வீணையில் வேதம் இசைக்கக் கேட்ட வீணாதரர்!



திருக்கடையூர் மயானம்

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்

சிவபெருமான் செய்த எட்டு வீரச் செயல்களைக் குறிப்பிடும் தலங்களாக விளங்குபவை அட்டவீரட்டங்களாகும். பிரம்மனின் தலையைக் கொய்தது திருக்கண்டியூரிலும், திரிபுரங்களை எரித்தது திருவதிகையிலும், தாருகாவனத்து இருடிகள் ஏவிய யானையின் உடலம் கிழித்தது திருவழுவூரிலும், தக்கனின் தலையைக் கொய்தது திருப்பறியலூரிலும், அந்தகனை சூலத்தால் தடிந்தது திருக்கோவலூரிலும், மன்மதனை எரித்தது திருக்குறுக்கையிலும், சலந்தரனின் உடலைச் சக்கரத்தால் பிளந்தது திருவிற்குடியிலும் மார்க்கண்டேயனுக்காக காலனைக் காலால் உருட்டியது திருக்கடவூரிலும் என கயிலைநாதன் செய்த வீரச் செயல்கள் இப்பதிகளில் நிகழ்ந்தவையாம்.

அமிர்தகடேஸ்வரர் எனும் காலகால தேவர் அருள்பாலிக்கும் திருக்கடவூரின் ஒரு பகுதியாக விளங்கும் மற்றோர் தேவாரத் தலம், திருக்கடவூர் மயானம் என்பதாகும். கடவூர் ஈசனுக்கு நாளும் திருமஞ்சனம் செய்யப் பெறுகின்ற கங்கை நீர் திகழும் கூபம் (கிணறு) இருக்கின்ற இடமும் திருக்கடையூர் மயானமே. சோழநாட்டில் மயிலாடுதுறை வட்டத்தில் திகழும் திருக்கடவூர், தற்காலத்தில் திருக்கடையூர் என்றும், அடுத்து திகழும் கடவூர் மயானம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்பெறுகின்றன. மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் உள்ள ஆக்கூர் செம்பொன்னார் கோயில் என்ற தேவாரத் தலங்களைக் கடந்து இத்திருவூருக்குச் செல்லலாம்.

சென்னையிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் கடற்கரைச் சாலையில் (ஈசிஆர் ரோடு) சீகாழி தாண்டி உள்ள ஆக்கூர் முக்கூட்டிலிருந்து பிரியும் தரங்கம்பாடி சாலை வழியேயும் செல்லலாம். ஊரின் நடுவண் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலுக்கு நேர்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் மேற்கு நோக்கிய வண்ணம் திருமெய்ஞானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் என்றழைக்கப்பெறும் புராதனமான  திருக்கடவூர் மயானம் எனும் பெருங்கோயில் திகழ்கின்றது. அக்கோயிலின் தென்மேற்கு திசையில் தனித்த திருமதில், திருக்கோபுரம் ஆகியவற்றோடு திருக்காமகோட்டமாம் அம்மனின் ஆலயம் இடம்பெற்றுள்ளது.

மயானம் என்ற பெயரில் திகழும் சிவாலயங்கள் மிகச் சேய்மையான காலந்தொட்டு திகழ்பவையாகும். கச்சி மயானம் காஞ்சிபுரத்து ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்ததாகும். காழி மயானம் சீகாழி நகரின் ஒரு பகுதியில் பழமைச் சுவடுகளைத் தாங்கி நிற்கின்றது. நாலூர் மயானம் கும்பகோணம் குடவாசல் நெடுஞ்சாலையை ஒட்டி திருநாலூருக்குக் கிழக்காக திருமெய்ஞானம் என்ற பெயரில் விளங்குகின்றது. அட்டவீரட்டங்கள் போன்றும், சப்த விடங்க தலங்கள் போன்றும் சப்த ஸ்தான தலங்கள் போன்றும் திருமயான தலங்கள் மிக புனிதமுடையவையாம். அவ்வரிசையில் மிகுந்த சிறப்புடையதாக  திருக்கடவூர் மயானம் திகழ்கின்றது.

