திக்கெல்லாம் நலம் அருளும் திருநெல்வேலி நெல்லையப்பர்



நெல்லையப்பர் கோவில் சிறப்பு வாய்ந்த சந்நதிகளை தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற கோயிலாகும். இதோ அந்த ஒப்புயர்வற்ற, அற்புதமான சந்நிதிகள்: மூலமகாலிங்க சந்நதி, மார்பில் சிவலிங்கம் தரித்த கோவிந்தர் சந்நதி, குபேரலிங்க சந்நதி, சனகாதி முனிவர்களுடன் அகத்தியர், கபிலர் ஆகியோர் அமர்ந்திருக்க அவர்களுக்கு ஞானம் அருளும் ஞானானந்த தட்சணாமூர்த்தி சந்நதி.

120 ஆண்டுகள் வாழ்ந்த அமாவாசை பரதேசி என்னும் சித்தரால் வழிபடப்பட்ட, எங்கிருந்து பார்த்தாலும் நேரடி முக தரிசனம் காட்டும் ஆறுமுக நயினார் சந்நதி, குருத்தலமாம் திருச்செந்தூருக்கு இணையாக கால் மாற்றி அமர்ந்து, சின்முத்திரையுடன் வள்ளி, தெய்வானைக்கு ஞானம் வழங்கும் குருமுருகன் சந்நதி, காய்ச்சல் முதலான நோய்களை குணப்படுத்தும் மூன்று முகம், மூன்று கால்கள், மூன்று கரங்கள் கொண்ட சுரதேவர் சந்நதி, குழந்தைப்பேறு அருளும் பிள்ளைத்தொண்டு பாதையுடன் கூடிய பொள்ளாப்பிள்ளையார் சந்நதி, மகிஷாசுரமர்த்தினி, மஞ்சன வடிவம்மன் (பண்டாசுர மர்த்தினி) சந்நதி, பொற்றாமரைக் கரையிலுள்ள சரஸ்வதி அம்மன் சந்நதி,தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய கீர்த்தியுடைய கங்காளநாதரின் பிச்சாடன மூர்த்தி கோலம்.

மன்னர்களின் கைங்கர்யங்கள்


இத்திருக்கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் பல மிகவும் பழமையானவை. அவை வட்டெழுத்து, கிரந்தம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பழமையானது, சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி. 946 - 966) என்ற பாண்டிய மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு பற்றிய கல்வெட்டு ஆகும்.

முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012 - 1044), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 - 1120) போன்ற சோழ மன்னர்களும், இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1190 - 1267) என்கிற பாண்டிய மன்னரும், சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244), விக்கிரம பாண்டியன் (கி.பி. 1250 - 1276) வீரசோமேஸ்வரன் (கி.பி. 1238 - 1258), இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251), இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1258 - 1265), முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1258 - 1308) ஆகியோருடைய கல்வெட்டுகள் இக்கோயிலின் பழமையையும் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இக்கோயிலுக்கு திருச்சுற்று மதில் எழுப்பியது முதலாம் மாறவர்மன் குலசேகரன். ‘முந்திகோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன்’ என்பவர் இக்கோயிலில் மிகவும் விசேஷமான பொள்ளாப் பிள்ளையார் சந்நதியை உருவாக்கியவர். பராக்கிரம பாண்டியன், வேணுவனநாதர் எனும் பெயர் இடம்பெற்ற முதல் கல்வெட்டை உருவாக்கியவர். வீரசங்கிலி மார்த்தண்டவர்மன் என்பவர்  கி.பி. 1546 ம் ஆண்டு இசைத்தூண் மண்டபத்தினை உருவாக்கினார். இத்தகைய தொன்மை வாய்ந்தது, நெல்லையப்பர் ஆலயம்.

புராணங்கள் சொல்வது என்ன?


திருநெல்வேலி தலம் மிகவும் விசேஷமானது. அம்மை, தான் படைத்த உலகத்தைக் காத்தருளும் பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றினாள்.  அதன்படி இறைவன் காட்சி கண்டு, அவரது அருளை உலகமனைத்தும் பெறும்படிச் செய்தது  இந்தத் தலத்தில்தான்.இதற்காக அம்மையார் கயிலாய மலையிலிருந்து நெல்லை மாநகரை அடைந்து, முப்பத்திரண்டு அறங்களை வளர்த்து, கம்பை நதியின் அருகில் தவமிருந்து, நெல்லையப்பரை தரிசித்தாள்.

