கடுக்கன் களவாடியவனிடமும் கருணை காட்டியவர்



வடலூர் ஜோதி தரிசனம் 3;-2;-2015

சூரிய குடும்பம்! உலகில் உள்ள அனை
வருமே சூரிய குடும்பம்தான். சூரியன்
இல்லாவிட்டால் உயிர்க்குலங்கள் வாழ
வழி ஏது? அதனால்தானே, உலகம் முழுவதையும் ‘சோலார் ஃபேமிலி’ (Solar Family)  என விஞ்ஞானிகளும் கூறுகிறார்கள்!

அந்த சூரியன், லௌகிகமாக, அதாவது வெளிப்புற வாழ்க்கையில் அனைவரையும் ஒன்றாக வாழ வைக்கலாம். புற இருளை ஓட்டி வெளிச்சத்தை வெள்ளமாகப் பாய்ச்சலாம். ஆனால்... அக இருளை அதாவது உள்ளத்தின் உள்ளே உள்ள தீய குணங்கள் எனும் இருட்டை ஓட்ட, அந்தச் சூரியனால் முடியாது. அதை...

ஞான சூரியர்களால் மட்டுமே செய்ய முடியும். அப்படிப்பட்ட ஞான சூரியர்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில், ஏராளமானோர் தோன்றியிருக்கிறார்கள்.அவர்கள் எல்லோரும், தங்கள் அனுபவம் எனும் ஒளிக்கதிர்களை வீசி, மனித குலத்தின் அக இருளை மட்டுமல்லாமல், புற இருளையும் விலக்கி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட உத்தமர்களில் ஒருவர், சென்னையில் உள்ள திருவொற்றியூர் தியாகேசப் பெருமான் சந்நதியில் நின்றபடி, ‘‘பாரோடு விண்ணாய்’’ எனக் தொடங்கும் திருவாசகப் பாடலை மனம் உருகிப் பாடிக் கொண்டிருந்தார்.அப்பாடலில் உள்ள ‘ஆரோடு நோகேன் ஆர்க்கெடுத்துரைப்பேன், ஆண்ட நீ அருளிலையானால்’ என்ற வரிகளைப் பாடும்போது, மனம் கரைந்து நெடுநேரம் பேச்சுமூச்சு இல்லாமல் தன்னிலை மறந்து, அப்படியே சமாதி நிலைக்குப் போய் விட்டார்.

அவர் பாடிய திருவாசகப் பாடலின் வரிகளிலும் அவர் குரலிலும் மெய்மறந்து இருந்த அன்பர் கூட்டம், உத்தமரின் சமாதி நிலையைக் கண்டு, கண்ணீர் சிந்தி உருகினார்கள். இப்படி... நீண்ட நேரம், தான் பரவசம் அடைந்து, அடுத்தவர்களையும் பரவச நிலையில் ஆழ்த்திய அந்த உத்தமர்... ராமலிங்க ஸ்வாமிகள் எனும் வள்ளலார். அவருடைய சிறு வயதில் நடந்த நிகழ்ச்சி இது. அதோ! அவருடைய சமாதிநிலை கலையப்போகிறது. வாருங்கள்! மனதாலாவது அவரருகில் போகலாம்.

நீண்ட நேரம் சமாதி நிலையில் இருந்த வள்ளலார்,  மெல்ல மெல்ல உலகியல் உணர்வு வந்த பின் வீடு திரும்பினார். இரவு நீண்ட நேரமாகி விட்டதால், வீட்டில் எல்லோரும்  கதவைத் தாழிட்டுக் கொண்டு தூங்கி விட்டார்கள்.  அதைப் பார்த்ததும் அடுத்தவர் தூக்கத்தை ஏன் கெடுக்க வேண்டும் என்று இரக்கம் மேலிட்டு, வள்ளலார் வீட்டின் வெளித் திண்ணையிலேயே படுத்து விட்டார். உணவுக்கு வழி? அந்த சிந்தனையே இல்லாமல் வள்ளலார் தூங்கிவிட்டார்.

