அனந்தனுக்கு 1000 நாமங்கள்



81. அநுத்தமாய நமஹ (Anutthamaaya namaha)

மந்தாகினி நதிக்கரையிலுள்ள சித்திரகூடத்தில் ஏகாந்தமான பர்ணசாலையினுள்ளே ராமனின் மடியில் தலைவைத்தபடி சீதை சயனித்திருந்தாள்.அப்போது இந்திரன் மகனான காகாசுரன் சீதையின் மேல் மோகம் கொண்டு அவள் மார்பில் வந்து கொத்தினான். சயனித்திருந்த சீதை எழுந்தாள். அது ஒரு சாதாரண காகம் என்று கருதி, ஒரு கல்லை எடுத்து அதை அடித்துத் துரத்தினாள்.“பாபம், அந்தக் காகத்தை விட்டு விடு!” என்று சொன்ன ராமன், சீதையின் மடியில் தலைவைத்து உறங்கத் தொடங்கினான். ராமன் உறங்குவதைக் கண்டதும் மேலும் துணிச்சல் கொண்ட காகம், மீண்டும் சீதையின் மார்பில் வந்து கொத்தியது. ஆனால் இம்முறை சீதை அசையவில்லை.

தன் அசைவால் ராமனின் உறக்கம் பாதிக்கப்படுமோ என்று எண்ணிய அவள் வலியையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அவளது மார்பில் இருந்து வடிந்த ரத்தம் ராமனின் முகத்தில் தெறித்து ராமன் விழித்தெழுந்தான். சீதையின் மார்பில் இருந்து ரத்தம் பெருகி வருவதைக் கண்டு, “உறங்கிக் கொண்டிருந்த ஐந்து தலை நாகத்தோடு விளையாடியவன் யார்?” என்று கோபத்துடன் கேட்டான். தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் அமர்ந்து கொண்ட காகம், அங்கிருந்தபடி ராமனுக்கு அழகு காட்டியது. ராமன் கையில் அப்போது ஆயுதம் ஏதுமில்லை என்ற தைரியத்தில் காகம் அவ்வாறு செய்தது. ஆனால் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ஆயிற்றே.

தான் சயனித்திருந்த தர்ப்பைப் பாயில் இருந்து ஒரு புல்லை உருவிய ராமன், அதில் பிரம்மாஸ்திரத்தை ஜபித்துக் காகத்தின் மேலே ஏவினான். காமத்துடன் சீதையைப் பார்த்துக் கொண்டிருந்த காகத்தைப் பிரம்மாஸ்திரம் நெருங்கிய அளவில், அதன் வெப்பம் தாங்காமல் காகம் பயந்தோடத் தொடங்கியது. காகம் ஓடியதால் பிரம்மாஸ்திரம் அதைத் துரத்துகிறது, காகம் நின்று திரும்பிப் பார்த்தால் பிரம்மாஸ்திரமும் நின்று விடுகிறது. அதிலிருந்து தப்பிக்க வழி தெரியாத காகம், தன் தந்தையான இந்திரனின் இருப்பிடத்துக்குச் சென்று அடைக்கலம் கேட்டது.

“இங்கே வராதே. உனக்கு அடைக்கலம் கொடுத்தால், இந்திர லோகமே ராம பாணத்துக்கு இரையாகி விடும்!” என்று சொல்லிக் கதவடைத்தான்  இந்திரன். மற்ற தேவர்களின் உலகங்களுக்கெல்லாம் சென்று அடைக்கலம் தேடிய காகத்துக்கு யாரும் அபயம் அளிக்கவில்லை. எத்திசையும் உழன்றோடி இளைத்து, இறுதியில் ராமனின் திருவடிகளிலேயே வந்து விழுந்தது. அதிலும், கால்கள் இரண்டையும் ராமனை நோக்கி நீட்டியபடி வந்து விழுந்தது. தன்னிடம் பிழை இழைத்ததையும் பொருட்படுத்தாத சீதை, அந்தக் காகத்தின் மேல் கருணை கொண்டு, அதன் தலை ராமனின் திருவடிகளில் படும்படிக் கிடத்தி,

