உமையம்மையை உணர்த்துகிற ஞானமே கிளி!



அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் 22

சக்தி ரகசியம்-அபிராமி அந்தாதி (தொடர்ச்சி)
முந்தைய இதழில் சொல்லப்பெற்றவையோடு, அதிக அழகு வாய்ந்த ஆடல் அறம் கற்ற மங்கையர்கள், எப்பொழுதும் செவிக்கினிய கானம் பாடும் அப்சரஸ்கள், அள்ள அள்ளக் குறையாத செல்வம், இவை அனைத்துமே
விண்ணளிக்கும் செல்வங்களாகும்.
‘அழியாமுத்தி வீடும் அன்றோ?’ -

சக்திசமய வழிபாட்டு நெறியில் முக்தி கொள்கை, ஐந்து வகையாக கூறப்படுகிறது.
1. துன்ப நீக்கம்        -    ‘ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்’ (அபிராமி அம்மை பதிகம்); 2. இன்ப பெருக்கம் - ‘ஆனந்தமாய்’ (பாடல் - 11); 3. அழிவின்மை    -‘அழியா அரசும்’ (பாடல் - 28); 4. பாதுகாப்பு -‘ஒரு தீங்கு இல்லையே’ (நூற்பயன்); 5. சலிப்பின்மை    -‘சலியாத மனம்’ (அபிராமி அம்மை பதிகம்) - இவையே ‘முத்தி’ எனப்படுகிறது. இந்த முத்தி இன்பத்தை தருபவளாக  உமையம்மை கருதப்படுகிறாள். சாஸ்திரங்கள் கேட்பதாலும் (சிரவண), நினைத்தலாலும் (மனனம்), செயல்படுதலாலும் (நிதித்யாசன), அனுபவித்தலாலும் (அனுசந்தான) மோட்சத்தை அடைய முற்படலாம்.

முத்தி என்ற சொல்லிற்கு விடுபடுதல் என்பது பொருள். துன்பங்களில் இருந்து விடுபடுதல். அப்படி இறை அருள் விடுவிக்கவில்லை என்றால் ஆன்மாக்கள் பிறப்பு,  இறப்பு என்கின்ற துன்பத்தில் உழலும். ‘ஆசைக்கடலில் அகப்பட்டு அருள் அற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்பட்ட இருந்தேனை நின் பாதம் வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து’ (பாடல் - 32)பூமியில் உடலோடு வாழும்போது பல்வேறு ஆசைகளினால் அதை அடைய முடியாத துன்பத்திலும், உடலை விட்டு ஆன்மாவாக ஆகிறபோது ‘உடம்போடு உயிர்உறவற்றறிவு மறக்கும்பொழுது’ (பாடல் - 80)மரணம், பிறவி என்கின்ற துன்பமும், சில புண்ணிய காரியங்களைச் செய்தால் சொர்க்கத்தில் சிறிது நாளும், சில பாவகாரியங்களை செய்வதால் இறந்தபின் ஆன்மாவானது நரகத்தில் சிறிது நாளும் தங்கி ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுக்க பக்குவப்படுவதற்கு பித்ரு லோகம் என்று சொல்கின்ற உலகத்தில் சில நாளும் உடலைப் பெற்று செயலுக்கு தக்கவாறு இன்பத்தையும், துன்பத்தையும் குறிப்பிட்ட காலத்திற்கு அனுபவிக்கிறது.இத்தகைய துன்பங்கள் அனைத்தினின்றும் முழுவதுமாய் விடுபடுவது முக்தி எனப்படுகிறது.  இதைப் பற்றி, ‘வையம் துரகம் மதகரி’ (பாடல் -52), ‘பாழ்நரகுக்குழிக்கோ அழுந்தும்’ (பாடல்-79), ‘வெண்பகறோம் பதம் தருமே’ (பாடல் - 91), ‘அன்பர் என்பவர்கே கணம் தரும்’ (பாடல் - 69), ‘முக்திக்கு வித்தும்’ (பாடல் - 29) ஆகிய வரிகளில்விவரிக்கிறார் பட்டர்.

