வருமானம் உயரும், நிம்மதி உண்டாகும்!



என்ன சொல்லுது எதிர்காலம்?

?நான் கார்பெண்டர் வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஜந்து வருடங்களாக சரியான வேலை கிடைக்கவில்லை. நாங்கள் பிசினஸ் தொடங்கலாமா? எங்கள் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும். - எஸ்.கோமதி விநாயகம், பெங்களூர்.

உங்களின் ஜாதகத்தை சர்வார்த்த சிந்தாமணி எனும் நு£லை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும்போது தெய்வ பலம் நன்றாக உள்ளது. குருவும், சனியும் உங்கள் ஜாதகத்தில் வலுவடைந்து இருப்பதால் வருங்காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தசாபுக்திகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயும்போது ஏப்ரல் 2015 முதலே உங்களுக்கு நல்லதெல்லாம் நடக்கும். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியான சுக்கிரன் செவ்வாயுடன் சேர்ந்து கிரக யுக்தம் செய்வதனால் சொந்த ஊர் உங்களுக்கு சரிவராது. எனவே, நீங்கள் தற்போது வசிக்கும் பெங்களூரிலேயே சிறந்து விளங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

 2ம் இடத்தில் உங்களுக்கு கருநாகமாகிய ராகு அமர்ந்திருப்பதால் கர்நாடக மாநிலம் உங்களுக்கு காசு பணத்தை தரும். ராகு மகாதசை, குரு மகாதசை இரண்டும் முடிவடைந்து தற்சமயம் சனி மகாதசை தொடங்கி சனிபுக்தியும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால்தான் ஊர் மாறலாமா, இடம் மாறலாமா என்ற குழப்பம் உங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. உங்கள் மனைவியின் ஜாதகம் நன்றாக உள்ளது. உங்கள் மனைவிக்கு 33 வயது வரை சுக்கிர மகாதசை நடைபெறும்.

சுக்கிரன் 5ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பாரம்பரியமான நகரத்தில்தான் நீங்கள் தொடர்ந்து இருக்க வேண்டியது வரும். உங்கள் மனைவியின் ஜாதகப்படியும் பெங்களூரில் தொடர்வதற்கான அறிகுறிகள் அதிகம் தென்படுகின்றன. உங்கள் மகள் இசக்கியம்மாளின் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக ஆராய்ந்தோம்.

உங்கள் மகள் ஜாதகம் அருமையாக இருக்கிறது. உங்கள் மகளுக்கு ஐந்து வயது முதல் ராகுதசை தொடங்க இருப்பதாலும் 2017 டிசம்பர் மாதம் முதல் ஏழரைச்சனி நடைபெற இருப்பதாலும் நீங்கள் பூர்வீகத்தை நோக்கி வராமல் பெங்களூரிலேயே இருப்பது மிகவும் நல்லது.

உங்கள் மரத்தொழில் உங்களுக்கு மேலும் சிறக்கும். உங்கள் மனைவி ஜாதகப்படி உணவு, டெய்லரிங் துணி தொடர்பான வியாபாரம் நன்றாக இருக்கும். உங்கள் மகளின் பெயரை வியாபாரத்திற்கு வைக்க வேண்டாம். சாய்பாபாவின் பெயரில் தொழில் தொடங்குவது நல்லது. உங்கள் மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும். 6ம் வகுப்பு முதல் கல்வியில் சிறந்து விளங்குவாள். மேலும் நன்மைகள் பெற குடும்பத்துடன் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்கி வாருங்கள்.

? என் மகன் அறுவடை இயந்திரம், லாரி ஜே.சி.பி வைத்து பிசினஸ் செய்கிறார். எவ்வளவு வருமானம் வந்தாலும் கையில் பணம் தங்குவது இல்லை. வேறு என்ன தொழில் செய்ய லாம்? 7, 14 வயதில் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நானும் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறேன். என் மகனின் எதிர்காலம் எப்படி இருக்கிறது? தெளிவுபடுத்தி, பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
- பத்மாவதி வேங்கடம், பொன்னேரி.