“இதோ சரணாகதி செய்த இந்தக் குழந்தையை மன்னித்தருளுங்கள்!” என்று வேண்டினாள். “இவனை மன்னிக்கிறேன். இருப்பினும் இவனை நோக்கி எய்த என் பாணத்துக்கு இலக்காக ஏதோ ஒன்றைத் தந்தாக வேண்டுமே!” என்றான் ராமன்.“தவறான பார்வை உடையவனான எனது கண்களுள் ஒன்று இந்த பாணத்துக்கு இரையாகட்டும்!” என்று காகாசுரனே கூற, ராம பாணம் அவனது வலக்கண்ணைப் பறித்தது. அவன் மேல் கருணை கொண்ட ராமன், “உனது வலக்கண் பறிபோனாலும், இடக்கண்ணாலேயே இருபுறமும் பார்க்கும் ஆற்றல் உனக்கு உண்டாகட்டும்!” என வரமளித்தான்.

சீதை, “இனி மக்கள் தங்கள் முன்னோர்களுக்கான பித்ரு கார்யம் செய்யும்போது, காகத்துக்குச் சாத உருண்டை வழங்குவார்கள்!” எனக் காகாசுரனுக்கு வரமளித்தாள். “பெரும் தீங்கு இழைத்த என்மீது கருணை காட்டிய சீதையைப் போலக் குணமுடையவள் எவள்?சரணம் என்று வந்தமையால் பாவியான என்னையும்  மன்னித்தருளிய ராமனைப் போன்ற சீலன் எவன்?” என்று காகாசுரன் விசாரம் செய்யத் தொடங்கினான்.‘கா’ என்றால் வடமொழியில் ‘எவள்’ என்று பொருள். ‘க’ என்றால் ‘எவன்’ என்று பொருள். சீதையைப் போன்றவள் எவள்?

ராமனைப் போன்றவன் எவன்?- கா? க?, கா? க? என்று விசாரம் செய்யத் தொடங்கியதால் அவனையும் அவன் இனத்தையும் ‘காக’ என்றே மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். அதுவே ‘காகம்’ என்றானது. காகாசுரன் எவ்வளவு தேடியும், சீதா ராமர்களுக்கு நிகராக மற்றொருவரைக் காண முடியவில்லை. இப்படி ஒப்புயர்வற்றவராகத் திருமால் விளங்குவதால், அவரை வேத வியாசர் ‘அநுத்தமஹ’ என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 81-வது திருநாமத்தில் அழைக்கிறார். “அநுத்தமாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் ராமனின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.

82. துராதர்ஷாய நமஹ (Duraadharshaaya namaha)

“இனி நானே களத்தில் இறங்குகிறேன்!” என்ற ராவணன் வானர சேனையின் முன் வந்து நின்றான்.நீலன் என்ற வானர வீரன் ராவணனோடு போர்புரிய முன்வர அவன்மீது பாணத்தைச் செலுத்தினான் ராவணன்.ஆனால் நீலன் திடீரென்று சிறிய வடிவம் எடுத்துக் கொண்டதால், பாணம் அவன் தலைக்கு மேல் சென்றுவிட்டது. கடுங்கோபம் கொண்ட ராவணன் தீயைக் கக்கும் ஆக்னேய அஸ்திரத்தை அவன் மேல் ஏவினான். ஆனால் அந்த அஸ்திரம் நீலனுக்குப் பனிப்பொழிவுபோல குளுமையாக இருந்தது. அப்போது அங்கு வந்து ஆஞ்சநேயர் ராவணனைப் பார்த்து, “ஏ முட்டாளே! நீலன் அக்னி பகவானின் மகன்.

