ஞானசம்பந்தருக்குப் பால் கொடுக்கச் செய்த கருணையாளர்!



அருணகிரி உலா

சித்ரா மூர்த்தி

‘மேகவார்’ எனத் துவங்கும் வேளூர்த் திருப்புகழில் வேறெந்தப் பாடலிலும் இல்லாத வகையில் அசுரர்களின் அழிவைப் பற்றி யாரெல்லாம் கட்டியம் கூறுகிறார்கள் என்று பட்டியலிட்டுக் காட்டியிருப்பது அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது:

‘‘நாகலோகர், மதிலோகர், பகலோகர், விதி
    நாடுளோர்கள், அமரோர்கள், கணநாதர், விடை
நாதர், வேதியர்கள், ஆதிசரசோதி திகழ் முநிவோர்கள்
    நாதரே நரர் மன் நாரணர், புராண வகை
வேதகீத ஒலி பூரையிது பூரையென
    நாசமாயசுரர் மேவுகிரி தூளிபட விடும்வேலா’’

‘நாகலோகர் - நாகலோகத்திலுள்ளவர்கள், மதிலோகர் - சந்திர மண்டலத்திலுள்ளவர்கள், பகலோகர் - சூரிய மண்டலத்தில் உள்ளவர்கள், விதி நாடுளோர்கள் - பிரம்மலோகத்தில் உள்ளவர்கள், தேவர்கள், பதிணெண் கணங்களுக்கு நாதர், நந்திகண நாதர்கள், அந்தணர்கள், முதன்மையான யோக மார்க்கத்தில் ஏற்படும் ஜோதி வடிவ ரிஷிகள், நவநாத சித்தர்கள், மனிதர்கள், தத்தம் ஆயுளுக்குப் பின்னர் கயிலையில் நிலைபெற்று சிவயோகம் செய்யும் நாராயண மூர்த்திகள், 18 புராண வேத சங்கீத சாஸ்திரங்களின் அதிதேவதைகள் ஆகியோர், அசுரர்களின் முடிவு காலம் இதுவே என்று கோஷிக்க, அசுரர்கள் அழிய அவர்கள் இருந்த ஏழு மலைகளும், கிரெளஞ்சமும் தூளாகும்படி வேலைச் செலுத்தினவனே!’

பாடலின் இறுதியில் ‘பன்னிரு தோள்கள், ஆறு திருமுகங்கள், மயில், வேல் இவற்றின் அழகுக்கு மேலான உவமைப் பொருளாயிருக்கின்ற அழகு உருவம் உள்ளவனே! தியானித்து வணங்கி ஜடாயு, சம்பாதி எனும் பட்சிகள் சூழ்ந்து துதிக்கும் வேளூர் பெருமாளே! சோலைகள் விரிந்து பரந்துள்ள வேளூரில் வீற்றிருக்கும் முருகா! தேவர்கள் பெருமாளே!’ என்று துதிக்கிறார்.ஆறுமுகனை வணங்கி வரும்போது மீண்டும் நம் அழகன் செல்வமுத்துக் குமரனைக் காண உள்ளம் ஏங்குகிறது. மற்றுமொரு முறை கோயிலை வலம் வந்து வணங்கி வெளி வருகிறோம்.

‘‘புமியதனில் ப்ரபுவான
    புகலியில் வித்தகர் போல
அமிர்தகவித் தொடைபாட
    அடிமைதனக் கருள்வாயே’’

‘இப்பூவுலகில் ப்ரபுவாகத் தோன்றி பக்தர்களுக்குப் புகலிடமாக விளங்கும் சீகாழித் தலத்து ஞானசம்பந்தப் பெருமான் போல, ‘அமுதமே இது’ என்று சொல்லத்தக்க கவிமாலையைப் பாடுவதற்கு, அடிமையாகிய எனக்கு அருட்பாலிப்பாயாக’ என்று பாடியுள்ளார் அருணகிரி நாதர். சம்பந்தப் பெருமான் அவதரித்து, உமை முலைப்பால் உண்ட புண்ணியத் தலமாகிய சீகாழி, அருணகிரி உலாவில் நமது அடுத்த இலக்கு.

சிதம்பரம் - மயிலாடுதுறை தடத்தில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் சீகாழி. ஸ்ரீகாளி என்றழைக்கப்பட்ட இத்தலம் பின்னர் சீகாழி என மருவியது. தற்போது சீர்காழி என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு இறைவன் மூன்று திருமேனிகளில் அருட்பாலிக்கிறார்:  1. கருவறையிலுள்ள லிங்கம், பிரம்மன் பூஜித்ததால் பிரம்மபுரீஸ்வரர் எனப்படுகிறார்; 2. இடைப்பகுதியிலுள்ள தோணியப்பர் - ஞானப்பால் தரச் செய்த குரு வடிவம்; 3. கட்டுமலை மேலுள்ள சட்டநாதர் சங்கம வடிவம்.