இத்தலத்தில்தான்அகத்தியர், சிவ-சக்தியின் திருமணக்காட்சியை கண்டு பேருவகை கொண்டார். இத்தகைய புராண சிறப்புகள் கொண்ட இக்கோயில், நெல்லை மாநகரில், மேற்கு திசையிலிருந்து கம்பாநதி உள்ளே நுழையுமிடத்தில் அமைந்த சிவன் கோயில் எனப் போற்றப்படுகிறது. வேதசர்மா எனும் அந்தணர், சிவனுக்குப் படைக்க ஊர் ஊராகச் சென்று சேகரித்த நெல்மணிகளை தம் இல்லத்தருகே தரையில் உலர்த்தியிருந்தார். அப்போது எதிர்பாராதவகையில் பெருமழை பெய்தது. அந்த மழையில் நெல்மணிகள் அடித்து சென்றுவிடுமோ, இறைவனுக்கு நிவேதனம் படைக்க இயலாதோ என வருந்தி, அந்த  இறைவனையே வேண்டி நின்றார் வேதசர்மா.

அவருடைய பக்திக்கு உளங்கனிந்த ஈசன், மழைநீர் அந்த நெல்லை அடித்துக்கொண்டு போய்விடாதபடி, அந்தப் பகுதியைச் சுற்றிலும் வேலி அமைத்தார். இவ்வாறு வேலியாக நின்று காத்தமையால் ‘நெல்வேலி நாதன்’ எனப்பெயர் பெற்றார். இத்திருவிளையாடல் நடைபெற்ற இத்தலத்திற்கும் திரு+நெல்+வேலி என்னும் பெயர் வந்தது.நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் வேண்டின. அதன்படி அவை, இந்த ஆலயப் பகுதியில் மூங்கிலாய் துளிர்த்து ஓங்கி வளர்ந்தன.

இறைவன் அவற்றினடியில் லிங்கமாய் அமர்ந்திருந்தான். இவ்வாறு பல்லாண்டு காலமாய் அங்கே வீற்றிருந்த பெருமான், தான் வெளிவர, அனைவருக்கும் அற்புதங்கள் அருள ஒரு திருவிளையாடலைப் புரிந்தார்.  இந்த மூங்கில் காட்டினூடே தினமும் அரண்மனைக்கு  பாற்குடம் சுமந்து சென்றான் இராமக்கோன். அவன் இந்த இடத்தினை கடக்கும் மூங்கில் முளையால் அவன் காலை இடறவைத்து, அதனால் அவன் தடுமாற, பாற்குடம் கவிழ்ந்து, பாலைத் தன்மேல் அபிஷேகமாகப் பொழியச் செய்தார். ஒருநாளல்ல, இரண்டு நாளல்ல, தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு பாற்குடம் கவிழ்வதைக் கண்டு கோபமுற்ற இராமக்கோன், கோடாரியால் அந்த மூங்கில் முளையை வெட்ட, உடனே அங்கிருந்து ரத்தம் பீறிட்டது.

அதிர்ந்து போன அவன் அரண்மனைக்குச் சென்று அரசனிடம் தகவல் கூற, மன்னன் ராமபாண்டியன் சம்பவ இடத்திற்கு வர, அங்கே சிவபெருமான் லிங்கமாக தோன்றினார். அதைக் கண்டு பக்தியால் பரவசப்பட்டான் மன்னன். உடனே அவருக்கு அங்கேயே கோவில் உருவாக்க ஆவன செய்தான். வேணு (மூங்கில்)வனத்தில் கிடைத்ததால் இறைவன் வேணுவனநாதர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு இறைவனை லிங்கரூபமாக முழுமையாக தரிசித்து அவருக்கு உகந்ததோர் ஆலயமும் நிர்மாணித்ததால், மன்னன் ராமபாண்டியன், ‘முழுதும் கண்ட ராமபாண்டியன்’ என பாராட்டப்பெற்றான்.