 உடல் அழியுமே அன்றி ஆன்மாக்கள் அழியாது. அது என்றுமே நிலைத்துள்ளது. அந்த ஆன்மாக்கள் உடலை விட்ட நிலையிலும் உடலோடு இருக்கின்ற நிலையிலும் உடலை உருவாக்கும் இடைப்பட்ட காலத்திலும், எத்தகைய துன்பத்தை அடைகின்றது என்பதை, ‘ததியுறு மத்தியில் சுழலும் என் ஆவி’ (பாடல் - 7) என்ற வரியில் சொல்கிறார். ‘அழியா முக்தி வீடு’ என்பதில் வீடு என்பது வசிப்பிடத்தை குறிப்பது. இந்த இடத்தைப் பொறுத்தவரை ஆன்மாக்கள் வசிக்கின்ற வீடாக உடலை குறிப்பிடுகின்றார். அத்தகைய வீடு தற்காலத்தைய வாடகை வீடு, சொந்த வீடு பதவிகாலம்வரை நீடிக்கும். சில பணிக்காக அளிக்கப்படும் வீடு (குவார்ட்டர்ஸ்) இவைபோன்று அன்றி, நிரந்தரமாக துன்பமற்று, இன்பமுடன் வசிக்கத் தக்கதான உமையம்மையின் திருவடி சார்தலே அழியா முக்தி வீடு என்கின்றார்.

இத்தகைய முக்தியின்பத்தை பெறுவதுதான் தவத்தின் நோக்கம். முடிவாக மண்ணளிக்கும் செல்வம், அதனுடன் விண்ணளிக்கும் செல்வம், அதனினும் மேலான அழியா முக்தி வீடு என்று ஆன்மாக்களின் வளர்ச்சிகளை தெளிவாக குறிப்பிடுகிறார். அந்த ஆன்ம வளர்ச்சியே உபாசனையின் நோக்கமாகும் என்கிறது உமையம்மை வழிபாட்டு நூல். இத்தகைய உண்மை தகவல்களை யாராலும் தன் முயற்சியால் அடைய இயலாது. இறைவியின் அருளாலேதான் ஆன்மாவின் (தன்னைப் பற்றி) நிலைபற்றி அறிய முடியும். அப்படி அறிவித்து, தான் அறிந்ததையே அந்தாதி வடிவில் குறிப்பிடுகிறார். தன் சொந்த கருத்து அல்ல என்பதை, ‘அறிவு ஒன்றிலேன்’ (பாடல் - 81) என்பதனால் வலியுறுத்துகின்றார்.

‘பண்ணளிக்கும் சொற்பரிமள
யாமளைப் பைங்கிளியே’ -

பண் என்ற சொல்லிற்கு குறிப்பிட்ட இசையுடன்  உண்மையை புகழ்ந்து வணங்கி சொல்லப்படுகிற பாடல் என்று பொருள். இது வேதத்தையும் குறிக்கும், ஞானியர்களால் பாடப்படுகின்ற பாடலையும் குறிக்கும். ைசவம் சார்ந்த திருமுறைகளையும் குறிக்கும். அந்த வகையில் திருமுறையின் பக்தியையும், வேதத்தின் உண்மையையும், ஞானியர்களின் சொல்வன்மையையும் இணைத்து அபிராமி அந்தாதியை குறித்தது. அந்தாதியானது சரஸ்வதியின் அருளால் சொல்லப்பட்டது. ஸ்ரீவித்யையின் பொருளை எடுத்துரைக்கும் சாத்திரமும், தோத்திரமுமான அந்தாதி பாடலை அளிப்பது அருளே என்பதை நமக்கு அறிவுறுத்தவே ‘பண்ணளிக்கும் சொல்’ என்றார்.

பண்ணளிக்கும் சொல் என்பது அத்வைத கோட்பாட்டையும், பரிமளம் என்பது உமையம்மையின் துவைத கோட்பாட்டையும், பைங்கிளி என்பது விசிஷ்டாத்வைத கோட்பாட்டையும் குறிப்பிடுகின்றன. இதை சக்தி உபாசகர்கள் பயன்படுத்துவார்கள்.சக்தி உபாசனையில் அத்வைதத்தின் பயனாய் முக்தியும், துவைதத்தின் பயனாய் போகமும், விசிஷ்டாவைதத்தின் பயனாய் ஞானமும் பெறலாம்.  அத்தகைய ஞானத்தை பெறுவதற்கான நூல் குறிப்பை இவ்விடத்தில் சொல்கிறார்.‘சக்தி தத்துவ கோட்பாடானது ஒன்றாய் அரும்பி’ - அத்வைதம்; ‘உலகெங்குமாய் (வெவ்வேறு பொருள்களாய்) - துவைதம்; ‘பலவாய் விரிந்து’ - வசிஷ்டாத்வைதம் என்று மூன்று கோட்பாடுகளையும், ஒரே பாடலில் விளக்கியுள்ளதை அறியலாம். இதற்கு ‘சக்தி, திரைய. வித்யா’ என்று பெயர். தமிழில் அலைமகள், மலைமகள், கலைமகள் என்று சொல்லலாம்.

