குசேலனையும் குபேரனாக்கும் பாண்டவ தூதன்



காஞ்சிபுரம் - திருபாடகம்

கிருஷ்ணன் வருகிறான் என்ற தகவல் எட்டியதுமே துரியோதனனின் அரசவை பலவித உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டது. பாண்டவர்களின் தூதுவனாக, சமாதானம் பேச அவன் வருகிறான். ‘அவன் தந்திரமிக்கவன். சமாதானம் பேசிவிட்டு சாதாரணமாகப் போகக்கூடியவன் அல்ல. அவன் வருகையில் நிச்சயம் ஏதோ விஷமம் இருக்கும். பாண்டவர்களுக்கு இவன் பெரிய பலம். இவனை இந்த சந்தர்ப்பத்தில் வீழ்த்திவிட்டால், பாண்டவர்களை நிரந்தர அடிமைகளாகவே வைத்திருக்கலாம்...’ & துரியோதனனின் சிந்தனையில் துர்நாற்றம் வீசியது.

வரப்போகிற கிருஷ்ணனுக்கு எந்தவகையிலும் மரியாதை தரக்கூடாது என்று தன் சபையோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தான். அவன் சபைக்குள் எடுத்து வைக்கும் முதல் காலடியிலிருந்தே அவனை அவமானப்படுத்த வேண்டும் என்று குரூரமாகச் சொல்லி வைத்திருந்தான். துரியோதனன் சபையில் ரிஷிகளும் ஆன்றோர்களும் நிறைந்திருந்தார்கள். காஸ்யபர், ஜாபாலி, வாமதேவர், ஏன் நாரதரும் இருந்திருக்கிறார். இவர்களெல்லாம் தூதுவனாக வரும் பகவானை தரிசிக்கும் ஆவலில் வந்தவர்கள். பீஷ்மர், துரோணாச்சார்யார், விதுரர் போன்றவர்களோடு சகுனி, கர்ணன், விகர்ணன் ஆகியோரும் தத்தமது மன ஓட்டப்படி அங்கே காத்திருந்தார்கள்.

தம் அகக்கண்களால் பகவானை தரிசித்த திருதராஷ்டிரனும் காந்தாரியும் அவன் குரல் கேட்கும் ஆவல் தவிப்புடன் காத்திருந்தார்கள். மன்னனின் ஆணையையும் மீறிய ஆவல், அவர்களுடைய உள்ளத் துடிப்பை அதிகரித்திருந்தது. எந்த மரியாதையையும் பகவானுக்குக் காட்டக்கூடாது என்கிறானே... என்ன செய்வது? என்ற தவிப்பும் கூடியது. கிருஷ்ணன் வந்தான். நூறுகோடி சூர்ய ப்ரகாசமாக வந்தான். நிதானமான ஆனால் கம்பீரமான நடை அனைவரையும் பிரமிக்க வைத்தது. சபைக்குள் அவன் நுழைந்தபோது எல்லோரும் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்துக் கடுகடுத்தான் துரியோதனன்.

‘என் உத்தரவை இவர்கள்தான் எத்தனை துச்சமாக மதிக்கிறார்கள்!’ என்று அவர்கள் மீது மனசுக்குள் கோபம் கொப்பளித்தது. ஆனால் கிருஷ்ணனுக்கு எழுந்து நின்று மரியாதை தெரிவித்தவர்கள், தன்னையும் சற்றே கேலியுடன் பார்ப்பதை அறிந்து திடுக்கிட்டான். தன்னையே பார்த்துக் கொண்டான். ஆமாம், அவனறியாமல் அவனும் எழுந்து நின்றிருந்தான்! அடிமனதில் கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று தோன்ற வைத்த கிருஷ்ணனின் லீலைதான் அது! தன் மேலேயே அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அது கிருஷ்ணன் மீதான வெறுப்பு என்ற நெருப்பிற்கு நெய் வார்த்தது.

ஆனாலும் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான். அதுதான் ஏற்கெனவே யாருக்கும் தெரியாமல் திட்டமிட்டாகிவிட்டதே. இன்றோடு கிருஷ்ணன் தொலைந்தான்...! மெல்ல நடந்து வந்த கிருஷ்ணன், சபையோர் அனைவரையும் பார்த்து மெல்ல முறுவலித்தான். அப்போதே அனைவரும் பரம திருப்தியடைந்தனர். பகவானைக் காணும் பாக்கியம் அடுத்து எப்போது கிட்டுமோ! தனக்கென அமைக்கப்பட்டிருந்த இருக்கைக்குப் படியேறிச் சென்றான் கிருஷ்ணன். இருக்கையில் அமரும் முன்னர் மீண்டும் ஒருமுறை அனைவரையும் பார்த்தான்.