ஸ்வேதகேது என்ற அரசன் நெல்லையம்பதியை ஆண்டு வந்தான்.  நெல்லையப்பர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட அவன், அனுதினமும் நெல்லையப்பரைப் பூஜித்து வந்தான். வாரிசு இல்லாத அவனுக்கு அந்திமக்காலம் நெருங்கியது.  அதை உணர்ந்த மன்னன் ஆலயத்திலே அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான். அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள பாசக்கயிறை வீசினான். மன்னன் இறைவனே தஞ்சம் என்பதாக, அந்த சிவலிங்கத்தை அணைத்துக்கொள்ள, பாசக்கயிறு, அரசனோடு இறைவன்  மீதும் விழுந்தது. உடனே வெகுண்டு காலனைக் காலால்  உதைத்தார் இறைவன். அதோடு அரசனிடம், ‘மனம் வருந்தாதே, நீ எப்போது விரும்புகிறாயோ அப்போது இவ்வுலகம் துறந்து கயிலாயத்தில் என்னை அடையலாம்,’ என்று அருள்பாலித்தார். எனவே இந்த இறைவனை வணங்குவோருக்கு முக்தி நிச்சயம்.

எத்தனைப் பெயர்கள்!


இங்குள்ள இறைவன்,  சுவாமி நெல்லையப்பர்,  இறைவி காந்திமதி அம்மன். பொற்றாமரைக் குளம் (சுவர்ணபுஷ்கரணி), கரிஉருமாறி தீர்த்தம், வெளித் தெப்பக்குளம் (சந்திரபுஷ்கரணி) ஆகியன இக்கோயிலின் தீர்த்தங்களாகும். தலவிருட்சம், மூங்கில். இங்குள்ள இசைக்கருவி, சாரங்கி ஆகும்.இத்திருத்தலத்திற்கான புராணப் பெயர்கள் அனைத்துமே சிறப்பு பெற்றவை. இவன் அம்மையோடு இங்கு வந்து உகந்து வீற்றிருப்பதால் ‘பேர்அண்டம்’. ஊழிக்கால முடிவில் எல்லாம் அழிந்தாலும் இத்தலம் மட்டும் அழியாது என்பதால், ‘அனவரதம்’.

ஐந்தெழுத்து ஓசை எங்கும் நிறைந்திருப்பதாலும், மேலான நற்கதி அருள்வதாலும் ‘தென்காஞ்சி.’அம்பிகை தவம் செய்தும், சிவத்தை பூஜித்தும், இறைவனை மணமுடித்ததாலும், ‘சிவபுரம்’. பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் இங்கு வந்து வணங்கி மகிழ்வதால் ‘திருமூர்த்திபுரம்’. இந்திரனின் யானையான ஐராவதம் யானை வந்து வணங்குவதால், ‘இபபுரி’.திருமால் ஆமை வடிவத்தில் இங்கு சிவபூஜை செய்ததால் ‘கச்சபாலயம்’.பிரம்மன் தினமும் சிவபூஜை இயற்றுவதால், ‘பிரம்மபுரம்’.மேலான தர்மங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ‘தரணிசாரம்’.

பிரம்மனுக்கு விஷ்ணு இங்கு அருள் புரிந்ததால் ‘விண்டுதலம்’.இறைவனை வேண்டி, தவமிருந்த காமாட்சி அருளுவதால், ‘காமகோட்டம்’.சகல சித்திகளையும் அளிக்கவல்ல தலம் என்பதால் ‘சித்தித் தலம்’. தவிர வேணுவனம், நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்றெல்லாமும் இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது.

மாதாந்திர வழிபாடுகள்


இத்திருக்கோயிலில் பன்னிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் வசந்த மகோற்சவம், பதினொறு தினங்கள்; வைகாசி மாதம் விசாகத் திருநாள்; ஆனி மாதம் பிரம்மோற்சவம், ஆனி பெருந்தேர்த் திருவிழா, பத்து   தினங்கள் (இத்தேர்த்திருவிழாவைக் காண பல மாநிலங்களிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள். நான்கு ரதவீதிகளில் தேர் மெல்ல அசைந்துவரும் காட்சியைக் கண்டு அவர்கள் பரவசமடைவது வழக்கம்); ஆடிமாதம் பூரத்திருநாள் பத்து தினங்கள்; ஆவணி மாதம் மூலத் திருநாள் பதினொரு தினங்கள்; புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, லட்சார்ச்சனையுடன், பதினைந்து தினங்கள்; ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் உற்சவம் 15 நாட்கள்;கார்த்திகை மாதம் கார்த்திகை தீப திருவிழாவும்,  சோமவாரத் திருவிழாவும்; மார்கழி மாதம் பத்து தினங்கள் திருவாதிரை விழா; தை மாதம் பத்து தினங்கள் திருவாதிரை திருவிழா; மாசி மாதம் மகாசிவராத்திரி  திருவிழா; பங்குனி மாதம் உத்திரத் திருநாள் 10 தினங்கள்.