உங்களுடைய மகனின் ஜாதகத்தை அஷ்டவர்க்க பரல்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். துலா லக்னம் மிதுன ராசியில் அவர் பிறந்திருக்கிறார். பிறக்கும் போதே அவருக்கு சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறது. லக்னாதிபதி சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதாலும் பூர்வ புண்ணியாதிபதி சனிபகவான் ராகுவுடன் சேர்ந்து கிரகண தோஷம் அடைந்து காலசர்ப்ப தோஷம் இருப்பதாலும்தான் பொருளாதாரத்தில் நிலையில்லாமல் இருக்கிறது.

சேமிக்க முடியாமலும், எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிவிடும் சூழ்நிலையும் இருக்கிறது. ஆனால், உங்கள் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் மறைந்து கிடப்பதாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

தசாபுக்தியை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது குருதசை, சனிதசை, புதன்தசை, எல்லாம் முடிவடைந்து இப்போது கேது தசை உங்கள் மகனுக்கு நடைபெற்று வருகிறது. 3.5.2021 வரை கேதுதசை இருக்கும். கேது மகாதசை முடிவடையும் வரைக்குமே சில செலவினங்களும், அலைச்சல்களும் இருக்கும். 4.5.2021ல் இருந்து ஆரம்பமாகும் சுக்கிர மகாதசையில் இவருக்கு எல்லா வளங்களும் உண்டாகும்.

சுக்கிரன் லக்னாதிபதியாக இருப்பதனாலும், நவாம்சத்திலேயும் சுக்கிரன் சந்திரனுக்கு 2வது வீட்டில் அமர்ந்திருப்பதாலும் சுக்கிர மகாதசையில் தொழில் அபிவிருத்தியாகும், வருமானமும் உயரும். வீடு, மனை வாங்கக்கூடிய அமைப்புகளும் உருவாகும். உறவினர்களுக்கு மத்தியில் கௌரவமும் செல்வாக்கும் கூடும்.  இவரின் ஜாதகத்தில் இரும்பு வாகனங்களுக்குரிய கிரகமான சனியும், கனரக வாகனங்களுக்கு உரிய கிரகமான ராகுவும் சேர்ந்து ஒன்றாக இருப்பதால் வாகனத்துறை இவருக்கு வளர்ச்சியைத் தரும். டேங்கர் லாரி, கன்டெய்னர் லாரி போன்ற வாகனங்களாலும் இவருக்கு லாபம் அதிகரிக்கும்.

ஸ்கிராப்ஸ் போன்ற பழைய இரும்புகளை வாங்கியோ, விற்றோ செய்தாலும் கூட பணம் வர வாய்ப்பிருக்கிறது. தசாபுக்தியை  அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது கெமிக்கல் துறையிலும் ஈடுபடலாம். கெமிக்கல் வகைகளாலும் இவருக்கு லாபம் வரும். மற்றபடி இவருடைய எதிர்காலம் குறித்து நீங்கள் அதிக கவலையடையாதீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. மகனுக்கு தீர்காயுசு யோகம் இருக்கிறது. எல்லாவகையிலும் அவருக்கு வருங்காலத்தில் வெற்றி கிடைக்கும்.

பூர்வ புண்ணியாதிபதியான சனி கிரகண தோஷம் அடைந்திருப்பதால் கர்நாடகாவில் தர்மசாலாவிற்கு அருகிலுள்ள குக்கே சுப்ரமணியர் கோயிலுக்கு  ஒருமுறை சென்று வருவது நல்லது. ஏகாதசி விரதம் இருந்து ரங்கநாதப் பெருமாளை வணங்குவது நல்லது. இதன் மூலமாக இவருக்கு வருமானம் உயரும். வீண் செலவுகளும் குறையும். குடும்பத்திலும் நிம்மதி உண்டாகும்.

