அர்த்தமுள்ள இந்துமதம்



ரஜோ குணமுள்ள மனிதனே உலக இயக்கத்தின் தூண்!

கீதையில் பகவான் மனிதர்களை மூன்று வகையாக விவரிக்கிறான். மொத்த மானிட வர்க்கத்தையே மூன்று குணங்களாகப் பிரிக்கிறான்.சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம், சத்துவ குணம் கொண்டவனைத்தான் நாம், ‘சாது’ என்கிறோம்.

ரஜோ குணம் கொண்டவனைத்தான்,  ‘அவனுக்கென்னப்பா ராஜா!’ என்கிறோம். தமோ குணம் கொண்டவனைத்தான், ‘சுத்தத் தாமசம்’ என்கிறோம்.இந்த மூன்றிலும் உடல் தோற்றமும் வேறுபடும்; ஆன்மத் தோற்றமும் வேறுபடும்.

பெரிய அறிஞர்கள் கருத்துப்படி உடலுக்கு ஆன்மாவின்மீது ஒரு ஆதிக்கம் இருக்கிறது. ஆனால், ஆன்மா உடலை ஆதிக்கம் செய்ய முடியாமல் தவிக்கிறது.
முதல் வகையான சத்துவ குண மனிதன், ஆன்மாவை தன் ஆதிக்கத்துக்குக் கொண்டுவந்து விடுகிறான். இரண்டாம் வகை ரஜோ குண மனிதன், ஆன்மாவைப் பற்றிய உணர்வே இல்லாமல், ‘உடல் இச்சைகளே உலகம்’ என்று வாழ்ந்துவிடுகிறான்.

மூன்றாவது தமோ குண மனிதனுக்கு ஆன்மா, உடம்பு இரண்டைப் பற்றியும் எந்த உணர்ச்சியும் இல்லை. எல்லாருக்கும் சத்துவ குணம் அமைவது கடினம்.
விவேகமும், புலனடக்கமும் எதிலும் உணர்ச்சி வசப்படாத தன்மையும், ‘எல்லாம் தன்னுடைய தகுதிக்குக் கீழ்ப்பட்டவையே’ என்ற எண்ணமும் ஒரு மனிதனை சத்துவ குண மனிதனாக ஆக்குகின்றன.

அழகான வாலிபன்; சுண்டினால் ரத்தம் தெறிக்கும் பருவம்; அழகான பெண்கள் அவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அவர்களையெல்லாம் பார்த்து, ‘நீங்கள் பெண் வடிவில் வந்த மாயப் பிசாசுகள், உங்கள் அழகு ரத்தம், சதைகளால், ஆனது என்பதைத் தவிர அதற்கு வேறொரு அர்த்தமும் இல்லை’ என்று சொல்லக்கூடிய பக்குவம் அவனுக்கு வந்துவிடுமா?

மோக லாகிரியில் மூச்சுத் திணறும் பருவத்தில், தாகமே எடுக்காத சத்துவ குண மனிதனாக அவன் மாறிவிட முடியுமா? அப்படி ஒருவேளை அறைக்குள்ளே போட்டுப் பூட்டி வைத்தாலும்கூட, அவன் அறைக்கதவுகளை உடைத்துக்கொண்டு ஓடவே   விரும்புவான்.

உலகத்தையும், உடம்பையும் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு கொண்ட ஒருவனுக்கே சத்துவ குணம் கைகூடும். இது ஒரு பெரிய விஷயம். இதைப்பற்றி மிகப் பெரியவர்கள் பலரும் பேசி இருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். சொல்லப் போனால் ‘தாமரை இலைத் தண்ணீர்போல் ஒட்டாமல் வாழ்வது’ என்று நீண்டகாலமாக தமிழிலும் வடமொழியிலும் கூறப்பட்டு வருகிறதே, அது இதுதான்.

காஞ்சிப் பெரியவர்க்கு நீங்கள் காமத்தை ஊட்டிவிட முடியாது; கோபத்தை உண்டாக்க முடியாது. பெண்கள் தன்னைப் பார்க்க வரும்போது அவருக்குக் காமாட்சியின் சொரூபம் தெரியுமே தவிர, அவர்களது மோகன அழகு புலப்படாது.

