங்களை நாம் புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். பிறப்பு, இறப்பு, குழந்தைகள் என்று பல புத்தகங்கள் உள்ளன. நூலகங்கள் இப்புத்தகங்களால் நிறைந்து உள்ளன.

இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், நாம் கவனம் செலுத்த வேண்டியது, மனதை பற்றிய விழிப்புணர்வு பெறுவதைப் பற்றியே. மனம் என்ன செய்கிறது? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் எண்ணி சஞ்சலமுற்றுக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு தருணத்திலும் அது கடந்த காலத்திலோ, வருங்காலத்திலோ சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளினால் ஏற்பட்ட கோபம். ஆம், நம் கோபங்கள் எல்லாம் நடந்து முடிந்த ஒன்றைப் பற்றியே அல்லது எதிர்காலத்தை பற்றிய கவலைகள் அத்தருணத்தில் இல்லாதவை பற்றிய கவலைகள், இதுவே மனதின் ஊசலாட்டம்.

மேலும், மனதின் மற்றுமொரு சுபாவம் எதிர்மாறானவற்றைக் கெட்டியாக பற்றிக் கொள்வது. பலமுறை நீங்கள், ‘‘எல்லாம் சரியாகதான் உள்ளது; ஆனால்...’’ என்று கூறுவீர்கள் எண்ணிப் பார்த்தால் நீங்கள் பல சமயங்களில் ‘இந்தப் பையன் அல்லது பெண்மணி நல்லவர்கள் தான். ஆனால்... என்று இழுப்பீர்கள். ‘ஆனால்’ என்ற வார்த்தையினால் பத்து உயரிய தருணங்களும் அல்லது நிகழ்வுகளும் ஒரு எதிர்மறையான நிகழ்வும் இருந்தால் அந்த பத்தை விட்டு விட்டு அந்த எதிரான ஒன்றையே மனதில் கெட்டியாக பிடித்துக் கொள்கிறோம்.

மனதின் இந்தப் போக்கை கவனித்து இருக்கிறீர்களா? பத்து வருட நட்பில் கூட, ஒரு சில தினங்களில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டால் போதும், அந்த நட்பே நிலை தடுமாறிவிடும்.
மனதின் இந்த இரண்டு போக்கிலும் மாற்றங்கள் கொண்டு வர ஒரே வழி உள்ளது. மனதின் இந்த சுபாவத்தை பற்றிய விழிப்புணர்வே அது. எப்பொழு தெல்லாம் ‘ஆனால் என்று நீங்கள் சொல்கிறீர்களோ, அப்போழுது ஓ! நான் இப்பொழுது ‘ஆனால்’ என்று கூறுகிறேன் என்பதை அறிவில் கொள்ளுங்கள். இது உங்களை இயல்பான, எளிய உள்ளார்ந்த மலர்ச்சி அடையச் செய்யும். வாழ்வில் இதன் விலை மதிப்பில்லாதது.

கபடமற்ற நிலையை தக்க வைத்துக் கொள்வது என்பது வாழ்க்கையில் மிகவும் விலை மதிப்பில்லாத ஒரு வரம். பிறக்கும் பொழுது நம் எல்லோரிலும் இந்நிலை உள்ளது. அறிவு வளர வளர நாம் இதை இழந்து ஒரு கொஞ்சம் விறைப்புடன் காணப்படுகிறோம்.

 இந்த கடினத்தன்மையை களைந்தோமேயானால், வாழ்க்கை மிகுந்த இன்பமாக, சுவாரஸ்
சியமாகவும், வெகுமதிகள் நிறைந்ததாக இருக்கும். இதுவே ஆராதனை.வாழ்க்கையை பூரணமடைய செய்ய ஐந்து அம்சங்கள் உதவும். ஐந்தில் எந்த ஒரு அம்சத்தினாலும் பூரணம் ஏற்படக் கூடும். அவை எவை என்று யூகிக்க முடிகிறதா?

நமக்கு என்னென்ன தேவையோ அது எல்லாமே நம்மிடம் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும் வாழ்க்கையை பூரணமடையச் செய்ய, இந்த ஐந்து அம்சங்கள் வாழ்க்கை நிறைவடையச் செய்ய, தேவையே. அன்பே  வாழ்வின் நிறைவு, அதுவே வாழ்க்கையின் இலக்கு, எப்படி அங்கு சேர்வது? எப்படி அந்த இலக்கை அடைவது? அடையும் வழிகள் என்ன? வாழ்க்கை பூரணமடைந்தது என்று கூற என்னென்ன தேவை? அதுவே ஐந்து அம்சங்கள்.