இவ்வனைத்து பொருளையும் மனதில் கொண்டே ‘பண்ணளிக்கும் சொல் பரிமளை யாமளை பைங்கிளியே’ என்றார் பட்டர்.பைங்கிளி என்பது ஆன்மாவை குறிப்பதாகும். அது தங்கியிருக்கிற கூடு, உடல் என்பதாகும். உயிரானது உடல் என்னும் கூட்டிற்குள் அடைபட்டிருக்கிறது. அந்த கூட்டைத் திறந்து, கிளியை சுதந்தரமாய் பறக்க விடுவதுதான் முக்திகோட்பாடு. அதனால்தான் மீனாட்சியின் கையில் கிளி உள்ளது.அது அம்பாளின் சரண கமலங்களில் சரணடைந்தது. அந்த கிளியின் மேல் ஆசையும் பாசமும் கொண்டவள் உமையம்மை. கிளியை சிற்ப சாஸ்திரம் ‘வேதாந்தம்’ என்று குறிப்பிடுகிறது. உடல் மனித உடலாகவும், முகம் கிளியாகவும் உள்ள முனிக்கு சுகர் என்று பெயர். இவர் தன்னைத்தான் உணர்ந்து, தன்னுள்ளே இரண்டற கலந்திருக்கின்ற இறையை உணர்ந்தவர், வியாசரின் புதல்வர்.

கிளியானது துர்க்கையின் கையில் இருந்தால் அது சோலைக் குறியீடு. உமையம்மை கிளியின் வடிவானவள். இதை லலிதா திரிசதி, ‘க்ரீங்கார பஞ்சர சுக்யை நமஹ’ என்கிறது. கிரீம் என்ற மந்திர கூட்டில் வசிக்கின்ற கிளியே என்பது பொருள்.கிளியே என்பதன் மூலம் ஆன்மாவாகவும் ஆன்ம விடுதலையாகவும், அதற்கு சாதனமான மந்திரமாகவும், அந்த மந்திரத்தைக் கொண்டு அடையக்கூடிய இறை அருளாகவும் அதன் வழி கிட்டும் அனுபவமாகவும் கூறுகின்றார் அபிராமி பட்டர்.

கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!
- பாடல் 16

இறைவியை அறிகின்ற சாதனம், இறைவியைப் பற்றிய இலக்கணம் அறிய வேண்டியதன் அவசியம், அறிந்தபின் பின்பற்ற வேண்டிய ஒழுகலாறுகள், அவற்றின் வழியே பின்பற்றுபவருக்கு உள்ளத்தில் தோன்றுகின்ற மாற்றம், மாற்றத்தின் விளைவாக உள்ள அனுபவமான துன்ப நீக்கம், இன்பப்பெருக்கம், இறவாமை இவையாவையும் சுருங்கக் கூறுகிறது இப்பாடல். இறைவிக்கு சாத்திரங்கள் மூன்று வடிவங்களைக் குறிப்பிடுகின்றன. வணங்குவோனின் உள்ளே (மனத்துள்) தோன்றும் ஒளிவடிவம், வெளியே தோன்றும் அருள் உருவ வடிவம் மற்றும் அகம் புறம் இரண்டிலும் தோன்றும் பூத வடிவம். இவற்றைப் பற்றி தெளிவாகப் பேசுகிறது இப்பாடல். இப்பாடல் ஒரு ஞான
சூத்திரமாகும்.

