தெளிவு பெறு ஓம்



ஸ்வாமி படம் போட்ட பழைய காலண்டர்களை என்ன செய்வது?

?ஒருவரின் ஜாதகப்படி பெயர் அமையாவிட்டால் அதற்கு என்ன செய்ய வேண்டும்?
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

ஒன்றும் செய்ய வேண்டாம். கடமையைச் செய்யுங்கள். அதற்கான பலன் கிடைக்கும். பெயர் என்பது ஒரு தனி மனிதனை அடையாளப்படுத்துவதற்காக வழக்கத்தில் வந்த ஒன்று. அந்தப் பெயரானது பாசிட்டிவ் எனர்ஜி தருகின்ற வகையில் அமைய வேண்டும் என்பதையே நேமாலஜிஸ்ட் மற்றும் நியூமராலஜிஸ்ட் ஆகியோர் வலியுறுத்துகிறார்கள். மற்றபடி ஜாதகத்தின்படி பெயர் அமைய வேண்டும் என்ற எந்தவிதமான விதியும் கிடையாது. அந்தக் காலத்தில் எல்லோருக்கும் ஜாதகம் எழுதி வைக்கும் பழக்கம் உண்டாகவில்லை.

அந்தச் சூழலில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இன்னின்ன எழுத்துகள் என்பது உருவாக்கப்பட்டன. இந்த நட்சத்திரத்தின் இந்த பாதத்தில் பிறந்த குழந்தைக்கு இந்த எழுத்தில் பெயர் துவங்குவது போல் வைத்தால் அந்தக் குழந்தையின் ஜென்ம நட்சத்திரத்தையும், ராசியையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்பதற்காக இந்தப் பழக்கம் உருவானது. உதாரணத்திற்கு ‘வாசன்’ என்று பெயர் வைத்தால் ‘வா’ என்ற எழுத்தானது ரோகிணி நட்சத்திரத்திற்கு உரியது, எனவே இவர் ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் பிறந்தவர் என்பதை எளிதாகத் தெரிந்து கொண்டு ரிஷப ராசிக்கு உரிய பலனை ஜோதிடர்கள் உரைப்பர். மற்றபடி ஜாதகப்படி பெயரை வைக்காது போனால் பலன்கள் ஏதும் மாறிவிடாது.

அதே நேரத்தில் அர்த்தமில்லாத பெயர்களையும், தவறான பொருள் உண்டாகும்படியான பெயர்களையும் கண்டிப்பாக வைக்கக்கூடாது. ‘அஸ்வத்’ என்பது நாராயணனைக் குறிக்கும். இந்தப் பெயரை தற்காலத்தில் ஸ்டைலாக ‘அஸ்வந்த்’ என்று வைத்துக் கொள்கிறார்கள். அஸ்வம் என்றால் குதிரை, அந்த் என்றால் இறுதி, அதாவது, குதிரையைக் கொல்பவன் என்பதே அஸ்வந்த் என்பதற்கான பொருள். அர்த்தத்தை உணராமல் இப்படி ஸ்டைலாக பெயர்களை சூட்டாது இறைவனின் திருநாமங்களைச் சொல்லும்படியான பெயர்களை குழந்தைகளுக்கு வைப்பது நல்லது. அவர்களைக் கூப்பிடும் சாக்கிலாவது இறைவனின் திருநாமத்தினை உச்சரிக்கும் பாக்கியமாவது நமக்குக் கிட்டும்.

?சூலம் பார்க்க வேண்டியது அதற்குரிய திசையில் பிரயாணம் செய்யும்பொழுது மட்டுமா அல்லது தற்போது வசிக்கும் ஊரிலேயே பத்து கி.மீ. தூரம் தள்ளி வேறு இடத்திற்குப் போகும் திசைக்கும் சூலம் பார்க்க வேண்டுமா?
- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்-9.

முதலில் சூலம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தந்த நாளில் சூரியனின் தீட்சண்யம் குவியும் திசைக்கு சூலம் என்று பெயர் வைத்தார்கள். அந்த திசையில் சூடு அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய உண்மைக் கோள்கள் ஏழினையும் வார நாட்களாக ஞாயிறு, திங்கள்... என வார நாட்களாகப் பெயரிட்டு அழைக்கிறோம்.

ஒவ்வொரு கோளிற்கும் உரிய திசைக்கு எதிர்திசையை அந்த நாளுக்குரிய சூலம் காட்டும் திசையெனக் குறிப்பிட்டிருப்பர். சூரியன், சுக்கிரனின் திசை கிழக்கு என்பதால் ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் அன்று மேற்கே சூலம் என்றும், சந்திரன், சனி ஆகியோரின் திசை மேற்கு என்பதால் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கிழக்கே சூலம் என்றும் இவ்வாறாக ஒவ்வொரு நாளிற்கும் குறிப்பிடுவர். இதற்குப் பரிகாரமாக அன்றைய தினம் பகல்12 மணிக்கு மேல் பால் அல்லது தயிர் சாப்பிட்டுவிட்டு பயணிக்கலாம் என்றும் ஒரு சிலர் அறிவுறுத்துவர்.

அலுவல் பணியாகவோ, தொழில்முறையிலோ அடிக்கடி பிரயாணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நம் தமிழகத்தில் ‘சூல் கொண்ட மாதருக்கு சூலம் முக்கியம்’ என்ற மொழி வழக்கில் உள்ளது. அதாவது, கர்ப்பிணி பெண்கள் பிரயாணம் செய்யும்போது அவசியம் சூலத்தைக் கணக்கில் கொள்ள வேண்டும். சூடு அதிகமாக இருக்கும் திசையில் பயணிக்கும்போது வயிற்றில் உள்ள குழந்தைக்கும், அந்தக் குழந்தையை சுமக்கும் தாய்க்கும் உடல்நலம் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணத்தில் சூலம் என்று குறிப்பிட்டிருக்கும் திசையில் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். அதே போல, கிரஹப்ரவேசம் என்று சொல்லப்படுகின்ற புதுமனை புகுவிழாவிற்கும் வாரசூலை அவசியம் பார்க்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இதற்கு புதிய வீட்டின் தலைவாசக்கால் எந்த திசையை நோக்கி இருக்கிறதோ அதனை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு கிழக்கு பார்த்த வாசல் என்றால் ஞாயிறு, மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதுமனை புகுவிழா நடத்தக்கூடாது. கிழக்கு நோக்கிய வாசற்படிக்கு பூஜை செய்து வீட்டினுடைய எஜமானர் மேற்கு நோக்கி உள்ளே நுழைய வேண்டியிருக்கும். ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கே சூலம் என்பதால் அந்த நாட்களில் கிரஹப்ரவேசம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம்.

அதே போல க்ஷேத்திராடனம் அதாவது, ஆன்மிகப் பிரயாணம் செல்பவர்கள் சூலம் பார்க்க வேண்டியது அவசியம். மற்றபடி நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் பத்து கி.மீ. தூரம் என்றெல்லாம் தூரத்தின் அளவைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.?நான் சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் இருந்து வருகிறேன். என் தந்தை மார்கழி மாதம் காலமடைந்து விட்டார். நான் விரதங்கள் இருக்கலாமா, இல்லை ஒரு வருடம் சென்ற பிறகுதான் விரதங்கள் இருக்க வேண்டுமா?
- வ.பாண்டியன், அழகன்குளம்.

தொடர்ந்து நீங்கள் விரதங்கள் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. தந்தை இறந்து 16வது நாள் கருமகாரியங்கள் நடக்கும் வரை வீட்டினில் தினசரி செய்யும் பூஜையைக்கூட செய்ய இயலாது. 16வது நாள் காரியம் நடந்து முடிந்த பின் மறுநாளில் இருந்து வீட்டினில் தினசரி பூஜையறையில் விளக்கேற்றலாம். தினசரி செய்து வரும் பூஜைகளை தொடர்ந்து செய்யலாம். நீங்கள் ஏற்கெனவே சஷ்டி மற்றும் கிருத்திகை விரதம் மேற்கொள்பவர் என்பதால் தலைதிவசம் நடந்து முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உங்கள் விரதத்தினைத் தொடர்வதில் எந்தவித தவறும் இல்லை. அதே நேரத்தில் இறந்தவர் உங்கள் தந்தை என்பதால் இந்த ஒரு வருட காலத்திற்கு பிரம்மோற்சவம் நடைபெறும் ஆலயங்கள் சபரிமலை, திருப்பதி, திருச்செந்தூர் முதலான ஸ்தலங்களுக்கு செல்வதும், குலதெய்வத்திற்கு பொங்கலிட்டு வழிபாடு செய்வதும் கண்டிப்பாக செய்யக்கூடாது.

?ஆலயத்தை சுற்றிய பிறகு இறைவனை வணங்க வேண்டுமா அல்லது நேரே இறைவனை வணங்கிய பிறகு பிராகாரம் சுற்ற வேண்டுமா?
- பா.சீனிவாசன், வாங்கப்பாளையம்.

‘போர்த்திக்கொண்டு படுக்க வேண்டுமா அல்லது படுத்துக்கொண்டு போர்த்திக் கொள்ள வேண்டுமா’ என்பது போல் இருக்கிறது உங்களது கேள்வி. இறை சிந்தனையுடன் ஆலயத்திற்குள் செல்வதே புண்ணியம்தான் என்கிறார்கள் பெரியோர்கள். மூலவரின் சந்நதியில் திரை போடப்பட்டிருக்கிறது என்றால் நேரத்தை வீணாக்காமல் ஒரு சிலர் முதலில் பிராகாரத்தை சுற்றி வருவர். அல்லது மூலவரை தரிசித்துவிட்டால் உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மனம் விரும்பும், பிராகாரம் சுற்றும்போது மனம் இறைசிந்தனையில் செல்லாது என்பதால் முதலில் பிராகாரத்தை சுற்றிவிட்டு இறுதியாக மூலவரை தரிசிப்போரும் உண்டு.

இன்னும் சிலர் முதலில் மூலவரை தரிசித்து விட்டு அவரது நினைவாகவே நிதானமாக பிராகாரத்தைச் சுற்றி வருவர். விழாக்காலங்களில் ஒவ்வொரு சந்நதியாக தரிசிப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் எல்லா சந்நதிகளுக்கும் சேர்த்து வெளிபிராகாரத்தை மட்டும் சுற்றி வந்து வணங்குவோரும் உண்டு. இது அவரவர் மனநிலைக்கு ஏற்ப நடந்து கொள்கின்ற முறையே அன்றி இதற்கு என்று தனியாக விதிமுறையை வகுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.?

ஜாதகம் பார்த்து பொருத்தம் சரியாக இருந்தால் மட்டுமே மணம் முடிக்கலாம் என்ற நடைமுறை இருக்கிறது. ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் காதல் பழக்கத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள்கூட நல்ல வாழ்க்கை நடத்துகிறார்களே! இப்படி ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் மணம் செய்வது முறைதானா?
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்கின்ற பழக்கம் கடந்த 40 வருடங்களாகத்தான் உள்ளதே அன்றி தொன்றுதொட்டு வருவது அல்ல. நம் குடும்பத்தில் உள்ள தாத்தா-பாட்டிக்குக் கூட பொருத்தம் பார்க்காமல்தான் திருமணம் செய்து வைத்திருப்பார்கள். பொருத்தம் பார்க்கச் செல்லும் இடத்தில் ஜோதிடர் கூட பத்துக்கு ஒன்பது பொருத்தம் சரியாக உள்ளது, மனப்பொருத்தம் கூடி வந்தால் திருமணம் முடிக்கலாம் என்று கூறுவதைக் கேட்டிருப்போம். ஆக மணவாழ்க்கைக்கு மனப்பொருத்தம் என்பது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

அப்படியானால் ஜாதகப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லையா, வெறும் மனப்பொருத்தம் மட்டுமே போதுமா என்ற கேள்வியும் நம் மனதில் எழும். ஜாதகத்தில் பொருத்தம் என்பது இருந்தால் மட்டுமே இருவர் மனதும் ஒத்துப்போகும் என்பதை நாம் இங்கே புரிந்துகொள்ள வேண்டும்! ஆண் ராசியின் அதிபதியும், பெண் ராசியின் அதிபதியும் எதிரிகளாக இருந்தால் அவர்களுக்குள் எந்தவிதமான ஈர்ப்பும் உண்டாகாது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அவர்களால் ஒன்றாக பழக இயலாது. பொருத்தம் பார்த்து திருமணம் செய்துகொண்டவர்களில் கூட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். முக்கியமாக ராசி அதிபதி பொருத்தம் என்பது இவர்களது ஜாதகங்களில் அமையாது போயிருக்கலாம்.

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் ராசி அதிபதி ஒருவரே ஆனாலும் அல்லது இருவர் ராசிகளின் அதிபதிகளும் நட்பாக இருப்பினும் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்யலாம் என்பது ஜோதிடவிதி. இவ்வாறு ராசி, ராசி அதிபதி, வசியம் ஆகிய இந்த பொருத்தங்கள் நன்றாக இருப்பவர்கள் மட்டுமே ஒன்றாக பழக இயலும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இயலும், இவர்கள் திருமணம் செய்துகொள்ளும்போது நல்ல வாழ்க்கை என்பது அமைகிறது என்பதை காதல் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்துகொண்டு இருக்கின்ற பல தம்பதியரின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தபோதுதான் நான் தெரிந்து கொண்டேன்.

?எனது தம்பி மகனுக்கு 2015 மார்ச் 22ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த கையோடு நாங்கள் குலதெய்வ வழிபாடு செய்வோம். அதில் ஸ்நானம் செய்து, நெல்மணி இட்டு, மீண்டும் தீர்த்தமாடி, அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்து, பின் மாவிளக்கு போடுவது வழக்கம். என் தந்தை வழி சித்தி இறந்து 1 வருடம் ஆகாத நிலையில் குலதெய்வ வழிபாட்டை எவ்விதமாக நடத்தலாம்? ஏனெனில் திருமணத்திற்குப் பின் 15 நாளில் மணமகன் அமெரிக்கா சென்று விடுவார். என்ன வழி உள்ளது என்று கூறவும்.
- ஹரிஹரன், மதனந்தபுரம்.

இறந்துபோன பெண்மணிக்கு அந்திம கிரியைகளை செய்தவரைத் தவிர மற்றவர்கள் குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அபிஷேக அலங்கார அர்ச்சனைகள் செய்வது, மாவிளக்கு போடுவது ஆகியவற்றை நிச்சயமாக செய்யக்கூடாது. அவ்வாறு செய்வதால் எவ்விதப் பிரயோஜனமும் இல்லை. மணமகன்
15 நாட்களில் வெளிநாடு சென்றுவிடுவார் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்தச் சூழலில் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் தம்பதியராக ஒன்று சேர்ந்து குலதெய்வத்தின் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பலாம். மாறாக அபிஷேக ஆராதனைகள் செய்யக்கூடாது.

?கோயில்களில் அந்தந்த தெய்வங்களின் பெயர்களுக்கே அர்ச்சனை செய்யச் சொல்வது சரியா?
- அ.கிருஷ்ணகுமார், பு. புளியம்பட்டி.

ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்பவர்கள் தங்களது கோத்திரம், நட்சத்திரம், ராசி மற்றும் பெயரைச் சொல்லி சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்வர். அதாவது, தங்களுக்குத் தேவையானவற்றை பெற வேண்டி பெயர், விலாசம் எழுதி அரசாங்கத்திடம் மனு எழுதி சமர்ப்பிக்கிறோம் அல்லவா, அது போல அர்ச்சகர் மூலமாக இறைவனிடம் தனக்குத் தேவையானவற்றைப் பெற வேண்டி அர்ச்சனை செய்வதன் மூலமாக மனுவினை சமர்ப்பணம் செய்வர்.

 எனக்கு என்ன தேவையோ அதனை இறைவன் அறிவான், நான் தனியாக அவனிடம் மனு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுபவர்கள் ஸ்வாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள் என்று சொல்வார்கள். அதேபோல, எனக்குத் தேவையானவற்றை இறைவன் தாராளமாக எனக்குத் தந்திருக்கிறான், அதுவே எனக்குப் போதுமானது என்று நினைப்பவர்களும் தங்கள் பெயருக்கு என்று தனியாக அர்ச்சனை செய்து கொள்ள மாட்டார்கள்.

இவ்வாறு தனக்கு எதுவும் தேவையில்லை, இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் (லோகா: ஸமஸ்தாஸ் சுகினோ பவந்து!) என்று எண்ணுபவர்கள் லோக க்ஷேமத்திற்கு என்ற சங்கல்பம் செய்துகொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கால பூஜையின்போதும் அந்தந்த தெய்வங்களின் பெயர்களுக்கு அர்ச்சனை என்பதை அர்ச்சகர் செய்துகொண்டுதான் இருப்பார். சாமானிய மனிதர்கள் ஆகிய நாம் நமது பெயருக்கு அர்ச்சனை செய்துகொள்வதே சரியானது.

?கடமையை செய்வதே கடவுள் வழிபாடு ஆகுமா?
- சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

அதிலென்ன சந்தேகம்? கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்கிறது பகவத் கீதை. கடமையைச் சரிவர செய்பவனிடம் இறையருள் நிறைந்திருக்கும் என்பதை எல்லா மதங்களின் மறைகளும் வலியுறுத்துகின்றன. ஆனால், தனக்குரிய கடமையைச் சரியாக உணர்ந்து செய்ய வேண்டும். வயதான பெற்றோருக்குப் பணிவிடை செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமை. பெற்ற பிள்ளைகளுக்குத் தேவையானதை சரியான நேரத்தில் நிறைவேற்றி வைக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை.

பணத்தை பிரதானமாக எண்ணாமல் மாணவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டியது ஆசிரியரின் கடமை. குருவினை மதித்து நடக்க வேண்டியது சீடனின் கடமை. கலப்படம் இல்லாத சுத்தமான பொருட்களை வாடிக்கையாளருக்குத் தர வேண்டியது கடைக்காரனின் கடமை. அவரவருக்கு உரிய கடமையினை சரிவர தெரிந்துகொள்ளாததன் விளைவாக துன்பத்தை அனுபவிக்கிறோம். நமக்குள் உய்யும் இறைவனைத் தெரிந்து கொள்ளாமல் ஆண்டவனை வெளியில் தேடுகிறோம். அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கிருஷ்ண பரமாத்மா தனது நித்திய பூஜையில் தினசரி ஆறு பேரை நமஸ்கரிக்கிறான் என்கிறது ஸ்மிருதி வாக்கியம்.

நித்திய கர்மானுஷ்டானங்களைச் சரிவர செய்து வருகின்ற வேத பிராமணர், கணவனின் குறிப்பறிந்து நடக்கும் பதிவிரதை, பெற்றோருக்கு பணிவிடை செய்யும் பிள்ளை, தன் வாழ்நாளில் தான் பெற்ற பிள்ளைகளை சரியான முறையில் பாதுகாத்து வளர்த்து 80வது வயதில் சதாபிஷேகம் செய்துகொண்டவன், பசுக்களை காப்பவன், ஏழை மக்களின் பசியைப் போக்கும் வகையில் நித்தியம் அன்னதானம் செய்பவன் என கடமையைச் செய்பவனை கடவுளே வணங்குகிறான் எனும்போது கடமையைச் செய்வது கடவுள் வழிபாட்டினை விடவும் சாலச் சிறந்தது அல்லவா..!