நித்திய பூஜை

கோயிலில் அம்மன் சந்நதியில் முதல் பூஜையும், அதன் பிறகு சுவாமி சந்நதியில் மறு பூஜையும் நடைபெறும்.  அம்மன் சந்நதியில் திருவனந்தல் காலை 6 மணிக்கும், விளா பூஜை காலை 7 மணிக்கும், சிறுகாலசந்தி பூஜை காலை 8 மணிக்கும், காலசந்தி பூஜை  காலை 9 மணிக்கும், உச்சிகால பூஜை பகல் 12.30 மணிக்கும்,  சாயரட்சை பூஜை மாலை 5.30 மணிக்கும், அர்த்தசாம பூஜை இரவு 8.15க்கும்  நடைபெறுகின்றன. சுவாமி சந்நதியில் அம்மன் சந்நதியில் பூஜை நடந்து, அரை மணிநேரம் கழித்து 7 கால பூஜைகளும் நடைபெறும்.நெல்லையப்பர் ஆலயத்தில் சொர்க்க தீபாராதனை இரவு- 8.40 மணிக்கும், பைரவர் பூஜை இரவு 9.30 மணிக்கும்,  பள்ளியறை பூஜை இரவு 9 மணிக்கும் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன.

கலைச்சிறப்பு

தமிழகத்தின் பெருங்கோவில்களில் ஒன்றாக நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவிலை, ‘சிற்பக் கலையின் சிகரம்’ என்றே  போற்றலாம். 5 கோபுரங்களோடு விளங்குகிறது இந்த பிரமாண்டம்.  நெல்லை நகரத்தின் நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட பரந்த பகுதியாகத் திகழ்கிறது கோவில்.  இறைவன் சந்நதி கோபுரத்தை விட இறைவி சந்நதி கோபுரம் அழகு வாய்ந்தது. கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை தீர்த்தக் கரையில் நின்றுகொண்டு இறைவி கோபுரத்தைப் பார்த்தால் அதன் கம்பீரம் நன்றாகப் புரியும். இந்த தீர்த்தத்தில் இறைவன் நீர் வடிவமாகவும், பிரம்மன் பொன்மலராகவும் பூத்துள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர்.  

நாயக்கர் கால சிற்பங்கள் மகாமண்டபத்தில் அமைந்துள்ளன. வீரபத்திரன், அர்ஜுனன், பகடை ராஜா முதலியோர் வாயிலை ஒட்டி நெடிதுயர்ந்து பக்தர்களை வரவேற்கிறார்கள். வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாக குழந்தையை ஏந்தியபடி தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள். மேலும் சேவல் சண்டை, பிராகார விதானத்தில் செதுக்கப்பட்டுள்ள 12 ராசிகளின் சக்கரம்  என அனைத்துமே பிரமிக்கச் செய்கின்றன.  தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ரதி, மன்மதன் சிற்பங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. தாமிரசபையில் இறைவனின் திருநடனத்தை தேவர்கள் தரிசிக்கும் மரச் சிற்பங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