முதலாவதாக ஸ்ரத்தா - நம்பிக்கை.  நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் முன்னேற்றமடைய முடியாது, அல்லவா? உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மீது நம்பிக்கை செலுத்த வேண்டும். இயற்கையின் விதிகள் மீது நம்பிக்கை வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை. இல்லாவிட்டால் எது எப்பொழுது நடக்கும் என்பதை அறியும் ஆசை வரும். அறிவியல் மொத்தமும் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது இயற்கையின் விதிகளே.

உங்களைச் சுற்றி உள்ளவர்களின் மீதானநம்பிக்கை, உலகின் மீது நம்பிக்கை, நம்மால் காண முடியாதவற்றின் மீது நம்பிக்கை, அவை எல்லாவற்றிற்கும் ஆதாரமாக திகழ்வது இயற்கையின் மீதான நம்பிக்கை.நீங்கள் ஒருவரை நம்புகிறீர்கள், ஆனால், அவர்கள். மனதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனாலும் அவர் மனதின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது நீங்கள் இயற்கையை பார்க்கிறீர்கள், நுண்ணியமாக சூக்ஷுமமாக உள்ளதை நம்புகிறீர்கள் அல்லவா. அதுவே கடவுள் (அ) பிரபிரம்மம் எனப்படும்.

நீங்கள் அதை எப்படி வேண்டுமென்றாலும் அழைக்கலாம், நம்பிக்கை செலுத்தலாம். எண்ணங்கள் மற்றும் எல்லாமே இதிலிருந்தே எழுகின்றன. பூரணமாக நம்பிக்கை நிறைந்திருக்கும் பொழுது நீங்கள் பூரணமடைகிறீர்கள். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் போகும் பொழுது வாழ்க்கை பூரணமடையாது. அத்தகைய வாழ்வில் கவலைகள், துக்கங்கள், விசாரங்கள் நிறைந்து இருக்கும்.

அழுத்தம் நிறைந்த மனதில், ஆனந்தம்,  அன்பு இருக்காது, எதையும் சாதிக்க முடியாது, அல்லவா? இதனால் தான் நம்பிக்கை வாழ்க்கையை பூரணமடைய செய்கிறது. நம் வாழ்வில் எல்லாம் நன்றாக நடக்கும் என்று நம்புங்கள், தெய்வீக சக்தியை நம்புங்கள். நம்பிக்கை என்பது ஒரு முக்கிய அம்சம்.

இரண்டாவது ஸ்மிருத்தி - நினைவு, நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கு பிறந்தீர்கள் என்று எல்லாவற்றையும் நினைவில் கொள்வது. உங்களில் பலர் அப்படியே சாதாரணமாக வாழ்கிறீர்கள். பிறப்பை பற்றிய உணர்வு, அறிவில்லாமல். நம் பிறந்த நாளை ‘என்ன அன்பளிப்பு இன்று பெற வேண்டும்’ (அ) நான் என்ன அன்பளிப்பை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே கொண்டாடுகிறோம். நம் கவனம் எல்லாம் வாழ்க்கையை விட வெறும் அன்பளிப்பிலேயே இருக்கிறது.

முற்காலத்தில் தன் பிறப்பை எண்ணி யாராவது கவலை அடையும் பொழுது அவருக்கு ஆறுதல் அளிப்பதாக அன்பளிப்பு அளிக்கப்பட்டு இருக்கலாம். அவர்களின் பிறந்த நாளை பற்றிய நினைவுகளிலிருந்து அவர்களை திசை திருப்பவே மக்கள் ‘நான் வாழ்க்கையின் நாற்பது, ஐம்பது வருடங்களை வீணாக கழித்து விட்டேன்’  என்றும் ‘நான் வாழ்க்கையில் எதுவும் சாதிக்கவும் இல்லை, ஆனந்தமாகவும் இல்லை’ என்றும் கூறும்பொழுது அவர்களுக்கு அன்பளிப்பு அளித்து கவலைகளில் இருந்து  திசை திருப்பி இருக்கலாம். அன்பளிப்பு பெற்றவர் கவலைகளை மறந்து அன்பளிப்பில் ஆழ்ந்து இருக்கலாம்.