இப்படிப் புலன்களை ஒடுக்கி, எல்லாப் பொருட்களின்  தகுதியும் தனக்குக் கீழேதான் என்று வைத்துக்கொண்டவர்கள் கோடியில் ஒருவராக மட்டுமே, ஞானிகளாக உலகத்தில் திகழ்ந்திருக்கிறார்கள். உடம்புக்குத் தனித்து இயங்கும் சக்தி உண்டு. மனத்தை அது கசக்கிப் பிழியும். போகக்கூடாத இடத்துக்கெல்லாம் அது போகச்சொல்லும். செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் அது செய்யச்சொல்லும். ஈடுபடக்கூடாத
விஷயங்களிலெல்லாம் ஈடுபடச் சொல்லும்.

உடம்பு சரியாக இருந்தால் மனதும்  செழிப்பாக இருக்கும். உடம்பு தளர்ந்து போனால், மனதும் தளர்ந்து போகும். உடம்பு ஓடினால், மனதும் ஓடும்.
உடம்பு படுத்தால், மனதும் படுக்கும். மனத்தின் செழுமையான வடிவமே ஆன்மா. உடம்புக்கு ஆன்மாவின் மீது அவ்வளவு ஆதிக்கம் இருக்கிறது.
இந்த ஆதிக்கத்தைப் பிரித்தெடுத்தவனுக்குப் பெயரே சாது; அவனே சாத்வீகக் குணம் படைத்தவன்.

‘இந்தப் பெண் இல்லாவிட்டால், நான் உயிரோடு வாழவே முடியாது,’ என்று கதறுகிற ஒருவனை, அவளிடமிருந்து நீங்கள் எப்படி பிரிப்பீர்கள்?
இதில் எனக்கு அனுபவம் உண்டு. அவள் என்னதான் கழிசடையாக, மோசமானவளாக இருந்தாலும், ‘அவளுக்கு மேல் உலகம் இல்லை’ என்று ஒரு போதை, ஒரு இளைஞனுக்கு ஏற்பட்டு விடுமானால் அவனை ஆண்டவனால்கூட மாற்ற முடியாது. அவனே அதில் ஈடுபட்டுச் சீரழிந்து, தட்டுத்தடுமாறி, ‘ஐயோ! போதுமடா சாமி’ என்று அலறித் திரும்பினால் தவிர, பிறர் சொல்லி அவனை மாற்ற முடியாது.

அதுபோன்றதே உடம்பிற்கும், ஆன்மாவிற்கும் உள்ள நெருக்கம். சமயங்களில் ஆன்மா தனியாகவும் வேலை செய்யும். ‘மனசாட்சி மனசாட்சி’ என்கிறோமே, அது இதுதான். உடம்புக்கு ஆன்மாவின் மீது ஆதிக்கமே இல்லாமல் அடித்தவர்கள் தான் உலகத்தை திருத்திய உத்தமர்களாக இருக்கிறார்கள்.
அவர்களின் பெயரே சாதுக்கள்: அவர்களது ஆன்மா தனித்து இயங்குவதை நமது புராண இதிகாசங்கள் கதைகளாகக் கூறுகின்றன.

‘சத்துவ’ குணம் உன்னதமானதுதான். ஆனால், இந்த சத்துவ குணம் உள்ளவன் மானிட ஜாதியிலே இருக்க வேண்டும் என்றால், இவனது பிரகாசத்தைக் குறைக்க வேண்டும்’ என்றார் வினோபாஜி. மூன்று குணங்களையுமே கடந்துவிட்டால், ஒருவன் குணங்களற்ற தெய்வீக புருஷனாகி விடுகிறான்.
எல்லாருமே தெய்வீக புருஷராகி விட்டால், சராசரி வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும்.