தந்தையே மகனைச் சுடுவாரா?என்னுடன் போரிட வா!” என்றழைத்தார். ராவணனும் அநுமனோடு மல்யுத்தம் புரியத் தயாரானான். வானரர்கள் பார்வையாளர்களாகச் சுற்றி அமர்ந்து கொண்டார்கள்.ஆஞ்சநேயர் தனது முழங்கையால் ராவணனைத் தாக்கினார். ராவணன் சுருண்டு கீழே விழுந்தான்.“உன்னைப் போன்ற ஒருவனுடன் போர் புரிவதை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்!” என அநுமனின் வீரத்தைப் பாராட்டினான் ராவணன். மீண்டும் எழுந்த ராவணன் தன் முட்டியால் அநுமனின் மார்பில் தாக்கினான். அந்தப் பலமான அடியால் அயர்ந்து போன அநுமன், மார்பில் கைவைத்தபடி அமர்ந்தார்.

அதைக் கண்டதும் மற்ற வானர வீரர்கள் தளர்ந்து போய் நாலாப் புறங்களிலும் ஓடத் தொடங்கினர்.“யாரும் அஞ்ச வேண்டாம்!அந்தப் பத்துத் தலை மிருகத்தை நான் வதைக்கிறேன்!” என்று அவர்களைத் தேற்றிய லக்ஷ்மணன், ராவணனுடன் போர் புரிந்தான். “நாம் இவனை மிகவும் குறைத்து மதிப்பிட்டு விட்டோம். இவன் நாம் எதிர்பார்த்ததை விடப் பெரிய வீரனாக இருக்கிறானே!” என்று லக்ஷ்மணனின் வீரத்தைக் கண்டு வியந்தான் ராவணன். சாதாரண அஸ்திரங்களால் லக்ஷ்மணனை வீழ்த்த முடியாமையால், பரமசிவன் தனக்குத் தந்த வலிமைமிக்க அஸ்திரம் ஒன்றை லக்ஷ்மணன் மேல் ஏவினான்.

அதைச் சரியாகக் கவனிக்காத லக்ஷ்மணன் அந்த அஸ்திரத்தால் தாக்கப்பட்டு மயங்கிக் கீழே சாய்ந்தான். வானரர்கள் கலங்கி நாலாப் புறங்களிலும் சிதறி ஓடினார்கள். சீதையைவிட லக்ஷ்மணனிடம் ராமன் அதிகமான அன்பு வைத்திருக்கிறான் என்று அறிந்திருந்த ராவணன், லக்ஷ்மணனைச் சிறைப்பிடிக்க எண்ணினான். தன் இருபது கைகளாலும் லக்ஷ்மணனைத் தூக்க நினைத்தான். ஆனால் ராவணனால் லக்ஷ்மணனை அசைக்கக்கூட முடியவில்லை. “இப்போது எனது முறை!” என்று சொன்ன அநுமன், ராவணனைத் தாக்கிவிட்டு லக்ஷ்மணனை எளிதாகத் தூக்கிச் சென்று பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்தார்.

இச்சம்பவத்தைக் கைலாயத்தில் இருந்து பரமசிவனும் பார்வதியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்வதி, “ஸ்வாமி! ராவணனால் லக்ஷ்மணனை அசைக்கக்கூட முடியவில்லை. ஆனால் அநுமன் எளிதாக அவனைத் தூக்கிச் சென்றானே! அது எப்படி?” என்று வினவினாள். “தேவீ!நாம் இருவரும் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்கிறோமே.அதில் 82வது திருநாமம், ‘துராதர்ஷஹ’ என்பது.‘துராதர்ஷஹ’ என்றால் யாராலும் அசைக்கமுடியாதபடி விளங்குபவர் என்று பொருள். ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணனுக்குத் திருமாலின் அம்சமும் உண்டு. அதனால் ராவணனால் லக்ஷ்மணனை அசைக்கவே முடியவில்லை!” என்றார் சிவன்.

