உங்கள் ஆல்போல் தழைத்து வாழும்!!



என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* எனது மகள் எங்கள் விருப்பத்தையும் மீறி மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞனை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. கேட்டால் இது செய்வினை என்கிறார்கள். எங்கள் மகள் உறவை முறித்துக்கொண்டு எங்களிடம் வருவாளா? அவளுக்கு மறுமணம் உண்டா? நாங்கள் சில முடிவுகள் எடுக்க, உங்கள் ஆலோசனை தேவை. - சுந்தரம், நாகர்கோவில்.

உங்கள் மகளின் ஜாதகத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது செய்வினை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி சனி மட்டுமே வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். எனினும் அவர் வெற்றியைத் தரும் 11ம் இடத்தில் அமர்ந்திருப்பதால், தான் நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்டவராக இருக்கிறார். ஆயில்யம் நட்சத்திரம், (பூசம் நட்சத்திரம் என்று எழுதியுள்ளீர்கள்) கடக ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார். வேறு எந்த தீய கிரஹங்களும் களத்ர ஸ்தானத்தில் இணையவில்லை.

களத்ரகாரகன் சுக்கிரனும் ஐந்தாம் பாவத்தில், அதுவும் தனது சொந்த வீட்டில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. அவரது மனதிற்குப் பிடித்தமானவகையில் கணவர் அமைந்திருக்கிறார். மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞனாக இருப்பினும், உங்கள் மகளை நல்லபடியாக கவனித்துக்கொள்ளும் மனிதராகவே இருப்பார். உங்கள் மகளின் விருப்பத்தினை நிறைவேற்றுபவராகவும், நல்ல குணம் கொண்டவராகவும் இருப்பார். ஜாதக ரீதியாக தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருக்கிறது. ராகு சுக ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் தசாபுக்தியும் நற்பலனையே தந்து கொண்டிருக்கிறது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டார் என்பதை மட்டும் மனதில் கொண்டு மகளை வெறுத்து ஒதுக்குவதில் அர்த்தமில்லை.

உங்கள் மகள் தனது விருப்பத்தின்படி மணவாழ்வினை அமைத்துக்கொண்டது தவறாகிப் போகவில்லை. இதில் செய்வினை ஏதும் இல்லை. அநாவசியமாக மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். அவருடைய வாழ்வில் மறுமணம் என்ற பேச்சிற்கே இடமில்லை. மகளை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றோரின் ஆசிர்வாதம் அவரை மேலும் நல்லபடியாக வாழவைக்கும்.

* மருத்துவம் படித்த என் மகனுக்கு மேற்படிப்பு படிக்கும் யோகம் உண்டா? திருமணம் எப்போது? எதிர்காலம் எப்படி இருக்கும்?
- மகாலட்சுமி, காரைக்கால்.

உங்கள் மகனுக்கு அவரது துறையில் மேற்படிப்பு படிப்பதற்கான யோகம் உள்ளது. ஆனால் தற்போதைய கிரஹ சூழ்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில், ஜென்ம லக்னாதிபதி குருபகவான் தொழிலைப் பற்றிச் சொல்லும் 10ம் வீட்டில் அமர்ந்திருப்பது மிகவும் நல்ல நிலையே. தொழில் முறையில் இவரை மிகவும் நேர்மையாளராக பணியாற்ற வைக்கும்.

அரசாங்க மருத்துவராக பணியாற்றுவது இவரது எதிர்காலத்திற்கு நல்லது. தற்போது நடந்து வரும் சூரிய தசையில் புதன் புக்தி காலமானது இவரது உத்யோகத்திற்கு பெரிதும் துணை புரியும். வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு அரசுப் பணிக்கு முயற்சிக்கச் சொல்லுங்கள். மனைவியைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் புதன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பது மிகவும் நல்ல நிலையே. வாழ்க்கைத்துணைவி இவரது உத்யோகத்திற்கு துணைபுரிபவராக அமைவார். 08.01.2019 முதல் ஒரு வருட காலத்திற்குள் திருமண யோகம் கூடி வருவதால் அந்த நேரத்தில் இவரது கல்யாணத்தை நடத்திவிடுவது நல்லது.

2020ம் ஆண்டின் துவக்கம் முதல் தசை மாறுவதால் அந்த நேரத்தில் இவர் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு வந்து சேரும். அரசுத்துறையில் பணி செய்துகொண்டே இவர் தனது மேற்படிப்பினைத் தொடர இயலும். உங்கள் மகனின் எதிர்காலம் கௌரவம் மிக்கதாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

* என் அண்ணார் மகளுக்கு ஜென்ம லக்னத்தில் சனியும், கேதுவும் இணைந்துள்ளன. இதனால் திருமணத் தடை உண்டாகுமா? அவளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - விஸ்வேஸ்வரன், சிதம்பரம்.

உங்கள் அண்ணார் மகளின் ஜாதகத்தில் சனியோடு, கேது இணையவில்லை. ஜோதிடரின் கையெழுத்து உங்களுக்கு புரியவில்லை என்பது தெரிகிறது. ஜென்ம லக்னத்தில் கேதுவுடன் சூரியன்தான் இணைந்துள்ளார். பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி பலத்துடன் அமர்ந்துள்ளார்.