இவ்வாறு சிவபெருமான் மூன்று வடிவங்களிலும் ஒரே இடத்தில் காணப்படுவது சீகாழி பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மட்டுமே. மூவர் தேவாரமும் பெற்ற புண்ணியத் தலம். அருணகிரியார் இங்கு 14 பாடல்கள் பாடியுள்ளார்.கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்து, திறந்தவெளியில் கால் பதிக்கும்போது வலதுபுறம் பிரமாண்டமாகக் காட்சி அளிக்கும் பிரம்ம தீர்த்தம் நம்மைப் புளகிதம் அடையச் செய்கிறது. இதன் கரையில்தான், சிவபெருமான், ஞானசம்பந்தருக்கு ரிஷபாரூடராகக் காட்சி அளித்தார் என்று எண்ணுகையில் மனத்திரையில் அக்காட்சி விரிகிறது.விநாயகரை வணங்கி, கொடிமரம், பலிபீடம் கடந்து கோயிலுள் செல்கிறோம். வலப்புறம் நடராஜரைத் தரிசிக்கிறோம். அன்று பிரதோஷ தினமாதலால் அம்மை, அப்பரின் உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டுத்தயாராக வைக்கப்பட்டிருந்தன.

பக்தர்களின் தேவார, சிவபுராண பாராயணத்தினிடையே பிரம்மபுரீஸ்வரர் ஒளிமயமாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் மனத்தை ஒன்றவிடாமல் ஒலிப்பெருக்கியில் உச்சஸ்தாயியில் ஏதோ பாடல் ஒன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதேநேரம் எதைப் பற்றியுமே கவலைப்படாமல் இறைவியின் திருவுருவத்தை ஒரு சிறிய பல்லக்கில் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த இரு சிறுவர்களைக் கண்டு மனம் குதூகலித்தது.கருவறையை அடுத்து தனிச்சந்நதியில் கையில் பாற்கிண்ணத்தோடு குழந்தையாக சம்பந்தப் பெருமான் காட்சி அளிக்கிறார். அருணகிரியாரின் பாடல் நினைவுக்கு வருகிறது:

‘‘உமை முலைத்தரு பாற்கொடு அருள்கூறி
    உரிய மெய்த்தவமாக்கி நலுபதேசத்
தமிழ்தனைக் கரை காட்டிய திறலோனே
    சமணரைக் கழுவேற்றிய பெருமாளே’’

முருகப்பெருமானே ஞானசம்பந்தராக அவதரித்தான் என்பது அருணகிரியாரின் நம்பிக்கை. திருஎழு கூற்றிருக்கையிலும் பின்வருமாறு பாடுகிறார்:

‘‘ஒருநாள் உமைஇரு முலைப்பால் அருந்தி
    முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
    எழில் தரும் அழகுடன் கழுமலத்
துதித்தனை’’

(கழுமலம் - சீகாழிக்கான மற்றொரு பெயர்)முருகன் தனது பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை எவரும் காணாத வண்ணம் மறைத்து வைத்துக்கொண்டு கவுணியர் குலத்தில் வந்து குழந்தையாய் பிறந்தான் என்று குடவாயில் தலப் பாடலில் கூறுகிறார்.

‘‘கருதும் ஆறிரு தோள் மயில் வேல் இவை
    கருதொணா வகை ஓர் அரசாய் வரு
    கவுணியோர் குல வேதியனாய், உமை கனபாரக்
களப பூண்முலை ஊறிய பாலுணு
    மதலையாய் மிகு பாடலின் மீறிய
    கவிஞனாய்...’’

‘கூன்பாண்டியனின் முதுகில் இருந்த கூனை தாமரை போன்ற தன் திருக்கையில் தரித்த விபூதியினால் நேர்படச் செய்தவரும், தமிழ் நூலாகிய, சிவபக்தியை உண்டாக்கும் ரிக் வேத சாரமாகிய தேவாரப் பாக்களை, பரதெய்வம் யார் என்ற சந்தேகம் தீர சம்பந்தப் பிள்ளையாராகத் தோன்றி மொழிந்தருளிய குமாரக் கடவுள்’ என்கிறார். கந்தர் அந்தாதியில் ‘‘தென்னன் அங்கத் திருக்கை அம்போருகம் கைநீற்றின் மாற்றித் தென்னூல் சிவபக்தி ருக்கு (ருக்கு - ரிக் வேதம்) ஐயம் போக உரைத்தோன்’’ என்பது அச்செய்யுள்.
‘‘பொறியுடைச் செழியன் வெப்பொழிதரப் பறிதலை
    பொறியிலச் சமணர் அத்தனை பேரும்
பொடிபட, சிவமணப் பொடி பரப்பிய, திருப்
    புகலியிற் கவுணியப் புலவோனே’’
- என்கிறார்.