அதனால் ரஜோ குணத்தையும், தமோ குணத்தையும் வென்று சமத்துவ நிலைக்கு வந்திருக்கும் ஒரு மனிதனை, மனித வாழ்க்கைக்கு அடங்கிய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என்கிறார். அதற்கு அவர் உதாரணம் சொல்லும்போது, ‘கண்ணாடி விளக்கில் புகை படிந்திருந்தால் துடைக்கிறோம். அது தமோ குணம். அதில் ஒட்டி இருக்கும் ஒட்டடையை விலக்குகிறோம்; அந்த ஒட்டடையின் பெயர் ரஜோ குணம். இப்போது விளக்கு பிரகாசமாகி விட்டது. கண்களை கூசுகின்ற நிலையில் இருந்து அதை மட்டுப்படுத்த அதன்மீது வெள்ளைக் காகிதத்தைச் சுற்ற
வேண்டும்’ என்கிறார்.

சத்துவ குணம் பெற்று விட்டவன் ஆணவக்காரனாக ஆகிவிடாமல் இருப்பதற்காக, அவனது நிலையை மட்டுப்படுத்த வேண்டும் என்கிறார்.
இப்படி சத்துவ குணம் கொண்டவர்கள் உலகில் மிகவும் குறைவாக இருப்பதால், இவர்களுக்குக் கர்வம் வந்து விடுகிறதாம்.  அதனால் எல்லாருமே சத்துவ குணம் கொண்டவர்களாக ஆகிவிட வேண்டுமாம்.

அதற்கு அவர் கீழ்க்காணும் உதாரணங்களைக் கூறுகிறார்: ‘‘நாம் தினமும் தூங்குகிறோம்.  ஆனால், நம்முடைய தூக்கத்தைப் பற்றி யாரிடமாவது பெரிய விஷயமாகப் பேசுகிறோமா? இல்லை. ஒரு நோயாளிக்குப் பதினைந்து நாள் தூக்கமே வராமல் இருந்து, பிறகு சிறிது தூக்கம் வந்தால் அவன் எல்லாரிடமும் ‘நான் நேற்று நிம்மதியாகத் தூங்கினேன்’ என்கிறான். அவனுக்கு அது முக்கியமாகத் தோன்றுகிறது. இன்னொன்று சொல்கிறேன். நாம் இருபத்தி நான்கு மணி நேரமும் மூச்சு விடுகிறோம்.

ஆனால், நாம் யாரிடமாவது நானொரு மூச்சு விடும் பிராணி என்று சொல்லிக்கொள்வதுண்டா? ஹரித்துவாரத்தில் கங்கையில் எறியப்பட்ட ஒரு துரும்பு ஆயிரத்து ஐநூறு மைல் பிரயாணம் செய்து கொல்கத்தா போய் சேர்ந்தால், அது ஒன்றும் ஆச்சரியகரமானதல்ல. ஆனால் அதே கங்கையில் ஒருவன் எதிர்நீச்சல் போட்டால் அது ஒரு ரெக்கார்டு. ஆகவே, இயற்கையான விஷயங்களில் நமக்கு கர்வம் வருவதில்லை. ஒரு பெரிய நல்ல காரியம் செய்துவிடும்போது வருகிறது.’’

சத்துவ குண மனிதனுக்கு அது வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.ஆனால், மகான்கள் எல்லா உயிர்களிடத்தும் அன்பு ெசலுத்துவதால், இந்த சத்துவ குணம் அவர்களைக் கர்விகளாக்குவதில்லை. மக்கள் அவர்களை மொய்த்துக் கொள்கிறார்கள்.

மகான்கள் தங்கள் உடலைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; ஆனால், மக்கள் அவர்களது உடலைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். காரணம், அவர்கள் ஆன்மாவையும், உடலையும் முழுக்கப் பிரிந்து விட்டவர்கள். அப்படிப்பட்டவர்களிடம் ஆணவம் நெருங்காது. சத்துவ குணம் பெற்றவன் அந்த நிலையை நெருங்க வேண்டும்.

அடுத்தவன் ‘ரஜோ குண’ மனிதன். நாம் பெரும்பாலும் இந்த வகையினரே. எதிலும் ‘நான்’, என்று அலைகின்ற புத்தி இந்த ரஜோ குணத்துக்கு உண்டு.
‘கண்ணாடியில் முகம் தெரிந்தால் மட்டும் போதாது, உடலும் தெரிய வேண்டும்’ என்று கருதும்! அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சொன்னதுபோல, குழந்தை பிறந்த வீட்டுக்குப் போனால், ‘தானே குழந்தையாக இருக்க வேண்டும்’ என்று கருதும்.

