இனிது, இனிது இந்த ஈரடிக் குறள்!



திருக்குறள் காலந்தோறும் பயிலப்பட்டு வருகிறது. பழங்காலம் தொட்டுப் பற்பலர் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.

`தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்

 - என்று வள்ளுவத்திற்கு உரையெதிய பழைய உரையாசிரியர்கள் பத்துப் பேரை ஒரு நேரிசை வெண்பா அழகாகப் பட்டியலிடுகிறது. இவர்கள் அல்லாமலும்,இன்றுவரை திருக்குறளுக்கு உரையெழுதியவர்கள் டாக்டர் மு.வ., எழுத்தாளர் சுஜாதா, தமிழறிஞர் சாலமன் பாப்பையா, தற்போது திருக்குறளுக்குக் காலத்திற்கேற்றவாறு புதிய உரைகளைத் தந்துகொண்டிருக்கும் திருச்சி புலவர் ராமமூர்த்தி என இன்னும் பலர். பலர் உரையெழுதக் காரணம் எல்லோருக்கும் குறள் இனிக்கிறது. வள்ளுவம் பயிலப் பயில இனிது.

அதுசரி. பயிலப் பயில இனிதான திருக்குறளில் இனிது என்ற சொல் எந்தெந்த இடங்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது? இனிது என்ற சொல்லால் இனிதான குறள்கள் எத்தனை என்று பார்ப்போமா?

`தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’
(குறள் எண் 68)

`மக்கட்பேறு’ என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள குறள் இது. பெற்றோர் தம் குழந்தைகள் தங்களை விட அறிவாளிகளாகத் திகழ்வதைக் கண்டு மகிழ்வார்கள். பெற்றோர் மட்டுமா  மகிழ்வார்கள்? உலகமே அத்தகைய குழந்தைகளைப் பார்த்து மகிழும் என்கிறார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்கிறது இன்னொரு குறள்.  தன் பிள்ளையைச் சான்றோன் என்று பிறர் சொல்லக் கேட்ட தாய் அந்தப் பிள்ளையைப் பெற்றபோது அடைந்ததை விடவும் கூடுதலாக மகிழ்ச்சி அடைவாளாம்.

`அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.’(குறள் எண் 181) 

`புறங்கூறாமை’ என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள் இது. அறநெறிக்கு மாறாகச் செயல் புரிபவனாய் ஒருவன் இருந்தாலும் பிறரைக் குறித்துப் புறம்பேச மாட்டான் என்றால் அது அவனுக்கு இனிது என்கிறார் வள்ளுவர். அதாவது, ஒருவன் எப்படிப்பட்டவனாய் இருப்பினும் புறங்கூறாதவன் என்ற பெயர் எடுப்பது இனியது என்கிறது வள்ளுவம். 

பல்லாண்டுகளுக்கு முன்னர் ஒரு பட்டி மன்றம். சங்க இலக்கியத்தில் இலக்கியச் சிறப்பு மிகுந்தவை அகப் பாடல்களா, புறப்பாடல்களா என்பது தலைப்பு. புறப்பாடல் அணி சார்ந்தவர் பேசியபின் தம் அணிக்காகப் பேச அகப்பாடல் அணித்தலைவர் எழுந்தார்.

`இதுவரை எதிர் அணித் தலைவர் புறம் பேசினார், நாங்கள் புறம் பேசமாட்டோம்’ எனச் சொல்லித் தம் அணியைத் தொடங்கினார். அவை கலகலத்தது. புறம்  பேசுதலைத் தமிழ் மக்கள் விரும்புவதில்லை. எதையும் நேரடியாக அணுகுவதே பண்பாட்டுணர்வு மிகுந்துள்ள தமிழர்களின் பண்பு நலன்.

`கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது.’ (குறள் எண் 772)

`படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தில் இந்தக் குறளின் மூலம் எது வீரம் என்பது விளக்கப்படுகிறது. காட்டு முயலுக்குக் குறிவைக்கும் அம்பை விடவும் பாய்ந்துவரும் யானையைக் குறிவைத்து அந்த யானை பிடிபடாது தப்பினாலும் அத்தகைய வேலை ஏந்துவதே வீரர்க்கு இனிது என்கிறது வள்ளுவம்.
வீரர்களின் இலக்கு அவர்களின் வீரத்திற்கு ஏற்ற வகையில் அமைய வேண்டும். முயல்வேட்டைக்கு அதிக வீரம் தேவையில்லை. ஆனால் யானையை வேட்டையாடப் பெருவீரம் அவசியம். யானை வேட்டையில் தோல்வியடைந்தாலும் அது பெருமையே.

