படியாய்க் கிடந்து பவளவாய் காண்பேனோ!



அழகான கொல்லி நகரம். திடவிரதன் என்ற மன்னர் அதனை ஆண்டுவந்தார். அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ‘குலசேகரன்’ என்று மகனுக்குப் பெயர் சூட்டினார் மன்னர். இளவரசருக்குரிய எல்லாக் கலைகளும் குலசேகரனுக்குக் கற்பிக்கப்பட்டன. அவரும் ஆர்வத்துடன் அவற்றைக் கற்றுக்கொண்டு சிறந்தார்.குறிப்பாக, ராமாயணக் கதையை யாராவது சொன்னால் போதும், குலசேகரனுக்கு இருக்கும் இடமே தெரியாது. அந்த அளவுக்கு அதில் மூழ்கிவிடுவார்.

மன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித் தாய்! செம்பொன் சேர்
கன்னி நல் மாமதிள் புடைசூழ் கணபுரத்து,என் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

நிலைத்து நிற்கும் புகழை உடைய கௌசலையின் மணிவயிற்றில் வந்து பிறந்தவனே, ராகவனே, தென்னிலங்கை அரசனான ராவணனின் பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பு எய்தவனே! சிறந்த பொன்னால் செய்யப்பட்ட பாதுகாப்பான மதில் சுவரால் நான்கு பக்கமும் சூழப்பட்டிருக்கிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் கருமணியே, என்னுடைய இன்னமுதே! உன்னைத் தாலாட்டுகிறேன்!

இளவரசர் வளர்ந்து அரசராக, ராமர் மீதும் கண்ணன் மீதும் அவர் வைத்திருந்த பக்தியும் வளர்ந்தது. அதேபோல், திருமாலின் பக்தர்கள் மீதும் அரசர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார்.
அரசர் குலசேகரரின் சபையில் அவ்வப்போது ராமாயணச் சொற்பொழிவுகள் நடக்கும். ]]அப்படி ஒருநாள், ராமர் அரக்கர்களுடன் போர் புரிந்த கதையைச் சொல்லிக்கொண்டிருந்தார் ஒருவர்.
இந்தப் பக்கம் ராமர் தனியாக நிற்கிறார், அந்தப் பக்கம் ஒரு பெரிய படையே வருகிறது. அதில் உள்ளவர்களெல்லாம் பிரமாண்ட அரக்கர்கள், அநியாயம் செய்யும் அவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்கும் ராமர் மீது பெரும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இதைக் கேட்ட குலசேகரர் தன்னை மறந்தார், ‘போர் தொடங்கப்போகிறது, எல்லாரும் புறப்படுங்கள், படை தயாராகட்டும்’ என்றார்.அருகே இருந்தவர்கள் திகைத்துப்போனார்கள், ‘மன்னா, என்ன சொல்கிறீர்கள்?’‘இந்தப் போரில் ராமரின் பக்கம் நம்முடைய படை நிற்கவேண்டும், கிளம்புங்கள்’ என்றார் அரசர். மளமளவென்று தானும் அவர்களோடு புறப்படத் தயாரானார்.

எல்லாரும் இதைக் கேட்டு வியந்தார்கள். இவருடைய ராம பக்தியை, ராமர் மீது இவர் வைத்திருக்கும் அன்பைப் போற்றுவதா அல்லது எப்போதோ நடந்த யுத்தத்துக்கு இப்போது தயாராகிறாரே என்று சிரிப்பதா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

ஆனால், அரசர் மனத்தளவில் போருக்குத் தயாராகிவிட்டார். அவரை பொறுத்தவரை, ராமருக்கு இப்போது படை பலம் தேவை, அவருக்குத் தராத படை தன் நாட்டில் இருந்து என்ன பயன்? புறப்படுங்கள்!அமைச்சர்கள் சொற்பொழிவாளரைப் பார்த்தார்கள், ‘ஏதாவது செய்யுங்கள்’ என்றார்கள்.புரிந்துகொண்ட அவர் சட்டென்று கதையை விரைவாக்கி, ‘மன்னா, கவலை வேண்டாம், போர் முடிந்துவிட்டது, அரக்கர்கள் எல்லாரையும் ராமர் தனி மனிதராக வீழ்த்திவிட்டார்’ என்றார். அதைக் கேட்டு மன்னர் மகிழ்ந்தார். ‘ராமருக்கு வெற்றி’ என்று ஆனந்தக் கூத்தாடினார்.