? எனக்கு வயது 79. எனது பேத்தியின் திருமணம் முறிந்துவிட்டது. என் பேத்தியின் இரண்டாவது திருமணத்தைக் கண்டு சந்தோஷம் அடையும் பாக்கியம் கிடைக்குமா? அவளுக்கு திருமணம் முதல் தாரமாக அமையுமா, இரண்டாம் தாரமாக அமையுமா? நல்ல வரனாக அமையுமா? எனக்குப் பிறகு அவளுக்குப் பாதுகாப்பு யாரும் இல்லை.
- கே.சி.சுப்பிரமணி, சென்னை.

உங்கள் பேத்தியின் ஜாதகத்தை சுக்கிர நாடி எனும் நு£லை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்கள் பேத்தியின் ஜாதகம் வித்தியாசமான ஜாதகமாக இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கம், வாக்கிய பஞ்சாங்கம் என இரண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையிலும் ஜாதகத்தை ஆராய்ந்தேன். ஆனால், உங்கள் பேத்தியின் நடைமுறை வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது திருக்கணித பஞ்சாங்கப்படி உள்ள கிரக அமைப்புகள்தான் சரியாக இருக்கிறது.

அதன்படி பார்க்கும்போது லக்னத்திலேயே சுக்கிரன், சனி, ராகு என்று மூன்று கிரகங்களும் உங்கள் பேத்தியின் ஜாதகத்திலேயே அமைந்துள்ளது. பொதுவாக ஒரு ஜாதகர், ஜாதகி நல்ல நிலைமையை பெறுவதற்கு அதாவது படிப்பு தடையில்லாமல், விரைவாக உத்யோகம் மற்றும் காலத்தே நல்ல விதத்தில் வாழ்க்கைத்துணை அமைந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் போன்ற அமைப்புகளெல்லாம் ஒருவருக்கு தடையில்லாமல் கிடைக்கவேண்டுமென்றால் லக்னாதிபதி நன்றாக அமைய வேண்டும். உங்களுடைய பேத்தியின் ஜாதகத்திலே லக்னாதிபதி சனி அஷ்டமாதிபதி சூரியனின் இடத்திலே அமரக்கூடாது. லக்னத்திலேயே சனி இருக்கிறார் என்று சொல்லிக் கொள்ளலாம்.

ஆனால், லக்னத்தில் அமர்ந்தாலும் அவர் நின்ற நட்சத்திரம் அட்டமாதிபதியின் நட்சத்திரமாக இருப்பதனால்தான் அவஸ்தைக்கு பின்னர் தான் ஆனந்தத்தை அடைய முடியும். அந்த அவஸ்தை ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் ஜாதகத்தை சரியாக பார்த்து நல்ல முடிவுகள் எடுப்பது, பெரிய முடிவுகள் எடுப்பது நல்லது. களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் 8வது வீட்டிலே மறைந்திருப்பதுடன், களத்திரகாரகனாகிய சுக்கிரன் இரண்டு பாவ கிரகங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள்.

 உங்களுடைய பேத்தி ஜாதகத்திலே பாதகாதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலே அமர்ந்து தன்னுடைய பாதக ஸ்தானத்தையே வலுவாக பார்த்துக் கொண்டிருப்பதனாலும் எளிதாக பல ஏமாற்றங்களையும் அடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நவாம்சத்திலேயும் களத்திரகாரகன் சுக்கிரன் செவ்வாய், ராகுவுடனும் சேர்ந்து காணப்படுவதும், அவ்வப்போது பல அவஸ்தைகளையும் தரக்கூடிய அமைப்பாகும்.

உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் குருபகவான் உச்சமாகி ஞானகாரகனான கேதுவுடன் நின்று லக்னத்தை பார்ப்பதால்தான் வாழ்க்கையில் மீண்டும் திருமணத்திற்கான வாய்ப்பிருக்கிறது. வாழ்க்கையில் மீண்டும் வசந்தத்தை அனுபவிக்கக்கூடிய யோகமும் இருக்கிறது.