உலகில் பெரும்பாலானோர் தம் ஆதாரம் பற்றி அறிவு பெற்றிருப்பதில்லை. ‘எப்படி உயிர் உருவானது? நாம் எப்படி இவ்வுலகுக்கு வந்தோம்? என்பது போன்ற எண்ணங்கள் அவர்களிடம்
எழுவதே இல்லை. நாம் இவ்வுலகில் வந்தது பிறப்பு, இறப்பு என்ற எதைப் பற்றிய ஞானமும் இவர்களுக்கு இல்லை. தாங்கள் இங்கேயே நிரந்தரமாக இருக்கப் போவதை போலவே அவர்கள் வாழ்கிறார்கள். நம் வாழ்வு நிரந்தரம் இல்லை என்பதை எல்லோரும், இல்லை சில பேர் உணர்ந்தால் கூட அதுவே அவர்கள் வாழ்க்கையை ஆனந்தமாக கழிக்க போதுமானது. அப்பொழுது அவர்கள் தங்களையும் வருத்திக் கொள்ளமாட்டார்கள், மற்றவர்களை கஷ்டப்படுத்த மாட்டார்கள், சரிதானே?

வாழ்வின் ஆதாரத்தை அறியாத நிலை, கடைசி யில் இவ்வுலகை விட்டுச் செல்வோம் என்பதை அறியாமல், எல்லாம் நிரந்தரம் என்ற மாயையில் மூழ்கி, நிகழ்கால நிலை அறியாத தருணம் நான் வாழ்கிறேன்.

 இந்த உடலில் என்ன இருக்கிறது? உண்மையில் நான் யார்? நீங்கள் எல்லோரும் எங்கு இருக்கிறீர்கள் என்பது தெரியும் அல்லவா? உங்கள் தெரு, ஊர், மாநிலம், நாடு, கண்டம் என்று? இந்த புவியில் தான் நாம் வாழ்கிறோம் என்று யோசித்து இருக்கிறீர்களா? நீங்கள் அண்ட, பேரண்டத்தின் ஒரு பகுதி என்பதை அறிந்து உள்ளீர்களா?

நமக்கு காலத்தை பற்றிய விழிப்புணர்வே இல்லை. நம் உடலில் என்ன உள்ளது? காலத்தையும் பற்றிய அறியாமை. உடல் பல வகையான பொருட்களால் ஆனது. உங்களுக்குத் தெரியுமா? உடலில் ரத்த ஓட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. உங்கள் இதயத் துடிப்பை அறிவீர்களா? அதை எப்பொழுதாவது உணர்ந்து இருக்கிறீர்களா?

கவலை மிகுந்த வேளையில் சூழ்நிலைகளில் மூழ்கி உடலில் ஏற்படும் அதிர்வுகளை உணருவதில்லை அல்லவா? நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிவதில்லை. நமது இத்தருணத்தில் கடந்த காலமோ அல்லது எதிர்காலமோ நம் ஞாபகத்தில் இருப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நினைவு கூர்ந்து பார்த்தால் நீங்கள் இவ்வுலகில் பெட்டியுடன் விமான நிலையத்தில் காத்திருக்கும் பகுதியில் உள்ள பயணியைப் போலவே வாழ்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். விமானத்தில் ஏறும் முன்னர் அவ்வறையில் சில மணி நேரங்கள் காத்து இருக்கிறீர்கள்.

ஒரு ரயிலில் இருந்து மற்றொன்றிற்கு மாற வேண்டும், நீங்கள் நாசிக் செல்ல வேண்டுமென்றால், பூனா சென்று அங்கு வேறு வண்டி மாற வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் எல்லா உடைமைகளையும் ரயில் நிலையத்தில் திறப்பதில்லை. காலத்தை பற்றியும், நாம் வாழும் இடத்தை பற்றிய ஞானம் நம் வாழ்வில் வந்தால் இதுவே குறையில்லாத பூரண வாழ்வாகும்.

மூன்றாவது வீர்யா -  தைரியம்/வீரம், இது 100 சதவிகிதம் துறக்கும் வீரம். என்ன சொல்கிறேன் என்று புரிகிறதா? ராணுவத்தில் பணிபுரிபவர்களை பார்த்து இருக்கிறீர்களா? அல்லது வாழ்க்கை
100 சதவிகிதம் அர்பணித்தவர்களை பார்த்து இருக்கிறீர்களா? நுண்ணியமாக நோக்கினால் அதில் ஒரு ஈர்ப்பு, ஒரு சக்தி இருக்கும். தீவிரவாதியாக என்ன வேண்டும் என்று பார்த்தால் எதிலும் 100 சதவிகிதம் அர்ப்பணித்தல் வேண்டும். வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள், சதாசர்வ காலமும் அவர்களில் கவலைகள் அரித்துக் கொண்டு இருக்கும்.