ஆனால், அமைச்சர்கள் இதை விரும்பவில்லை. ‘நாட்டை ஆளவேண்டிய அரசர் இப்படி நடந்துகொள்ளலாமா’ என்று அவர்கள் ஆதங்கப்பட்டார்கள்.‘நாம் என்ன செய்ய இயலும்? அரசருக்குராமர்மீது அளவற்ற பக்தி!’‘அந்த பக்திக்கு யார் காரணம்? எந்நேரமும் அவரோடு இருக்கிற வைணவர்கள்தானே?’
‘ஆமாம், அதற்கு என்ன செய்ய?’

‘அந்த வைணவர்களை எப்படியாவது அரசரை நெருங்காமல் செய்யவேண்டும். என்ன செய்யலாம்?’அவர்கள் யோசித்தார்கள். ஒரு திட்டம் தயாரித்தார்கள். மறுநாள், அவர்கள் இறைவனின் திருவாபரணத்தை எங்கோ எடுத்து வைத்துவிட்டார்கள். அதைக் காணோம் என்று எல்லாரும் தேடும்போது, ‘வைணவர்கள்தான் இதை எடுத்திருக்க வேண்டும்’ என்றார்கள்.‘நாங்கள் எடுக்கவில்லை’ என்று வைணவர்கள் மறுத்தார்கள்.

‘இதை நாங்கள் எப்படி நம்புவது?’ என்றார்கள் அமைச்சர்கள், ‘வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள், நச்சுப் பாம்பு உள்ள குடம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்கிறோம், அதற்குள் கையை விடுங்கள், நீங்கள் திருடியிருந்தால் பாம்பு உங்களைத் தீண்டும், இல்லாவிட்டால் தீண்டாது!’வைணவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டார்கள். பாம்புள்ள குடம் கொண்டுவரப்பட்டது.

ஆனால், அவர்கள் அதற்குள் கையை விடுவதற்குள், அரசர் குறுக்கிட்டார். ‘திருமாலின் பக்தர்கள் இதுபோல் அடுத்தவர் பொருளை எடுக்கமாட்டார்கள்‘ என்றார். ‘அவர்கள் சார்பாக, நானே குடத்துக்குள் கை விடுகிறேன்!’அமைச்சர்கள் திகைத்தார்கள். அரசருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று பதறினார்கள். அதற்குள், அவர் குடத்துக்குள் கையை விட்டுவிட்டார். பாம்பு அவரை எதுவும் செய்யவில்லை.இதைப் பார்த்த எல்லாரும் இறைவன் அருளை எண்ணி வியந்தார்கள்.

அமைச்சர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டார்கள்.தனது அமைச்சர்கள் இப்படி நடந்துகொண்டதை எண்ணி அரசர் மிகவும் வருந்தினார். இறைவன் புகழைப் பாடுவதற்கும், அன்பர்களுக்குத் தொண்டு செய்வதற்கும் தடை போடுகிற அரச பதவி தேவையா என்று யோசித்தார். தன் மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, முழுநேரமும் இறைவன் பணியில் மகிழ்ந்தார்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கடந்துஇயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.

துன்பங்களைத் தீர்க்கும் திருமாலே, நெடியவனே, வேங்கடவனே, உன்னுடைய கோயிலின் வாசலில் அடியவர்களும் தேவர்களும் அரம்பையர்களும் நடந்து செல்கிற ஒரு படியாகக் கிடக்க நான் விரும்புகிறேன், அப்போதுதான் உன்னுடைய பவளவாயைத் தினமும் பார்த்துக்கொண்டிருக்கலாம்!அரசர், இப்போது ஆழ்வாரானார், பக்தியில் ஆழ்ந்து குலசேகராழ்வார் என்று பெயர் பெற்றார், பெருமாள் திருமொழி பாடித் திருமாலைப் பணிந்தார்.

