நினைத்ததை அடைய அருளும் கிராம தேவதைகள்!



அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 18

ஸ்ரீ வித்யா உபாசகர்கள் உமையம்மையின் வடிவமாக கருதும் மேரு என்ற அமைப்பில், உமையம்மையானவள் சிவபெருமானுடைய மடியிலமர்ந்து காட்சியளிக்கிறாள். அதில் சிவன் உடனாய் இருப்பதால் ‘உன் இரு பாதாம் புயத்தில்’ என்று அவரையும் இணைத்து குறிப்பிடுகின்றார். ‘இறைவரும் நீயும்’ (பாடல் - 18) சீர்காழி உமா மகேஸ்வரர் மற்றும் காமேஷ்வரன்-காமேஷ்வரி. அதேசமயத்தில் தான் தனித்து நில்லாமல் தன் புதல்வனை கையிலேந்திய நிலையில் உமையம்மையையும், புதல்வனையும் இணைத்து ‘உன் இரு பாதாம் புயத்தில்’ என்று குறிப்பிடுகின்றார்.

‘முன் நான்கு இரு மூன்று’ (பாடல் - 65) திருவெண்காடு ‘பிள்ளை இடுக்கியம்மன்’ - சிற்ப சாஸ்திரத்தில் காளி என்கின்ற உமையம்மையை வடிக்கின்றபோது ஆடல் நிலையில் இரண்டு பாதங்களால் இரு வேறுவிதமான செயலைச் செய்வதை உணர்த்துகின்ற பாவனையில் ஒன்று அசுரரை அழித்தலையும், மற்றொன்று தேவரை காத்தலையும் குறிக்கும்.

‘பைரவி...காளி’ (பாடல் - 77), ‘திருவெண்காட்டு அகோரேசி’ -இதுபோன்ற இரண்டு செயல்களைக் குறிப்பிடவே ‘உன் இரு பாதாம் புயத்தில்’ என்றார் பட்டர்.

‘பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து’ -


பகல், இரவு, பகலின் உச்சி, இரவின் நடுப்பொழுதிலும், பகலும் இரவும் சந்திக்கின்ற வேளை (மாலை வேளை), இரவும் பகலும் சந்திக்கின்ற வேளை (விடியல் வேளை) இந்த ஆறு பொழுதிலும் சாக்த உபாசகர்கள் இறைவியை இப்படி வணங்குவார்கள்:

1. ஸ்ரவணம் (கேட்டு) - தேவி மஹாத்மியம் (கண்ணியது உன் புகழ்)
2. மனனம் (நினைத்து) - ஸ்ரீவித்யா மந்திரம் (மண்ணியது உன் திரு மந்திரம்)
3. கீர்த்தனம் (பாடி) - ஸஹஸ்ரநாமம் (கசிந்து பக்தி பண்ணியது)
4. பூஜனம் (வழிபட்டு) - ஸ்ரீசக்ரபூஜை (உன் இரு பாதாம் புயத்தில்)
5. பாத சேவனம் (அடிமை செய்து) - துறவியரின் பாதபூஜை, குரு பூஜை, துறவியர் பூஜை, பக்தர்கள் பூஜை.
6. தியானம் (உயிர் உள்ளல்) - அந்தர்யாகம் (மானஸ பூஜை) ஆப்யந்தர கும்பகம் (வலியடக்க பயிற்சியால் மனம் அடங்குதல்)

இந்த ஆறுவகையாக வழிபாடு செய்யும் அடியார்கள் கூடியிருக்கும் இடத்திற்கு அவை என்று பெயர். அந்த காலத்தில் இந்த அவையில் மேற்கண்ட முறையில் வழிபாட்டு செயல்கள் நடந்துகொண்டேயிருக்கும். இந்த அவையைத்தான் அபிராமி பட்டர் ‘நண்ணி’ (சார்ந்து) வணங்கியதை குறிப்பிடுகின்றார். இந்த ஆறுவிதமான வழிபாட்டு முறையினாலும் அல்லவை தீர உள்ளவை நாடி அறம், பொருள், இன்பம் வீடு இவை அனைத்தும் அடைவிக்கும். அப்படி அடைவித்த பலனை தான் அனுபவிப்பது எப்படி என்று வியக்கிறார்.

