கடவுள் பதிலளிப்பார்



ஆயிரம் கிரணங்கள் நீட்டி
அணைக்கின்ற ஆதவா போற்றி!
ஆனந்தம் அருளும் அற்புத சூரியனே போற்றி!

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னையை உங்கள் நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ சொல்லிப் பாருங்கள் - உடனே, ‘இதை என்ன பெரிசா சொல்ல வந்திட்டே, என் சோதனையைக் கேளு,’ என்று ஆரம்பித்து அந்தத் தரப்பிலிருந்து அதே வேகத்தில் தங்களுடைய சங்கடங்கள், தொல்லைகளை அவர்கள் விவரிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.அவர்களிடம் உங்களுடைய அப்போதைய துன்பத்தை நீங்கள் சொல்வதற்குக் காரணம், அவர்களிடமிருந்து ஏதாவது உதவி அல்லது அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஏதேனும் யோசனை அல்லது குறைந்தபட்சம் ஆறுதல் வார்த்தை என்று எதிர்பார்ப்பதுதான்.

ஆனால், எதிர்த்தரப்பினரோ, அவர்களிடமிருந்து நீங்கள் எந்த உதவியையும் கோரிவிடக்கூடாதே என்ற அச்சம் காரணமாக தங்களுடைய சங்கடங்களை விவரித்துச் சொல்லி, ‘உன்னைவிட நான் அதிக துன்பத்தில் இருக்கிறேன், என்கிட்ட உதவி கேட்க வந்துவிட்டாயே’ என்று முன்னெச்சரிக்கையாகத் தெரிவித்துவிடுவார்கள்.

உண்மையிலேயே உங்கள் நலத்தில் அக்கறை கொண்ட நண்பர் அல்லது உறவினர் உங்களுடைய கஷ்டங்களைப் பொறுமையாகக் கேட்டு அதற்கேற்ப அவற்றிலிருந்து மீளும் வழிமுறைகளைச் சொல்வார்; தேவைப்பட்டால் அந்தத் தீர்வுக்கு உரிய நபர் யாரையாவது போய்ப் பார்க்கச் சொல்லி அல்லது ஏதாவது பொருள் உதவி செய்து உங்களைத் தற்காலிகமாக உங்கள் இறுக்கத்திலிருந்து விடுவித்து அனுப்பி வைப்பார்.

அவருடைய யோசனைகள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம்; உங்களால் அவற்றை நிறைவேற்ற இயலாமல்கூடப் போகலாம். ஆனாலும் உங்களுக்கு அந்தச் சமயத்தில் தோள் அணைத்து ஆறுதல் வார்த்தை சொன்னாரே, அங்கேதான் கடவுள் இருக்கிறார்.பொதுவாக மனித எதிர்பார்ப்புகள் சுயநல நோக்கில் அமைந்திருப்பதால், நம் குறைகளை இறைவனிடமே சொல்லிவிட்டு நம் முயற்சிகளைத் தொடர்வதுதான் மிகப் பெரிய ஆறுதலாக இருக்க முடியும்.

இதனால்தான் தினமும் சில நிமிடங்கள் பூஜைக்காக நேரம் ஒதுக்கச் சொல்லி நம் முன்னோர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்திருந்தார்கள். அந்த நேரத்தில் நாம் கடவுளுடன் பேசலாம், அவரிடம் நம் குறைகளைத் தெரிவிக்கலாம். அவர் நிச்சயம் பதிலளிப்பார். பிரச்னையைத் தீர்க்கும் வழியைக் காட்டி, மனதில் தோன்ற வைத்து அல்லது தகுந்த நபரை அனுப்பிவைத்து பதிலளிப்பார்.

(பொறுப்பாசிரியர்)

பிரபுசங்கர்