இருள் இரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி
இனத் துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவு அரசப் பெரும்சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையைமேவி
திருவரங்கப் பெருநகருள் தெள்நீர்ப் பொன்னி

திரைக் கையால் அடி வருடப் பள்ளி கொள்ளும்
கருமணியை, கோமளத்தைக்
கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்றுகொலோ
களிக்கும் நாளே!

இருள் சிதறும்படி ஒளி விடுகிற மாணிக்கங்கள் திகழும் நெற்றி, சிறந்த புள்ளிகள், ஆயிரம் படங்கள் ஆகியவற்றைக் கொண்ட பாம்புகளின் அரசன் ஆதிசேஷன். அவன் மீது கிடந்த திருக்கோலத்தில் அருள் செய்கிறார் திருவரங்கப் பெருமான். அவருடைய பாதங்களில் தெளிவான நீரை வார்த்து வணங்குகிறது காவிரி நதி.அத்தகைய கருமணியை, அழகனைக் கண்டு என்னுடைய கண்கள் மகிழும் நாள் என்றைக்கு?

தாமரைமேல் அயன் அவனைப்
படைத்தவனே! தயரதன்தன்
மாமதலாய்! மைதிலிதன் மணவாளா!
வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்து என்
கருமணியே!
ஏ மருவும் சிலை வலவா! இராகவனே!
தாலேலோ!

தாமரை மீது பிரம்மனைப் படைத்தவனே, தசரதனின் புதல்வனே, மைதிலியின் மணவாளனே, ராகவனே, வண்டுகள் காமரம் என்னும் இசையைப் பாடுகிற திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் என் கருமணியே! அம்புகள் பொருந்திய வில்லை ஆள்பவனே, உன்னைத் தாலாட்டுகிறேன்!திருமாலின் அவதாரங்களில் ராமரைப் பாடியதுபோலவே, கண்ணனையும் அனுபவித்துப் பாடியிருக்கிறார் குலசேகராழ்வார். ஆய்ச்சியர்கள் கண்ணன் மீது வைத்திருக்கும் அன்பை ஊடலாக வெளிப்படுத்துவதாக அவர் பாடியுள்ள பாடல்களில் ஒன்று:

கெண்டை ஒண்கண் மடவாள் ஒருத்தி
கீழை அகத்துத் தயிர் கடையக்
கண்டு ‘ஒல்லை நானும் கடைவன்’ என்று
கள்ள விழியை விழித்துப் புக்கு
வண்டு அமர் பூங்குழல் தாழ்ந்து உலாவ
வாண்முகம் வேர்ப்பச் செவ்வாய் துடிப்ப
தன் தயிர் நீ கடைந்திட்ட வண்ணம்,
தாமோதரா! மெய் அறிவன் நானே!

‘கண்ணா, உன் குறும்புகளை நான் நன்றாக அறிவேன்’ என்கிறாள் ஓர் ஆய்ச்சி. ‘என் வீட்டுக்குப் பக்கத்தில் மீன் போன்ற அழகிய கண்களை உடைய ஒரு பெண் இருக்கிறாள். அவள் ஒருநாள் தனியே தயிர் கடைந்துகொண்டிருந்தாள். ‘அப்போது, நீ அங்கே வந்தாய். ‘நானும் உன்னோடு தயிர் கடைகிறேன்’ என்றாய். திருட்டுப் பார்வையோடு நீ அவள் வீட்டுக்குள் நுழைந்து, வண்டுகள் மொய்க்கும் மலர் அணிந்த குழல் அவிழ்ந்து அசையும்படி, ஒளி நிறைந்த முகம் வியர்க்கும்படி, சிவந்த உதடுகள் துடிக்கும்படி குளிர்ந்த தயிரைக் கடைந்தாய். அது எனக்குத் தெரியும்!’

ஆய்ச்சியர்களின் ஊடலைப் பாடிய குலசேகராழ்வார் தேவகியின் வருத்தத்தையும் பாடியிருக்கிறார். எம்பெருமானையே மகனாகப் பெற்றவர் தேவகி. அவருக்கு என்ன வருத்தம் இருக்க இயலும்?