‘இழைக்கும் விளை வழியே’ பாடல் - 33) அவரவர் செய்த வினையின் வழியேதான் பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிந்தவர் பட்டர். அப்படி உழைப்பதற்கு மீறி பல்வேறு மடங்கு நன்மையாக பெருகி அது கிடைப்பதற்கு காரணம் என்ன? ‘புண்ணியத்தின் விளைவாக வருமென்றால் அதையும் நான் செய்யவில்லை. அது வருவதற்கு பகல் இரவா நண்ணி உன்னை வழிபடுவோர் அவையத்து இருப்பதே காரணம் என்பதை மேலும் நமக்கு
வலியுறுத்துகிறது.

‘உன்னை நயந்தோர்’ - ஞானத்திற்கு ஏழுபடி நிலைகள் என்கிறது சாக்த தந்திரம். அந்த ஏழில் ஒன்றை அடைந்ததோரையே இச்சொல் குறிப்பிடுகிறது. அந்த ஏழு நிலைகள்:

1. சூழல் சார்ந்த விளைவு: சந்நதி தெருவில் குடியிருந்தால் நாம் போகும்போதும் வரும்போதும் ஆலயம் அதுசார்ந்த வழிபாட்டையும் நாம் அடிக்கடி பார்ப்பதனால் ஏற்படும் உள்ள விழைவு. ‘பார்க்கும் திசை தோறும்’ (பாடல் - 85)
2. தேவியின் காரணமாய் விளைவு: துன்பத்தை விளக்கிக் கொள்ளவோ, நாம் நினைத்ததை அடையவோ வழிபாட்டின் மேல் ஏற்படும் விளைவு. உதாரணமாக அபிராமி அந்தாதியில் ‘தனம் தரும் கல்வி தடும்...’  என்ற 69வது பாடலை பாராயணம் செய்தால் செல்வம் பெருகும் என்பதால் அதன்மேல் ஏற்படுகின்ற பற்று என்பதுபோல.
3. சமூக பண்பினால் ஏற்படும் விளைவு: மூன்று வயது முதல் ஒரு குறிப்பிட்ட இடம், மொழி, தேசம், இவற்றின் வழி மனிதனுக்கு அவர்களின் தாய், தந்தை சார்ந்தே, சூழல் சார்ந்தே, பிறப்பின் அடிப்படையினாலே வளர்ப்பு ஏற்படும். இறைவனை குறித்த மரபுவழி செயல்பாடுகளாலும், நம்பிக்கையினாலும் ஏற்படுகிற விளைவு. ‘கோத்திரம், கல்வி, குணம் குன்றி நாளும் குடில்கள் தோறும் பாத்திரம் கொண்டு (பாடல் - 67)
4. ஒருசில அனுபவத்தினால் ஏற்படும் விளைவு: ஆலயத்திற்குச் சென்று இறைவனை பிரார்த்தித்து அதன்வழி நடந்ததாக கருதுவதாலும், சில செயல்களால் துன்பத்தை அனுபவிக்கும் சூழலில் அதை சரிசெய்துகொள்ள பிரார்த்தனை வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி அதை அடைந்ததால் ஏற்படும் உள்ளத்தின் விளைவு. ‘தெளிகின்ற ஞானம்
திகழ்கின்றது’ (பாடல் - 19)
5. இறை சம்பந்தமான அறிவினால் ஏற்படுகின்ற விளைவு: உதாரணமாக உபநிஷத் என்ற இறை உணர்த்தும் சாஸ்திரத்தை பயில்வதனால் உள்ளத்தில் தோன்றும் கருத்தின்படி இறைவன் ஞானவடிவானவன் என்பதாக நம் மனதில் தோன்றும் எண்ணம். ‘மறையின் பரிமளமே’ (பாடல் - 22)
6. சூழலினால் ஆலயம் சார்ந்து வாழ்ந்து, தேவையினால் அது குறித்து வழிபாடு செய்து, சமூக பண்பினால் மாமிசம் முதலானவை அருந்தாமலோ, அருந்தியோ, சைவ படையலோ அசைவப் படையலோ போட்டு இறைவனை வாழ்த்தி, அதன்வழி சில நன்மைகளை பெற்று தீமைகளை விலக்கிக் கொண்டதால் ஏற்படும் தொடர் விளைவு. (‘பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே’ (பாடல் - 6)
7. ஞானசம்பந்தர், அப்பர் முதலானோர் இறையருளே அவர்களை வணங்கும்படி செய்ததனால் ஏற்படும் விளைவு. இந்த ஆறாவது மற்றும் ஏழாவது நிலையை சார்ந்து அதன்வழி அனுபவத்தில் இறைவனைப் பற்றி கூறுபவரையே ‘நயந்தோர்’ என்கிறார்.