‘‘கிளியே’’ -


கிளி என்ற சொல் உமையம்மையை அழைக்கும் ஒலியான ‘‘ஹ்ரீம்’’ என்ற மந்திரத்தை குறித்தது. இந்த மந்திரமானது ஹ்+ர்+ஈ+ம் என்ற நான்கு எழுத்துகளைக் கொண்ட சொல். இதை ப்ரணவத்தோடு சேர்த்து உச்சரிக்கும் போது சக்தி பஞ்சாக்ஷரம் ஆகிறது. மந்திர சாத்திரங்கள் இதை ‘‘மாயா பீஜம்’’ என்றழைக்கின்றன. மாயையை நீங்குவதே ஞானம். மாயையை நீக்கும் சாதனமே சக்தி பஞ்சாக்‌ஷரம்.

சக்தி பஞ்சாக்‌ஷரத்தை உச்சரித்து மாயை நீக்கி ஞானத்தை பெறுவதால், துன்பம் நீங்கி இன்பம் அடைந்து இறவாநிலை எய்துவதே அத்வைத சித்தாந்தம் என்ற சக்தி வழிபாட்டு நெறியாகும். இதையே ‘ஹ்ரீம் கார பஞ்சர சுக்யை நம:’ என்கிறது லலிதா த்ரிசதி. ‘ஹ்ரீம்’ என்ற கூட்டில் வாழும் கிளியே என்பது இதன் பொருள்.இறையருளானது (சக்தியானவள்) உணர்த்தினாலன்றி உணர முடியாதது. கிளி இயல்பாக வேதம் கூறாது. பயிற்சியினால் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கிளி என்பது ஆன்மாக்களுக்கு இறையருளினால் உணர்த்தப்படும் ஞானத்தின் வடிவாகும்.

ஆன்மா ஒன்றைத் தவிர வேறு எங்கும், வேறு எதையும் காணாதவர் சுகர் மகரிஷி. இவர் கிளிமுகம் கொண்டவர். இதன்படி கிளி என்ற சொல் எங்கும் பரந்திருக்கிற ஒரே ஆன்மாவை குறிக்கும்.சாரதாம்பாள் கையில் உள்ள கிளி வேதத்தைக் கற்றது, வேதத்தை சொல்லும். 1. உமையம்மையை அழைக்கும் மந்திரம் ‘ஹ்ரீம்’. மந்திரத்திற்குள் மறைந்திருக்கிற பொருளாகிய உமையம்மையே கிளி. மந்திர ஒலியையும் அதன் பொருளாகிய உமையம்மையையும் உணர்த்துகிற ஞானம், கிளி. ஞானத்தின் வழியே தான் வேறு, அது வேறு அல்ல என்று தானே அதுவாய் போன அனுபவமே கிளி. தான் உணர்ந்த ஞானத்தை பிறருக்கு உணர்த்துவதும் கிளியே, உமையம்மையே குருவடிவாய் திகழ்கிறார் (மதுரை மீனாட்சி)

‘‘கிளைஞர்’’ -

இந்த உறவானது மூன்று வழியாக வந்த தொடர்பை மட்டுமே குறிக்கும் - தந்தை வழி, தாய் வழி, தன் வழி. அந்த வகையில் உமையம்மையின் உறவினர்கள் யாவர்?‘கிளைஞர்’ என்ற சொல்லை இரண்டு நோக்கில் பார்க்கவேண்டும் - வணங்கப்படுகிற இறைவியின் கிளைஞர், வணங்குகிற பக்தனின் கிளைஞர்.வணங்குகிற இறைவியை சார்ந்து, அபிராமி அம்மையின் கணவர் சிவபெருமான் என்பதை ‘ஐயன் திருமனையாங்’(பாடல் 52), ‘எங்கள் சங்கரனார் மனை மங்களமாம்’ - (பாடல் 44) என்ற வாக்கினால் தெளிவாக உணரமுடிகிறது.