அவரது ஜாதகத்தில் வாழ்க்கைத் துணைவரைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் மூன்றில் நீசம் பெற்று இருப்பதும், களத்ர தோஷத்தை உண்டாக்குகிறது. எனினும் இவர்கள் இருவருமே புதனின் சாரம் பெற்று சஞ்சரிக்கிறார்கள். இவருடைய ஜாதகத்தில் புதன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி காண இயலும். இவரது ஜாதகக் கணக்கின்படி 11.07.2018க்கு மேல் திருமண யோகம் கூடி வருகிறது. அது முதல் ஒன்றரை வருட காலத்திற்கு திருமண யோகம் தொடர்வதால் 2019ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக இவரது திருமணம் நடந்துவிடும். இவர் பிறந்த ஊரிலிருந்து தெற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து களத்திரம் அமையும். களத்ர தோஷ நிவர்த்தி காண குடும்ப புரோஹிதரின் துணைகொண்டு செவ்வாய் மற்றும் ராகுவிற்கு பரிகார ஹோமம் செய்துகொள்ளச் சொல்லுங்கள்.

அதோடு  செவ்வாய்கிழமைகளில் சிதம்பரம் நடராஜப்பெருமான் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியநாயகர் (சுப்ரமணிய ஸ்வாமி) சந்நதியில் விளக்கேற்றி வைத்து வழிபடுங்கள். துவரைப்பொடி சாதம் நைவேத்யம் செய்து, அதை நீர்மோருடன் சந்நதிக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். களத்ர தோஷத்தின் வீரியம் குறைவதோடு, அவரது மனதிற்கேற்ற மணாளனை வெகுவிரைவில் அடையாளம் காண இயலும்.

* தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் நெருங்கிப் பழகாமல் கற்பனையான உலகில் வாழ்ந்துவிட்டேன். அரசு சாரா வங்கியில் உதவியாளராக பணிபுரியும் எனக்கு முறையான ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. வெறுப்பும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சுகிறது. எனது கணவர் குடும்ப சூழலை உணர்ந்து நல்ல முறையில் தொழில் செய்வாரா? எப்பொழுது நல்ல காலம் பிறக்கும்? - சுபாஷினி, சேலம்.

உங்களுடைய வளர்ச்சியைத் தடை செய்வது எது என்பது உங்களுக்கே தெரிந்திருக்கிறது. யாருடனும் பழகாமல் தாழ்வு மனப்பான்மையுடன் தனக்கென தனியாக ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி சனி வக்ர கதியில் சஞ்சரிக்கிறார். அதோடு லக்னத்தில் அமர்ந்துள்ள குரு பகவானும் வக்ரம் பெற்றுள்ளார்.

ஜீவன ஸ்தான அதிபதி செவ்வாயும் வக்ரம் அடைந்துள்ளார். முக்கியமான மூன்று கிரஹங்களின் வக்ர சஞ்சாரம் உங்களுக்கு தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையும் தந்திருக்கிறது. பிரச்னைக்கு உரிய நேரத்தில் நீங்கள் குருவாக நினைக்கும் மனிதரிடம் சென்று ஆலோசனை கேட்டு அதன்படி நடக்க முயற்சியுங்கள். இருக்கும் உத்யோகத்தையே நிரந்தரமாக்கிக் கொள்ள திட்டமிட்டு செயல்படுங்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதற்கு எண்ணாதீர்கள். உங்களுடைய ஜாதக பலத்தின்படி ஆதாயம் தருகின்ற எந்த ஒரு விஷயமும் சற்று நிதானமாகத்தான் வந்து சேரும். தசாபுக்தி கணக்கின்படி 03.01.2019ற்கு மேல் உத்யோக ரீதியாகவும், சம்பள ரீதியாகவும் உயர்வு உண்டாகக் காண்பீர்கள்.

அதுவரை பொறுமையாய் இருப்பது நல்லது. 37வது வயது முதல் கடன் பிரச்னைகள் முற்றிலுமாகக் குறைந்து வாழ்வினில் வளர்ச்சி காணத் துவங்குவீர்கள். கணவர் உங்கள் முயற்சிக்குத் துணையிருப்பார். நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஊற்றுமலை சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்கு மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் மாலை நேரத்தில் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் பங்குபெற்று தரிசனம் செய்யுங்கள். மனதில் தன்னம்பிக்கை உயர்வதோடு தெளிவும் காண்பீர்கள்.

* பல சோதனைகளைக் கடந்து வந்த எனக்கு இனி வரும் காலம் எப்படி உள்ளது? ஆயுள் எப்படி? மகன் என்னை கவனித்துக் கொள்வானா? ஹைபர் ஆக்டிவ் நோய் உள்ள அவனது எதிர்காலம் எப்படி இருக்கும்? அவனுக்கு சொந்தத்தில் திருமணம் நடக்குமா? - பரமேஸ்வரி, சிங்கப்பூர்.

சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்திருக்கும் நீங்கள் தமிழ் கற்றுக்கொண்டு, தமிழ் பத்திரிகைகளைப் படித்து வருவதும், தமிழிலேயே பிழையின்றி கடிதம் எழுதியிருப்பதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அறுபது வயதினைக் கடந்த நிலையில் பொதுவாக எல்லோருக்கும் இயற்கையாகத் தோன்றும் எதிர்காலம் குறித்த பயம் உங்களுக்கும் உண்டாகி உள்ளது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. ஜனவரி 2018 வரை சற்று சிரமங்களையும், தடைகளையும் சந்தித்து வந்த உங்களுக்கு அதன் பிறகு நல்ல நேரம் என்பது துவங்கி உள்ளது. நீங்கள் நினைத்ததை சாதித்துக் கொள்ள காலம் ஏதுவாக அமைந்திருக்கிறது. ஆயுள் தீர்க்கமாகவே உள்ளது. அதனைப் பற்றிய கவலை தற்போது வேண்டாம்.

உங்கள் மகன் உங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவார். எனினும் அவர் மூலமாக பொருளாதார ஆதாயம் எதையும் நீங்கள் பெற முடியாது. பண ரீதியாக நீங்கள் தான் அவருக்குத் துணைபுரிய வேண்டியிருக்கும். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம  லக்னத்திலேயே  ராகுவும், மனோகாரகன் சந்திரனும் ஒன்றாக இணைந்திருப்பதால் ஹைபர் ஆக்டிவ் நோய் உண்டாகியிருக்கிறது. எனினும் அதனைக் கொஞ்சம், கொஞ்சமாக குணப்படுத்த இயலும். உங்கள் மகனுக்கு நெருங்கிய சொந்தத்தில் மணமகள் அமைவதற்கான வாய்ப்பு இல்லை. எனினும் தூரத்து உறவினர் வகையில் அமைவார். பெண்ணை ஏற்கெனவே பார்த்திருக்கமாட்டீர்கள் என்றாலும், தெரிந்த குடும்பத்து பெண்ணாக அமைவார். 27வது வயதில் அவருடைய

திருமணத்தை நடத்தினால் போதுமானது. உங்களைப் பொறுத்தவரை தற்போது நடந்து வரும் ராகு புக்தியில் மன சஞ்சலம் என்பது உண்டாகியிருக்கிறது. திங்கட்கிழமை தோறும் விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் மாலை சாத்தி வழிபட்டு வாருங்கள். சங்கடஹரசதுர்த்தி நாளில் விரதம் இருந்து மாலை வேளையில் விநாயகப் பெருமானை வழிபட்டு விரதத்தை பூர்த்தி செய்யுங்கள். அறுகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் உங்களால் இயன்ற அன்னதானம் செய்து வருவதும் நல்லது. உங்கள் வம்சம் ஆல்போல் தழைத்து வளரும்.

* 33 வயது ஆகும் எனக்கு வரும் வரன்கள் எல்லாம் தட்டிச் செல்கின்றன. திருமணம் எப்பொழுது நடைபெறும்? மனைவி, குடும்பம் மற்றும் வருங்காலம் எப்படி இருக்கும்? - சதீஷ்குமார், விழுப்புரம், (ஈ.மெயில் மூலமாக)

24வது வயதில் ஒரு முறையும், 27வது வயதில் ஒரு முறையும் தேடி வந்த திருமண வாய்ப்புகளை தவறவிட்டிருக்கிறீர்கள். எனினும் உங்கள் ஜாதகக் கணக்கின்படி தற்போது நல்ல நேரமே நடந்து கொண்டிருக்கிறது. ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் சனியும், கேதுவும் இணைந்திருப்பது தோஷமான நிலை ஆகும். எனினும் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயும், ஏழாம் பாவ அதிபதி சுக்கிரனும் இணைந்து ஐந்தில் அமர்ந்திருப்பது உங்கள் மனதிற்கு பிடித்தமான வகையில் பெண் அமைவதற்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்கித் தரும்.

தற்போது நடந்து வரும் சுக்கிர தசையில் குரு புக்தி காலம் என்பது திருமணத்திற்கு உகந்த நேரமே. நீங்கள் பணியாற்றும் துறையில் இருந்தே பெண் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். உங்கள் பணி தொடர்பான பெண்ணாகத் தேடுங்கள். ஏழாம் வீட்டில் சனிகேதுவின் இணைவு இருப்பதால் அந்தஸ்து பேதம் ஏதும் பார்க்காதீர்கள். அந்தஸ்தில் குறைவாக இருந்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்திருந்தால் மேற்கொண்டு தொடருங்கள். நீங்கள் வசிக்கும் விழுப்புரம் நகரில் உள்ள வைகுந்தவாசப் பெருமாள் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமையில் சென்று ஆறு நெய் விளக்குகள் ஏற்றிவைத்து மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பெருமாளின் திருவருளால் 02.03.2019ற்குள் உங்கள் திருமணம் நடந்துவிடும். மனம்போல் மணவாழ்க்கை மலர வாழ்த்துக்கள்.