துரியோதனனைப் பார்த்து விஷமமாகச் சிரிக்கவும் செய்தான். இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மடித்து வைத்தபடி அந்த ஆசனத்தில் அமர்ந்தான். அனைவரும் ‘பகவானே, பகவானே’ என்று மனசுக்குள் அரற்றிக் கொண்டிருந்தபோதே, எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் அந்த ஆசனம் உள் வாங்கியது. ஒரு சிற்ப தோரணையாய் அமர்ந்திருந்த கிருஷ்ணன் அப்படியே கீழே சரிந்தான். நிலவறையில் அவனுக்காகவே காத்திருந்தார்கள் சில மல்லர்கள். துரியோதனனின் இந்த ஏற்பாட்டை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தது போல, அவர்களை கிருஷ்ணன் எதிர்த்தான்.

வெகு எளிதாக அவர்களைப் பந்தாடி, வீழ்த்தி விஸ்வரூபம் எடுத்தான். துரியோதனாதியர்கள் பிரமித்து நிற்க, ஏனையோர் கிருஷ்ணனைக் கைதொழுது, கண்களில் நீர் மல்க வணங்கினார்கள். அவ்வாறு ஆசனத்தில் அமர்ந்த கிருஷ்ணனின் அந்த கோலத்தை இப்போதும் நாம், காஞ்சிபுரத்தில், திருப்பாடகம் தலத்தில் தரிசிக்கலாம். இந்த சம்பவத்துக்குப் பிறகு, மகாபாரதப் போர் நிகழ்ந்ததும் அதில் பாண்டவர்கள், கிருஷ்ணனின் உதவிகளால் வெற்றி பெற்றதும் பின்னால், பலரும் படித்து அல்லது கேட்டு இன்புறும் இதிகாசமயிற்று. இப்படி இந்த இதிகாசத்தை வைசம்பாயனர் என்னும் மகரிஷியிடம் கேட்டு வந்த ஜனமேஜயன் என்ற மன்னன்,

கிருஷ்ணன் துரியோதனன் சபைக்கு தூதுவனாகப் போன சம்பவத்தில் அப்படியே லயித்துப் போனான். அந்த விஸ்வரூப தரிசனத்தைத் தானும் காண பெரிதும் ஆவலுற்றான். ‘அது இப்போது சாத்தியமா?’ என்று அவன் ஏக்கத்துடன் கேட்க, அது முடியும் என்றும் காஞ்சிக்கு அவன் சென்று அஸ்வமேத யாகம் செய்தால் அந்த பாக்கியம் அவனுக்குக் கிட்டும் என்றும் முனிவர்கள் யோசனை சொன்னார்கள். அதன்படியே மனப்பூர்வமாக யாகம் மேற்கொண்ட மன்னன், கண்ணனின் விஸ்வரூப தரிசனம் கண்டு பரவசமுற்றான். அதே பரவசத்தை, திருப்பாடகம் தலத்தில், அவனது கருவறையில் நாம் அடைய முடிகிறது.

சுமார் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் பிரமாண்ட திருக்கோலம்! விஸ்வரூப தரிசனத்தை பகவான் மூன்று இடங்களில்தான் காட்டியிருக்கிறான்: சகாதேவனிடம் நிமித்தம் கேட்கப் போனபோது ஒருமுறை, துரியோதனன் அரசவைக்கு தூதுவனாகப் போனபோது ஒருமுறை; குருக்ஷேத்திர யுத்த களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தபோது ஒருமுறை.
ஆக, திருப்பாடகத் திருத்தலம், இந்த வகையில் தனிச் சிறப்பும் பெருமையும் வாய்ந்தது. 108 திவ்ய தேசங்கள் மட்டுமல்லாமல், அனைத்து வைணவத் தலங்களில்கூட காண இயலாத அற்புத தோற்றம் இது.  கருவறையின் அமைப்பும் மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.

கிருஷ்ணன் சரிந்து விழுந்த நிலவறை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று எண்ண வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. கூடவே அங்கே மல்லர்களை வீழ்த்தி விஸ்வரூபம் எடுக்கும் காட்சியும் மனக்கண்ணில் ஒளிவிடுகிறது. இங்கே பெருமாள் பாண்டவ தூதர் என்றே அழைக்கப்படுகிறார். தன்னை மிகவும் எளியவனாகக் காட்டிக்கொள்ளும் இறைவனுக்கு, அவர் எந்தப் பதவியில் எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாரோ அதே பதவிப் பெயரே இங்கே நிலைத்திருக்கிறது. இவரது திருமேனிக்கு திருமஞ்சனம் செய்விப்பதில்லை. வருடத்திற்கு ஒருமுறை சாம்பிராணி தைல அபிஷேகம் மட்டுமே.  இந்த அர்ச்சாவதாரத்தை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

அவரது இருதயத்தில் வாசம் செய்யும் மகாலட்சுமி, தூதுவனாகச் சென்றதால் அதற்கேற்ற உடையலங்காரம், ஏன் விரல் நகங்கள் கூட தத்ரூபமாக அந்த விஸ்வரூபனை நமக்குக் காட்டுகிறது. திருப்பாடகம், ஒரு கிருஷ்ணத் தலம் என்பதால் ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கான ப்ரீதி தலமாகவும் விளங்குகிறது.  யக்ஞ மூர்த்தி என்ற அத்வைத கொள்கையுடைய சான்றோர் ஒருவர், ராமானுஜருடன் வாதப்போரில் ஈடுபட்டார். பதினெட்டு நாட்கள் வாதம் தொடர்ந்தது. இறுதியில் தன் தோல்வியை ஒப்புக் கொண்ட யக்ஞ மூர்த்தி, ராமானுஜரின் கீர்த்திக்கும் வாத வன்மைக்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டார்.

