பொய் சொல்லலாம், தப்பில்லை, எப்போது?



குறளின் குரல் - 72

என்றும் நிலைத்து நிற்கும் நீதிகளை மக்களுக்குப் புகட்ட வந்தவர், காலத்தை வென்று நிற்கும் மகாகவியான திருவள்ளுவப் பெருந்தகை. அவர் நாம் அனைவரும் அறிந்தவையும் ஒப்புக் கொள்ளக் கூடியவையுமான, `திருடக் கூடாது, புறம் பேசக் கூடாது, பொறாமைப் படக் கூடாது, இனிய சொற்களையே பேச வேண்டும், மது அருந்தக் கூடாது, புலால் உண்ணக் கூடாது`  போன்ற பல அறநெறிகளைத் தம் நூலில் சில அதிகாரங்களில் பத்துப் பத்துக்  குறள்களில் போதிக்கிறார்.

என்றாலும் திருக்குறளில் இத்தகைய அதன் பொதுவான போக்கிலிருந்து விலகிய சில வித்தியாசமான சிந்தனைகளும் ஒன்றிரண்டு உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று - உண்மையே பேசவேண்டும் என்றாலும் சில சந்தர்ப்பங்களில் பொய்யும் பேசலாம் என்பது! ‘வள்ளுவர் பொய் பேசலாம் என்கிறாரா!’ என நம் மனம் தொடக்கத்தில் திகைக்கிறது. இப்படி வள்ளுவர் சொல்லலாமா என நம் மனமே கேள்வி கேட்கிறது. ஆனால், அந்தக் குறளை முழுமையாகப் புரிந்துகொள்ளும்போது எவ்வளவு கூர்மையான சிந்தனையாளர் வள்ளுவர் என்பதை நம் மனம் அறிந்து வியக்கிறது. குற்றமே இல்லாத ஒரு நன்மையைத் தரக்கூடியது என்றால், பொய் சொல்வதில் தவறில்லை என்பது வள்ளுவத்தின் கோட்பாடு.

'பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.’

- வாய்மை என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள் இது. 'புரைதீர்ந்த’ ‘நன்மை’ என்ற இரு சொற்களும் இந்தக் குறளில் மிக முக்கியமானவை. பொய்யால் விளைவது குற்றமே இல்லாத நன்மையாக இருக்குமானால் பொய்சொல்லலாம் என்பதுதான் வள்ளுவர் வகுக்கும் விதி அல்லது தீமை தராதவகையில் பொய் சொல்வதற்கு வள்ளுவர் கொடுக்கும் சலுகை. குற்றமே இல்லாத நன்மை என்பதை நாம் எப்படி வரையறுப்பது? அடுத்தவருக்குக் கெடுதல் தராத பொய்யாக அது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது குற்றமே இல்லாத நன்மையைத் தருகிறது என நாம் முடிவு செய்யலாம்.

பொய் சொல்வது நம் மரபில் இல்லையா என்ன? பொய்யே சொல்லாமல் வாழ்ந்துவிடுவது சாத்தியம்தானா? அரிச்சந்திரனுக்கும் மகாத்மா காந்திக்கும் இயல்பாக இருந்த ஒன்று எல்லோருக்கும் இயல்பாவது இயலக் கூடியதா? இயல்பாக இருக்கிறதா இல்லையா என்பதல்ல கேள்வி. இயல்பாக அதை அமைத்துக் கொள்ளும் மனநிலையை நோக்கி நாம் நகரவேண்டும். வாழ்க்கை என்பது நம்மை மேலும் மேலும் நல்லவர்களாக ஆக்கிக் கொள்வதற்கான தொடர் பயிற்சி தானே? என்றேனும் ஒருநாள் அரிச்சந்திரனாகவும் மகாத்மா காந்தியாகவும் ஆகவேண்டும் என்பதுதானே நம் லட்சியமாக இருக்க முடியும்?

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என ஒரு தவறான பழமொழி மக்கடையே வழங்கி வருகிறது. சரியான பழமொழி அது அல்ல. ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தினால் அந்தக் கல்யாணம் எப்படி உருப்படும்? மணமகனுடைய அல்லது மணமகளுடைய உடல் நலக்குறைவை மறைத்துத் திருமணம் செய்துவைத்தால் அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்லவா? இப்படித் தவறுகளுக்கும் குற்றங்களுக்குமா நம் முன்னோர் பரிந்துரைப்பார்கள்?