அபிராமி பட்டரானவர் சூழல் சார்ந்து கோயிலைச் சேர்ந்த அக்ரகாரத்தில் வசித்ததாலும் தேவையின் காரணமாய் அவர் அபிராமியை பணிந்ததாலும், (‘கூட்டியவா என்னை தன் அடியாரில்’ (பாடல் - 80) அந்தணர் என்ற சமூகப் பண்பினாலும், இறையடி சார்ந்து ஆலயப் பணியில் ஏற்பட்ட அனுபவத்தினாலும், அவர் பயின்ற வேத, ஆகம, சாஸ்திர அறிவினாலும், இவை ஐந்தும் இணைந்தால் ஏற்பட்ட அனுபவத்தாலும், அபிராமியம்மையின் அருளும் அவருக்கு கிடைத்ததனாலும், அவர் கூறிய அபிராமி அந்தாதியை ‘நயந்தோர்’ என்று குறிப்பிடலாம்.

‘அவையத்து’ -
அவை என்பது சாஸ்திரத்தைப் பொறுத்தவரை இறை அன்பர்கள் கூடியிருக்கும் இடம் என்பதாகும். அங்கு இறையருள் அனுபவம் பெற்றவர்களின் உபதேசங்கள், உபாசனை முறைக்குத் தேவையான சில சாஸ்திரங்களை பயிற்றுவிப்பதற்கான ஆசான்கள், சாஸ்திர முறை பின்பற்றியவர்களுக்கு நடைமுறையில் ஏற்படும் சந்தேகங்களை விளக்கிக் கூறும் சான்றோர்கள், வெவ்வேறு நிலையில் உள்ள அடியவர்கள், அனைவரும் ஒருங்கிணைந்து காணப்படுவர்.

இங்கு காரணகாரிய அடிப்படையில் உண்மையை அலசி ஆராய்ந்து சாஸ்திரங்களின் துணைகொண்டு கடந்த, நிகழ், எதிர் நோக்கி அனைத்து செயல்பாடுகளும் ஆன்மாவை குறித்தும், இறையருளை குறித்தும் அமையும். இதுபோன்ற நல்லோர் கூடியிருக்குமிடத்தில் இறைவனும் அவர்களில் ஒருவராக எழுந்தருள்வான். அப்படி எழுந்தருளும் சபைக்கு அவை என்று பெயர்.

தில்லையில் மூவாயிரத்தோடு மூவாயிரத்து ஒன்றாய் சிவபெருமான் இருந்ததைக்கொண்டு, இந்த உண்மையை அறியலாம். மதுரைத் தமிழ் சங்கத்ைத சிவபெருமானும், முருகனும், அகத்தியரும் எழுந்தருளியுள்ளதைக் காணலாம். அபிராமி பட்டரானவர் இறை வணங்காதவரிடமிருந்து நீங்கி இறையருளை வேண்டுவோருடன் சேர்ந்து இருந்ததை இருவகையாலும் குறிப்பிடுகின்றார்: ‘எனது உனது என்று இருப்பார் சிலர் யாவரோடும் பிணங்கேன்,’ ‘கூட்டியவா என்னை தன் அடியாருள்’ (பாடல் - 81) என்பதிலிருந்து அறியலாம்.

