தினமும் கடவுளுடன் பேசுவோம்!



தினமும் சில நிமிடங்கள் இறைவனை தியானிப்பது என்பது நம் குடும்பத்தாரோடு நாம் பேசுவதுபோல. நம் வீட்டுக்குள்ளேயே தனியே பூஜையறையை உருவாக்கி அவரை நாம் வழிபடுகிறோம். அவரவர் வசதிக்கேற்ப தனி அறையாக இல்லாவிட்டாலும், சமையலறையில் தனி அலமாரியில் அவரைப் பல உருவங்களில் நிறுத்தி இறைசேவை புரிகிறோம். இந்த ஏற்பாடானது அனைவருக்கும் பொருந்தும். உருவ வழிபாட்டினை மேற்கொள்ளாதவர்கள்கூட, தங்கள் மத புனித நூல்களை அவற்றின் புனிதம் மாசடையாதவகையில் தனியே வைத்துப் பராமரிக்கிறார்கள்.

ஒருநாளில் உரிய நேரத்தில் அல்லது நேரங்களில் அப்புத்தகங்களை எடுத்துப் படிக்கிறார்கள். இறைசேவை புரிகிறார்கள். வீட்டு உறுப்பினர்களிடம் நாம் என்ன பேசுகிறோம், எதற்குப் பேசுகிறோம்? அவர்களிடம் நம் அனுபவங்களைத் தெரிவிக்கிறோம், நம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுகிறோம். அவர்களுடைய அனுபவங்கள் மற்றும் அவர்களுக்குத் தெரிந்தவற்றைக் கேட்டு நாம் பல விஷயங்களில் தெளிவடைகிறோம். நம்முடைய சில திட்டங்களுக்கு அவர்களுடைய யோசனைகள் மிகுந்த பயனளிக்கின்றன.

இந்த வகையில் நாம் வீட்டில் வழிபடும் கடவுளும் நம் குடும்ப உறுப்பினர்தானே! அவருடன் சில நிமிடங்கள் உரையாடச் செலவிடுவதால் என்ன நஷ்டம் ஏற்பட்டுவிடப்போகிறது? ஏன் தினமும் அவரை வணங்கவேண்டும்? வீட்டில் நம்மோடு வாழ்பவர்கள் ஒருவரையொருவர் நாம் தினமும் பார்த்துக்கொள்வதில்லையா, விசாரித்துக்கொள்வதில்லையா, யாருக்கேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் கவனிப்பதில்லையா, ஏதேனும் சிகிச்சைக்கு முயற்சிப்பதில்லையா? கோபமோ, தாபமோ அவர்களுடனான நம் உறவை நாம் உறுதியாக வளர்த்துக்கொள்வதில்லையா?

நமக்கு ஏற்பட்ட சந்தோஷ விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதில்லையா? நாம் வாங்கிவரும் பொருட்களை அனைவருக்கும் பிரித்துக்கொடுப்பதில்லையா? அவரவருக்கு அவரவர் வேலை என்றிருந்தாலும், அவர்கள் வேலை பற்றியும், அதன் பலாபலன்கள் மீதும் நாம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லையா? கடவுளும் அப்படிப்பட்டவர்தான்! நம்முடனேயே இருக்கிறார், நம் எண்ணங்களை அறிகிறார். நம் செயல்களை கவனிக்கிறார். நம் இன்ப-துன்பங்களில் நிச்சயம் பங்கேற்கிறார். இன்றும்கூட அலுவலகத்திற்கோ அல்லது வேறு ஏதேனும் வேலையாகவோ வீட்டைவிட்டு வெளியே போகிற நாம்,

வீட்டுப் பெரியவர்களிடம் சொல்லிக்கொண்டு போவதைப் போலவே பூஜையறையில் இருக்கும் கடவுளிடமும் சொல்லிக்கொண்டு போகிறோம். வீட்டிற்கு சம்பளம் (அலுவலகத்திலிருந்து நேரடியாகவோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ) கொண்டுவரும் அப்பா அல்லது பிள்ளை பூஜையறையில் வைத்து நன்றி வணக்கம் செலுத்திவிட்டு, பிறகு செலவுக்கு எடுத்துக்கொள்ளும் பழக்கமும் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல ஏதேனும் ஆவணம், புதிதாக வாங்கிய நகை, புது வாகனத்தின் சாவி இவற்றையும் கடவுள் முன் சமர்ப்பித்துவிட்டு நன்றி சொல்லி, பிறகு பயன்படுத்துகிறோம்.

வீட்டில் யாருக்கேனும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டால், மருத்துவம் பார்ப்பதோடு, கடவுளிடமும் வேண்டிக்கொள்கிறோம். அப்படி வேண்டிக்கொள்ளும்போது நமக்கு மனத்தெளிவு என்ற ஆறுதலும், மாற்று உத்தி என்ற புது யோசனைகளும் கிடைக்கின்றன.-இப்படியாகக் கடவுளிடம் நாம் அவ்வப்போது உரையாடத்தான் செய்கிறோம். ஆனால் எந்த காரணத்துக்காகவும் இல்லாமல் அவரிடம் உரையாடுவதை,  அதாவது , அவரவர் சம்பிரதாயங்களுக்குட்பட்ட வகையில் வழிபடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

ஆறு சலனமற்றிருக்கிறது. மென்காற்றால் நீர்த்திவிலைகள் கரையை மென் அலையாக முத்தமிட்டுத் திரும்புகின்றன. அப்போது ஒரு படகோட்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அவருடைய படகில் பயணிக்கத் தயாராக இருந்தவர்கள் அவரை கேலியாகப் பார்க்கிறார்கள். ஆற்றில் பயணத்தின்போது திடீரென்று காட்டாற்று வெள்ளம் படகைச் சூழ்ந்துகொள்கிறது. இப்போது பயணிப்பவர்கள் கடவுளை நோக்கிப் பரிதாபமாக பிரார்த்திக்கிறார்கள், படகோட்டியோ தன் நீடித்த பிரார்த்தனையின் பலனாக அருளப்பட்ட சமயோசித அறிவால் படகு மூழ்கிவிடாமல் காத்து பயணிகளை பத்திரமாகக் கரை சேர்க்கிறார். அதாவது, தினசரிப் பழக்கமாக மேற்கொள்ளும் இறை சேவை, எந்த இக்கட்டிலும் உதவிக்கு வரும் என்பது நிதர்சனமான உண்மை.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)