தசாபுக்தியை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது 18.5.1995 வரை கேதுதசையும் 18.5.2015 வரை சுக்கிர மகாதசையும் நடைபெறும். தற்சமயம் சுக்கிர மகாதசையிலே கேதுபுக்தி நடைபெற்று கொண்டிருக்கிறது.

19.5.2015 முதல் சூரிய மகாதசை தொடங்கும். சூரியன் அஷ்டமாதிபதியாக வருகிறார். அப்படிப்பட்ட அஷ்டமாதிபதி 12ல் சென்று மறைந்தது கெட்டவன் கெட்டிடில் கெட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பை தரக்கூடிய அமைப்பாகும்.

எனவே, சூரிய மகாதசையிலே திருமணத்தை எதிர்ப்பார்க்கலாம். கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டுபார்க்கும் போது 19.9.2016 முதல் உங்களுடைய பேத்திக்கு திருமண யோகம் தொடங்குகிறது.

இப்போது திருமண முயற்சிகள் வேண்டாம் கொஞ்சம் அமைதி காப்பது நல்லது. ஏனென்றால் இப்போது தசாபுக்தியும் சரியில்லை. அதுமட்டும் இல்லாமல் கோச்சார கிரகங்களும் இப்போது பலவீனமாக இருப்பதால் பொறுமையாக இருந்து பாருங்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான திருக்கோளூர் பெருமாளை தரிசித்து வாருங்கள்.

உங்களுடைய பேத்தியின் ஜாதகத்திலே சனிபகவான் லக்னத்தில்தான் அமர்ந்திருக்கிறார். உங்கள் பேத்திக்கு நீங்கள் இரண்டாவது தாரமாக வரன் தேடுவது நல்லது. லக்னத்திற்கு சஷ்டாஷ்டகம் பார்ப்பது நல்லதுதான். ஆனால், ராசிக்கு சஷ்டாஷ்டகம் உள்ளது வேண்டாம். உங்களுடைய பேத்தி பிறந்த ராசிக்கு 6, 8, 12வது ராசிகளை தவிர்ப்பது நல்லது. ஜாதகத்தில்  களத்திர ஸ்தானாதிபதியும், களத்திரகாரகனும் பாவகிரகங்களின் சேர்க்கை பெறாமல் இருக்கும் ஜாதகத்தை சேர்த்தால் உங்கள் பேத்தியின் மணவாழ்க்கை நன்றாக இருக்கும்.

சனிபகவான் அஸ்தமனம் ஆகவில்லை. எனவே நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். சனி கொஞ்சம் கிரகயுத்தத்தில்தான் இருக்கிறார். பிதுர் தோஷம் இந்த ஜாதகத்துக்கு கிடையாது. வேறு எந்த தோஷமும் இந்த ஜாதகத்துக்கு இல்லை. உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி, சப்தமாதிபதி என பல கிரகங்களும் பலவீனமடைந்துதான் காணப்படுவதே தவிர பலத்த தோஷமுடன் இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ளக் கூடாது.

குருபகவான் ஜாதகத்தில் வலுவாக அமர்ந்து லக்னத்தை பார்வையிடுவதாலும், பாக்யாதிபதி புதனை பார்வையிடுவதாலும் நல்லது நடக்கும். கவலைப்படாதீர்கள். உங்கள் பேத்திக்கு புத்திர பாக்கியம் உண்டு. புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் பலவீனமாக இருந்தாலும் புத்திரக்காரகனுடைய பார்வையை புத்திர ஸ்தானாதி பதி பெறுவதால் புத்திர பாக்யம் உண்டு. புத்திர ஸ்தானம் வலுவாக இருக்கும் ஜாதகத்தை உங்கள் பேத்திக்கு சேர்க்கலாம். அதன்மூலமாக நல்லது நடக்கும்.

