கண் குளிரக் கண்டேன், பேரானந்தம் அடைந்தேன்!



மகாசிவராத்திரியை விளக்கும் சிவ குடும்ப அட்டைப்படம் வெகு நேர்த்தியாக இருந்தது. லிங்கோத்பவம் பற்றிய விவரமான கட்டுரை மனதை நெகிழ வைத்தது. கூடவே பாராயணம் செய்ய சிவகவசம் வெளியிட்டு புண்ணியம் தேடி வர வழிவகுத்து விட்டீர்கள். மற்றும் மயிலையில் உள்ள கயிலைகளின் சிறப்பினை விரிவாக எடுத்துரைத்து வலம் வரச் செய்து மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள். 
- இரா.கல்யாணசுந்தரம், சென்னை.

தல விருட்சங்கள் தரும் பலன் பகுதியில் சங்கு புஷ்பம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. அம்பாளுக்குரிய அற்புத மலர்களில் ஒன்றான சங்கு புஷ்பம் மனநோய் போக்கும் என்ற அரிய செய்தி அனைவருக்கும் பயனுடையது.
- அ.கிருஷ்ணகுமார், பு.புளியம்பட்டி.

மகாசிவராத்திரி வைபவ சமயத்தில் லிங்கோத்பவம் கட்டுரையைப் படித்தது சிலிர்க்க வைத்த தெய்வீக அனுபவமாக பரவசப்படுத்தி விட்டது. பக்தனுக்காக தலை சாய்த்த இறைவனாய் தான் தோன்றி மலை பெருமாளின் லீலைகளை விவரித்த கட்டுரையும், படங்களும் மலைப்பில் ஆழ்த்தி விட்டன. விரதமிருந்து ஒற்றை செருப்பை சமர்ப்பிக்கும் ஐதீகம் அபூர்வமானது. ஆச்சரியமளித்தது.
- த.சத்யநாராயணன், அயன்புரம். 

சிவகவசம் சிறப்பாய்க் கண்டு சிவராத்திரி பலன்கள் கொண்டு நவயுகத்தில் ஆன்மிகத்தை நாடறியச் செய்தீர் ஐயா! சங்கு புஷ்பம் கதையைச் சொல்லி
கனிவளிக்கும் கயிலை துள்ளி எங்கிருக்கும் பக்தர் தம்மை ஏற்றமுறச் செய்தீர் வாழி!
- இராம.வேதநாயகம். வடபாதிமங்கலம்.

மகாசிவராத்திரியில் மயிலையின் ஏழு சிவ மூர்த்தங்களின் தரிசனம் கிடைத்தது. இப்பிறவிப் பயனை அடைய துணை நின்றது. முருகன் அருள் பெற வழி காட்டிய மகான்களின் வரலாற்று தொகுப்பு மிகவும் சிறப்பு. முன் அட்டையில் அம்மையப்பன் வாரிசோடு அருள்பாலித்த எழில் காட்சியை கண் குளிரக்
கண்டேன். பேரானந்தம் அடைந்தேன்.
- எஸ்.சுந்தர். திருநெல்வேலி.

மகாசிவராத்திரி பக்தி ஸ்பெஷலில் தொகுத்
தளிக்கப்பட்டிருந்த முருகன் அருள் பெற்ற மகான்கள் என்ற தகவல், சம்பந்தப்பட்ட மகான்களை நினைத்துப் பெருமைப்படவும், வணங்கி மகிழவும் வைத்திருந்தது.
- வி.மோனிஷா ப்ரியங்கா, திருச்சி.

சோமாஸ்கந்தரின் அழகிய முகப்புடன் படைக்கப்பட்டிருந்த மகாசிவராத்திரி பக்தி ஸ்பெஷல், சிவனடியார்களது உளம் குளிர வைப்பதாக இருந்தது. சிவபெருமான் சம்பந்தப்பட்ட கட்டுரை, தகவல்கள் மற்றும் படங்கள் யாவும் படு அமர்க்களம்தான் போங்கள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மகாசிவராத்திரி சமயத்தில் லிங்கோத்பவ விளக்கத்தை படிக்க மெய் சிலிர்த்தது. முதல் லிங்கம், பூமியின் இதயம். எல்லையில்லாத ஜோதி, ஸ்ரீருத்ரம், மோட்சம், ஞானம், சிவ சாயுஜ்யம் தகவல்கள் அருமை. அருணாசல சிவ, அருணாசல சிவ.
- ஏ.டி.சுந்தரம், ஈரோடு.

திருப்பூர் கிருஷ்ணன் வழங்கும் குறளின் குரல் இனிமையுடன் இழைந்து, செவியதனிற் நுழைந்து, மனதை நிறைக்கிறது. உடம்பை ஓம்புமின் என்று திருமூலர் அருளியது இதுதான். உடம்பை ஓம்பினால் நலமுடன் வைத்துக் கொண்டால் அனைத்தும் நன்மையில் முடியும். அது இறைவனுக்கு நாம் செலுத்தும் வணக்கமுமாகும். தினமும் குளிப்பதன் மூலம் நம் உடம்பை மட்டுமா சுத்தம் செய்கிறோம்? உள்ளிருக்கும் நாதனுக்கும் நீரால் குளிப்பாட்டி அபிஷேகம் செய்வதே ஆகும். குறளின் குரல் பல குரல்களில் ஓங்கி ஒலிக்கட்டும்.
- கே.ஏ.நமசிவாயம். பெங்களூரு. 

லிங்கோத்பவம் எனும் ஆன்மிக உயர்பொருளில் வெளிவந்த கட்டுரையை படிக்கப் படிக்க சிவ ஒளி வீசியது. மாலும், அயனும், அரனின், திருவடி திருமுடி தேடிய படலம் தந்த விதம்
ஆன்மிகத் தேன் சொட்டாய் இனித்தது.
- முனைவர்.இராம.கண்ணன்.

மகாசிவராத்திரி பக்தி ஸ்பெஷலில் சிவராத்திரியின் மகிமைகளோடு சிவகவசம், பெருமாளின் பெருமைகள், அன்னை அவதார நாளின் சிறப்பு, மகாபாரதத்தின் மகத்துவம், அறநெறி காத்த அதிசய பூதங்கள், வேண்டுதலில் வேணுகோபால சாமி, மயிலையில் கயிலைகள், பொன்னான வாழ்வருளும் பூவனநாதர் என பக்கத்துக்குப் பக்கம் பக்திப் பரவசத்தில் ஆழ்த்திவரும் தங்கள் இதழுக்கு கோடான கோடி நன்றிகள்.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

கனவின் நற்பண்புகளைப் பற்றி தெள்ளத்தெளிவாக, அதனையும் தக்க சமயத்தில் வந்த சிவராத்திரியின் மகத்துவத்தோடு ஒப்பிட்டு இறைவழிபாட்டோடு இணங்கி விட்ட கனவு நல்லெண்ணங்களோடு தூங்கவிடாமல் துரத்திவிட்டது, லட்சியத்தை அடைவதற்கு. இப்படி ஒவ்வொன்றையும் ஆன்மிகப் பண்புகளோடு அழைத்து செல்லும் தங்கள் இதழுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.

சக்தி வழிபாடு தொடர் அருமை. நித்யா தேவிகளின் பெருமைகளையும், வழிபாட்டு முறைகளையும் பற்றி அறிந்தோம். கட்டுரை ஆசிரியருக்கு பாராட்டுகள்.
- அனிதா, வேலூர்.