“அநுமன்?...” என்று இழுத்தாள் பார்வதி. “ராமனுக்கு உதவி செய்ய நானேதான் அநுமனாகப் பூமியில் பிறந்துள்ளேன். தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லி வருவதால், லக்ஷ்மணனைத் தூக்கும் ஆற்றலைத் திருமால் எனக்கு வழங்கினார்.அதனால் என் அம்சமான அநுமன் எளிதில் லக்ஷ்மணனைத் தூக்கிச் சென்றான்!” என்று விடையளித்தார் சிவபெருமான். யாராலும் அசைக்கப்பட முடியாதவராகத் திருமால் விளங்குவதால், ‘துராதர்ஷஹ’ என்று போற்றப்படுகிறார்.“துராதர்ஷாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், வாழ்வில் வரும் மன அழுத்தங்களால் அசைக்கப்படாதவர்களாக ஆனந்தமாக வாழும்படித் திருமால் அருள்புரிவார்.

83. க்ருதக்ஞாய நமஹ (Kruthagnyaaya namaha)

இந்திரனின் தலைநகரான அமராவதிப் பட்டணத்தில் ஓடும் ஆகாச கங்கையிலிருந்து திடீரென ஒரு பெண் தோன்றி, நேராக இந்திரனின் அருகே  சென்றாள். அவனைப் பார்த்துப் புன்னகைத்து, தன் பின் வரும்படி அவனுக்குச் செய்கை காட்டினாள். இந்திரன் அவளைப் பின் தொடர்ந்தான்.அவள் பரமசிவனின் இருப்பிடமான கைலாயத்தை அடைந்தாள். “பரமசிவன் பார்வதியோடு தனிமையில் இருக்கிறார். சற்றுப் பொறுங்கள்!” என்றார் நந்திகேஸ்வரர். ஆனால் அப்பெண், “இதென்ன சிவனின் உலகமா?அல்லது மாட்டுத் தொழுவமா?இந்த மாடு தான் சிவனுக்குக் காவலாளியா?” என்று சொல்லிக் கொண்டே நந்தியைப் புறக்கணித்து விட்டுக் கைலாயத்தின் உள்ளே நுழைந்தாள்.

இந்திரனும் அவளைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றான். பரமசிவனும் பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்திரனும் அந்தப் பெண்ணும் வந்ததை விளையாட்டில் ஆழ்ந்திருந்த அவர்கள் கவனிக்கவில்லை.“தன் இருப்பிடத்தைத் தேடி வந்தவர்களை எப்படி உபசரிக்க வேண்டும் என்று கூட பரமசிவனுக்குத் தெரியவில்லையே!” என்று கோஷமிட்டான் இந்திரன். “ஓ இந்திரா!நீயா? வா! வா!” என்றழைத்தார் பரமசிவன். அவரது அருகே இந்திரன் செல்லுகையில், தரை பிளந்தது. பூமிக்குள்ளே இந்திரன் சென்றான். அங்கே தன்னைப் போலவே நால்வர் சிறைக்கைதிகளாக இருப்பதையும் கண்டான் இந்திரன்.

“பெண்ணே! இந்த ஐவரும் இந்த நிலைக்கு உன்னால் தான் ஆளானார்கள்! நீ பெண் என்பதால் உன்னை இதுவரை மன்னித்தேன்.இனி பொறுக்க முடியாது. நீயும் இவர்களுடன் சிறைக்குச் செல்!” என்று சொல்லி அவளையும் அந்த ஐவருடன் சிறையிலிட்டார் சிவபெருமான். “யார் இவள்? எதற்காக இவர்களை இந்தப் பெண் இங்கே அழைத்து வந்தாள்?” என்று பார்வதி வினவ, “இவள் ஒரு தேவலோக மாது. அவளுக்குச் சொர்க்க லக்ஷ்மி என்று பெயர்.நாம் பகடை விளையாடுவதைக் கண்டு பொறாமை கொண்ட இவள், அதற்கு இடையூறு செய்வதற்காக முன்பு தேவேந்திரனை இங்கே அழைத்து வந்தாள்.

