தைப்பூச தரிசனம்



சுவாமிமலை பிரணவப் பொருளுரைத்த ஞானக் குழந்தை

குழந்தைக் குமரன் கயிலையின் வாயிலில் தன் வயதொத்த சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். உலகாளும் சிவபிரானை காண்பதற்கு வருவோர் போவோரெல்லாம் முருகக் குழந்தையை கொஞ்சிச் சென்றனர்.

 அப்படி வந்தவர்களில் பிரம்மனும் ஒருவர். ஆனால், இவரோ பூரண பிரம்ம சொரூபத்தை வெறும் பாலகனாகவே கண்டார். பிரபஞ்சத்தை படைப்பதாலேயே தான் ஈசனுக்கு நிகர் என உன்மத்தம் கொண்டிருந்தார். அதனாலேயே அந்த ஞானாக்னியாகிய குமரனை ஒரு பொருட்டாக மதிக்காமல், தாண்டிச் சென்றார்.

ஞானசொரூபன் பிரம்மாவின் கர்வத்தைக் கலைக்க சித்தம் கொண்டான். ‘‘நீங்கள் யாரய்யா? எந்தக் கலைகளிலெல்லாம் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்?’’- குழந்தை மழலை கலையாது கேட்டது.
பிரம்மா முகத்தில் கர்வக்களை அரும்பியது. இந்தப் பாலகனிடம் போயா இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது என்ற அலட்சியத்துடன் தலைகீழ் கணக்குப் போட்டார்.

செருக்குடன், ‘‘நானே பிரம்மா. நான்மறைகளைத் தாங்கியவன். பிரபஞ்ச சிருஷ்டிக்கு அதிபதி. தேவர்கள் முதல் சிறு துரும்புவரை என் படைப்புகளே. சகல வித்தைகளுக்கும் தலைவன் நான்” என்றார்.

‘‘அப்படியானால் வேதத்தின் உட்பொருளை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்களைப் போன்றோர் சொல்லி நாங்கள் கேட்க வேண்டுமென்பது வெகுநாள் ஆசை. ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளென்ன?’’‘‘நான்தான் அதன் பொருளாக விளங்குகிறேன்.

பிரணவத்தின் சொரூபமாக விளங்குகிறேன்’’- விசித்திரமான பதிலைக் கூறினார் பிரம்மா. சுப்ரமணியர் மிகுந்த கோபம் கொண்டார். ‘‘நான் கேட்டது பிரணவ மந்திரத்தின் பொருளை. நீங்களே பிரணவ மந்திரமாக விளங்குகிறீர்கள் என்றால் அதன் பொருளைச் சொல்லுங்கள்” என்று சினந்தார்.

பிரம்மா தனது வாதத்தை முன்வைக்கத் தொடங்கினார். ஆனால், ஓம் எனும் பிரணவம் பிரம்மாவிடம் வெறும் வார்த்தையாகத்தான் இருந்தது. அது தன் அனுபவத்தில் இல்லையென்பதை முதன் முதலாக பிரம்மா உணரத் தொடங்கினார். குழப்பத்துடன் பதறியபடி ஞானப் பண்டிதனின் பாதத்தைப் பற்றினார். குமரக் குழந்தை மாபெரும் பண்டிதனாக மாறியது. இதுவே பரம்பொருள் எனத் தெளிந்த பிரம்மன், அவர் முன்பு கைகட்டி தலை குனிந்தார்.         

முருகன் பிரம்மாவின் தலையில் குட்டினார். நின்ற இடத்திலேயே பிரம்மனை சிறை வைத்தார். பிரபஞ்சப் படைப்பு மெதுவாகக் குறைந்தன. அதை உணர்ந்த முருகப் பெருமான் சிருஷ்டித் தொழிலைத் தான் ஏற்றுக் கொண்டார். மீண்டும் உலகம் அழகாக உருவாகியது. ஞான சொரூபன் படைப்பல்லவா? எல்லாமே ஞான வித்துகளாகவே உயிர்த்தன. உலகில் ஞானமற்ற உயிர்கள் வெகுவாக குறையத் தொடங்கின. இது உலக சமநிலையை பாதித்தது. இதனால் தேவலோகமும், கயிலையும் அதிர்ந்தன.

சிவபெருமான் ஞானப் பிழம்பான தன் குழந்தையின் செயல் அறிந்து மகிழவே செய்தார். தானும் பிரணவப் பொருளைக்  கேட்டு, பிரம்மனையும் விடுவிக்கலாமே என்று எண்ணிப் புறப்பட்டார். ‘‘ஏன் குழந்தாய் பிரம்மனை சிறை வைத்தாய்?’’ என்று நேரடியாக விஷயம் தொட்டார்.

‘‘அண்டசராசரங்களைப் படைப்பவருக்கு ஆதி ஒலியாம் ‘ஓம்’ எனும் பிரணவத்திற்கு அர்த்தம் தெரியவில்லை. தான் படைக்கிறோம் என்கிற கர்வம்தான் அவரிடம் இருக்கிறது. அந்த ஆணவத்தை அறுக்கவே சிறை வைத்தேன் தந்தையே’’ என்றான் குருபரன்.
‘‘பிரம்மாவிற்கே தெரியவில்லை என்கிறாயே. உன்னால் அதற்கு பொருள் கூற முடியுமா? எனக்குதான் சொல்லேன்’’ என்றார், சிவபெருமான்.

‘‘தந்தையே அது தனியொருவருக்கு, மிக ரகசியமாக சொல்லப்படுவது. கேட்போரின் ஆர்வமும், பணிவும்தான் முதன்மையான விஷயங்கள். கேட்பது என் தந்தை ஈசனே ஆயினும் கேட்கும் விதத்தில் கேட்டால் சொல்வோம். ஒரு குருவிடமிருந்து சிஷ்யனுக்கு உபதேசம் பெறும் விதமாக,’’ என்றார் முருகன்.  ஈசன் சட்டென்று பணிவானார். மகனை மடியில் அமர்த்தினார். வாய் பொத்தி, தலைதாழ்த்தி செவியை கூர்மையாக்கினார். மகன் இப்போது குருவானார். தந்தை சீடனானான்.

செவியருகே ‘ஓம்’ எனும் பிரணவத்தைக் கூறி அதன் பொருளை விளக்க தந்தை மெய்மறந்து கண்களில் நீர் பெருக்கினார். முருகன் தகப்பன்சாமியாக கம்பீரம் காட்டினான். சுவாமிநாதனாக மலர்ந்தான். பிறகு, தந்தையின் அன்புக் கட்டளையை ஏற்ற சுவாமிநாதன் பிரம்மாவை விடுவித்தார். பிரம்மாவும் அவ்விருவரின் திருப்பாதம் பணிந்தார்.

முருகன் குருநாதனாக அருட்கோலம் காட்டிய இந்தப் புண்ணியத் தலமே சுவாமிமலை. அருணகிரிநாதர் சுவாமிமலையை ‘குருமலை’ என்றே அழைக்கிறார். திருப்புகழில் இத்தலத்தை திருவேரகம் என்று குறிப்பிடப்படுகிறது. ‘ஏரகத் தமர்ந்த பெருமாளே’ என்று கொண்டாடுகிறார், அருணகிரிநாதர்.

காவிரியும் அரசலாறும் ஓடும் புண்ணியத்தலத்தின் மத்தியில் கோயில் கொண்டிருக்கிறான் சுவாமிநாத சுவாமி. கோயிலின் ராஜகோபுரம் அழகு நிறைந்த சிற்ப வேலைப்பாடுகளோடு விளங்குகிறது. இத்தலத்தில் தந்தைக்கு மகன் குருவாக அமர்ந்ததாலேயே முருகன் மலையில் சற்று உயர்ந்த இடத்தில்  அமர்ந்திருக்கிறான் போலும்! தந்தை சிவனார், உமையுடன் சற்று கீழ்நிலையில் அருளாட்சி புரிகிறார்.

சுவாமிமலை இயற்கை மலை அன்று. இதுவொரு கட்டுமலைக்கோயில். அதாவது பாறைமேல் பாறையாக அடுக்கி, மலைத் தோற்றம் காட்டும் கற்பாறைக் குவியல். கோயிலின் வாயிலிலிருந்து நேரே பார்க்க ஈசனின் சந்நதியும், அம்பாளின் சந்நதியும் அருகருகே விளங்குகின்றன. இத்தலத்தில் ஈசனின் திருப்பெயர் சுந்தரேஸ்வரர். அழகுக் குழந்தையின் தகப்பனல்லவா இவர்!

ஐயன் சந்நதியிலிருந்து அம்பாள் சந்நதிக்குச் செல்வோம். திருக்கண் பார்வை பட்டால் போதும் என்பதுபோல மீனாட்சி எனும் திருநாமம் இவளுக்கு. அறிவும், வித்தையும், விநயமும் ஒன்று கலந்த வடிவே மீனாட்சி. அதை தமது கண்களாலேயே அளித்து விடுவாள் கருணாபூரணி.

கீழ்க்கோயிலிலிருந்து மொத்தம் அறுபது தமிழ் வருடங்களை கணக்கில் கொண்டு அறுபது படிகள் அமைத்திருக்கிறார்கள். இங்குதான் முருகன் தகப்பன்சாமியாக தந்தைக்கு உபதேசிக்கும் காட்சியை அழகான சுதைச் சிற்பமாக வடித்திருக்கிறார்கள். சற்று மேலே செல்ல, நேத்திர விநாயகர் சந்நதி. அதைக் கடந்து உள்ளே செல்ல விபூதியின் மணம் சிந்தையை நிறைக்கிறது. இன்னதென்று சொல்ல இயலாத ஓர் பரிபூரண நிம்மதி மனதைச் சூழ்கிறது. சுவாமிநாதன் குருநாதனாக நின்று அருள்பாலிக்கிறார்.

நல்ல நெடிய தோற்றம். வலது கையில் தண்டம் ஏந்தி நிற்கிறார். இடது கரம் இடுப்பில் பதிந்திருக்கிறது. சுப்ரமணிய சுவாமி பிரம்மச்சர்ய கோலம் கொண்டருளுகிறார். அழகும், ஞானமும் கொப்பளித்துப் பொங்கும் திருமுகம். தன்னை நம்பி வந்தவருக்கெல்லாம் இனியவனாய் இதம் கூட்டும் இளையவன். தன்னை வழிபடுவோரின் வாழ்வினை ஏறுமுகமாக்கிக் காட்டுவான், இந்த ஆறுமுக சுவாமி. அந்தச் சந்நதியில் தனித்தோனாக நிற்கும் அவனுடைய வடிவழகும், அருளழகும் சுமந்த நம் மனம் அவ்விடம் விட்டு அகல மறுக்கிறது. அவனை அகத்தில் ஏற்றி பிராகாரத்தை சுற்றி வருவோம்.

கட்டுமலையின் மேல் பிராகாரத்தில் எந்நேரமும் ஓர் இனிய தென்றல் தவழ்ந்து கொண்டிருக்கும். இறைச் சாந்நித்தியத்தின் முழுத் திண்மையும் அந்தப் பிராகாரத்தில் அருவச் சக்தியாக இழைந்தோடுகிறதோ என்று எண்ணத் தோன்றும். மெல்ல மனதை சிறகாக்கி வலம் வந்து கொடிமரத்தின் கீழ் விழுந்து பணிந்து நிமிர, குருபரன் தம் திருப்பாதத்தை நம் நெஞ்சில் அழுத்தமாகப் பதித்துவிடும் நிறைவைப் பெறுகிறோம். சுவாமிமலை, கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

கிருஷ்ணா
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்