இதயம் கசிந்த அஞ்சலி



மனித நேயத்தை பாராட்டுபவர் யாராக இருந்தாலும் சரி, சமத்துவத்தைப் பின்பற்றுபவர் யாராக இருந்தாலும் சரி, பொதுநல நோக்கைக் கொண்டிருப்பவர் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது நன்மதிப்புக் கொண்டிருந்தவர், கலைஞர் கருணாநிதி அவர்கள். இலக்கியம் எந்தப் பிரிவினை விவரித்தாலும், அந்த வர்ணனையில் மனிதாபிமானம் மிகுந்திருக்குமானால் அதைக் கொண்டாடவே செய்யும் பரந்த மனதுக்காரர் அவர். அந்த வகையில்தான் ராமானுஜ காவியத்தை அவர் எழுத முன்வந்தார்.
 
ராமானுஜரின் கொள்கைகள் தனக்கும் ஏற்புடையது என்ற எண்ணத்தில் விளைந்த அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டாதோர் யாருமில்லை. அரசியல், இலக்கியம், நாடகம், சினிமா என்று பல்முனை சாதனைகளைப் புரிந்த அந்தப் பெரியவர், தனக்கிருந்த ஆர்வத்தை, தன் கருத்துக்கு முரண்படாத ஆன்மிகத்திலும் காட்டிய பெருந்தகை ஆவார். கோபாலபுர வாசம், ராமானுஜ நேசம், ஏகாதசி மரணம் என்றெல்லாம் பார்க்கும்போது, ஆன்மிகமும் இவரது இழப்பு குறித்து ஆழ்ந்த வருத்தம் கொள்கிறது, அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகிறது.