மூன்று ராமலிங்கங்கள்



ராவணனை அழித்த ராமனுக்கு பிரம்மஹத்தி, வீரஹத்தி, சாயாஹத்தி எனப்படும் மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. இவை நீங்க ராமேஸ்வரம், வேதாரண்யம், பட்டீஸ்வரம் ஆகிய இடங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமன். இந்த மூன்று தலங்களிலும் உள்ள சிவலிங்கங்கள் ‘ராமலிங்கம்’ என்ற பெயரிலேயே திகழ்கின்றன.

வாயு பகவான் வழிபட்ட அம்பிகை

சென்னை, திருவேற்காடு அருகில் பருத்திப்பட்டு உள்ளது. இங்கு விருத்தாம்பிகை உடனுறை வாயு லிங்கேஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இத்தலத்து அம்பிகையை வாயு பகவான் வழிபட்டு அருள் பெற்றுள்ளார். வாயு பகவானின் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வணங்குவது நல்லது.

வித்தியாசமான பிரார்த்தனை

சோளிங்கர், ஒரு பிரார்த்தனைத் தலம். இத்தலத்து பிரார்த்தனை முறை வித்தியாசமானது. இதற்கு ‘சேவை செய்தல்’ என்று பெயர். பக்தர்கள் தினமும், இங்குள்ள திருக்குளத்தில் நீராடி, ஈரத்துணியுடன் முதலில் பெரிய மலையில் உள்ள நரசிம்ம மூர்த்தி, நாயகி அமிர்த பலவல்லி தாயாரையும் 108 முறை வலம் வந்து தரிசித்து, மலை இறங்கி பின்பு சிறிய மலை ஏறி அனுமன், ராமன், அரங்கன் இவர்களை 108 முறை வலம் வந்து தரிசித்தல் வேண்டும். இதுபோல் ஒரு மண்டலம் தரிசித்து வந்தால் இப்பெருமானின் அருளால் குறைகள் நீங்கப் பெறுவர். மேலும் பெருமாளே இவ்வாறு பிரார்த்தனையை நிறைவேற்றுமாறு குறிப்பிட்ட பக்தர் கனவில் வந்து ஆணையிடுவாராம்!

சனிபகவானுக்கு குருவான கால பைரவர்

கும்பகோணம் அருகில் உள்ளது அம்மா சத்திரம். இங்கு கால பைரவர் கோயில் இருக்கிறது. இந்த பைரவர் சனிபகவானுக்கு குருவாக விளங்கி, காலத்தையே இயக்கி வரும் பைரவராக இருப்பதால் இவரை கால பைரவர் என்று அழைக்கிறார்கள். பைரவர் சக்தியுடன் சனீஸ்வரர் அருளையும் தரக்கூடிய கோயிலாக விளங்குவது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.  இந்த கோயிலின் அம்மன் சந்நதி முன் மண்டபத்திற்கு முன் மேல் தளத்தில் 12 ராசிகளின் அடையாளச் சின்னங்களுக்கு நடுவில் தமிழ் எழுத்துகளால் ஆன 1 முதல் 10 வரை எண்களை அமைத்து அவற்றை இடமிருந்து வலமாக கூட்டினாலும், மேலிருந்து கீழ் வரை கூட்டினாலும்
45 என்ற ஒரே எண் வரும்படி அமைத்துள்ளார்கள்.                    
           - டி.பூபதிராவ்