வேதனை தீர்த்த வரதராஜர்



ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதன்மை அதிகாரிகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் ராபர்ட் க்ளைவ். ஒருமுறை அவர் தம் படைகளுடன் காஞ்சிபுரம் தலத்துக்கு வந்தார். திடீரென அவருக்கு உடல்நலம் குன்றியது.

 கடுமையான காய்ச்சலும் உடல் சோர்வும் அவரை அப்படியே வீழ்த்தியது. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதபடி பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் எப்போதும் வரும் ஆங்கிலேய மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

ஏற்கெனவே அவருடைய நோய் அறிகுறிகளை உடனிருந்தே கவனித்து வந்த அவர்கள் இந்த முறை திகைத்துத் தடுமாறினர். மனிதநேயத்துக்கே முக்கியத்துவம் கொடுத்த சில அன்பர்கள், காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் முறையிட்டார்கள். கோயில் பட்டர்களும் வரதராஜர் சந்நதியிலிருந்து செப்புப் பாத்திரத்தில் துளசி தீர்த்தத்தை ஒரு பாத்திரம் நிறைய எடுத்து வந்தார்கள். அதை க்ளைவிடம் தந்து, வரதராஜப்பெருமாளை வேண்டிக்கொண்டு பருகிடுமாறு கேட்டுக் கொண்டனர்.

க்ளைவ் தன் மருத்துவர்களைப் பார்த்தார். அவர்கள் தலை குனிந்து தம் தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இந்த முயற்சிக்கு மவுனமாக அனுமதியும் தந்தார்கள். அதன்படி, பெருமாளின் பிரசாதமாகிய துளசி தீர்த்தத்தை அருந்திய ராபர்ட் க்ளைவ், அன்றிரவு நன்றாகத் தூங்கினார். விடிந்த பின் காய்ச்சலும், உடல்வலியும் மறைந்துபோக, பழைய உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்தார். வரதராஜப் பெருமாளின் மகிமையை உணர்ந்த அவர், தன்னிடமிருந்த மகரகண்டி எனும் விலையுயர்ந்த நகையை பெருமாளுக்கு காணிக்கையாக சாற்றினார். இன்றும் விழாக்காலங்களில் வரதராஜர், க்ளைவ் மகரகண்டியை அணிந்து வீதியுலா வருவது நடக்கிறது.