ஆனால், அன்பைப் போதித்து அனைவருக்கும் நல்வழி காட்டப்போகும் வள்ளலார் பசித்திருக்க  வடிவுடை நாயகி விடுவாளா?‘‘இந்தக் குழந்தை இப்போதுதானே நம்மைத் தரிசித்து விட்டுப்போனது. இது போய்ப் பசியோடு படுக்கலாமா?’’ என்று எண்ணிய அன்னை திருவொற்றியூர் வடிவுடை நாயகி, வள்ளலாரின் அண்ணி வடிவில் தானே உணவு கொண்டு வந்தாள்.

வள்ளலாரை எழுப்பி உணவளித்து மறைந்தாள். சற்று நேரத்தில் வள்ளலார் படுத்திருக்க, வீட்டுக்கதவை திறந்து கொண்டு, அண்ணி வெளியில் வந்து வள்ளலாரை எழுப்பி, ‘‘உணவு உண்ணாமல் இப்படிப்படுக்கலாமா? என்னை எழுப்பக் கூடாதா?’’ என்றார். வள்ளலார் நடந்ததை சொல்ல அண்ணி திகைத்தார். நான் இப்போதுதானே கதவைத் திறந்து கொண்டு வருகிறேன்....‘‘ என்றார்.

வள்ளலாருக்கு உண்மை புரிந்தது. அண்ணி வடிவத்தில் வந்து அருளமுதம் அளித்தது, அன்னை வடிவுடை நாயகிதான் என உணர்ந்து துதித்தார். இது ஏதோ ஏழாம் நூற்றாண்டில் நடந்த ஞான சம்பந்தம் வரலாறு அல்ல! 19ம் நூற்றாண்டில் நடந்த வரலாறு இது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று ஆத்ம தரிசனத்தில் திளைத்திருந்த வள்ளலாருக்குத் திருமணம் செய்ய தீர்மானித்தார் அவரது மூத்த சகோதரர்.

‘‘பக்தியில் உருகிப் பக்குவம் பெற்ற தம்பி துறவியாகப் போய் விட்டால் என்ன செய்வது?’’ என்பதே அண்ணனின் எண்ணம்.முதலில் மறுத்த வள்ளலார், பிறகு ஒப்புக்கொண்டார். காரணம்?திருஞானசம்பந்தருக்குத் திருமணம் நடந்தபோது, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன், பெரும் ஜோதியைத் தோன்றவைத்து, திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் அந்த ஜோதியில் புகுத்தி தம்முடன் இணையுமாறு அருள் செய்தாரல்லவா? அதுபோல தன் திருமணத்திலும் இறைவன் அருள்புரியக் கூடும் என்பதாலேயே வள்ளலார், திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.

அந்த அளவிற்கு அவருக்கு அருள் தாகம் மிகுந்திருந்தது. அதுமட்டுமல்ல! ‘‘சிவபெருமானே! சுந்தரரின் முதல்முறை திருமணத்தின்போது, நீ வலுவில் போய் அவரைத் தடுத்து ஆட்கொண்டாயல்லவா? அது போல, என் திருமணத்தின் போது நீயே நேரில் வந்து தடுத்தாட்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. இறைவா! உன் பூத கணங்களில் ஒன்று வந்து என்னைத் தடுத்தாட்கொண்டால் போதும். அவ்வாறு என் திருமணத்தின்போது நடக்கும் என்றால், நான் இன்னொரு திருமணமும் செய்து கொள்வேன்” என்று பாடி வேண்டினார்.

முன் மணத்திற் சுந்தரரை
முன் வலுவில் கொண்டதுபோல்
என் மணத்தில் நீ
வந்திடாவிடினும், நின் கணத்தில்
ஒன்றும் ஒருகணம்
வந்துற்றழைக்கில் செய்த தன்றி
இன்றும் ஒரு மணம் செய்வேன்
(திருவருட்பா)

இறையருள் பெறுவதில்தான் எத்தனை ஆர்வம்? இதே ஆர்வம், இரக்கத்தோடு அடுத்தவர்க்கு உதவுவதிலும் இருந்தது.அடிக்கடி திருவொற்றியூர் சென்று, அங்கே பாடிப் பணிந்து பக்தி செய்து வந்த வள்ளலார், ஒரு நாள் திருவொற்றியூரில் ஒரு திண்ணையில் படுத்திருந்தார். அவர் காதுகள் இரண்டிலும் (தங்க) கடுக்கன்கள் இருந்தன. அவர் படுத்திருந்ததைப் பார்த்தான், ஒரு திருடன்.

