ஆரத்தி ஏன் எடுக்கப்படுகிறது?



நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. அவற்றில் இன்றும் பரவலாகப் பின்பற்றப்பட்டு வருவது, ஆரத்தி எடுப்பது.

இதன் முக்கியத்துவத்தை உணராமல் சாதாரண நிகழ்வாக இதைக் கருதுகிறோம். அது ஒரு சம்பிரதாயம், கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டிய ஒரு நடைமுறை என்றளவிலேயே இதைப் பின்பற்று கிறோம். ஆனால், இதில் ஆழமான அர்த்தம், குறிப்பாக விஞ்ஞானபூர்வமான நலன் காணப்படுகிறது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கும் புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களுக்கும், மகப்பேறு முடித்து குழந்தையுடன் வீட்டிற்கு வரும் பெண்ணுக்கும் ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்த சம்பிரதாயத்தின் முக்கிய நோக்கமே, யாருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி, சரஸ்வதி ஆகிய இரண்டு தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும் என்பதே.

சரஸ்வதியின் நிறம் வெண்மை, லட்சுமியின் நிறம் மஞ்சள். எனவே, சுண்ணாம்பும் மஞ்சள் பொடியும், அதாவது, வெள்ளையும் மஞ்சளும் கலந்து சிவப்பு என்கிற ஆரத்தி கலவை உண்டாகிறது. எனவே, சுப நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் ஆரத்தி கொண்டு சம்பந்தப் பட்டவர்களை வரவேற்கும்போது அவர்கள் மீது கண் திருஷ்டி விழுவதில்லை.

தண்ணீரில் மஞ்சள்தூளோடு சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபருக்கு முன்னால் நின்றுகொண்டு மூன்றுமுறை வலமாகவும், மூன்றுமுறை இடமாகவும் சுற்றி பின்னர் அந்த ஆரத்தி நீரை வடக்கு பக்கமாகக் கொட்டிவிடவேண்டும். யார் காலிலும் படாதபடி ஏதேனும் செடிக்கு ஊற்றினாலும் சரிதான்.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் ஏற்கெனவே அறிவோம். அந்த நபரின் மேல் படிந்திருக்கக்கூடிய தீயக் கிருமிகளை அழிப்பதே இவ்வாறு ஆர்த்தி சுற்றுவதன் பிரதான நோக்கம்.

- பி.பொன்னம்மாள்