‘நான்முன் செய்த புண்ணியம் ஏது’ - நான் என்பது இந்த இடத்தில் அபிராமி தன்மையில் குறித்தது. புண்ணியம் என்றால் என்ன? எந்தச் செயலின் விளைவானது செய்பவனுக்கு நன்மையை தருமோ அது, புண்ணியம்.

புண்ணியம், 1. இஷ்டா (வாழ்வியல் நல்லறம்), 2. பூர்த்தி (ஆன்மவியல் நல்லறம்) என இருவகையாகச் சொல்லப்படுகிறது.இஷ்டா, பூர்த்தி என்ற அறத்தின் விளைவாக ஏற்படுகிற பலன் திருஷ்டம் (பார்க்கக்கூடியது) அதிர்ஷ்டம் (பார்க்க முடியாதது) மாணவன் நன்கு படித்திருக்கின்றானா என்பதை அவன் எழுதிய விடைத்தாளைக் கொண்டு அறிவதுபோல - திருஷ்டம்; இந்த உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டது, எந்த வழியாய் போனது என்பதை அறிய முடியாததுபோல (அதிர்ஷ்டம்) வழிபாட்டினால் தேவதைகளை உபாசித்து நலன் பெறுவது என்பது அதிர்ஷ்டத்தில் உள்ளது.

கர்மாவினால் (செயல் முயற்சியால்) வாழ்வியல் நலனை பெறுவது அறம் எனப்படுகிறது. வாழ்வியல் அறமானது வழிபாடானது (உபாசனை) அடுத்த பிறவிக்கும் தொடர்ந்து வரும் என்கிறது ஆகமம். இந்த அறத்தின் நுட்பத்தை அறிந்த அபிராமி பட்டர் இந்த பிறவியில் தான் உபாசனை குறித்து எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை, இருந்தும் அபிராமியின் அருளை பெறுகிறேன் என்று தனக்குத்தானே கூறிக்கொள்கிறார்.

இந்த பிறவியில் செய்யவில்லை என்றாலும் போன பிறவியில் செய்ததன் விளைவாக இருக்குமோ என்ற எண்ணத்தையே, ‘முன் செய்த புண்ணியம் ஏது’ (பாடல் - 12) என்று தெளிவாக குறிப்பிடுகிறார். அதாவது, புண்ணியம் செய்யவில்லை என்று மறைமுகமாக சொல்கிறார். ‘எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே’ (பாடல் - 40), ‘முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்’ (பாடல் - 25).இப்படி அபிராமி பட்டர் கூறுவதிலிருந்து இரண்டு உண்மைகள் புலனாகின்றன - முன்னர் அவர் அபிராமியை வணங்கியிருக்கிறார், அபிராமியின் அருளினால் பூர்வ ஜென்ம நினைவைப் பெற்றிருக்கிறார்.

‘‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்ப் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்ல சுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா அ நின்ற வித் தாவர சங்க மத்து
ளெல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே எனும் பெருமான்’’

- என்ற மாணிக்கவாசகரின் வாக்கினால் பூர்வ ஜென்ம நினைவை அறிய முடிகிறவர்கள் ஆசாரியர்களாகவும் திகழ்ந்திருக்கின்றார்கள். அந்த ஆசாரிய நிலையை பெற்றவர்கள்தான் பிறர் காண, இறையருளைத் தான்பெற்று மற்றவருக்கு அருள முடியும். இந்த வரியானது அபிராமி பட்டர் கொண்டுள்ள உயர்ந்த ஆன்மிக நிலையை காட்டுகிறது. உயர்ந்த நிலை என்பதனால் படி நிலை ஞானம் என்பதாக அறிய முடிகிறது.

படிநிலை ஞானத்தின் வழியாக முக்தியடையலாம் என்கிறது சாக்த தத்துவம். அப்படி உயர்ந்த நிலையை அடைவதற்கு இடைவிடாத முயற்சியும், நம்பிக்கையும் இன்றியமையாதன. அந்தப் பயிற்சியைப் பெறுவதற்கான களன்கள் அவை. அதனால்தான் இந்த பாடலை ‘அவையத்து’ என்று வியந்து கூறுகின்றார். இந்த அவையின் வாயிலாக நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்கிறார். அந்தத் தொடர்பானது அனைத்து துன்பங்களையும் நீக்கி மகிழ்ச்சியான வாழ்வளித்து முடிவில் மோட்சத்தையும் தரும்.