கடவூர் மயானத்து ஈசனாரை சோழர் கால பழங்கல்வெட்டுகள், ‘ஜயங்கொண்ட சோழவள நாட்டு ஆக்கூர் நாட்டு பிரம்மதேயம் திருக்கடவூருடையார் திருமயானமுடைய பெருமாள்’ என்றே குறிக்கின்றன. விஜய நகர அரசு காலத்திற்கு பின்பே பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமம் குறிக்கப்பெறுகின்றது. அம்பிகையின் திருநாமங்களாக மலர்க்குழல் மின்னம்மை என்றும், அம்மலக் குஜநாயகி என்றும் ஆவணங்களில் குறிக்கப்பெற்றுள்ளன. பலிபீடம், இடபக் கொட்டில் கடந்து இவ்வாலயத்தினுள்ளே நுழையும்போது முதல் திருச்சுற்றின் திருவாயிலாக மூன்று நிலைகளையுடைய ராஜகோபுரம் காட்சி அளிக்கின்றது. உள்ளே நடராஜர் சபை, பைரவர் சந்நதி, சண்டீசர் கோயில், கணபதியார் ஆலயம் ஆகியவை சூழ மூலவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்கு சிங்காரவேலர், வள்ளி-தேவசேனையுடன் செப்புத் திருமேனியராகக் காட்சி நல்குகின்றார். கருவறையில் திருமயானமுடைய பரமசாமி சதுரமான பீடத்தின் மேல் லிங்கத் திருமேனியாக அருள் பாலிக்கின்றார். திருச்சுற்றில் மாலவனுக்கெனத் தனித்த சிற்றாலயம் திகழ்கின்றது. விமானத்தின் கோஷ்ட மாடங்களில் முன்பு இடம் பெற்றிருந்த நர்த்தன கணபதி, பிரம்மன் போன்ற கற்சிற்பங்கள் ஒருகாலகட்டத்தில் அழிந்தமையால் தற்போது புதிய திருமேனிகளை இடம்பெறச் செய்துள்ளனர். கோஷ்ட மாடங்களில் திகழும் ேசாழர்கால திருமால், பிச்சை உகக்கும் பெருமான், துர்க்கை, ஆலமர்ச் செல்வர், லிங்கோத்பவர், கங்காதரர், அமர்ந்த கோல கணபதி ஆகிய திருமேனிகள் அற்புதமான கலைப் படைப்புகளாகும்.

கங்காதரர் சிற்பம் மிக நேர்த்தியாக வடிக்கப் பெற்றுள்ளது. தன் விரிசடையொன்றில் கங்காதேவியை தாங்கிய வண்ணம் அருகே ஊடலுற்று நிற்கும் உமாதேவியின் முகத்தை தன் வலக்கரத்தால் வருடி நிற்கும் கயிலைநாதனின் திருக்கோலம் காண்போரின் உள்ளத்தைக் கொள்ளை ெகாள்ளும் தகைமையது. கானத்து எருமையின் தலையின்மீது நின்றவாறு அருள்பாலிக்கும் கொற்றவையின் அருட்கோலமும், பிட்சாடனரின் எழிலுருவும், சனகாதி முனிவர்களுக்கு ஞானமுரைக்கின்ற தட்சிணாமூர்த்தியின் அமர்ந்த கோலமும், விண்ணிற் பறக்கும் பிரம்மனுக்கும் பூமியைத் தோண்டும் வராக மூர்த்திக்கும் இங்குற்றேன் என்று லிங்பாணத்தில் காட்சி நல்கும் லிங்கபுராண தேவரின் அருட்காட்சியும் சோழர் கலையின் உன்னத வெளிப்பாடுகளாக விளங்குகின்றன.

ஆலமர்ச் செல்வர் கோஷ்டத்திற்கு அருகே கருவறை சுவரில் குடையின் கீழ் இருக்கும் லிங்கத் திருமேனியை இருகரம் கூப்பி வணங்கும் சோழ மன்னனின் திருவுருவம் காணப்பெறுகின்றது.  நீண்ட தாடி, மீசையுடன் எளிய கோலத்தில் காணப்பெறும் இச்சிற்பம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் திருவுருவமாக இருக்கலாம் எனக் கருத முடிகிறது. இவ்வாலயத்து கல்வெட்டுச் சாசனங்களையும், பிற கோயில்களில் உள்ள குலோத்துங்க சோழனின் உருவச் சிற்பங்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது இங்கு திகழ்வதும் அம்மன்னவனின் உருவச் சிலையே என உறுதி செய்யலாம்.

திருமயானமுடையார் திருக்கோயிலுக்கு வெளியே தென் திசையில் அசுவதி கிணறு என்றழைக்கப் பெறும் கங்கைக் கிணறு உள்ளது. மார்க்கண்டேயன் திருக்கடவூரின் ஈசனாரைப் பூஜிப்பதற்கென சிவனருளால் தோன்றியதே இக்கிணறு என தலபுராணம் கூறுகின்றது. இன்றளவும் திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர்க்கு இக்கூபத்திலிருந்துதான் திருமஞ்சன நீர் மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லப் பெற்று அபிடேகங்கள் நிகழ்கின்றன. பங்குனி மாத அஸ்வினி நாளில்தான் இங்கு கங்கை வந்து ஐக்கியமானதாக கூறப்பெறுகின்றது.கடவூர் மயானத்து ஈசனை திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும், ஆளுடைய நம்பியான சுந்தரரும் போற்றி தேவாரப் பதிகங்களை பாடியுள்ளனர்.

சம்பந்தர், ‘ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் மேல் வருவார்’ என்றும், அப்பர் அடிகள் ‘‘பழையதம் அடியார் செய்த பாவமும் பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே’’ என்றும், சுந்தரர், ‘எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்’-என்றும் அவர்தம் பதிகங்களில் குறிப்பிட்டிருப்பது சத்தியமான வாக்கேயாகும். தூய சிந்தனையோடு கடவூர் மயானத்து அடிகளைப் பிரார்த்திப்பவர்களுக்கு இவை கைகூடும். இவ்வாலயத்தில் சோழர் காலத்து கல்வெட்டுகளும் பாண்டிய மன்னன் ஒருவனின் சாசனமும் மகாமண்டபத்துப் புறச் சுவர்களில் அழகுறச் செதுக்கப்பெற்று காட்சி நல்குகின்றன. பேரூழி முடிந்து அனைத்துமே ஒடுங்கிய நிலையில் பரமேஸ்வரன் மட்டுமே அங்கிருந்து கங்காளர் கோலத்துடன் மீண்டும் அனைத்தும் தோற்றம் பெற நல்வீணை வாசிப்பான் என்பதை திருநாவுக்கரசு பெருமானார்,

‘பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரம்மனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின்று எம் இறை நல்வீணை வாசிக்குமே’

- என்று தனித் திருவிருத்தத்தின் ஒரு பாடலில் கூறியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானோ, ‘வேய் உறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி...’ என்று தொடங்கி கோள்கள் அனைத்தும் நல்லனவே என்பதை கோளறு திருப்பதிகத்தில் சுட்டிக் காட்டியுள்ளார். வீணை இசையின் மகத்துவத்திற்கு இதனினும் மேம்பட்ட குறிப்புகள் இருத்தல் கூடுமோ? குடந்தைக் கீழ்க் கோட்டம், மேலப் பழுவூர் போன்ற சிவாலயங்களில் காணப்பெறும் வீணாதாரரான சிவவடிவங்கள் வீணையின் மகத்துவத்தினை நமக்குக் காட்டுபவையாகும்.

வீணாதரராகிய அப்பரமேட்டி வேதத்தை வீணையில் வாசிக்கக் கேட்டு மகிழ்ந்த இடம் திருக்கடவூர் மயானம் என்பதை அங்குள்ள சோழர்கால கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. சோழ மன்னன் ஒருவனால் திருமயானமுடையார் முன்பு வேதத்தை வீணையில் விண்ணப்பம் செய்வதற்கும், ஸ்ரீருத்திரம் விண்ணப்பம் செய்வதற்கும், வேதங்களைப் பாராயணம் செய்வதற்கும், ஜயங்கொண்ட சோழவள நாட்டு ஆக்கூரான ராஜேந்திர சிம்ம சதுர்வேதி மங்கலத்திலிருந்து பிரிந்த திருத்தொண்டத் தொகை மங்கலத்திலும், சிவபாத சேகரமங்கலத்திலும் நிலம் அளிக்கப் பெற்ற நிகழ்வு இவ்வாலயத்துக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றுள்ளது.

திருமயானமுடையார் கோயிலில் திகழும் கல்வெட்டுகள் இவ்வாலயத்து தேவியின் திருநாமம் வாடாமுலை நாச்சியார் என்பதையும், ராஜாதிராஜ சோழன் பெயரில் திருநந்தவனம் பராமரிக்கப் பெற்றதையும், செங்கழுநீர் தாமம் (மாலை) ஈசனுக்கு அர்ப்பணிக்க பலர் கொடைகள் வழங்கியமையையும் எடுத்துரைக்கின்றன. பல அரிய வரலாற்றுத் தகவல்களை கல்வெட்டுகளாகச் சுமந்து நிற்கும் இவ்வாலயம் பரம பவித்திரமிக்கதோர் இடம் என்பதை தரிசிக்க செய்வோர் அனுபவபூர்வமாக உணர்வர்.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்