அபிராமியின் உடன் பிறந்த உறவு மகாவிஷ்ணு என்பதை ‘செங்கண்மால் திரு தங்கச்சியே’ (பாடல் 61), ‘என்றும் மூவா முகுந்தர்கு இளையவளே!’ (பாடல் 13), என்ற வரிகள் சொல்கின்றன.அபிராமி அம்மையின் தகப்பன் மலையரசன் என்பதை ‘இமவான் பெற்ற கோமளமே’ (பாடல் 95), ‘தவப்பெருமார்க்கு’ (பாடல் 65) என்பதால்அறியலாம். தடக்கையும் - கணபதி, செம்முகனும் - பைரவர், மூதறிவு - ஐயனார், மகன் - வீரபத்ரர் ஆகியோர் உமையம்மையின் கிளைஞர்களாக அபிராமிபட்டர் குறிப்பிடுகின்றார். ‘முன்நான்கிரு மூன்றெனத் தோன்றிய’ (பாடல் 65)பட்டர் உமையை தாயாகவும், சிவபெருமானை தந்தையாகவும், கணபதியை உடன்பிறந்தவனாகவும் எண்ணி வணங்குகிறார். ‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’ (நூற்பயன்)கிளைஞர் என்ற சொல்லிற்கு தோழர் என்று பொருளுரைக்கிறது மதுரை பேரகராதி. தொழுபவரே தோழர் எனப்பட்டனர். ‘தோத்திரம் செய்து தொழுது’ (பாடல் 67), ‘கூட்டியவா என்னை தன்னடியாருடன்’ (பாடல் 80) என்பதால் உமையம்மையின் அடியவர்கள் அனைவரும் கிளைஞர்களே!

‘‘மனத்தே கிடந்து’’ -

கணவனாகிய சிவபெருமான், உடன்பிறந்தவனாகிய விஷ்ணு, தந்தையாகிய இமவான், மகன்களாகிய கணபதி, வீரபத்ரர், பைரவர், முருகன், ஐயனார் இவர்கள் அனைவரோடும் உமையம்மையை வழிபடுகிற அடியவர்களின் மனத்திலும், எப்பொழுதும் உமையம்மை இருக்கிறாள்.

‘கிளர்ந்து ஒளிரும் ஒளியே’ -


கிளைஞர் மனத்தில் மட்டுமே கிளர்ந்து ஒளிரும் ஒளியாகத் தோன்றுகிறாள் உமையம்மை. மற்றவர்களுடைய மனதில் மறைந்து தோன்றுகிறாள். வணங்காதவர்களிடத்து மறைந்தும், வணங்கிய கிளைஞர்களிடத்து விளங்கியும் தோன்றுவதால் வணங்கியவர்கள் இன்புற்றும், வணங்காதவர்கள் அறியாமை இருளில் மூழ்கியும்துன்புறுகிறார்கள். உமையம்மைக்கு பாரபட்சமில்லை. எல்லோரும் வணங்கி அவளுக்கு உறவாகலாம். ஆனால் அவர்களிடத்து இருக்கும் அறியாமை இருளே துன்புறுத்துகிறது. துன்புறுத்துவது உமையம்மையல்ல என்பதை நன்கு உணர வேண்டும்.

‘‘ஒளிரும் ஒளியே’’ -


ஒளிராத ஒளி என்று ஒன்று இல்லை, ஒளி என்றாலே ஒளிரும். ஒரு வீட்டில் ஒருவனுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் உள்ளன. ஆனால் அந்த வீடு முழுவதுமாய் இருட்டாக இருக்கிறது. வெறும் இருள் மட்டுமே விளங்கி தோன்றுகிறது. அந்த நிலையில், எல்லாப் பொருளும் அவனைச் சூழ இருந்தும், இருளால் அதை அனுபவிக்க முடியாமல் துன்புறுகிறான். இது கிளைஞர் அல்லாதவர்களின் நிலை.கிளைஞர் வீட்டில் விளக்கை ஏற்றி ஒளிர்விட செய்தல் மூலமாக அந்த வீட்டிலுள்ள அனைத்து பொருள்களையும் பார்த்து, அனுபவித்து மகிழ முடியும்.அந்த ஒளியாக திகழ்கிறவள் உமையம்மை. ஏற்றப்படாத விளக்கு அறியாமையை தரும், ஏற்றப்பட்ட விளக்கு, ஒளியை தரும். கிளைஞர்கள் அதை ஒளிர வைத்திருக்கிறார்கள்.

