உடனே அனுக்ரகிப்பார் உக்கிர நரசிம்மர்



பெங்களூரு - நாடி

பெங்களூரு-மைசூரு சாலையில், சென்னபட்னா தாண்டி 2 கி.மீ. சென்றதும், வலதுபுறம் திரும்பி, மத்தூர் நோக்கி 4 கி.மீ. சென்றால் நாடி நரசிம்ம சுவாமி கோயிலை அடையலாம். கரும்பு வயல், தென்னந்தோப்புக்கு இடையே தனிப்பெருமையுடன் ‘கண்வா’ நதிக்கரையில் இந்த கோயில் அமைந்துள்ளது. கண்வா நதியின் பழைய பெயர் நிர்மலா. இந்த நதிக்கரையில் ஒரு காலத்தில் கண்வ மகரிஷி  கடும் தவம் செய்தாராம். அப்போது நரசிம்மர் அவருக்குக் காட்சி தந்து, தனக்காகக் கோயில் நிர்மாணிக்குமாறு ஆணையிட்டார்.

அதன்படி கண்வ மகரிஷி கோயிலை உருவாக்க நதியும் கண்வ நதி என்று அழைக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட பழமையான கோயில் இது. கர்நாடகா தொல்பொருள் இலாக்காவின் பொறுப்பில் உள்ளது. இந்தப் பகுதியை மைசூர் மன்னர் நால்வாடி கிருஷ்ணராஜ உடையார் ஆண்டபோது (1881 - 1940), இந்த நரசிம்மர் மீது பக்தி கொண்டு, கோயிலைப் புதுப்பித்ததோடு, கோயில் பராமரிப்புக்காக 12 ஏக்கர் நிலத்தையும் நிவந்தமாக அளித்திருக்கிறார்.

கோயிலின் இரண்டு நிலை ராஜ கோபுரம் நம்மை வரவேற்கிறது. அது நதிக்குச் செல்லும் வழியாக உள்ளதால், பிரதான வாயிலைத் திறக்காமல், பக்கவாட்டு வழியாக நம்மை உள்ளே அனுமதிக்கிறார்கள். முன் மண்டபத்தைக் கடந்து நேரடியாக கர்ப்பக் கிரகத்தை அடையலாம். உள்ளே உக்கிர லட்சுமி நரசிம்மர் பேரருள் பொங்கும் திருமுகத்தோடு கிழக்கு திசை நோக்கி அருள் பாலிக்கிறார். வெள்ளை மற்றும் மஞ்சள் சாமந்தி மாலைகளை அணிவித்து அலங்கரித்திருக்கிறார்கள். திருமணமானவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்ள உடனே குழந்தை பாக்கியம் கிட்டுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதேபோல இந்தக் கோயிலின் வாசலில் விற்கப்படும் மட்டைத் தேங்காய் இரண்டை வாங்கிக் கொண்டு வந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள நரசிம்ம மந்திரத்தைக் கூறியபடியே 48 சுற்றுகள் பிராகாரத்தைச் சுற்றிவருகிறார்கள். பிறகு, அங்கு இதற்காகவே பொருத்தப்பட்ட கம்பிகளில் கட்டுகிறார்கள். உடனே அவர்களுடைய வேண்டுதல்கள் பலித்துவிடுகின்றன.  

‘‘உக்ரம் வீரம் மகா விஷ்ணும்
ஜுவலன்தம் சர்வ தோமுகம்
நருசிம்ஹம் பீஷணம் பத்ரம்
மிருத்யும்... மிருத்யும்... நமாம்யஹம்’’

கர்ப்பக் கிரகத்திற்கு வெளியே இடதுபுறம் கணபதி அருள்கிறார். பிராகாரத்து மாடங்களில் பிரகலாதன், ஹனுமன், துருவன், ஹயக்ரீவர் மற்றும் பராசரன் ஆகியோரை தரிசிக்கலாம்.  விஷ்ணுவின் தசாவதாரங்களும் இங்கு சிலைகளாக காணப்படுகின்றன. இங்குள்ள அனுமனின் தியானக் காட்சி பேரழகு கொண்டது. கோயிலில் ஒரு குகை உள்ளது. இது இந்தப் பகுதியை ஆண்ட சாரஸ்காதா என்ற மன்னனின் மாளிகைக்குச் செல்லும் வழி என்கிறார்கள்.

அந்தக் குகை வழியாக மன்னன் வந்து நரசிம்மரை வழிபட்டுவிட்டுச் செல்வானாம். இன்று அது மூடப்பட்டு விட்டது. இந்தக் கோயிலுக்கு செல்வதுடன் அருகிலுள்ள மத்தூர் நரசிம்மர் மற்றும் தொட்டமளூர் ராமபிரியர் ஆகியோரையும் சென்று தரிசிப்பது பொதுவாக பக்தர்கள் வழக்கம். மாலை 3.30 முதல் இரவு 9.00 மணிவரை கோயில் திறந்திருக்கிறது என்றாலும், இரவு குவியும் முன்னரே வெளியூர் பக்தர்கள் சென்று திரும்புவது நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

ராஜிராதா