ஒரு செயலாக்கத்தில் எங்கே தடுமாறுகிறோம்?



ஒரு செயலை மேற்கொள்கிறோம். அது முடியும்போது முழுமையடையாமல் போய்விடுகிறது, எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்று வைத்துக்கொள்வோம். உடனே என்ன செய்கிறோம்?

கோபப்படுகிறோம், எதிர்பார்த்தபடி முடிய வில்லையே என்று ஆதங்கம், வருத்தம், ஏக்கம், ஏமாற்றம் என்று பலவகை எதிர்மறை உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். இதன் தொடர்ச்சியாக நமக்கு யாரேனும் வேண்டாதவர் இருக்கிறாரோ, அவருடைய கெடுசெயலால்தான் நம் பணி நிறைவாக முடியவில்லையோ என்று சந்தேகத்தையும் உருவாக்கிக்கொள்கிறோம். இதன் தொடர்ச்சியாக நமக்குத் தெரிந்த நல்லவர்களெல்லாம் எதிரிகளாகத் தெரிய ஆரம்பிக்கிறார்கள். அனாவசிய சந்தேகம், காழ்ப்புணர்ச்சி, பகை, விரோதம், பிரிவு…

இந்த நிலைமைக்கு வருவதற்கு முன்னால் சில நிமிடங்கள் நாம் அமைதி காத்தோமானால் நம் மனம் தெளிவடையும். ஆமாம், குறிப்பிட்ட செயல் நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் என்று கொஞ்சம் யோசிக்கலாம். முதலில் நம்மிடமிருந்தே ஆரம்பிக்கலாம்.

செயல் முடிவில் அடையப்போகும் ஆதாயங்களையே நாம் முன்னிறுத்திக்கொள்வதால், அந்த ஆதாயங்களின் தொடர்ச்சியாக விளையப்போகும் லாபங்கள் பற்றிய கற்பனைகளை வளர்த்துக்கொள்வதால், செயல்பாட்டின்போது ஏற்பட்டிருக்கக்கூடிய தவறுகள் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடுகின்றன.

அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்ற திட்டங்களை மேன்மேலும் வகுத்துக்கொள்வதைவிட, அந்தச் செயலின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்தந்தப் பகுதியை முழுமையாகச் செய்திருக்கிறோமா என்று கவனம் செலுத்தவேண்டும். இதனால் அவசரம், படபடப்பு, செயல் நிறைவேறாது போய்விடுமோ என்ற அடிமன அவநம்பிக்கை மற்றும் இந்த ஒவ்வொரு கட்டத்திலும் யாரிடமாவது யோசனை கேட்டுக்கொள்ளலாமா, உதவி கோரலாமா என்ற சுயபலம் இழத்தல் என்று எந்தக் குழப்பமும் இல்லாமல் போகும்.

அதாவது, ஒரு செயலாக்கத்தின்போது ஒவ்வொரு அடியையும் நாம் உறுதியாக, நம்பிக்கையுடன், அந்த ஒவ்வொரு அடியிலும் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்றி வந்தோமானால், செயல் எளிதாக முழுமை பெறும். இலக்குக்குப் போனபிறகு ஏக்கமாய்ப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை.

இப்படி ஒவ்வொரு அடியையும் எந்தப் பழுதுமில்லாமல் எடுத்துவைத்து பரிபூரண நிறைவுடன் லட்சியத்தை அடைவது எப்படி? கடவுள் அருளால்தான். தினமும் பிரார்த்தனையாக நாம் ஒதுக்கும் சில நிமிடங்களை முழுமையாக வேறு எந்த சிந்தனை இடையூறுமின்றி, அந்தப் பிரார்த்தனைக்கு மட்டும் அர்ப்பணிப்போமானால், இந்தப் பயிற்சியின் மூலம் மன-மூளை-உடலியக்க ஒருங்கிணைப்பு சாத்தியமாகும்.

இதுவே எல்லா செயல்களுக்கும் பழகிவிடும். எந்த இலக்கையும் எட்டுவது சுலபமாகிவிடும்.

பிரபுசங்கர்
(பொறுப்பாசிரியர்)