நான் அவனைச் சிறைபிடித்தேன்.இந்திரனை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், வேறு ஒருவனை இந்திரப் பதவியில் தேவர்கள் அமர்த்தினார்கள். அவனையும் மயக்கி இங்கே அழைத்து வந்தாள். நான் சிறைப்பிடித்தேன். இப்படியே இதுவரை ஐந்து இந்திரர்களை அழைத்து வந்து விட்டாள். இப்போது அந்த ஐவருடன் இவளையும் சிறைபிடித்துவிட்டேன்!” என்றார் பரமசிவன். அந்தப் பெண்ணும் ஐந்து இந்திரர்களும் சிவனிடம் தங்களை மன்னித்தருளுமாறு வேண்டினார்கள்.“அப்படியானால் நீங்கள் அறுவரும் பூமியில் சென்று பிறக்க வேண்டும்.

என் பகடையாட்டத்துக்கு இடையூறு செய்த குற்றத்துக்குத் தண்டனையாகப் பூமியில் பகடை ஆட்டத்தால் நீங்கள் அவமானப்பட வேண்டும்!” என்று கூறினார் பரமசிவன்.மேலும், “பெண்ணே இதென்ன மாட்டுத் தொழுவமா என்று நீ சிவலோகத்தை ஏளனம் செய்தாய். அதற்குத் தண்டனையாக, நீ பூமியில் துன்பப் படும்போது மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்தவனின் உதவியை நாட வேண்டிவரும்!” என்று அப்பெண்ணைச் சபித்தார். அந்த ஐந்து ஆண்கள் பஞ்ச பாண்டவர்களாகவும், சொர்க்க லக்ஷ்மி திரௌபதியாகவும் வந்து பூமியில் பிறந்தார்கள்.

அந்தப் பாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்த போது, கண்ணன் ரிஷிகளுக்காகப் பழங்களை நறுக்கிக் கொண்டிருந்தான். வேகமாக வெட்டுகையில் கத்தி கண்ணனின் விரலில் பட்டு ரத்தம் பீறிட்டுக் கொண்டு கண்ட திரௌபதி ஓடி வந்து தன் புடவையிலிருந்து கொஞ்சம் துணியைக் கிழித்துக் காயத்தைச் சுற்றிக் கட்டினாள்.அச்செயலினால் மிகவும் மகிழ்ந்தான் கண்ணன். பரமசிவனின் சாபம் பலிக்கும் நேரம் வந்தது.கௌரவர்களுடன் ஆடிய பகடையாட்டத்தில் பெருத்த அவமானத்தைப் பாண்டவர்களும் திரௌபதியும் சந்தித்தார்கள்.

கௌரவ சபையில் அபலைப் பெண்ணாக நின்றாள் திரௌபதி. ஆயர் குலத்தில் பிறந்த ஒருவனின் உதவியை நீ நாட வேண்டியிருக்கும் என்று சிவபெருமான் கூறிய வார்த்தை அவள் காதில் ஒலித்தது. “கோவிந்தா!காப்பாற்று!” என்று கண்ணபிரானை அவள் அழைத்தாள்.“இவள் அன்று தன் புடவையிலிருந்து துணியைக் கிழித்து என் காயத்துக்குக் கட்டுக் கட்டினாளே!இவளுக்கு நம் நன்றிக் கடனைச் செலுத்த வேண்டும்!”

என்ற எண்ணத்தில் மிக நீண்ட புடவையைச் சுரந்து அருள் புரிந்தான் கண்ணன். இவ்வாறு அடியார்கள் தனக்குச் சிறிய அளவில் ஏதேனும் சமர்ப்பித்தால் கூட, அதை மிகப் பெரிதாகக் கருதி, அதைப் போலப் பன்மடங்கு அவர்களுக்கு அருள்பவராகத் திருமால் திகழ்வதால் ‘க்ருதஜ்ஞஹ’ என்று போற்றப்படுகிறார். க்ருதஜ்ஞஹ என்றால் செய்நன்றி மறவாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 83-வது திருநாமமாக அமைந்துள்ளது. “க்ருதஜ்ஞாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களுக்கு ஒன்றுக்குப் பன்மடங்காகத் திருமாலின் அருள் கிட்டும்.