தனக்கு எதிராக வாதம் புரிந்தவர் ஆனாலும் அவருடைய பாண்டியத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவரை, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்று அழைத்துச் சிறப்பித்தார், ராமானுஜர்.  ராமானுஜரின் சீடராகி, அவரது கொள்கைகளையும் தத்துவங்களையும் பரப்பும் நோக்கத்தில் இதே தலத்தில் பல்லாண்டு வாழ்ந்திருந்த அவரை கௌரவிக்கும் வகையில், இந்த பாண்டவ தூதர் கோயிலிலேயே அவருக்குத் தனி சந்நதி உள்ளது. அவரை தரிசனம் செய்யும்போது, அவருடன் ராமானுஜரும் உடனிருந்து ஆசியளிப்பது போன்று பிரமை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.  தாயார் ருக்மிணி அழகு தரிசனம் அருள்கிறாள்.

வெள்ளிக்கிழமை தோறும் திருமஞ்சனம் காணும் இந்த அன்னை, குசேலனாய் தன்னிடம் வந்து பக்தி செலுத்துவோரை, பகவான் கிருஷ்ணருக்கு சிபாரிசு செய்து குபேரனாக வாழ வரம் அருள்கிறாள். சக்கரத்தாழ்வார் மத்ஸ்ய தீர்த்தத்துக்கு எதிரே தனி சந்நதியில் அருள்பாலிக்கிறார்.  இங்கும் ஒரு நயத்தை நம்மால் ரசிக்க முடிகிறது. திருமாலின் தசாவதாரங்களில், பத்தாவதாக இனி வரப்போகும் கல்கி அவதாரம் நீங்கலாக உள்ள நவ அவதாரங்களில் முதலாவது மத்ஸ்யம் (மச்சம், மீன்); ஒன்பதாவது கிருஷ்ணன். தன் அவதாரங்களின் முழு வட்டத்தை இந்தத் தலத்தில் பூர்த்தி செய்திருக்கிறார் மஹாவிஷ்ணு என்றால் பொருத்தமாகத்தான் இருக்கும்.

அதனால்தான் முதலவதாரமான மத்ஸ்யம், தீர்த்த உருவிலும், ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணன் கருவறையிலுமாகக் காட்சி தருகின்றன! சில வருடங்களுக்கு முன்பாகத்தான் இந்த சக்கரத்தாழ்வார் ஸ்தாபிதம் நடந்திருக்கிறது. பக்தை ஒருவருக்கு திருமால் கனவில் வந்து சக்கரத்தாழ்வாருக்கு ஓர் கோயில் உருவாக்கச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார். அந்த பக்தை காஞ்சி முனிவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும், பாண்டவ தூதர் கோயில் வளாகத்திலேயே அந்த சந்நதியை அமைக்குமாறு யோசனை தெரிவித்திருக்கிறார். அப்படி அமைந்தவர்தான் இந்த சக்கரத்தாழ்வார்.

பகவான் கிருஷ்ணரே இங்கு மூலவராக வீற்றிருப்பதால், தீபாவளி திருநாள் இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5 மணிக்கெல்லாம் கருட சேவை குறிப்பிடத்தக்க ஒன்று. தவம் புரிந்த சேதனரைச் சந்திரன் ஆதித்தன் சிவன் பிரம்மனிந்திரனா செய்கை உவந்து திருப்பாடக மருவுங் செங்கண் மால் தன் மார்பிருப்பாடக உரையாலே என்கிறார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். தன்னுடைய நூற்றியெட்டு திருப்பதியந்தாதியில் இவ்வாறு அவர் விளக்குகிறார்: யார் எந்தப் பலனைக் கருதி தவம் செய்தாலும், பகவான் அந்த பலனாகவே அவர்களுக்குக் கிடைக்கிறான். சந்திரன், சூரியன், சிவன், பிரம்மன், இந்திரன் ஆகியோரின் தவத்திற்கு மகிழ்ந்து, அவரவர் எண்ணப்படியே அருள் செய்தவன் அவன். அவன்தான் இங்கே திருப்பாடகத்தில் உறைகிறான்.
    
- பிரபுசங்கர்
படங்கள்: பாஸ்கர், எம்.என்.எஸ்.