 உங்கள் பேத்திக்கு எந்த தோஷ ஜாதகம் வேண்டுமானாலும் சேர்க்கலாம். உங்களுடைய பேத்தி பெருமாளை இடைவிடாமல் வணங்குவது நல்லது. ஸ்ரீமன் நாராயணீயத்தை படிப்பது நல்லது. சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் ஏழைப் பெண்ணிற்கு அல்லது விதவை பெண்ணிற்கு வெள்ளியை தானம் செய்வது நல்லது.

வெள்ளியை தானம் செய்வதின் மூலமாக சுக்கிரனின் பலம் அதிகரிக்கும். உங்கள் பேத்திக்கு நல்ல வருங்காலம் இருக்கிறது. நல்ல மனதுள்ளவர் வாழ்க்கைத் துணையாக அமைவார்.

கணவர் மூலமாக வெளிநாட்டுப் பயணமும் உள்ளது. 19.9.2016க்கு பின்னர் திருமணம், வெளிநாட்டுப் பயணமெல்லாம் கூடி வரும். ஜாதகப் பொருத்தம் ஆழமாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் உங்கள் பேத்தி இறுதிவரை இன்பமாக இருப்பார். கணவர், குழந்தை பாக்கியம், செல்வ வளம் என்று அனைத்து சுகங்களையும் பெறக்கூடிய அமைப்பு உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் இருக்கிறது.

? எனது கணவருக்கு நிரந்தரமான வேலை எதுவும் இல்லை. நான்தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து எனது குழந்தைகளை காப்பாற்றுகிறேன். எனது மகன் தற்போது 9ம் வகுப்பு படிக்கின்றான். அவன் நன்றாகப் படிப்பானா? அவன் எதிர்காலம் நன்றாக இருக்க நான் ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா?
- என்.தேவசேனா, கோவை.

உங்கள் மூவர் ஜாதகங்களையும் சர்வார்த்த சிந்தாமணி எனும் நு£லை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். உங்களுடைய ஜாதகத்தில் சுகாதிபதியான சந்திரன் 9வது வீட்டில் இருப்பதால் உங்களுக்கு எல்லா வகையிலும் முன்னேற்றம் கிடைக்கும். சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் 8ல் இருப்பதால், உத்யோகம், உயர்வு எல்லாவற்றையும் கொடுக்கும். உங்களுக்கு கேது தசை, சுக்கிர தசை, சூரிய தசை எல்லாம் முடிவடைந்து தற்சமயம் சந்திர தசை நடைபெற்று வருகிறது.

28.10.2017 வரை சந்திர தசை நடைபெறும். உங்களுடைய ஜாதகத்திலேயே மாங்கல்ய ஸ்தானாதிபதி 6ம் அதிபதியுடன் சேர்ந்து காணப்படுவதனால்தான் உங்களுடைய உழைப்பில் கணவருக்கும் சேர்த்து நீங்கள் சாப்பாடு போடவேண்டிய சூழ்நிலை வரும். கணவர் இருக்கிறார் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் என்று எல்லா விதத்திலும் நீங்கள் நிம்மதியாக இருந்துவிட முடியாது. ஏனென்றால் உங்களுடைய ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானத்துக்குரிய கிரகம் பலவீனமாக இருப்பதால் கணவருக்கு விட்டு விட்டுத்தான் வேலை கிடைக்கும். நிரந்தரமான தொழில் இருக்காது. உங்கள் கணவரின் ஜாதகத்தையும் தீவிரமாக ஆராய்ந்தோம்.

அவருடைய ஜாதகத்தில் சுகாதிபதி கிரகம் ராகுவுடன் சேர்ந்து 8ல் மறைந்திருக்கிறார், லக்னாதிபதி 3ல் மறைந்திருக்கிறார். உத்யோக ஸ்தானாதிபதி பகைவீட்டில் அமர்ந்திருக்கிறார். அவருடைய ஜாதகத்தில் பல கிரகங்கள் பலவீனமாக இருக்கிறது. நிரந்தரமான தொழில் அவருக்கு இல்லை. தசாபுக்திகளை அலசி, ஆராய்ந்து பார்க்கும்போது சனிமகாதசை, புதன் மகாதசை, கேது மகாதசை, முடிவுற்று 23.8.2010 முதல் சுக்கிர மகாதசை அவருக்கு தொடங்கியிருக்கிறது.

