திருநின்றவூர் ராமானுஜருக்கு சீடனான ராம அம்சம்!



பங்குனி உத்திரத்தில் உதித்த பாவை நல்லாளான திருமகளுக்கும், திருமாலுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறு பிணக்கு, நமக்கு நல்லதோர் திவ்யதேசம் அமையக் காரணமாயிருந்தது! லோக மாதாவான திருமகள், ‘என்னைப் பெற்ற தாயார்’ என சிறப்புப் பெயர் கொண்டு அருள்பாலிக்கும் இந்தத் திருத்தலம், சென்னைக்கு அருகில் அமைந்துள்ள திருநின்றவூர் ஆகும். சரணடைந்தவர்களை காக்கும் எண்ணம் கொண்டு, இங்கு அருள்பாலிக்கும் பெருமானின் திருநாமம், பத்தராவிப் பெருமான். அதாவது பக்தவத்சலப் பெருமாள்.

இத்தலத்தின் தீர்த்தம், வருண புஷ்கரணி. ஒரு தாய், தன் குழந்தை செய்த ஒரு தவறை கணவரிடம் எடுத்துக் கூறும்போது நம் குழந்தை செய்த தவறை பொருட்படுத்தாமல் அவனுக்கு அருள வேண்டும் என்று சிபாரிசு செய்து கணவனின் கோபத்தை அடக்குவது உலகியல் வழக்கம். அதுபோல இத்தலத்து நாயகியும் நமக்காகப் பெருமாளின் அருளை ஈர்த்து நமக்களித்து அருள்புரிகிறாள்.

இத்திருக்கோயிலில் பெருமாள், தாயார் சந்நதி தவிர, ஸுதர்ஷனர், ஆதிசேஷன் சந்நதிகளும் அமைந்துள்ளன. திருக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள ஏரிக்கரையில் விசேஷமாக ஓர் கோதண்டராமர் சந்நதியையும் தரிசிக்கலாம். மதுராந்தகம் ஏரிகாத்த ராமன் போன்று இவருக்கும் ஏரிகாத்த ராமர் என்ற பெயர் நிலைத்து விட்டது. ஆக, இத்தலத்தில் பிரதான மூர்த்தி - பக்தவத்சலன், பிராட்டி - என்னைப் பெற்ற தாயார் அருகே அமைந்திருக்கும் திருக்கோயிலில் கருணைக்குப் பெயர் பெற்ற கருணா காகுத்தனான ராமபிரான்.

ராமாயணம் பல சரணாகதிகளை உள்ளடக்கிய காவ்யம். திருமாலின் விபவ அவதாரம், அர்ச்சாவதாரம் ஆகிய இரு நிலைகளின் அருளை நமக்கு அளிக்கும் தலமாக விளங்குகிறது, திருநின்றவூர். இந்த கருணா காகுத்தனின் கருணையால் அவதரித்தவர் பகவத் ராமானுஜரின் முதன்மைச் சீடரான முதலியாண்டான் என்ற மகான். இவர் பகவத் ராமானுஜரின் வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்டவர். ஆமாம், ராமானுஜரின் பெரிய சகோதரியின் திருமகனார்தான் முதலியாண்டான். இவருக்கு பெற்றோர்கள் இட்ட திருநாமம் தாஸரதி, ராமன் அம்சமாக கருதப்பட்டவர்.

திருவல்லிக்கேணி பார்த்தஸாரதிப் பெருமானே ராமானுஜராக அவதரித்து அருள்பாலித்ததுபோல, திருநின்றவூரில் காட்சியளிக்கும் ராமபிரானின் அம்சமாகவே முதலியாண்டான் அவதரித்தார். இவரின் அவதார நட்சத்திரம் ராமபிரானின் திருநட்சத்திரமான புனர்வஸு. சென்னைக்கு அருகில் பூவிருந்தவல்லிக்குப் பக்கத்தில் வசித்து வந்த பூமி நாச்சியார், நாராயண தீட்சிதர் தம்பதிகள் புத்ர பாக்யம் வேண்டி திருமலைக்கு யாத்திரையாக சென்ற
போது திருநின்றவூர் அடைந்து தரிசனம் முடித்து, வருண புஷ்கரணிக்கு அருகே அமைந்துள்ள ஏரிகாத்த ராமர் திருக்கோயிலருகே ஓர் இரவு தங்கினார்கள். அப்போது அவர்கள் கனவில் இத்தலத்து ராமபிரான் தோன்றி, தாமே அவர்களுக்கு புத்திரனாக அவதரிக்கப் போவதாய் ஆசியளித்தார். அதேபோல பூவிருந்தவல்லிக்கு அருகில் நசரத்பேட்டை - வரதராஜபுரம் கிராமத்தில் வாதூல குலத்தில் ஸ்ரீமுக வருஷம் (கி.பி. 1033) சித்திரை மாதம் 8ம் நாள் இவர் அவதரித்தார். இவரே பிற்காலத்தில் ராமானுஜரின் முதல் சீடராய் விளங்கி வைணவம் வளர்த்தார்.

பகவத் ராமானுஜரின் முதல் சீடராய் விளங்கிய இவர் ராமானுஜருக்காக தமது குலப்பெருமை, வித்தையில் வித்தகர் என்ற பெருமை மற்றும் செல்வ செழிப்பின் பெருமைகளை துறந்தவர். ராமானுஜருக்கு சகலவிதத்திலும் உதவியாய் இருந்து அவரின் நன்மதிப்பை பெற்றவர். ராமானுஜர் மூலம் சரமஸ்லோக (திக்கோட்டியூர் நம்பி ராமானுஜருக்கு உபதேசம் செய்த) உபதேசம் பெற்றவர், ராமானுஜரின் யாத்திரையின் போது ரங்கம் திருக்கோயில் நிர்வாகத்தை ஏற்று நடத்தியவர். மேலும், ராமானுஜர் துறவரம் ஏற்றபோது முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தேன் என்று ராமானுஜரின் பூரண அருளைப் பெற்றவர் என்ற பெருமை பெற்றவர். மேலும் ராமானுஜரின் பாதுகை என்ற பெருமையும் பெற்றவர்.

இவ்வருடம் முதலியாண்டான் அவதார நன்னாள் 22.04.2018ல் அமைகிறது. அதை முன்னிட்டு முதலியாண்டானுக்கு இத்தலத்தில் 10 நாட்கள் அவதார வைபவம் நடைபெறும். சென்னைக்கு அருகே அமைந்துள்ள இத்தலங்களுக்கு அந்நாளில் சென்று தரிசித்து குருவருளும், திருவருளும் பெறலாம்.