?பழைய சுவாமி படக் காலண்டர்களை என்ன செய்வது?
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

ஒன்றும் செய்ய வேண்டாம். எடைக்குப் போடுங்கள். தினசரி நாள்காட்டி முதல் மாதாந்திர காலண்டர்கள் வரை அனைத்திலும் சுவாமி படங்களை அச்சடிக்கிறார்கள். வீட்டிலும், அலுவலகத்திலும், வியாபார நிறுவனங்களிலும் நம் கண் முன்னே சுவாமி படங்களைக் கொண்ட காலண்டர்கள் தொங்கும்போது இறைவன் நம் கூடவே இருப்பதாக நமக்கு ஒரு நம்பிக்கை உண்டாகிறது. ‘இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான்’ என்பது அசைக்க முடியாத உண்மை. ஆவாஹனம் செய்யப்பட்ட விக்கிரகங்கள் அல்லது நம் பூஜையறையில் நாம் தினமும் பூஜித்து வரும் உருவகங்கள் இவை பின்னமானால் அவற்றை ஜலத்தில் அதாவது, சமுத்திரத்திலோ அல்லது ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றிலோ சேர்ப்பித்து விட வேண்டும்.

 மாறாக நீங்கள் குறிப்பிடுவது போன்ற காலண்டர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் இவற்றிற்கு எந்த விதமான விதிமுறையும் இல்லை. காலண்டர்கள், அட்டைகள் அல்லது நல்ல தரமான காகிதத்தில் அச்சிடப்பட்டிருப்பதால் காலில் மிதிபடாத வகையில் அவற்றை எடைக்குப் போடுவதில் எவ்வித தவறும் இல்லை.

?தெய்வ ஸ்தலங்களுக்கு சென்றுவிட்டு நேராக வீட்டிற்குத்தான் செல்லவேண்டும், அலுவலக வேலையாக இருந்தாலும் வெளியூர் செல்லக்கூடாது என்று சிலர் கூறுவது ஏன்?
- ஆ.ஆரிமுத்து, வாழைப்பந்தல்.

தெய்வத்திடமிருந்து பெற்ற அருளோடு நேராக வீட்டிற்குச் சென்றோமேயானால் தெய்வத்தினுடைய அருள் கடாட்சம் நம் வீட்டிலும் நிறைந்திருக்கும் என்பதால் இவ்வாறு சொல்லி வைத்தார்கள். ஆலயத்தில் பெற்றுக்கொண்ட பிரசாதத்தை (விபூதி, குங்குமம்) வழியில் எங்கும் தவறி விட்டுவிடக் கூடாது, வீட்டில் உள்ளோருக்கும் அந்த பிரசாதமானது சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அவ்வாறு நம்மை பழக்கினார்கள்.

ஆனால், இன்றைய தேதியில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான அலுவல் பணியின் காரணமாக வெளியூர் செல்லும் பட்சத்தில் இந்தமாதிரியான சென்டிமென்ட்களுக்கு அதிக முக்கியத்துவம் தரத் தேவையில்லை. அதே நேரத்தில் நேர்த்திக் கடன் செலுத்துதல், தீர்த்த யாத்திரை, சபரிமலைப் பயணம் முதலான ஆன்மிகப் பயணம் செல்பவர்கள் நேராக வீட்டிற்கு வந்து பிறகு அலுவல் பணிகளுக்கு செல்வதே நல்லது.

திருக்கோவிலூர்
ரி.ஙி.ஹரிபிரசாத் சர்மா