முக்திப் பலனளிக்கும் புண்ணிய தீர்த்தங்கள்!




ஊனுடம்பு ஆலயமதில் வாழும் உயிர்
உள்ளமதை தெய்வமாய் போற்றி
உண்மையாய் நாளும் சுத்தமாய் பேணும்
கடமை மனிதருக்கு உண்டு -ஆகையால்
நீராடு நீராடு நதிசேரும் புண்ணிய
தீர்த்தம் தேடி நீராடு!
அன்பெனும் ஆற்றில் குளித்து
அகந்தை அழுக்கு நீக்கி -மனதை
பக்தி மலரால் ரசித்து அலங்கரித்து
அறிவெனும் பொட்டிட்டு ஆராதிப்போம்!
தண்ணீருக்கும் தன்னை அறிந்தவருக்கும்
தீட்டு என்பதே இல்லை உணர்வாய்!
பன்னிரண்டு ஆண்டொக்கொரு முறை
கங்கை கரையில் கும்பமேளா விழாக்கோலம்!
குடந்தையில் மாசி மகாமக கொண்டாட்டம்!
திருமறைக்காட்டில் மகோதய தீர்த்த நீராடி
தீராத பாவங்கள் தீர்த்து மேம்படுவோம்!
திடமான உடலும், தெளிந்த மனம்பெறுவோம்!
மூன்றரைகோடி தீர்த்தங்களின் அதிபதி                         
பிரம்மனது
முத்திரை கையிலுள்ள புஷ்கரணி கமண்டலம்!
கமண்டலத்தில் உறையும் நீரான புஷ்கரம்
உயிர்களின் தாகம் தீர்க்கும் அருமருந்து!
குருவின் அருளால் மிருகண்டு முனிவர்
புஷ்கரம் பெற்று முக்தி அடைந்தார்!
குரு பெயர்ச்சியாகி ராசியில் வாழுங்காலம்
புஷ்கரம் நதிகளில் ஈராறு நாள் கலந்து
பூமியில் தெய்வ அதிர்வை சேர்க்குமந்த
புனித நீரை தழுவி வளம் பெறுவோம்!
பூமண நற்சிந்தையால் மனதை நீராட்டி
புஷ்கரம் செய்து நலம் பெறுவோம்!
கங்கையில் மூழ்கி முக்தி அடைவோம்!
காவிரியில் நீராடி பிறவிக்கடன்                    
தொலைப்போம்!
கோதாவரியை வணங்கி நல்லெண்ணம்   வளர்ப்போம்!
கிருஷ்ணாவில் உருகி கண்ணீரை கரைப்போம்!
ராமேஸ்வர தீர்த்தமாடி முன்னோர் ஆசிபெறுவோம்!
வசதியில்லாதோர் வான்மழை தேவரை  துதிப்போம்!
உடலும், உள்ளமும் குளிர நீராடி
உயர் குணத்தான் பாதம் சரணடைந்து
தியாகம், உதவி வழக்கமான வாழ்வாக்கி
திருப்திய டைந்து ஆனந்தத்தில் குளித்தால்
பூமி வைகுண்டம், வாழ்வு சொர்க்கம்
வாசல் வந்து காத்திருக்கும் தெய்வம்!