சுவாமி சந்நதியின் மேல் பக்கமுள்ள சந்நதியில் ஆறுமுகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருக்கிறார். மொத்தமும் ஒரே கல்லில் ஆன சிலை என்பது பிரமிக்கவைக்கும் தகவல். ஆறுதிருமுகங்களையும் வலம் வந்து ஒவ்வொன்றாக தரிசிக்கலாம். எந்த திசையிலிருந்து பார்த்தாலும் அவர் முகத்தை தரிசிக்க முடிவது நெஞ்சிற்கு நிறைவை அளிப்பதாகும். சந்நதி முன்பு, மகாமண்டபத் தரையில் ‘பசுவந்தனை பிச்சாண்டி அண்ணாவி’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட தாளச்சக்கரம் அமைந்துள்ளது. இதனைத் தொட்டுத், தொழுது இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகள் வளர அருளாசி பெறுகிறார்கள். அறுபத்துமூவர் சந்நதியில் ராவணன், கயிலை மலையைப் பெயர்க்கும் காட்சி, யாழ் இசைக்கும் காட்சி எல்லாம் தத்ரூபமாகத் திகழ்கின்றன. சுவாமி சந்நதி மணிமண்டப வடக்குப் படியின் மேல்பக்கச் சுவரில் ராவணன் மலை பெயர்த்தபோது அம்பிகை பயந்து சுவாமியைத் தழுவிக்கொள்வது போன்ற சிற்பம் அதி அற்புதம்.

கோயில் மண்டபங்கள்


ஆயிரங்கால் மண்டபம், பெயருக்கெற்ப 1000 தூண்களைக் கொண்டது. இங்கு தான் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இம்மண்டபம் 520 அடி நீளம் 63 அடி அகலமுடையது. பங்குனி உத்திரத்தன்று செங்கோல் கொடுத்தல் நிகழ்ச்சி இம்மண்டபத்தில்தான் நடைபெறும். இம்மண்டபத்திலுள்ள உச்சிஷ்ட கணபதி சந்நதி குறிப்பிடத்தக்கது. ஐப்பசித் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்தை, கீழே ஆமை ஒன்று தாங்கியிருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூசிப்பதாய் ஐதீகம்.

ஊஞ்சல் மண்டபம், 96 தத்துவங்களைத் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களைக் கொண்டிருக்கிறது. திருக்கல்யாண வைபவம் முடிந்தபின் சுவாமி-அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும் ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இங்கு நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் கவினுற செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஊஞ்சல் மண்டபத்தை சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கி.பி.1635ல் கட்டியிருக்கிறார். சோமவார மண்டபம், சுவாமி கோயிலின் வடபக்கம் காணப்படுகிறது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு இங்கே சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தற்பொழுது நவராத்திரியை ஒட்டியும் இங்கு பூஜை மேற்கொள்ளப்படுகிறது. 78 தூண்களையுடைய பெரிய மண்டபம் இது.

சங்கிலி மண்டபம், பெயருக்கேற்றார்போல சுவாமி கோவிலையும், அம்மன் கோவிலையும் இணைக்கிறது. 1647ல் வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இம்மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் உள்பட பல சிற்பங்கள் நெஞ்சை கொள்ளைக்கொள்கின்றன. சுவாமி கோவிலுக்கு முன்னால் மணி மண்டபம் காணப்படுகிறது. இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குகிறது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது. இங்கே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, சிறு சிறு தூண்களைக் கொண்ட பெரிய தூண்களைக் காணலாம். ஒவ்வொரு சிறிய தூணையும் தட்டினால் ஒவ்வொரு சங்கீத ஸ்வரம் ஒலிக்கும்!  இவ்வகையில் மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்டது இதுவே.

நூறு தூண்களைக் கொண்ட வசந்த மண்டபத்தில் கோடைக் காலத்தில் வசந்தவிழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்தச் சோலைவனம் 1756ல் திருவேங்கிட கிருஷ்ணமுதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது. சேரகுளம் பிறவிப் பெருமாள் பிள்ளையவர்களால் கட்டப்பட்டது, சிந்துபூந்துறைத் தீர்த்த மண்டபம். இம்மண்டபம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  முக்கியமான  தீர்த்தவாரிகள் அனைத்தும் இங்கு நடைபெறுகின்றன. இதனைத் ‘தைப்பூச மண்டபம்’ என்பர்.

பெரிய தேர்


திருவிழாக்கள் தோறும் சுவாமியும், அம்பாளும் எழுந்தருள்வதற்காகப் பல வாகனங்களும் வேறெந்த கோவிலிலும் இல்லாதவகையில் இங்கே நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய தேரைக் கொண்ட கோவில் என்ற சிறப்பும் உண்டு. 1505ம் ஆண்டில் இந்தத் தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்தத் தேரோடும் வீதிகள், அரியநாயக முதலியாரால்  உருவாக்கப்பட்டவை.  பெரிய தேர் எடை 450 டன். பஞ்ச மூர்த்திகளுக்கும் தேர் உண்டு. மாதாந்திர திருவிழாக்கள் தோறும் செப்புத்தேர் பவனிவருகிறது. தமிழ்நாட்டிலேயே வேறெந்த திருத்தேரிலும் காண இயலாத ஆயிரக்கணக்கான அற்புத மரச்சிற்பங்கள் கொண்ட அம்மன் தேர் கொண்ட பெருமை இக்கோவிலுக்கு உண்டு.