‘என் அம்மே’ - அன்பு, குற்றங்களை மறத்தல், குணம் போற்றல் ஆகிய தன்மை கருதி அம்மை என்கிறார். லலிதா ஸஹஸ்ரநாமமும் ‘மாதா’ என்று அன்னை வடிவத்தைப் போற்றுகிறது. உடல் வழியாய் அவரவருக்கு தாய், தந்தை இருந்தாலும் அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருப்பவள் உமையம்மையே. ‘என்’ என்ற சொல்லால் அபிராமி பட்டருக்கும், அபிராமிக்கும் இடையே உள்ள அருள் பிணைப்பை அவர் அனுபவத்தில் கண்டிருக்கிறார் என்று புரியவருகிறது.

அறிவியல் பயிலும் மாணவனிடத்து ‘மலர்’ என்றால், அவன் இது இதழ், இது மகரந்தம், இது கேசரம் என்று பிரித்து உணர்வான். அதையே இலக்கியம் படிப்பவனிடம் கூறினால் காதலை, அன்பை, நெகிழ்வை உணர்வான். அந்த வகையில், அபிராமி பட்டர் சார்ந்து அதை நாம் உணர முற்பட வேண்டும்.

 ‘புவி ஏழையும் பூத்தவளே’ -


இது ஒரு கலைச்சொல் வித்யா தேகம் என்ற உடலையும் குறிக்கும். ஏழு உலகிற்கும் தாய் அவள். ஒரு தாயின் கருணையோடு தன்னால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் காத்து அருள்பவள். ஒரு பூனையே தன் குட்டியை குறிப்பிட்ட காலம்வரை கருணையோடு காக்கும். அது தானாக வாழ்வதற்கு வழி செய்யும் என்றால் அகில உலகங்களையும் படைக்கும் உமையம்மையைப் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை. புழு முதல் பிரம்மா வரை ஈன்றெடித்தவள் அவள். ‘ஆப்பிரம்ம கீட ஜனன்யை’ என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம்.

‘ஏழையும்’ என்ற சிறப்பான சொல்லானது, ஞானத்தை பொறுத்தவரை மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, பிரம்மரந்திரம் என்ற, உடலில் இருக்கிற உயிரை விலக்கி அறிய உதவுகின்ற நுட்பமான வடிவுடைய ஏழு ஆற்றல் மையங்கள். இது மனிதன் உடலோடு கூடியபோது செய்த பாவபுண்ணிய பதிவுகளை பெற்றதாகவும், ஆன்மாவோடு இணைவதாகவும் ஒரு உடலை விட்டு அடுத்த உடலுக்கு ஆன்மா செல்லுகிறபோது உடன் செல்வதாகவும் உள்ளவை. இது அறிவு மயமானது. இந்த அறிவு மயமான பதிவுகளை மையமாக வைத்து அடுத்த பிறவியில் உடல் (மரம், விலங்கு, மனிதன்) ஆயுள், அது சொந்த முயற்சியின்றி அனுபவிக்கும் அதீத சுகம், முயற்சி செய்தும் விலகாத அதீத துக்கம், சுதந்திரம், அடிமைத்தனம், ஞானம் ஆகியவை அமையக் காரணமாக அமைகிறது. இதை வித்யா தத்வம் என்பர்.

புற உடலை மனிதன் கர்மாவின் வழி அமைத்துக் கொள்கிறான். இந்த ஏழு பூமி (மாற்று உடல்) என்று சொல்லக்கூடிய ஞான உடலை வேண்டுகோளுக்கிணங்க உமையம்மையின் கருணையினால் செய்வது. உபாசனையினால் வருவது ஞானபூமியாகும். இதற்கு வித்யா தேகம் என்று பெயர். அதை தனக்கு வழங்கியதாக அபிராமி பட்டர் குறிப்பிடுகின்றார். ‘இழைக்கும் வினை வழியே’ (பாடல் - 33), ‘தங்குவர் கற்பகத் தருவின் நிழலில்’ (பாடல் - 75) ஆகிய வரிகள் மேலும் உறுதி செய்கின்றன.