84. க்ருதயே நமஹ (Krutaye namaha)

பாத்மபுராணத்தின் ஐந்தாவது கண்டமான பாதாள கண்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சம்பவம். அயோத்தியை ராமன் ஆண்டு வந்த காலத்தில் அகஸ்தியர் ராமனைச் சந்தித்து ராவணனின் வரலாறுகளை எடுத்துச் சொன்னார். அதைக் கேட்ட ராமன், “புலஸ்திய ரிஷியின் குலத்தில் பிறந்த இருவரை நான் கொன்றுவிட்டேனே. இதற்கு நான் ஏதேனும் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமே!” என்றான்.“சமூக விரோதிகளான அவர்களைக் கொன்றதற்கு எந்தப் பிராயச்சித்தமும் தேவையில்லை!” என்றார் அகஸ்தியர்.எனினும் ராமன் அதை ஏற்கவில்லை.

தன் குலகுருவான வசிஷ்டரையும் அழைத்தான் ராமன்.வசிஷ்டர், அகஸ்தியர் இரு ரிஷிகளையும் கொண்டு கங்கைக் கரையில் அச்வமேத யாகம் செய்தான் ராமன்.லாயத்தில் கட்டப்பட்டிருந்த பல குதிரைகளுள் ஒன்றை யாகத்தில் பலியிடுவதற்காக அகஸ்தியர் தேர்வு செய்தார்.அந்தக் குதிரையை உலகெங்கும் சுற்றி வருவதற்காக அவர்கள் அனுப்பிய போது ராமனின் மகன்களே அதைச் சிறைபிடித்த வரலாறும், அது மீட்கப்பட்ட வரலாறும் வாசகர்கள் அறிந்ததே. யாகத்தின் இறுதிக்கட்டத்தில் குதிரை பலியிடப்பட வேண்டும். அப்போது ராமன் விதிப்படித் தன் வாளை எடுத்துக் குதிரையை வெட்டப் போனான்.

ஆனால் அந்தக் குதிரை காற்றில் மறைந்து விட்டது.இதென்ன ஆச்சரியம் என்று அகஸ்தியரைப் பார்த்தான் ராமன். ஆனால் அதற்குள் அங்கே பொன்மயமான ஒரு விமானம் தோன்றியது.  அதில் ஒரு தேவன் அமர்ந்திருந்தான்.  அவன் ராமனை நோக்கிக் கைகூப்பி, “பிரபுவே!நான் வேதம் கற்ற அந்தணன். கங்கைக் கரையில் ஒரு வேள்வி செய்து கொண்டிருந்தேன்.அப்போது துர்வாசர் அந்த வழியாக வந்தார்.என் ஆணவத்தால் அவரைக் கண்டும் காணாதவன் போல இருந்து விட்டேன். அதனால் யாகத்தில் பலியிடப்படும் மிருகமாக நான் பிறக்கவேண்டும் என்று துர்வாசர் என்னைச் சபித்தார்.

நான் சாப விமோசனம் கேட்ட போது ராமனின் கரம் உன் மேல் பட்டதும் உன் சாபம் தீரும் என்றார். இப்போது உம்முடைய அருளால் சாப விமோசனம் பெற்றேன்!” என்று சொல்லிவிட்டு அவன் தேவலோகம் சென்றான். இப்போது அகஸ்தியர் ராமனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர் இந்தக் குதிரையைத் தேர்வு செய்ததற்கான காரணத்தை ராமன் புரிந்து கொண்டான்.“ஆனால் மகரிஷியே! யாகம் பூர்த்தி அடையாமல் இப்படி நின்று போய் விட்டதே! மேற்கொண்டு எப்படி இதை நிறைவு செய்வது?” என்று அகஸ்தியரிடம் கேட்டான் ராமன். “பிராயச்சித்தம் செய்வதாகச் சொல்லித் தொடங்கப்பட்ட இந்த யாகம் நின்றதால், இப்போது இதற்கு ஒரு பிராயச்சித்தம் செய்யும் நிலை ஏற்பட்டு விட்டதே!” என்று அகஸ்தியரும் புலம்பினார்.