`ஆயிரம் முறை போய்ச் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம்’ என்பதே அந்தப் பழமொழியின் உண்மை வடிவம். மணமகன் வீட்டுக்கும் மணமகள் வீட்டுக்கும் பலமுறை சென்று அவர்களிடம் நாமறிந்த உண்மைகளை எடுத்துச் சொல்லி இருதரப்பினரையும் சம்மதிக்க வைத்துத் திருமணத்தை நடத்தவேண்டும் என்பதே சொல்லப்பட்ட கருத்து. இந்தப் பழமொழியை எப்படியாவது கல்யாணத்தை நடத்திக் கமிஷன் பெற விரும்பிய திருமணத் தரகர்கள் மாற்றிவிட்டார்கள் போலிருக்கிறது! எந்தத் திருமணத்திலும் ஒரு சிறு பொய்கூட இடம்பெறக் கூடாது. பொய் இருந்தால் திருமண வாழ்வு இனிக்காது. கல்யாணத்தில் மொய் இருக்கலாம், ஆனால் பொய் இருக்கக் கூடாது!

ராம பிரான் ஒரு பொய் சொன்னதாகவும் சீதாப் பிராட்டியும் ஒரு பொய் சொன்னதாகவும் ராமாயண இதிகாசத்தில் வருகிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். அது எப்படி ராமனும் சீதையும் பொய் சொல்லியிருக்க முடியும் என்ற பக்தி சார்ந்த கோபமும், சந்தேகமும் வரக்கூடும். ஆனால், அவர்கள் பொய் சொன்னதான தகவல், பொய்யல்ல, உண்மைதான்! ராமனாவது பொய் சொல்வதாவது என்று சீதை கூட நம்மைப் போல் முதலில் ஆச்சரியப்பட்டாள். பிறகு ராமனிடம் அவன் சொன்ன பொய் குறித்து விளக்கம் கேட்டாள்.  சில சந்தர்ப்பங்களில் பொய் சொல்லலாம் என தர்ம சாஸ்திரங்கள் சொல்வதாக அவன் விளக்கியதும் நிறைவடைந்தாள்.

அயோத்தி அரண்மனையிலிருந்து கடகடவென்று வனத்தை நோக்கி உருண்டு ஓடிக் கொண்டிருந்தது தேர். தேரை ஓட்டியவர் ரகு குலத்தின் தேரோட்டியும் மந்திரியுமான சுமந்திரர். தேரில் அமர்ந்து வனத்திற்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் ராமன், சீதை, லட்சுமணன். அப்போதுதான் அவர்கள் செவியில் விழுந்தது அந்தக் குரல். உள்ளத்தைக் கரைய வைக்கும் ஒரு கிழவரின் தீனக் குரல். அந்தக் கிழவர் யாருமல்ல. ராமபிரானின் தந்தையான மாமன்னர் தசரதரேதான்.

ராமா என் கண்மணி! என்னை விட்டுப் போய் விடாதே! உன்னைப் பிரிந்தால் நான் உயிர்வாழ மாட்டேன். கைகேயிக்குக் கொடுத்த வாக்குறுதியை நான் மீறினால் எனக்குப் பழி வந்து சேரும். உன்னைக் காட்டுக்கு அனுப்பினாலும் மக்கள் என்னைப் பழிக்கத்தான் செய்வார்கள். எனவே எப்படியும் நான் பழிக்கப்படப் போகிறேன். நீ உடனே திரும்பிவா. வாக்குறுதியை மீறியதற்காக மக்கள் என்னைப் பழித்தால்தான் என்ன? நீ என்னுடன் இருப்பாய் அல்லவா? அது போதும் எனக்கு. சுமந்திரரே! நான் சொல்வது உங்கள் காதில் விழவில்லையா? தேரை அயோத்தி நோக்கித் திருப்புங்கள்!’

ஆனால் இதைக் கேட்டு, தேரில் சென்றுகொண்டிருந்த ராமன் சுமந்திரரிடம் சொன்னான்: சுமந்திரரே தேரைத் திருப்ப வேண்டாம். தேர் வனம் நோக்கிச் செல்லட்டும்! இயன்றவரை விரைவாகச் செல்லுங்கள்!’சுமந்திரர் திகைப்புடன் ராமனிடம் கேட்டார்: ராமா இப்போதுவரை தசரதர்தான் அயோத்தியின் மன்னர். இன்னும் பரதன் முடிசூடவில்லை. ஆகவே தசரதர்  சொல்கிறார் என்றால் அது  அரச கட்டளை. நான் எப்படி அரச கட்டளையை மீற முடியும்? உங்களை வனத்தில் விட்டுவிட்டு நான் திரும்பி அயோத்தி செல்வேனே, அப்போது அரச கட்டளையை ஏன் மீறினாய் என்று மன்னர் கேட்டால் நான் என்ன சொல்வது?’