‘‘ஒளிரும்’’ -


ஒளிர்கின்ற பொருள் சூரியன், சந்திரன், தீ. இவை புறத்திலிருந்து ஒளிர்பவை. மனிதனுள் ஒளிர்பவை மூன்றாகும் - கண், மனது, அறிவு. இவை அகத்திலிருந்து ஒளிர்பவை. கண், மனது, அறிவு இவை ஒளிருமா? கண்ணில்லாமல் ஒளிபொருள் எதையும் காண முடியாது. ஒளியிருந்தும், அந்தக் கண் திறந்தேயிருந்தாலும், மனதோடு தொடர்பில்லை என்றால் அந்த ஒளியை அறியமுடியாது. அப்படி உணர்வாக பதிவு செய்யப்பட்டால்கூட, அறிவின்றி மனதாலும் ஒளியை அறிய முடியாது.

உதாரணமாக, வடமொழியில் ஒரு செய்யுள் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். புற ஒளியில்லாமல் இருட்டில் ஓலைச் சுவடியை படிக்க முடியாது. அந்த ஒளியிருந்தாலும், மனம் அதிலே ஒன்றாமல் சுவடியை படிக்க முடியாது. மனது அப்படி ஒன்றி சுவடியை கண்டாலும், க்ரந்த எழுத்தை பயில தெரியாதவர்களால் அதைப் படிக்க முடியாது. க்ரந்த எழுத்து தெரிந்து, மனம் ஒன்றிப் படித்தாலும், அந்த செய்யுளின் சொல்லிற்கு பொருள் தெரியாவிட்டால் பயனில்லை.

ஆகவே, அகத்திலிருந்து ஒளிர்வது கண், மனது, அறிவு - இது மூன்றுமே இறைவி. புறத்திலிருந்து ஒளிர்வது சூரியன், சந்திரன், தீ - இவையும் இறைவியே. ‘அளிய என் கண்மணியே’ (பாடல் 23), ‘என் தன் நெஞ்சகமோ’ (பாடல் 20), ‘என் அறிவாய்’ (பாடல் 11) என்று அக ஒளியை விளக்குகிறார் பட்டர்.‘உதிக்கின்ற செங்கதிர் (பாடல் 1), ‘அமுதம் நிறைகின்ற வெண்திங்களே’ (பாடல் 20), ‘கனலும்’ (பாடல் 68) என புற ஒளி இரண்டையும் உமையம்மையாகவே குறிப்பிடுகின்றார்.அதாவது ஒளிரக்கூடிய இந்த பொருள்கள் எல்லாம் உமையம்மை என்ற ஒருத்தியாலேயே ஒளிர்கிறது.

‘‘ஒளிக்கு இடமே’’ -


ஒளிர்கின்ற சூரியன், சந்திரன், நெருப்பு, கண், மனம், அறிவு ஆகிய அனைத்துக்கும் இடமாக இருப்பது உமையம்மையே. சூரியன், சந்திரன், தீ இவற்றிற்கு இடமாக இருப்பது உலகம் - அகிலாண்டம். ‘அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர் திரு மேனியை’ (பாடல் 82).ஒளிரும் ஒளிக்கு இடமாகவும் உமையம்மையே இருக்கிறாள். இவ்வுலகெங்குமாய் நின்றாய்’ (பாடல் 56).உலகிலுள்ள அனைத்து பொருளுக்கும் இருப்பிடமான, இவையெல்லாவற்றிற்கும் இருப்பிடமாகத் தானே விளங்குகிறாள் என்பதை விளக்கவே ‘ஒளிரும் ஒளிக்கு இடமே’ என்கிறார்.

‘கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே’ என்று ஒன்றாகச் சேர்த்து பொருள் கொண்டால் மனிதனின் உடலை இடம் என்றும் அதை படைத்து, காத்து, மறைத்து, அருள்பவள் உமையம்மையே என்கிறது லலிதா ஸஹஸ்ரநாமம். சேத்ர - உடலானவள், சேத்ரக்ஞ பாலின்யை - உடலை இடமாக கொண்ட ஆன்மா.ஆன்மாவை அதனுள் இருந்து உமையம்மை பாதுகாக்கிறாள். இதிலிருந்து உயிருக்கு இடம் உடல், உடலுக்கு இடம் உயிர், உயிருக்கு இடம் உமையம்மை என்பதை நன்கு அறியலாம்.ஆகாயம், நீர், நெருப்பு, நிலம், காற்று இவற்றிற்கு இருப்பிடமாய் இருப்பது உமையே. இதையே வேதம், ‘கொளரீ மிமாய’ (கௌரியானவள்), ‘பரமேவ்யோமன்’ (மேலான ஆகாயமானவள்) என்கிறது. ‘கனலும், புனலும், வெங்காலும், படர் விசும்பும்’ (பாடல் 68) என்ற வரிகளினால் அறியலாம்.