‘‘ஆஹா! காதுகளில் கடுக்கன்களோடு நன்றாகத் தூங்குகிறார் இவர். கடுக்கன்களைக் களவாடிவிட வேண்டியது தான்’’ எனத் தீர்மானித்த அந்தத் திருடன் மெல்ல வள்ளலாரை நெருங்கினான்.

ஒருக்களித்துப் படுத்திருந்த வள்ளலாரின், மேலாக இருந்த காதில் இருந்து கடுக்கனைக் கழற்றினான். அப்போது வள்ளலார் விழித்திருந்த நிலையில் இருந்தாலும், கொஞ்சம் கூட அசையவில்லை.

நன்றாக, ஆழ்ந்த உறக்கத்தில் இருப்ப
வரைப் போல, அசையாமல் இருந்தார்.
திருடன், ஒரு காது கடுக்கனைக் கழற்றி
முடித்ததும்,‘‘பாவம்! இவன் இல்லாத

கொடுமையால் தானே திருடுகிறான். இரண்டு கடுக்கன்களையும் இவன் எடுத்துக் கொண்டு போய்ப் பிழைக்கட்டுமே!’’ என்று இரக்கப்பட்ட வள்ளலார் தூக்கத்திலேயே திரும்பிப் படுப்பதைப் போல, மறுபுறம் திரும்பிப் படுத்தார்.திருடன், அடுத்த கடுக்கனையும் கழற்றிக் கொண்டு போனான்.அதன் பிறகு வள்ளலார், கடுக்கன் அணியவே இல்லை.இவ்வாறு, திருடனிடமும் இரக்கம் கொண்ட வள்ளலார், அகந்தை பிடித்தவர்களிடமும் அன்போடு நடந்து கொண்டார். ஒரு சமயம் ஆறுமொழிகள் தெரிந்த அரசு அலுவலர் ஒருவர், வள்ளலாரைத் தரிசிக்க வந்தார்.அவருக்கு வள்ளலாரைப் பற்றி நன்கு தெரியும். என்னதான் தெய்வ சந்நதியில் நின்றாலும், மனித மனம் ஆணவத்தை விடாது.

அதிலும் ஆறுமொழிகள் தெரிந்தவர், அரசாங்க அலுவலராக இருப்பவர், கேட்க வேண்டுமா? வந்தவர் வள்ளலாரின் எதிரில் தன் அகந்தை வெளிப்படும்படியாகவும், அதே சமயம் பணிவோடு இருப்பதைப் போலவும் காட்டிக் கொண்டு நின்றார்.அவருடைய மனதை, அருட்பிரகாச வள்ளலார் புரிந்து கொண்டார்.

 உடனே அங்கிருந்த ஒரு சிறுவனை அருகில் அழைத்து, அன்போடு அவன் முதுகைத் தடவிக் கொடுத்து, ‘‘தம்பி! உனக்கு எத்தனை மொழிகள் தெரியும்?’’ எனக் கேட்டார்.வள்ளலாரின் ஸ்பரிச தீட்சை வாய்க்கப் பெற்ற அச்சிறுவன் உடனே, ‘‘எனக்கு ஏழு மொழிகள் தெரியும் ஐயா!’’ என்றான்.அப்போது வள்ளலார், ஆறு மொழிகள் தெரிந்த அகந்தையுடன் வந்திருந்தவரை நோக்கி, ‘‘இதோ! இந்தச் சிறுவனிடம், நீங்கள் கேட்க வேண்டியவற்றை எந்த மொழியில் வேண்டுமானாலும் கேட்கலாம். இவன் பதில் சொல்லுவான்’’ என்றார்.