திருமண வீட்டுக்குப் போனால், ‘தானே மாப்பிள்ளையாக இருக்கக் கூடாதா?’ என்று ஏங்கும். செத்த வீட்டுக்குப் போனால், ‘தானே பிணமாக இருக்கக் கூடாதா’  என்று ஆசைப்படும். புகழ், பொருள், பதவி எது கிடைத்தாலும் அது தனக்கென்று நினைக்கும். அதிசயமான பாதைகள், ஆச்சரியமான நடத்தைகள், ஆசை மயமான கர்மங்கள் இவையே ரஜோ குணம். ரயிலில் திருச்சிக்குப் போனால் நேரம் ஆகுமே என்று காரில் போக ஆசைப்படும்.
காரில் ஐந்துமணி நேரமாகிறதே என்று விமானத்தில் போக விருப்பம் கொள்ளும்.

நாளாக நாளாக விமானத்தின் ஒரு மணி நேரப் பயணம்கூட அதற்குப் ‘போர’டிக்கும். வினோபாஜி சொன்னதுபோல், மலையைத் தூக்கி கடலை மூடச் சொல்லும்; கடல் தண்ணீரைக் கொண்டுபோய் சகாரா பாலைவனத்தைக் கடலாக மாற்றச் சொல்லும். இந்த ரஜோ குணம் கொண்டவனின் ஆசையிலேதான் உலகத்தின் பலவித இன்ப துன்பங்கள் உற்பத்தியாயின. தங்கத்திற்கும் வைரத்திற்கும் மரியாதை அளித்தவன் இவன்தான். ஏராளமான நிலப்பரப்பிற்குச் சொந்தம் கொண்டாடுவது என்ற எண்ணத்தை உண்டாக்கியவன் இவன்தான். அழகான பெண்ணுக்கு வலை வீசும் சுபாவம் இவனாலேயே பிறந்தது.

முத்துகளை மாலையாகக் கட்டி அணியும் பழக்கத்தை இவன் உண்டாக்காமல் இருந்திருந்தால், முத்து என்பது இவன் குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாக இருந்திருக்கும். இவனது சுயதர்மம் என்பதே, இவனுடைய விருப்பங்களின் இயக்கம்தான். பிறரைக் காப்பாற்றுவதே தனது சுயதர்மம் என்று எண்ணத்தொடங்கும்போது, இவனுக்கு சத்துவ குணம் வந்துவிடும். ரஜோ குணத்தின் உச்சியில் இருப்பவன் சுயதர்மத்தைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத ஜடம். மனைவி மாதவிலக்காகி இருந்தாலும், தனக்கு ஆசை வந்துவிட்டால், மஞ்சத்துக்கு வந்தாக வேண்டும் என்று கருதுபவன்.

‘தனக்கு எது பிடிக்கிறதோ அது மற்றவர்களுக்கும் பிடிக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் தன்னோடு இருக்க முடியாது’ என்று நினைப்பவன்.
இவனது தேவைகள் மறுக்கப்பட்டு, இவனது பாதைகள் வெறுக்கப்பட்டு, இவனது செயல்களுக்கு வழியில்லாமற்போய் இவன் தளரும்போது, சத்துவ குணத்தின் நிழல் இவன்மீது படிகிறது. இந்த குணம் ஹிட்லருக்கும், முஸோலினிக்கும் மட்டும் இருந்ததில்லை! கருப்பூர் கணக்குப்பிள்ளையையும், பஞ்சாயத்து யூனியன் தலைவரையும்கூட விடுவதில்லை.

மேலே நான் சொல்லி இருப்பது ரஜோ குணத்தின் உச்சக்கட்ட வெறி. ஆனால், இதுவே நியாயமாக இருக்குமானால் இதுதான் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான குணம். உலக இயக்கமே இந்தக் குணத்தின் மூலமே இயங்குகிறது. சத்துவ குணம் உலக இயக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.