‘‘எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே’’ -


வெளி என்ற சொல் வெற்றிடத்தை (ஆகாயம்) குறிக்கும். சாக்த தந்திரங்கள் எனப்படும் உமையம்மையின் வழிபாட்டு நெறியை விளக்கி கூறும் நூல்கள் ஆகாயம் ஐந்து வகை என்கின்றன: 1. ஆகாசம், 2. மகாகாசம், 3. கடாகாசம், 4. தகராகாசம், 5. சித்தாகாசம்.இந்த வெளியை அனுபவத்தில் யார் உணர்கிறார்களோ அவர்கள் உமையம்மையின் வடிவமாகவே ஆகிறார்கள். இதுவே சாயுஜ்யம். அதாவது இரண்டற கலத்தல். ஆகாசத்தை அறிவது, உணர்வது, அனுபவிப்பது என்பது ஞானம், போகம், மோக்ஷம் மூன்றையும் பெற்றுத் தரும். இந்த ஆகாச வடிவே உமையம்மையின் இயல்பு தோற்றம் என்கின்றன சாத்திரங்கள். இந்த ஐந்து ஆகாசமும், ஆன்மாவிலுள்ள ஐந்து மலத்தை நீக்கவல்லது (ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி). இந்த மலங்கள் நீக்கப் பெற்று ஆன்மா இயல்பு தன்மையடையும். அதுவே உண்மையுமாம், அதுவே இறைவியுமாம் என்கிறது தந்திரம்.ஆகாசம் என்பது உடலை பொறுத்தவரை இந்த உலகத்தில் அது எடுத்து கொண்டிருக்கிற இடத்தை மட்டுமே குறிக்கும்.மகாகாசம் நீர், நெருப்பு, காற்று இவற்றின் இடமாக உள்ளது.கடாகாசம், உடலுக்குள் இருக்கும் இடப்பரப்பு.

உடலானது இயக்கத்தை உடையது. இயக்கம் அடைய ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இடம் தேவைப்படுகிறது. உடலுக்குள் ரத்த ஓட்டம் போன்ற செயலுக்கு அதனுள் இருக்கும் சிறுவெளியே காரணம். அந்த வெளி இதயத்தில் இருப்பதாக குறிப்பிடுகின்றார்கள். அந்த வெளியானது திடப்பொருள்களுக்கு உள்ளேயும், உடலுக்கு உள்ளேயும், மிக சிறியதாக இருப்பதால் அதையே காரணமாகக் கொண்டு சிறியவெளி என பொருள்படும்படியும் தகராகாசம் எனவும் கூறப்படுகிறது.சித்தாகாசம் என்பது தகராகாசத்தை விடச் சிறியதாகும்.

இது தகராகாசத்திற்கு உள்ளேயே இருக்கிறது. இதுதான் அறிதல், நிலைத்தல், அனுபவித்தல் ஆகியவற்றின் அடிப்படையான சித்தாகாசம் எனப்படுகிறது.மேற்கண்ட ஐந்து ஆகாசமும் ஒன்றைவிட ஒன்று சிறியதானாலும், ஒன்றுக்குள் ஒன்று அடங்குவது, ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது, ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானது.இவற்றில் மனிதனுக்கு வெளியே உள்ளவை மகாகாசம், ஆகாசம்; உள்ளே உள்ளவை கடாகாசம், தகராகாசம், சிதாகாசம்.உமையம்மை இவை ஐந்து ஆகாசமாகவும் இருக்கிறாள்.

