உதவி என்ற சேவை



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

பிறருக்கு உதவுவது என்பது மிகவும் பாராட்டத்தக்கச் செயல். அது உதவி பெறுபவர்களின் மன மகிழ்ச்சிக்கும், உதவி செய்தவரின் மன நிம்மதிக்கும் வழிவகுக்கும். பொதுவாகவே தாமாக முன்வந்து செய்யும் உதவி எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை.

அத்தகைய உள்நோக்கமில்லாத உதவிக்குதான் மதிப்பு அதிகம். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒருவரைப் போய்ப் பார்க்கிறோம், ஆறுதல் வார்த்தைகள் கூறுகிறோம், யோசனைகள் சொல்கிறோம், அப்போதைக்கு அவர் தன் உபாதையை மறந்திருக்க நம்முடைய வருகை அங்கே பயன்படுகிறது.

ஆனால், நாம் யாரைப் போய்ப் பார்க்கிறோமோ அவர், தனக்கும் இதுபோன்ற மருத்துவமனை வாசம் ஏற்படக்கூடுமானால் வந்து பார்ப்பாரா என்று எதிர்பார்க்கும்போது நாம் மேற்கொண்டுள்ள உதவிக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது.

அதனால் எந்த உதவியையும் உதவியாகச் செய்யாமல் ஒரு சேவையாக நினைத்தோமானால், அது அந்த உதவியைப் பரிபூரணமாக்கும். எதையும் எதிர்பார்க்காமல் அப்படி நாம் மேற்கொள்ளும் சேவை, இறைத்தன்மை கொண்டது. எந்தப் பலனையும் எதிர்பார்த்துச் செய்யப்படும் உதவி, நம் மனசுக்குள் ஏக்கத்தை விளைவிக்கக்கூடும். பிறரிடம் நாம் செய்த உதவியை விளம்பரப்படுத்திக்கொள்ளச் செய்யும். நம்மிடமிருந்து உதவி பெற்றவர் பிறரிடம் நம்மைப் பற்றி உயர்வாக, நாம் செய்த உதவியை விவரித்துச் சொல்ல மாட்டாரா என்று ஏங்க வைக்கும்.

அப்படி நாம் எதிர்பார்ப்பதை நம்மிடமிருந்து உதவி பெற்றவர் அறிய நேர்ந்தால் அவருக்கு நம்மீது இருக்கும் மதிப்புக் குறையும், அடுத்தமுறை நாமாக முன்வந்தாலும் நம் உதவியை அவர் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்கவும் கூடும்!

ஆகவே, எந்த உதவியையும் அவருடைய தேவையை முன்வைத்தே ஒரு சேவையாகத்தான் செய்ய வேண்டும். இதனை எளிமையாகவும் பயிலலாம். அதாவது, நமக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என்று மட்டும் அல்லாமல், நமக்கு முன்பின் தெரியாதவர்களுக்கும் சமயத்தில் உதவி செய்யப் பழகிக்கொள்வதுதான். மூன்றாம் மனிதருக்குச் செய்யும் உதவிக்கு எதிர்பார்ப்பு இருக்காதல்லவா?

ஆன்மிகத்தில் சேவை சாதித்தல் என்று இறைவனை வழிபடும் முறையைக் குறிப்பிடுவார்கள். அதாவது, இறைவனுக்கு பக்தி செலுத்துதல். இப்படி சேவை சாதிப்பதால், நாம் கடவுளிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை, பேரம் பேசவில்லை என்பதுதான் இந்த வழிபாட்டின் முக்கியத்துவம். இதையே நாம் பிறருக்கு செய்யும் உதவிக்கும் பின்பற்றலாம். அதாவது, சேவையாற்றலாம்.

(பொறுப்பாசிரியர்)

பிரபுசங்கர்