அப்போது வசிஷ்டர் தம் சிஷ்யர்களை அழைத்துக் கற்பூரம் எடுத்து வரச் சொன்னார். அந்தக் கற்பூரத்தைக் கொண்டு ராமனுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார் வசிஷ்டர்.“என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான் ராமன். “ராமா!எந்தச் செயலாக இருந்தாலும் அதைச் செய்விப்பவன் நீ. நீ செய்விக்காவிட்டால் உலகில் ஏதும் நடக்காது. நீயின்றி ஓரணுவும் அசையாது. அனைத்துச் செயல்களையும் நீ இயக்குவதால் நீயே செயல் - ‘க்ருதி:’ என்றழைக்கப்படுகிறாய். எனவே அனைத்துச் செயல்களின் வடிவில் இருப்பவனான உனக்கு மங்கள ஆரத்தி காட்டி விட்டபடியால்,

அச்வமேத யாகமாகிய இந்தச் செயல் இனிதே நிறைவடைந்ததாகப் பொருள்!” என்றார் வசிஷ்டர். தொடர்ந்து அவர் மங்கள ஆரத்தி காட்ட, அத்தனைத் தேவர்களும் பூமிக்கு வந்து, “ராமா நீயே செயல், நீயே செய்விப்பவன்!” என்று ராமனைத் துதித்தார்கள். செய்விப்பவராகவும் செயல்வடிவில் இருப்பவருமான திருமால் ‘க்ருதி:’  என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 84-வது திருநாமம். “க்ருதயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தொடங்கும் அனைத்து  நல்ல செயல்களும் இனிதே நிறைவடையும்படி திருமால் அருள்புரிவார்.

85. ஆத்மவதே நமஹ  (Aathmavathe namaha)

ராமன் கானகம் சென்றான். அந்தத் துக்கத்தால் தசரதன் வானகம் சென்றான்.மன்னருக்குரிய ஈமச் சடங்குகளைச் செய்வதற்குக் கேகய தேசம் சென்றிருக்கும் பரதனை அழைத்து வரும்படி வசிஷ்டர் தூதுவர்களை அனுப்பி வைத்தார்.“வசிஷ்டர் உங்களை அழைக்கிறார்!லக்ஷ்மி உங்களுக்காகக் காத்திருக்கிறாள்!” என்று பரதனிடம் சொல்லி அவனைத் தூதுவர்கள் அழைத்து வந்தார்கள். அயோத்தியினுள் நுழைந்த பரதன் சில துர்நிமித்தங்களைக் கண்டான். கோவிதானக் கொடி அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது.மக்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்கள்.தடாகங்கள் வறண்டு இருந்தன.

பூ பூக்கவில்லை, காய் காய்க்கவில்லை, பழம் பழுக்கவில்லை. மரங்களின் இலைகள் உதிர்ந்திருந்தன. மிருகங்களும் பறவைகளும் கூட சோகமாக இருந்தன.அயோத்தி நகரமே ராமனைப் பிரிந்த துயரத்தால் களை இழந்திருந்தது. அதற்கான காரணத்தை அறிவதற்காகத் தன் தாய் கைகேயியிடம் சென்றான் பரதன்.அவள் நடந்தவற்றை எல்லாம் சொல்ல, துக்கத்தில் ஆழ்ந்தான்.“ராமனெனும் சிங்கம் அமர வேண்டிய ஆசனத்தில் நாயான அடியேன் அமரலாமா?இதென்ன அனர்த்தம்?” எனச் சொல்லி விட்டு, கௌசல்யா தேவியிடம் சென்று தனக்கும் தன் தாய் செய்த இக்கொடிய செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெளிவு படுத்தினான்.