இந்த இக்கட்டான கேள்விக்கு ராமனிடமிருந்து என்ன பதில் வரப் போகிறது என சீதையும் லட்சுமணனும் மிகுந்த ஆவலோடு காத்திருந்தார்கள். ராமன் ஒருசிறு தயக்கமும் இல்லாமல் உடனே பளிச்சென்று பதில் சொன்னான்: மன்னரிடம், ‘உங்கள் வார்த்தைகளை எதிர்க்காற்று அடித்துச் சென்றுவிட்டது போலிருக்கிறது. நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று எங்களுக்குக் கேட்கவே இல்லை. கேட்காத கட்டளைக்கு நான் எப்படி அடிபணிவது?’ என்று சொல்லிவிடுங்கள்!’

சுமந்திரர் ராமனின் பேச்சை ஏற்று வனத்தை நோக்கியே தேரைச் செலுத்தலானார். சீதாதேவி வியப்புடன் கேட்டாள்:  நாதா சத்தியசீலரான நீங்களே பொய் சொல்லச் சொல்கிறீர்களே? இது சரியா?’ராமன் மெல்லிய முறுவலுடன் பதில் சொன்னான்:  இப்படிப்பட்ட இக்கட்டான தருணங்களில் பொய் சொல்வதில் தவறில்லை தேவி. இத்தகைய பொய்கள் அனுமதிக்கப்படக் கூடியவையே என்று சாஸ்திரங்கள் அங்கீகரித்திருக்கின்றன. குற்றமில்லாத நன்மை விளையுமானால் பொய் சொல்லலாம். இந்தப் பொய்யைச் சொல்லாவிட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பார்! நாம் திரும்பிப் போவோம். மன்னருக்கு வாக்குறுதியை மீறினார் என்ற பழிவரும்.

ரகு குலத்தின் மானம் கெடும். மற்ற மன்னர்கள் எள்ளி நகையாடுவார்கள். எனவே மன்னரின் மரியாதையைக் காப்பாற்றவும் நமது புகழ்பெற்ற ரகு குலத்தின் மானத்தை ரட்சிக்கவும் இந்தப் பொய்யைச் சொல்வதில் தவறேதும் இல்லை! ராமனின் விளக்கத்தைக் கேட்ட சீதை இதைத் தான் மறந்துவிடக் கூடாது என்று தன் சேலையில் ஒரு முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டாள்.  பின்னர் தன் வாழ்வில் நேர்ந்த ஓர் இக்கட்டான சந்தர்ப்பத்தில் அவளும் ஒரு பொய் சொன்னாள்!வனத்தில் பதிமூன்று ஆண்டுகள் கடகடவென உருண்டு ஓடின. பொன்மானைக் காட்டி ஏமாற்றி ராவணன் சீதையை வஞ்சகமாகக் கவர்ந்து சென்றான்.

அசோகவனத்தில் சிறையிருந்த சீதையை அனுமன் வந்து பார்த்தான். கணையாழியைக் கொடுத்து சூடாமணியைப் பெற்றுக் கொண்டான். விடைபெற்றுச் சென்று அசோகவனத்தின் பல மரக்கிளைகளை ஒடித்துப்போட்டு, பழங்களைப் பறித்து உண்ணலானான். அசோகவனக் காவலர்கள் ஓடோடி வந்தார்கள். அனுமன் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்து அவர்கள் திகைத்தார்கள். ஒருவேளை இந்தக் குரங்கு சீதையைச் சந்தித்திருக்குமோ என சந்தேகம் கொண்டார்கள். அப்படியிருந்தால் இந்தக் குரங்கைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என நினைத்தார்கள். சீதையிடம் வந்து ‘ஒரு குரங்கு இங்கு வந்து உங்களைச் சந்தித்துப் பேசியதா?’ எனக் கூர்மையான பார்வையோடு கேட்டார்கள்.

சீதை யோசித்தாள். அனுமனுக்கு எந்த ஊறும் நேரக் கூடாது என அவளின் தாய் மனம் எண்ணியது. ராமபிரான் பொய் சொன்ன சந்தர்ப்பத்தில் ஒரு நினைவூட்டலாக அவள் தன் சேலையில் ஒரு முடிச்சைப் போட்டுக் கொண்டாளே? தன் சேலையில் இருந்த முடிச்சைப் பிரித்தவாறே அவள் பதில் சொன்னாள்: 'குரங்கா? எந்தக் குரங்கு? அது எப்படி இருக்கும்? மான் போன்ற விலங்காக மாறும் மாயாஜால வேலையில் எல்லாம் உங்களைப் போன்ற அரக்கர்கள் தான் தேர்ந்தவர்கள். நான் மானிடப் பெண். எனக்கு எந்த விலங்கைப் பற்றியும் எதுவும் தெரியாது!’ காவலர்கள் திருப்தியோடு அந்த இடத்தை விட்டு விலகினார்கள். சீதை பொய் சொன்ன சந்தர்ப்பம் இதுதான் ராமன் ஒரே ஒரு பொய்யைக் காரணத்தோடு, தேவைக்காகச் சொன்னான். ஆனால், இருபெரும் இதிகாச நாயகர்களில் இன்னொருவனான கண்ணன் சொன்ன பொய்களுக்கோ அளவேயில்லை.