அது அவர்களின் அறியாமையால் தோன்றுவது. அவர்கள் மேற்கொண்ட பாதை தவறானது. அழுத்தமும் கவலையும் அவர்களை மிகவும் தொந்தரவு செய்யும் அழுத்தம், கவலை இல்லாமல், பிரகாசமான ஒளியுடன் இருப்பதே வீரம். வீரபாண்டிய கட்டபொம்மன் / கிட்டூர் சென்னம்மா போன்ற பலம் மிக்க மக்களில் என்ன நடக்கிறது?

என்ன நடந்தாலும், தடைகளைத் தாண்டி 100 சதவிகிதம் செலுத்தி செயலாற்றுகிறார்கள். இதுவே வீரம். அவர்களில் அந்த சக்தி, வீரம், பலத்தை நீங்கள் காணலாம். அவர்களில் அவ்வளவு சக்தி, பயமின்மை, பூரணமான தன்னிலை, பயம், தடை இல்லாத ஞானிகளைப் போன்ற முழு சக்தி ஓட்டத்தை காணலாம்.

நான்காவது சமாதி - சமாதி என்றால் என்ன? மனம் சாந்தமான, அமைதியான, அசைக்க முடியாத நிலையில் இருப்பதே சமாதி. மனம் சிறிது சஞ்சலம் அடைந்தாலும், விரைவாக தன்னிலை அடையும். இந்நிலையே சமாதி. கடந்த காலத்தையோ, எதிர்காலத்தையோ பற்றி கவலைப்படாமல், கோபம், விருப்பு வெறுப்புக்களின் கட்டுக்குள் அடங்கி போகாமல் இருக்கும் மனநிலை. எதன் மேலும் அடங்காத ஆசையோ, வெறுப்போ இல்லாத நிலை. இது உங்களுக்கு புரிகிறதா?

அடங்காத ஆசையோ, வெறியோ, வெறுப்போ இந்த மனதில் இருக்காது. “இது சரியில்லை. எனக்கு இது வேண்டாம், அதுதான் வேண்டும். இதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.’ இது எதுவும் இல்லாத மனநிலையே சமாதி ஆகும். கோபம், பயம், வருத்தம் இருக்காது. ஒரு மூலையில் எதுவுமே செய்யாமல் உட்கார்ந்து இருப்பது சமாதி அல்ல.பல வகையான சமாதிகள் உண்டு. “சமத்வம் யோகம் உச்யதே”  மனதில் சாந்தம், இணக்கம் என்பதே இதன் பொருள். நடுநிலையான இணக்கமான மனதே வாழ்க்கையில் பூரணத்தை ஏற்படுத்தும்.

கடைசியாக பிரக்யா - பிரக்ஞை / சர்வ காலமும் தன்னிலை அறிந்து இருத்தல். எது செய்தாலும் முழு மனதுடன் செய்வது, யாரையாவது திட்டினாலும் முழுதும் உணர்ந்த நிலையில் / தன்னிலை மறக்காமல் திட்டுவது, புரிகிறதா? கோபப்படும் பொழுது, யாரையாவது புகழும் பொழுதும் நாம் மனம் குலைகிறோம். எப்பொழுதும் தன்னிலை குலையாமல் இருப்பதே பிரக்ஞா.

நம்பிக்கை, நினைவு, வீரம், சமாதி, பிரக்ஞா  இந்த ஐந்தும் ‘வாழ்க்கையை பூரணமடையச் செய்யும். இதுவே வாழும் கலை, இதை ஓரளவாவது பின்பற்றினால், ஒன்றையோ/ ஐந்தையுமோ பயின்றால் உங்கள் வாழ்வு முழுமை பெறும். ஒன்று நடந்தாலும் போதும், மற்றவை தானாகவே பின்னே வரும். நம்பிக்கை வரும் பொழுது, நினைவு வரும் பொழுது, வீரம் வரும் பொழுது, சமாதி தானாக வரும்.

பிரக்ஞை வரும் பொழுது மற்றவை எல்லாமே வரும்.இதை எல்லாவற்றையும் பெற ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால்  பிராணயாமம், தியானம், சில செயல்முறை பயிற்சிகள் உதவும். இங்கு பிரசங்கத்தை படித்தாலும் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா, அதற்கே இப்பயிற்சிகள்.

(தொடரும்)