எண்ணெய்க் கொப்பறைக்குள்ளே வைக்கப்பட்டிருந்த தசரதனின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. பரதன் அவருக்குச் செய்ய வேண்டிய ஈமக் கிரியைகள் அனைத்தையும் செய்து முடித்தான். பன்னிரண்டு நாள் சடங்குகள் நிறைவடைந்து பதின்மூன்றாம் நாள் அரசவை கூடியது. அப்போது வசிஷ்டர் எழுந்து, “ஒரு நாடு மன்னர் இல்லாமல் இத்தனை நாட்கள் இருப்பது அழகல்ல. தசரத சக்கரவர்த்தி காலமாகி விட்டார்.மூத்த மகன் ராமன் வனம் சென்று விட்டான்.எனவே அடுத்த இளைய மகனான பரதன் முடி சூடிக் கொள்வதே முறை.அதனால் பரதா நீ பட்டாபிஷேகம் செய்து கொள்!” என்றார் வசிஷ்டர்.

கொதித்துப் போன பரதன், “நீர் ஒரு மகரிஷியா?ராமன் அமர வேண்டிய ஆசனத்தில் நான் அமருவதா?இதைக் கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லையே. இந்த ராஜ்ஜியமும் சரி, நானும் சரி, இருவருமே ராமனின் சொத்துக்கள். அவன் தான் எஜமானன். ஒரு சொத்தால் இன்னொரு சொத்தை எப்படிப் பாதுகாக்க முடியும்? நாற்காலியும் மேசையும் ஒரு எஜமானனின் சொத்து என்றால், இரண்டையும் எஜமானன் தானே பராமரிக்க வேண்டும்! நாற்காலி மேஜையைப் பராமரிக்குமா?அல்லது மேஜை நாற்காலியைப் பராமரிக்குமா?” என்று கேட்ட பரதன்,

ராமனை அழைத்து வருவதற்காக வனத்தை நோக்கிப் புறப்பட்டான். இதில் பெரிய வேதாந்தக் கருத்து ஒன்று ஒளிந்துள்ளது. அறிவுள்ள உயிர்களுக்குச் ‘சேதனர்கள்’ என்று பெயர். அறிவில்லாத ஜடப் பொருட்களுக்கு ‘அசேதனங்கள்’ என்று பெயர். சேதனம், அசேதனம் இரண்டையும் தனக்கு உடலாக, தன் சொத்துக்களாக இறைவன் கொண்டிருக்கிறான்.அதைத்தான் ‘சேதன-அசேதன-விசிஷ்ட-ப்ரஹ்மம்’ என்று வேதாந்தத்தில் சொல்வார்கள். அக்கருத்தையே இங்கு பரதன் சொல்லியிருக்கிறான். பரதன் ஜீவாத்மா - சேதனம்,

ராஜ்ஜியம் ஜடப்பொருள் - அசேதனம்.“இந்த பரதன், ராஜ்ஜியம் இரண்டுமே - அதாவது சேதனம், அசேதனம் இரண்டுமே இறைவனாகிய ராமனின் சொத்துக்கள்” என்று அந்த உயர்ந்த வேதாந்தக் கருத்தை இவ்விடத்திலே பரதன் கூறுகிறான். வால்மீகியின் ஸ்லோகம் - “ராஜ்யம் ச அஹம் ச ராமஸ்ய தர்மம் வக்தும் இஹார்ஹஸீ”இவ்வாறு சேதனாசேதனங்களைத் தன் சொத்தாகக் கொண்டு அவற்றின் எஜமானனாகத் திருமால் விளங்குவதால், ‘ஆத்மவான்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 85-வது திருநாமம். “ஆத்மவதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தன் சொத்தாகக் கருதி எம்பெருமான் எல்லா நேரங்களிலும் காத்தருள்வார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்