ஆளுக்கிசைந்தபடிப் பேசி - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்!

- என அவன் பொய்சொல்லும் ஆற்றலை வியக்கிறார் பாரதியார். கண்ணன் சொன்ன ஏராளமான பொய்கள் பற்றிய சுவாரஸ்யமான விவரங்கள் அவன் அடியவர்களின் கவிதைகளில் கொட்டிக் கிடக்கின்றன. ராதை கண்ணனைக் கேட்கிறாள், 'நேற்று இரவு வீட்டுக்கு வருகிறேன் என்றாயே, ஏன் வரவில்லை?’ என்று. 'நேற்று மழை பெய்ததல்லவா? அதனால் தான் வரவில்லை!’ என்றானாம் கண்ணன். எந்தக் கண்ணன்? சின்னஞ்சிறு வயதிலேயே மழைக்கு கோவர்த்தனகிரி என்ற மலையையே குடையாகப் பிடித்தானே அந்தக் கண்ணன்! நம்பக் கூடியதாகவா இருக்கிறது கண்ணனின் பொய்? ஆனால், அந்தப் பேதை ராதை அதை நம்புகிறாள். அவள் என்ன செய்வாள் பாவம்? அவள் அவனைக் காதலிக்கிறாளே? பொய் இல்லாமல் காதல் ஏது?

பாரத யுத்தத்தின்போது கண்ணன், பொய்யே பேசாத தர்மபுத்திரரையும் பொய்சொல்லச் செய்கிறான். மகன் அஸ்வத்தாமன் இறந்தால் அவனின் தந்தை துரோணர் பலமிழப்பார் என்பதை அறிந்து,  பீமனை அஸ்வத்தாமா என்ற பெயருடைய ஒரு யானையைக் கொல்லுமாறு செய்கிறான். தர்மபுத்திரரிடம் அஸ்வத்தாமன் மரணம் என்று சப்தம் போட்டு அறிவிக்கச் சொல்கிறான். 'அஸ்வத்தாமன் மரணம், ஆனால், அது ஒரு யானை!’ என்றே சப்தம் போட்டுச் சொல்கிறார் தர்மபுத்திரர். சூழ்ச்சிகளில் வல்லவனான கண்ணக் கடவுளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா?

'ஆனால் அது ஒரு யானை’ என்று தர்மபுத்திரர் சொல்லும்போது தன் கையில் உள்ள பாஞ்சஜன்யம் என்ற சங்கை எடுத்து சப்தமாக ஒலியெழுப்புகிறான் கண்ணன். அந்த ஒலியில் தர்மபுத்திரர் சொன்ன வாசகத்தின் பிற்பகுதி அடங்கி விடுகிறது. தன் மகன் அஸ்வத்தாமனே கொல்லப்பட்டதாக துரோணர் எண்ணுகிறார். அதனால் பின்னர் என்னென்ன நடந்தன என்பதை மகாபாரதம் விறுவிறுப்பாக விவரிக்கிறது. கண்ணன் ஏராளமான பொய்களைச் சொன்னான். ஆனால், அந்தப் பொய்கள் எல்லாமே புரைதீர்ந்து நன்மை பயக்கும் பொய்கள் தான். அறம் வெல்லவேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்ட பொய்கள் தான்.

வள்ளுவர் சில சந்தர்ப்பங்களில் பொய்யும் சொல்லலாம் எனச் சலுகை தருவதால் அதை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு நாம் பொய்களைக் கட்டவிழ்த்து விடக் கூடாது. புரைதீர்ந்த நன்மை பயக்குமா, குற்றமில்லாத நல்லதை நாம் சொல்லும் பொய் செய்யுமா எனப் பலமுறை யோசித்துவிட்டே பொய் சொல்வதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். ‘அப்பா வீட்டில் இருக்கிறாரா?’ என்று குழந்தையிடம் கேட்டார் அப்பாவைச் சந்திக்க வந்த ஒருவர். அவரிடம், `வீட்டுக்குள் இருக்கிற அப்பாதான், நீங்கள் வந்தால், தான் வீட்டில் இல்லை என்று உங்களிடம் சொல்லச் சொன்னார், என் அப்பா வீட்டில் இல்லை என்று என் அப்பாவே சொல்வதால் அதை நீங்கள் நம்பத்தான் வேண்டும்!’ என்று பதில் சொல்லிற்று கள்ளம் கபடம் அறியாத அந்தக் குழந்தை!

(குறள் உரைக்கும்)

- திருப்பூர் கிருஷ்ணன்