‘எண்ணில் ஒன்றுமில்லா வெளியே’ என்றதனால் மகாகாசத்தையும், ஆகாசத்தையும் நீக்கி மனிதன் உடலுக்கு உள்ளே உள்ள கடாகாச, தகராகாச, சித்தாகாச என்ற மூன்று வெளியையே இச்சொல்லால் குறிப்பிடுகிறார். இந்த மூன்று வெளியிலும், உமையம்மை இச்சாசக்தி (விழைவு ஆற்றல்), க்ரியா சக்தி (செயலாற்றல்), ஞான சக்தி (அறிவாற்றல்) என்ற வடிவங்கள் கொண்டு திகழ்கிறாள்.அப்படி திகழ்வதனால் மட்டுமே மனிதன் ஆசை உடையவனாகவும், செயல் உடையவனாகவும், அறிவுடையவனாகவும் திகழ்கின்றான். இம்மூன்றும் இணைந்ததே ஆன்மாவின் இயல்பு என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன. ‘இச்சாசக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி ஸ்செரூபின்யை நம:’, ‘ஆத்ம வித்யாயை நம:’ என்ற லலிதாஸஹஸ்ர நாமாக்கள் உறுதி செய்கின்றன.

‘‘வெளி முதற் பூதங்களாகி விரிந்த அம்மே’’ -


வெளி முதற் பூதங்கள் என்பது ஆகாயத்தை முதன்மையாக கொண்ட பார், புனல், கனல், வெங்கால், படர்விசும்பு என்ற, ஆகாயத்திலிருந்து தோன்றிய வாயுவும், வாயுவிலிருந்து தோன்றிய நெருப்பும், நெருப்பிலிருந்து தோன்றிய நீரும், நீரிலிருந்து தோன்றிய உலகம் என்ற வேதக் கருத்துப்படி உமையம்மையின் ஐந்து வடிவங்களை விளக்குகிறார்.பாரானது  கண், காது, மெய், வாய், மூக்கால் உணரக்கூடியது; புனலானது கண், காது, மெய், வாயால் உணரக்கூடியது; கனலானது கண், காது, மெய்யால் உணரக்கூடியது; வெங்காலானது காதாலும், மெய்யாலும் உணரக்கூடியது; படர் விசும்பானது காதால் மட்டுமே கேட்கக்கூடிது (ஊறு ஒலி)இவை ஐந்தையுமே உணரும் உணர்வாகவும், உணர்த்தும் கருவியாகவும், உணரப்படும் பொருளாகவும் உமையம்மையே இருக்கின்றாள்.

பூதத்திற்குரிய எழுத்துகள் ஐந்து என்கிறது மந்திர சாத்திரம். உமையம்மைக்கு மந்திரங்களை பயன்படுத்தி செய்யும் பூஜை முறையில் உள்ள உபசாரம் ஐந்து. மேலும் உமையம்மையின் மூல மந்திரத்திற்குரிய எழுத்துகள் ஐந்து, எழுத்து ஐந்தையும் தியானிக்க பயன்படும் உருவம் ஐந்து. அதன் வழியாக மனிதன் பெறும் பயன் ஐந்து. பயனடைந்த பின்னே முக்தி பெறும் நிலை ஐந்து. இவையெல்லாம் ஐந்தாக இருப்பதை, அவை ஒன்று சேர்வதை, மீண்டும் பிரிவதை மிகத் தெளிவாக கூறாமல் சூத்திரமாகவே கூறியுள்ளார் என்பதை பூதங்களாகி ‘விரிந்த’ என்ற வார்த்தையால் நாம் அறிந்து கொள்ளலாம்.

உமையாகிய ஒருத்தியே பார் முதல் பூதங்களாகி விரிந்த ஐந்து வடிவமாகவும் உள்ளாள் என்பதை ‘ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து’ (பாடல் 56) என்றும், ‘பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும் ஊரும் முருகு சுவை ஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி’ (பாடல் 68) என்றும் விளக்குகிறார். ஒன்றாக இருந்து பின் பலவாக விரிந்து மீண்டும் ஒன்றாக ஆவாள் பராசக்தி என்கிறது சாக்த சித்தாந்தம். அவள் ஒன்றாக இருக்கிறபோது தனியாகவும், பலவாக விரிகிற போது உலக உயிர்கள் அனைத்தினுள்ளும், மீண்டும் ஒன்றாக சேருகிறபோது பக்தனுக்குள் உமையம்மையும், உமையம்மைக்குள் பக்தன் இரண்டறக் கலக்கும்போது மோக்ஷத்தையும் பலவாக விரிந்தபோது ஞானத்தையும், அவள் தனியாக ஒன்றாக இருக்கும்போது போகத்தையும் அருளவல்லவளாய் இருக்கிறாள்.

(தொடரும்)