ரஜோ குணம்தான் அதை இயக்குகிறது. குடியிருக்க ஒரு சிறு வீடு. குடும்பம் நடத்த அன்பான மனைவி. தேவைக்கேற்ற வசதி. சக்திக்கேற்ற உழைப்பு. ஆசைப்படுவதை நியாயமாக அனுபவிப்பது. அடுத்தவனுக்கு இடையூறில்லாமல் அனுபவிப்பது. வீட்டுக்கோ, நாட்டுக்கோ தன் கடமையைச் செய்வது என்று சுயதர்மத்திற்கு ஒரு வரம்பு வைத்துக்கொண்டு வாழ்வது -  இப்படி வாழ்கின்ற ரஜோ குண மனிதன், உலக  இயக்கத்தின் தூணாகி விடுகிறான்.

ரஜோ குணத்தின் மூன்றாவது படி, ஆசைப்படுவது; அடைய முடியாமல் தடுமாறுவது. இது போய்ச்சேரும் இடமே, தமோ குணம். ‘கடை விரித்தோம் கொள்வாரில்லை’ என்று கசந்து ஞானம் பெற்றவனாக மாறினால், அவன் சத்துவ குணத்துக்குப் போகிறான்.

‘கிடைத்தவரை சரி’ என்று அனுபவிப்பவனாக இருந்தால், அவன் தமோ குணத்துக்குத் தள்ளப்படுகிறான்.எங்கே எது கிடைத்தாலும் சாப்பிட்டு விட்டுத் தூங்க ஆரம்பிக்கிறான்.

தனக்கென்று பொறுப்போ, கடமையோ  அற்றவனாக ஆகிவிடுகிறான்.
வினோபாஜி சொல்வதுபோல் தமோ குணம் சிலரை ரஜோ குணத்துக்குத் தள்ளுகிறது; ரஜோ குணம் சிலரை தமோ குணத்துக்குத் தள்ளுகிறது.சோம்பல் நிறைந்தவனும், சுயதர்மம் அற்றவனும், வெந்ததைத் தின்று விதி முடிந்தால் சாகிறவனும் தமோ குணவாசிகள்.யாருடைய வேட்டியையும் எடுத்துக் கட்டிக்கொள்வான்.

பெட்டியை எங்காவது வைத்துவிட்டு  எங்காவது சுற்றுவான். நாறிப்போன பண்டங்களில் நாட்டம் கொள்வான். வாழைப்பழத்தை உரிப்பதற்குக்கூட யாருடைய ஒத்தாசையாவது நாடுவான். இந்த தமோ குணத்தவனைத் திருத்துவதற்கு ஒரேவழி ‘இடைவிடாமல் அவனுக்கு வேலை சொல்லிக்கொண்டிருப்பதுதான்’ என்கிறார் வினோபாஜி. அவனை உட்கார விடாமல் வேலை வாங்கினால் அவனுடைய தமோ குணம் விலகிவிடும்.முடிவாக இம்மூன்று குணங்களில் நாம் யாராக இருக்க வேண்டும்?

ஒன்று. ஆணவமற்ற சத்துவ குணம் வேண்டும். இல்லையேல், நியாயமான ரஜோ குணம் வேண்டும். இன்றைய நாகரிகப் பரபரப்பில் நூற்றுக்குத்தொண்ணூற்று ஒன்பது பேர், சத்துவ குணத்துக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள்.

ஆகவே, அளந்து வாழ்ந்து ஒரு வரம்போடு சுயதர்மத்தை நிறைவேற்றும் ரஜோ குண மனிதர்களாகக்தான் நாம்  வாழ முடியும். முன்பு பாண்டிய நாட்டுக்கு ஒரு ராஜாதான் இருந்தான்.பின்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் இருநூறு பாளையக்காரர்கள் இருந்தார்களே! வரம்பு கட்டப்பட்ட சுகமான வாழ்க்கையே ரஜோ குணத்தவனின் நியாயமான  வாழ்க்கையாகும்.

(தொடரும்)
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,
சென்னை - 600 017.