தாயாரின்றி மங்குவர் என்றதனால் உமையம்மையால் கொடுக்கப்பட்ட வித்யா தேகமானது, மண்ணில் வந்து பிறவாது, துன்பமடையாது, முக்தியைப் பெறும் என்பதை சொல்கிறது இப்பாடல். ‘மரணம் பிறவி என்ற இரண்டு எய்தார்’ (பாடல் - 51), ‘அழியா முக்தி வீடு மன்றோ’ (பாடல் - 15)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே. (பாடல் - 13)
உமையம்மை வழிபாட்டிற்கு முதன்மை பெறுவது அவருக்கு அளிக்கப்படும் உருவமாகும், என்கிறது சிற்பநூல்.  உமையம்மையின் ஒவ்வொரு திருஉருவிற்கும் ஒரு தனிசிறப்பும் பயன்பாடும் உள்ளது. அந்த வகையில் எண்ணற்ற உருவங்களை சக்தியானவள் ஏற்கின்றாள், சாஸ்திரங்களில் அவளுக்கு கூறப்படும், பெயர்களும் வடிவ அமைப்புகளும் சார்ந்து அநேக மாறுதல்களுடன் வழிபாடு செய்யப்படுகிறது.

இப்பாடலை பொறுத்தவரை ஆறு திருவுருவங்கள் மிக சிறப்பாக குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் தொடர்பான புராண கதைகளின் குறிப்புமுள்ளது. மேலும் மந்திரங்களை பெற்று உபாசனை முறையில் வழிபடுகிறவர்கள், அடையும் மன வளர்ச்சி அதன் விளைவாக ஏற்படும் இறையன்பு மிகுதி, அதன் தொடர்பாக தோன்றும் பிற தெய்வ வழிபாட்டு நீக்கம், சாமானியர்களால் உணர முடியாத கனவு மற்றும் சில அனுபவம் இவற்றைப் பற்றியும் இப்பாடல் குறிப்புகள் தருகிறது.

பட்டர் திருக்கடையூர் தலபுராணத்தில் கூறப்படும் தகவல்களை பாடல் வரிகளில் பதிவு செய்யத் தவறவில்லை. எந்த நிலையிலிருந்து அபிராமி பட்டர் பேசினாலும் ஒரு சாமானியனுக்கு அதை புரிய வைக்க அவர் முயன்றிருப்பது இப்பாடலில் தெரிகிறது. வடமொழிச்சொற்களை நன்கு கற்று அவற்றைத் தமிழாக்கி சில தெய்வங்களின் பெயரை அவர் உச்சரிப்பதை எல்லாப் பாடல்களையும் போலவே இப்பாடலிலும் காணலாம்.

ஆகமங்கள் குறிப்பிடும் சில உருவங்களுக்கான பெயர்களை இங்கே அவர் கூறியிருப்பது, ஞானத்தை தரும் தீக்ஷையைத் அருளும் தேவதைகளாகும். இந்த ஆறு தேவதைகளை இறைவழிபாட்டு நெறிகாட்டும் தேவதைகளாக அறிமுகம் செய்கிறது உபாசனை நூல். மேலும் நினைத்ததையடைய வழிபடப்படும் கிராம தேவதைகளும் இதே சொல்லால் அழைக்கப்படுகிறார்கள்.

காட்டுசேரி-பேச்சியம்மன்-பூத்தவள், கொட்டூர்-சப்தகன்னி- காத்தவள், வழுவூர்-மோகினி-கரந்தவள், திருவெண்காடு-பிள்ளை இடுக்கியம்மன்- மூத்தவள், கொற்கை-கொற்றவை- இளையவள், மாங்காடு-தவக்கோல காமாட்சி-மாத்தவள். காம்யம், மோட்சம் என்ற இரண்டையும் வழங்கும் தேவதைகளைப் பற்றி இனி பார்ப்போம்.தொடர்வோம்.