தாமிர சபை

அருள்மிகு காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோவிலில் தாமிர சபை குறிப்பிடத் தகுந்தது. சிதம்பரத்தில் பொற்சபை - ஆனந்தத் தாண்டவம், திருவாலங்காட்டில் ரத்ன சபை - ஊர்த்துவ தாண்டவம், மதுரையில் வெள்ளியம்பலம் - சுந்தரத் தாண்டவம், திருக்குற்றாலத்தில் சித்திர சபை - அசபா தாண்டவம் என நடனம் புரிந்த எம்பெருமான் நடராஜர், திருநெல்வேலி தாமிர சபையில் ‘பிரம்ம தாண்டவம்’ எனப்படும் ‘ஞானமா நடனம்’ ஆடுவதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த சபையில், உற்சவ மூர்த்தி தாமிர சபாபதி என்றும் மூலவர் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர் பெருமானின் ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்’ என்கிற பாடலுக்கு இலக்கணமான அக்னி சபாபதி என்கிற மற்றொரு அழகிய உற்சவ நடராஜர் சந்நதியும் இக்கோயிலில் காணவேண்டிய ஒன்றாகும். திருவாதிரைப் பெருவிழாவில் தாமிரசபையில் ஈசன் நடனமாடும் போது சபையின் இரு பக்கங்களிலும் அறுபத்துமூவருடன் காந்திமதி அன்னையும் நின்று அத்திருக்கூத்தை ரசிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

தனிச் சிறப்புகள்

இக்கோயிலுக்குப் பல தனிச்சிறப்புகள் உள்ளன.  திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. வேணுவனநாதர், நெல்லை கோவிந்தர் என்ற இரட்டைக் கருவறைகள் கொண்டது. முத்துசாமி தீட்சிதர் இத்திருத்தலத்து இறைவியை  சிறப்பாக பாடியுள்ளார்.  ஹேமாவதி ராகத்தில் அமையப்பெற்ற இந்த பாடல், ‘ஸ்ரீகாந்திமதிம்’ என ஆரம்பிக்கிறது.

வருடா வருடம் தை அமாவாசையன்று பத்ரதீபமும் நடைபெறுகிறது. இதில் பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஆறாண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது.

பித்ருகர்மா என்னும்  நீத்தார் கடன்களை சரிவர நிறைவேற்றாதவர்கள் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகும் என்பது ஐதீகம்.   கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளின் முயற்சியால் இந்த நிகழ்ச்சிகள் கோவிலில் இடம்பெற்றுள்ளன.

ஆறுமுக நயினார் சந்நதியில் ‘வித்யா சக்கரம்’  நிறுவப்பட்டுள்ளது. கல்வியில் சிறந்து விளங்க, ஸ்ரீவித்யா ஹோமம் செய்ய, ஏற்ற தலம் இது.கணவன் மனைவி இடையே வேற்றுமை உருவாகாமல் இருக்கவும் இக்கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது.காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள்.

இத்திருக்கோயில் இறைவனுக்கான உச்சிகால பூஜை நிவேதனம் இறைவி சந்நதி மடப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு, அர்ச்சகர்களால் எடுத்துச்செல்லப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இறைவியே இறைவனுக்காக உணவு தயார்செய்து எடுத்துச் சென்று அளிப்பதாக ஐதீகம். பங்குனி திருவிழா நாட்களில் தினந்தோறும் மாலையில் நடைபெறும் சாயரட்சை பூஜையில் உடையவர் லிங்கம் எனப்படும் லிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளும் திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாய் வாழ்வர் என்பது ஒரு நம்பிக்கை.இது, புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலமாகும். (மேலும் விவரங்கள் அடுத்த இதழில்...)

- முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள் : பரமகுமார்.