சம்பந்தரை வணங்கி பிராகார வலம் வரும்போது அறுபத்து மூவர், குருபகவான், ஆண்ட விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோரைத் தரிசிக்கலாம். முருகப்பெருமானை வணங்குமுன், நடுவில் கட்டுமலை போன்ற ஓர் அமைப்பைக் காண்கிறோம். மேற்கு பிராகாரத்திலும், வடக்கு பிராகாரத்திலும் இம்மலைக்கு போக படிக்கட்டுகள் உள்ளன. உமாமகேஸ்வரர் எனும் தோணியப்பர் இங்கு மிகப்பெரிய திருவுருவம் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். ஞானசம்பந்தருக்குப் பால் கொடுக்கச் செய்த கருணையாளர். இச்சந்நதியின் தென்புறத்தில் சற்று மேலே செல்லும் படிகள் ஏறிச் சென்றால் தெற்கு நோக்கியபடி எழுந்தருளியுள்ள சட்டநாதரை தரிசிக்கலாம்.

சத்தியமூர்த்தியாகவும், அறத்தின் காவலராகவும் விளங்கும் இவரைச் சட்டநாதர் என்று கூறுவதே சரி. சட்டதிட்டங்களை உருவாக்கி அளித்துச் செயல்படுபவர் இவர். காசிக்குச் செல்பவர்கள் ஆங்காங்கே தண்டபாணியைத் தரிசிக்கலாம். இங்குள்ள பஞ்ச பைரவர்களுள் ஒருவர் தண்டபாணி. இவர் நம் தமிழகத்திலுள்ள பழனி தண்டாயுதபாணி அல்லர். அவர் ஏந்துவது கண் அளவுக்கு உயரமுள்ள நீண்ட உறுதியான கோலாகிய ஞானதண்டம். ஆனால் தண்டபாணியாகிய சட்டநாதர் கையிலுள்ளது, கையில் பிடிப்பதற்கேற்ப குறைந்த கனமுடைய ஒரு முனையும், அதிக கனமுள்ள மறுமுனையும் கொண்டதான கோலாகும். பகைவர்களை அடித்து நொறுக்கும் இதை உத்தண்டம் என்றும் கூறுவர். எனவே இவர் உத்தண்ட பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். சட்டநாதரின் எட்டு நாமங்களுள் ஒன்று தண்டபாணி என்பதாகும். இவரது திருவுருவமானது உறுதிவாய்ந்த அத்தி மரத்தினால் ஐந்தடி உயரமுள்ளதாக நிறுவப்பட்டுள்ளது.

சீகாழியில் மலை ஏறிச் சென்று தரிசிக்க முடியாதவர்களுக்காக மேற்குத் திருமாளிகைப் பத்தியில் பிரத்யக்ஷ சட்டநாதர் எழுந்தருளியுள்ளார். கோயிலிலுள்ள உற்சவ சட்டநாத மூர்த்தி, முத்துச் சட்டநாதர் எனப்படுகிறார். வலது கை சின்முத்திரை காட்ட, இடது கரத்தைத் தண்டத்தின் மீது ஊன்றி, தண்டபாணியாகக் காட்சி அளிக்கிறார். வலம்புரி மண்டபத்தின் ஊஞ்சலில் கண்ணாடி வைக்கப்பட்டு விமானத்தில் எழுந்தருளியிருக்கும் சட்டநாதரின் பிம்பம் தெரிவதாக அமைத்துள்ளனர். இதற்குச் சாயா தரிசனம் என்று பெயர்.அடுத்ததாக மலைக் குமரரை வணங்கித் திருப்புகழ் பாக்களை சமர்ப்பிக்கிறோம். ‘இரதமான’ எனத் துவங்கும் பாடலில் எழுநரகிலும் வீழும் மூடர்களின் பட்டியலைப் பாடுகிறார் அருணகிரியார்.

‘‘அரகரா எனா மூடர், திருவெணீறிடா மூடர்
    அடிகள் பூசியா மூடர், கரையேற
அறிவு நூல் கலாமூடர், நெறியிலே நிலா மூடர்
    அறம் விசாரியா மூடர் நரகேழிற்
புரள வீழ்வர்; ஈராறு கர விநோத சேய் சோதி
    புரண பூரணாகர முருகோனே!
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு
    புகலி மேவி வாழ்தேவர் பெருமாளே’’

‘அரகரா என்று கூறாத மூடர்களும், விபூதி அணியாத மூடர்களும், கடவுளைப் பூஜிக்காத மூடர்களும், கரையேறுவதற்கு வேண்டிய அறிவைத் தரும் நூல்களைப் படிக்காத மூடர்களும், தருமம் இன்னதென்று ஆராய்ந்தறியாத மூடர்களும்
நரகம் ஏழிலும் புரளும்படி வீழ்வார்கள். பன்னிரு திருக்கரங்களை உடைய விநோதனே, சேயே, ஜோதியே, நிறைந்த ஒளி பொருந்திய பூரண உருவத்தனே, முருகனே! மேகங்கள் உலவும் விண்ணுலகத்தவர் போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற சீகாழியில் வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே! காம மயக்கம் என்கின்ற மாயா சக்தி என்னை விட்டு அகலும்படியும், நான் பயனிலி ஆகாதவாறும் உன்னுடைய திருவருளைத் தந்தருள்வாயாக’’ என்ற பிரார்த்தனையையும் இப்பாடலில் முன் வைக்கிறார்.

ஒளவையார் ‘அறம் செய விரும்பு’ என்றதையும், அருணகிரியார் இப்பாடலில் ‘அறம் விசாரி’ என்று கூறியுள்ளதையும் ஒப்பிட்டு நோக்கலாம்.காழிப்பதி மேவிய குமரனின் கோலக் கழல்களைத் தந்தருளுமாறு ஒரு பாடலில் வேண்டுகிறார்:

‘‘ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
    ஊசற்சுடு நாறு குரம்பை மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்றனாலுற்றிடு கோலமெழுந்து
    ஓடித்தடுமாறி உழன்று தளர்வாகிக்
கூனித் தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
    கூளச்சடம் ஈதை உகந்து புவி மீதே
கூசப் பிரமாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்கள் அகன்று
    கோலக் கழலே பெற இன்று அருள்வாயே’’

‘அழிந்து போகும் தன்மை உடைய மாமிசம், அதன் மேல்தோல், இவற்றைச் சுமந்து நிற்கும் இத்தேகம், மாயம் மிக்கதும், அழியும் தன்மையோடு கூடியதும், தகன காலத்தில் நாறுவதும் ஆகிய மோசமான குடிசை. ஓயாமல் நான்கு வேதங்களையும் ஓதுகின்ற நான்முகனால் அடி முதல் முடிவரை அழகுடன் உருப்பெற்று எழுந்தும், ஓடியும் தடுமாறித் தளர்ச்சி அடைந்து உடல் கூனி தடியுடனே நடக்கும் இழிவைத் தரும் கோழைமிக்க குப்பை போன்றது; இவ்வுடலை விரும்புவதால் வெட்கப்படும் அளவு விதிமுறைப்படி வந்து போகும் மயக்கத்தால் நேரும் கொடிய நோய்கள் அடியோடு அழிந்து உனது அழகிய திருவடிகளையே அடைக்கலம் என்று அடியேன் அடையும்படி இன்று திருவருள்பாலிப்பாயாக,’ என்கிறார்.

‘‘சேனக்குரு கூடலில் அன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண் மிசை ஏறத்
தீரத்திருநீறு புரிந்து மீனக்கொடியோனுடல் துன்று
தீமைப் பிணி தீர உவந் குருநாதா’’
 
- என்று (‘மந்திரமாவது நீறு’ என்று பதிகம் பாடி) திருநீறு பூசிப் பாண்டியனின் வெப்பு நோய் தீர்த்த வரலாற்றைப் பாடுகிறார். (சேனைக்குரு - சமணர் குருமார்கள் ‘சேனன்’ எனும் பட்டம் தாங்கி இருந்தனர். சேனக்குரு கூடல் - அக்காலத்தில் மதுரையில் சமண குருமார்களால் அம்மதம் வெகுவாகப் பரவி இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது)

‘‘கானச் சிறுமானை நினைந்து ஏனற்புன மீது நடந்தது
காதற்கிளியோடு மொழிந்து சிலை வேடர்
காத கணியாக வளர்ந்து ஞானக் குறமானை மணந்து
காழிப்பதி மேவியுகந்த பெருமாளே’’
- என்று பாடலை நிறைவு செய்கிறார் அருணகிரியார்.

(உலா தொடரும்)