கண்ணன் தேவகியின் மகன் என்றாலும், அவனுடைய சிறுபிள்ளைக் குறும்புகளையெல்லாம் தேவகி பார்க்கவில்லையே, யசோதைதானே பார்த்தார்? அதை எண்ணி தேவகிபாடுவதுபோல் குலசேகராழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று:

மருவு நின் திருநெற்றியில் சுட்டி
அசைதர, மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப்போலும்
வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள்குளிர
விரலைச் செஞ்சிறுவாயிடைச் சேர்த்து
வெகுளியாய் நின்று உரைக்கும் அவ்வுரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்; எல்லாம்
தெய்வ நங்கை யசோதை பெற்றாளே!

கண்ணா, உன்னுடைய திருநெற்றியிலே சுட்டி அசைய, மணிவாயால் முத்தம் தருவாய். நீ உன்னுடைய தந்தையைப்போலவே தோன்றுகிற அழகைக் கண்டவர்கள் உள்ளம் குளிரும், விரலைச் செவ்வாயில் வைத்துக்கொண்டு மழலை மொழி பேசுவாய்! ஆனால், இதெல்லாம் நான் கேட்கவில்லை, பார்க்கவில்லை. அனைத்து பாக்கியங்களும் யசோதைக்குதான் கிடைத்தன!
தேவகியின் வருத்தம் ஒருவிதம் என்றால், ராமர் காட்டுக்குச் சென்றபோது தசரதர் அனுபவித்த வருத்தம் வேறுவிதமானது. அதையும் பாடல்களாகத் தந்துள்ளார் குலசேகராழ்வார்:

வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு
இருநிலத்தை
வேண்டாதே விரைந்து வென்றி

மைவாய களிறொழிந்து தேரொழிந்து
மாவொழிந்து வனமே மேவி
நெய் வாய வேல் நெடுங்கண் நேரிழையும்

இளங்கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே!

ராமா, கொடிய வாயை உடைய நான் கொடுமையாகச் சில சொற்களை சொன்னேன், அதைக் கேட்டு, இந்தப் பெரிய நிலத்தை மறுத்து நீ காட்டுக்குச் சென்றுவிட்டாய். வெற்றியைத் தருகிற, மலை போன்ற யானைகள், தேர்கள், குதிரைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நெய் பூசிய நுனியைக் கொண்ட வேலைப் போன்ற கண்களை உடைய சீதையையும் தம்பி லட்சுமணனையும்அழைத்துக்கொண்டு தரையில் நடந்து சென்றாயா ராமா? எப்படி நடந்தாய்? எம்பெருமானே, நான் என்ன செய்வேன்!அம்பொன் நெடுமணி மாட அயோத்தி எய்தி,

அரசு எய்தி, அகத்தியன் வாய்த் தான்
முன்கொன்றான்
தன் பெரும்தொல் கதை கேட்டு, மிதிலைச் செல்வி
உலகு உய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்
செம்பவளத் திரள்வாய்த் தன் சரிதை
கேட்டான்
தில்லைநகர் திருச்சித்ரகூடந்தன்னுள்
எம்பெருமான் தன் சரிதை செவியால்,
கண்ணால்
பருகுவோம், இன் அமுதம் மதியோம் அன்றே!

அழகிய பொன், சிறந்த ரத்தினங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மாடங்கள் நிறைந்த அயோத்திக்கு வந்து, அங்கே அரசனாக ஆட்சி செய்து, தான் முன்பு கொன்ற ராவணனின் கதையை அகத்தியர் சொல்லக் கேட்டான் ராமன். பின்னர், மிதிலைச் செல்வியான சீதை இந்த உலகம் உய்யுமாறு திருவயிற்றில் பெற்றெடுத்த லவ, குசர்களின் செம்பவள வாயால் தன்னுடைய கதையையே கேட்டான். அப்படிப்பட்ட ராமன், தில்லைநகர் திருச்சித்ரகூடத்தில் எழுந்தருளியிருக்கிறான், அவனுடைய கதை அமுதத்தைவிட இனிமையானது, அதைக் காதால் கேட்டுக் கண்ணால் பருகுவோம்!

(தொடரும்)
ஓவியங்கள்: வேதகணபதி