மகாபாரதப் போரில் கர்ணன் பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனனுடன் மட்டுமே போர் புரிந்தான். ஏனையவர்களை அவன் தீண்டவில்லை. குந்தி அவனிடம் அப்படியொரு வரம் கேட்டாள் என்பது ஒரு காரணம். தவிர பாண்டவர்களில் கர்ணனுக்கு இணையான வீரமுடையவன் அர்ச்சுனன் ஒருவனே என்பதும் ஒரு முக்கியமான காரணம். சமமான வீரனுடன் போர் செய்து வெல்வதில் உள்ள பெருமை தன்னினும் வலிமை குறைந்தவனை வெல்வதில் இருப்பதில்லை. இதைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வள்ளுவம்  ஒரு வீரனின் இனிமையான இலக்கணமாக எழுதி வைத்துள்ளது.

`பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.’ (குறள் எண் 811)

பண்பில்லாதவர்களுடைய நட்பு காலப் போக்கில் குறையுமானால் அது இனிது என்கிறார் வள்ளுவர். அறியாமல் பண்பில்லாதோருடன் நட்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால் எண்ணற்ற இடர்ப்பாடுகள். மெல்ல மெல்ல அந்த நட்பு தானாகவே குறையுமானால் அது மிக நல்லதுதானே? அத்தகைய நட்பு வளருமானால் அது இன்னும் பொல்லாத பல துயரங்களை அல்லவா கொண்டு தரும்?  பெரும்பாலும் குடிகாரர்கள் தங்கள் நண்பர்களும் குடிகாரர்களாக இருப்பதால்தான் குடியைத் தொடர்கிறார்கள். வீடு தேடி வந்து நண்பனைக் குடிக்க அழைத்துப் போகிறவர்கள் நிறைய உண்டு. அத்தகைய நட்பால் குடித்து உடல்நலம் கெடுவதைத் தவிர பயன் என்ன உண்டு? அத்தகைய நட்பு முறியுமானால் அல்லது குறைந்தபட்சம் குறையுமானால் ஒருவன் தன் குடிப்பழக்கத்திலிருந்து மெல்ல மெல்ல விடுபடவும் வாய்ப்பு ஏற்படுமல்லவா? எனவே தான் பண்பில்லாதவர் நட்பு குன்றுமானால் அது இனிது என்கிறது வள்ளுவம்.

`வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கின்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.’ (குறள் எண் 865)

`படைமாட்சி’ என்ற அதிகாரத்தில் இடம் பெறும் குறள் இது. வெற்றி பெறுவதற்குரிய வழி எதையும் நாடாமலும் வெற்றிக்குரிய செயலைச் செய்யாமலும் தன்மீது வரும் பழிக்கு வெட்கப்படாமலும் பண்பில்லாமலும் ஒருவன் இருந்தால் அவனைப் பகைவர்கள் வெல்வது இனிது  என்கிறார் வள்ளுவர்.

`களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படும் தோறும் இனிது.’
(குறள் எண் 1145)

இது காமத்துப் பாலில் ‘அலர் அறிவுறுத்தல்’ என்ற அதிகாரத்தில் இடம்பெறும் குறள். தலைவனும் தலைவியும் சந்திப்பது ஊருக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அப்படித் தெரிவது இனிது என மகிழ்ச்சியடைகிறாளாம் தலைவி. ஏன் தெரியுமா? கள்ளைக் குடிப்போர்க்கு மயங்கும்போதெல்லாம் அந்தக் கள்குடித்தல் இன்பமே தரும். அதுபோல் தலைவன் வந்து தன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அந்தச் செய்தி வெளிப்படுதல் நல்லதுதானே? விரைவில் அந்தத்  தலைவனுக்கே மணம் செய்துவைக்க வேண்டிய சூழல் உருவாகுமல்லவா? எனவே காதல் ஊருக்கெல்லாம் தெரிய வருவதை இனிது என்று போற்றுகிறது தலைவியின் மனம். 

`ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.’(குறள் எண் 1196)

 `தனிப்படர் மிகுதி’ என்ற அதிகாரத்தில் உள்ள குறள் இது. காம வேட்கை என்பது தலைவன் தலைவி இருவர் இடையேயும் சமமாக இருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஒருவரிடம் மட்டும் அந்த வேட்கை இருக்குமானால் அது துன்பம் தருவது. ஆனால், காவடித் தண்டின் சுமைபோல இருவரிடமும் அந்த வேட்கை இணையாக இருக்குமானால் அது இனிது என்கிறது வள்ளுவம்.

`உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.’
(குறள் எண் 1201)

கள்ளைக் குடித்தால் குடிக்கும்போது தான் மகிழ்ச்சி. குடித்ததை நினைக்கும் போது மகிழ்ச்சி தோன்றுவதில்லை. ஆனால், காதல் அப்படியல்ல. காதலை நினைத்தாலே போதும். நெஞ்சமெல்லாம் இனிக்கிறது என்கிறார் வள்ளுவர். அறத்துப் பாலில் கள்ளைக் குடிக்காதீர்கள் எனச் சொல்லிக் கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவர் காமத்துப் பாலில் ஓர் உவமை நயத்திற்காகக் கள்ளைக் கொண்டுவந்து விடுகிறார்!

`நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவும்தான்
கண்ட பொழுதே இனிது.’  (குறள் எண் 1215)

`கனவு நிலை உரைத்தல்’ என்ற அதிகாரத்தில் தலைவி தான் கண்ட கனவைப் பற்றிப் பேசுகிறாள். `நேரில் என்னவரைக் கண்டபோது இன்பம்தான். அதுபோலவே நேரில் காண இயலாத இக்காலத்தில் அவரைக் கனவில் கண்டேன், அதுவும் எனக்கு இன்பமாக இருந்தது’ என்கிறாள்.

`மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி` என, வள்ளுவம் கூறும் கனவு காண்பதில் உள்ள இன்பத்தை `பாக்கியலட்சுமி’ என்ற திரைப்படத்தில் ஒரு திரைப்பாடலின் வழியே உணர்த்துகிறார் கவியரசர் கண்ணதாசன்.

`நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.’ (குறள் எண் 1309)

நிழல் சூழ்ந்த ஓர் இடம். அங்கே தாகத்திற்குக் குடிக்கத் தண்ணீரும் கிடைக்குமானால் அதைவிடச் சிறப்பென்ன? அதுபோல் ஊடலைப் புரிந்துகொள்ளும் தலைவனிடம் ஊடல் கொள்வது இனிது என்கிறார் வள்ளுவர். புலவி பற்றிச் சொல்ல வந்தவர், செல்லச் சண்டைகளின் இயல்பைப் புரிந்துகொள்கிற தலைவனிடம் அவ்விதம் சண்டையிடுவது இனிது என்கிறார்.

நம் ஆன்மிகம் காட்டும் தெய்வீகத் தம்பதியரில் சண்டையிடாதவர்கள் யாருமில்லை. சிவனும் பார்வதியும், திருமாலும் இலக்குமியும், பிரம்மனும் கலைவாணியும் தங்களிடையே இட்ட சண்டைகளைப் பற்றி நம் புராணங்கள் நிறையவே பேசுகின்றன. ஆனாலும் அவர்கள் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அன்பைத் துறந்துவிடவில்லை, அவர்களைப் போலவே, சண்டையிட்டுக் கொண்டாலும் அந்தச் சண்டையாலேயே காதல் மிகுதியாகி மிக அன்னியோன்னியமாக இல்லற வாழ்வை நடத்த வேண்டும் என்பதுதான் நம் தெய்வங்கள் மறைமுகமாய் நமக்குச் சொல்லும் செய்தி. 

`உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.’ (குறள் எண் 1326)

`ஊடல் உவகை’ என்னும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறள் இது. உணவை உண்பதை விட அது செரிமானம் ஆவதே இனியதல்லவா? அதுபோலக் கூடுதலைக் காட்டிலும் காதல் வேட்கையை அதிகப்படுத்தும் ஊடலே இனிது என்கிறார் வள்ளுவர். `ஊடுதல் காமத்திற் கின்பம்’ என இன்னொரு குறளிலும் ஊடலின் இனிமை குறித்துப் பேசுகிறது வள்ளுவம்.

சின்னச் சின்னச் சண்டைகளும் சச்சரவுகளுமே காதல் வாழ்க்கையை இனிதாக்குகிறது என வள்ளுவம் சொல்வதை உணர்ந்துகொண்டால் இன்று பெருவாரியான மண விலக்குகள் தடுக்கப்படுமே? அற்பக் காரணங்களுக்காக கணவனும் மனைவியும் சண்டையிடுவதும் அதையே காரணம் காட்டி விவாகரத்துப் பெறுவதும் மலிந்துள்ள இக்காலத்தில் காதலுக்குச் சண்டையே இனிது என்னும் வள்ளுவக் கருத்து உரத்துப் பேசப்பட வேண்டிய ஒன்று.
அவ்வையார் முன் இடையனாக வந்தான் முருகப் பெருமான். அவ்வையின் தமிழறிவைச் சோதிக்க எண்ணினான் அந்தத் தமிழ்க் கடவுள். அவ்வையிடம் பல கேள்விகளைக் கேட்டான். அதில் ஒரு கேள்வி `இனியது எது?’ என்பது. அதற்கு அவ்வை மூதாட்டி அழகாகக் கவிதையில் பதில் சொன்னாள்:

`இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவிலும் நனவிலுங் காண்பது தானே!

வள்ளுவர் இனிது எனச் சொல்லும் குறட்பாக்களெல்லாம் பயிலப் பயில இனிது. இந்தக் குறட் பாக்கள் மட்டுமல்ல, வள்ளுவரின் திருக்குறள் முழுவதுமே இனிது தானே?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்