சுக்கிரன் இவருக்கு பாதகாதிபதியாக இருந்தாலும் 5வது வீட்டிலே அமர்ந்திருப்பதால் ஓரளவு நன்மையைத் தருவார். கோச்சார கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்து பார்க்கும்போது தற்சமயம் இவருக்கு ஜென்ம சனி நடைபெற்று கொண்டிருப்பதால் பெரிதாக முதலீடு செய்து தொடங்குவது கூடாது.

2018 பிப்ரவரி மாதத்திலிருந்து இவருக்கு தசாபுக்தி, கோச்சார அடிப்படைகளை ஆராய்ந்து பார்க்கும்போது நல்ல காலக்கட்டம் தொடங்குகிறது. இரும்பு வகைகள், கட்டுமானப் பொருட்கள், பிளாஸ்டிக் வகைகளால் இவருக்கு பணம் வர வாய்ப்பிருக்கிறது. அத்தகைய தொழிலில் இவர் ஈடுபடலாம். தொடர்ந்து உத்யோகம் பார்க்கும் அமைப்பு இவருடைய ஜாதகத்தில் இல்லை.

எனவே, சுயதொழில் செய்யக்கூடிய அமைப்புதான் இவருடைய ஜாதகத்திலே இருக்கிறது. இப்போதைக்கு கமிஷன், புரோக்கரேஜ் சம்பந்தப்பட்ட வகைகளில் ஈடுபடலாம். ரியல் எஸ்டேட் மூலமாகவும் பணம் வர வாய்ப்பிருக்கிறது. மற்றபடி தசாபுக்தி அந்தரங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது 2018 பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு இவருக்கு நல்ல காலகட்டம் தொடங்குகிறது. முன்னேற்றமும் கிடைக்கும்.

உங்களுடைய மகனின் ஜாதகத்தை மணிகண்ட ஜோதிட கேரள நு£லை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம் உங்கள் மகனுடைய வாக்கு ஸ்தானாதிபதி குருபகவான் சனியுடன் சேர்ந்து காணப்படுவதால் இவரை நீங்கள் உற்சாகப்படுத்திக் கொண்டும், ஊக்கப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக படிப்பு வரும். 27.1.2022 வரை இவருக்கு சுக்கிர மகாதசை நடைபெறும். சுக்கிரன் இவருக்கு மறைந்து காணப்பட்டாலும் சுக்கிரனால் இவருக்கு கல்வி தடைபடாது.

ஆனால், அதீத தன்னம்பிக்கை கிரகமான சுக்கிர தசை நடைபெற்றாலே எல்லாவற்றையும் கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பர். தேர்வு நெருங்கும்போதுதான் படிப்பிலே நாட்டம் அதிகரிக்கும். எல்லாம் தனக்கு தெரியும். ஒருமுறை பார்த்தாலே போதும் என்ற அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பார். இப்படி சின்னச் சின்ன போராட்டங்கள் இருக்கும். ஆனால், உங்கள் மகன் நன்றாகப் படித்து முன்னேறுவார். கவலைப்பட வேண்டாம்.

உங்களுடைய கணவருக்கு சம்பாதிக்கும் யோகம் அமையவும், உங்கள் மகன் நன்கு படிக்கவும், நீங்கள் நல்ல விதத்தில் முன்னேறவும் மூவருமே அங்காரகனாகிய செவ்வாயின் லக்னத்தில் பிறந்திருப்பதனால் திருச்செந்து£ர் செந்தில் ஆண்டவனை வழிபடுவதுடன் அங்கிருக்கும் சூரசம்ஹார மூர்த்தியையும் வருடத்திற்கு ஒருமுறை சென்று தரிசியுங்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்