வந்தவரும் ஏதோ பேச முயன்றார். ஆனால், அவரால் வாய்திறக்க முடியவில்லை. அவருடைய அகந்தையெல்லாம் அப்படியே கரைந்து, அழுகையாக வெளிப்பட்டது.ஓ! வென்று அழுதபடியே வள்ளலாரின் திருவடிகளில் விழுந்து, அழுதார்; திருந்தினார்.இப்படி அடுத்தவரிடம் இருந்த அகந்தை எனும் அறியாமையை நீக்கிய வள்ளலார், தன்னளவில் எப்படி இருந்தார்? எவ்வளவுதான் உயர் ஞானம் பெற்றிருந்தாலும், தன் முனைப்பு என்பது தன்னை அறியாமலேயே வெளிப்பட்டு விடும்.

‘எனக்கு அகங்காரமே கிடையாது’ என்று சொல்லும் போதே, ‘எனக்கு’ என்ற தன்முனைப்பு வெளிப்பட்டு விடும். இந்த நிலையையும் கடந்தவர் வள்ளலார். இதை, வாரி வாரி, யார் கேட்டாலும் ஞான அமுதத்தை வாரி வழங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் வெளிப்படுத்தினார்:வள்ளலாரைப் பார்த்திருந்த மூதாட்டி ஒருவரை, வாரியார் ஸ்வாமிகள் சந்தித்தார். (சந்தித்தார்
என்னும் உலக ரீதியில் சொன்னாலும், வாரியார் ஸ்வாமிகள் அடியேனிடம் சொல்லும் போது வள்ளலாரைத் தரிசித்தவரை அடியேன் தரிசித்தேன் என்று தான் சொன்னார்.) வள்ளலார் மீது அளவில்லாத பக்தி கொண்டவர் வாரியார் ஸ்வாமிகள். அந்த மூதாட்டியை வணங்கி ‘‘அம்மா வள்ளலாரிடம் நீங்கள் அனுபவித்த ஞான அனுபவங்கள் எதையாவது அடியேனுக்குச் சொல்ல வேண்டும்’’ என வேண்டினார்.

மூதாட்டி சொல்லத் தொடங்கினார். நான் சிறுபிள்ளையாக இருந்த போது வள்ளலாரை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் எனக்கு பாட்டெல்லாம் சொல்லிக் கொடுப்பார். கும்மியடி பெண்ணே கும்மியடி என்று என் கைகளை பிடித்தபடி ஆடிப்பாடுவார்.

அப்போது சில சமயங்களில் அவர் தலையைப் போர்த்தியதைப் போல இருக்கும் மேலாடை (முக்காடு) விலகும். அப்படி விலகியவுடன் நான் ஆச்சரியப்படுவேன். அப்போது அவர் உச்சந்தலையில் விவரிக்க இயலாத ஒரு பசுஞ்ஜோதி ‘பளிச்’ சென்று பிரகாசமாகத் தெரியும். அதை நான் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவசர அவசரமாகத் தன் மேல் துணியால் அதை மூடிக் கொள்வார் வள்ளலார்.

என் கையைப் பிடித்தபடி இதை யாரிடமும் சொல்லாதே என்பார். அது (அவர்) ஒரு ஜோதி வடிவம் என்று சொல்லி முடித்து பழைய நினைவுகளுக்குப் போய் விட்டார் மூதாட்டி.
அவரை வணங்கி நான் (வாரியார்) மீண்டேன் என்று சொல்லி முடித்த வாரியார் ஸ்வாமிகள் கண்களில் கண்ணீர் ததும்பியது. ஓரறிவுள்ள உயிரினமான செடி கொடிகள் வாடினால் கூட வள்ளலாரால் தாங்க முடியாது. ‘‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்ற அவர் வாக்கு அவரது உள்ளத்தின் உயர்வை வெளிப்படுத்தும்.

அப்படிப்பட்ட மகானான வள்ளலார் 30.1.1874 வெள்ளிக்கிழமை தைப்பூசத்தன்று ஜோதிமயமாகவே இறைவனுடன் இரண்டற கலந்தார். அவருடைய பாடல்களும் வாழ்வும், வாக்கும் மக்களிடையே பரவினால் எந்த விதமான சச்சரவுகளும் இருக்காது.

பரசு