குறளில் அணிவகுக்கும் அணிகலன்கள்



குறளின் குரல்  - 90

வள்ளுவம் அன்றைய தமிழர்களின் செம்மாந்த பண்பாட்டையும் நாகரிகத்தையும் பேசுகிறது. கூடவே அந்தக் காலப் பழக்க வழக்கங்கள் பற்றியும் தெரிவிக்கிறது. வள்ளுவத்தின் மூலம் அக்காலப் பெண்கள் என்னென்ன அணிமணிகள் அணிந்திருந்தார்கள் என்ற தகவலைக் கூட நாம் அறிய முடிகிறது. வளையணிந்த பெண்கள் திருக்குறளில் பல இடங்களில் வளைய வருகிறார்கள். தொடி என்பது வளையல் என்ற அணிகலனைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.

'முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.’ (குறள் எண் 1238)
 
இறுகத் தழுவிய கைகளைத் தளர
விட்டவுடன் பிரிவாற்றாமையால் பொன்வளையல் அணிந்த தலைவியின் நெற்றி பசலை நிறம் அடைந்தது. (பைந்தொடி என்பது தங்க வளையலைக் குறித்தது.)

'அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்’ (குறள் எண் 911)
 
ஆண்களை அன்புக்காக விரும்பாமல் பொருளுக்காகவே விரும்புகின்றவர்கள் வளையணிந்த பொதுமகளிர். அவர்களது இன்சொல் துன்பத்தையே தரும்.

'கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.’ (குறள் எண் 1101)
 
கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறியும் ஐம்புலன் இன்பங்களும் ஒளிவீசும் வளையலை அணிந்த
தலைவியிடம் மட்டுமே உள்ளன.

'கொடியார் கொடுமை உரைக்கும் தொடியோடு
தொல்கவின் வாடிய தோள்.’ (குறள் எண் 1235)
 
வளையல்கள் கழன்றுவிட்டன. பழைய அழகைத் தோள் இழந்துவிட்டது. கொடியவரான அவர் எனக்குச் செய்த பிரிவுக் கொடுமையையே அவை பேசுகின்றன.

'தொடலை குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர்.’ (குறள் எண் 1135)
 
மாலைக்காலத்தில் கடும் துயரத்தையும் மடலேறும் எண்ணத்தையும் மாலைபோல் வளையணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள். இவ்விதம், தொடி, (குறள் எண் 1236), பைந்தொடி (குறள் எண் 1234), செறிதொடி (குறள் எண் 1275) என்று பலவகைப்பட்ட சொற்களால் குறளில் வளையல்கள் குறிப்பிடப்படுகின்றன. குழை என்பது காதில் அணியும் அணிகலன். அதுபற்றியும் பேசுகிறது குறள். ‘அதோ பெரிய குழை அணிந்திருக்கும் அந்தப் பெண் தெய்வப் பெண்ணா, மயிலா, இல்லை மானிடப் பெண்தானா என அறியாமல் மயங்குகிறதே என் நெஞ்சு,’ என வியக்கிறான் தலைவன்.

'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் நெஞ்சு!’ (குறள் எண் 1081)
 
தங்கத்தால் இழைக்கப்பட்ட தோள்வளை என்னும் அணிகலனைப் பெண்கள் அணிந்திருந்ததாகவும் சொல்கிறது திருக்குறள்.

'இலங்கிழாய் இன்று மறப்பின் என்தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து’ (குறள் எண் 1262)
 
'என் காதலரை இன்று மறந்துவிட்டால், என் தோள்மேல் நான் அணிந்துள்ள அணிகலன்கள் என்னை விட்டுக் கழன்றுவிடும்!’ என்கிறாள் தலைவி.

'வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.’ (குறள் எண் 919)
 
பொருளுக்காக ஆண்களின் ஆசைக்கு இணங்கும் நகையணிந்த பொதுமகளிரின் மெல்லிய தோள்கள் கீழ்மக்கள் வீழ்ந்து கிடக்கும் நரகமாகும். மகளிர் தங்கள் கழுத்திலும் அணி கலன்களை அணிந்திருந்தார்கள் என்பதைச் சில குறட்பாக்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

'அறிதொறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதொறும் சேயிழை மாட்டு.’ (குறள் எண் 1110)

படிக்கப் படிக்க அறியாமையையே உணர்வதுபோல், பழகப் பழக செந்நிற அணிகலன்களை அணிந்துள்ள இவளிடம் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.  செறிதொடி  (குறள் எண் 1275), ஆயிழை (குறள் எண் 1124), அணியிழை (குறள் எண் 1102), என்றெல்லாம் பெண்கள் அணிந்திருந்த அணிகலன்கள் பற்றிய குறிப்பைத் தருகிறார் வள்ளுவர்.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.’ (குறள் எண் 1273)
 
'நூலால் கோக்கப்பட்ட மணிகளின் உள்ளே நூல் தெரிவதுபோல், என் காதலியின் அழகினுள் விளங்கும் குறிப்பு ஒன்று இருக்கிறது,’ என்று சொல்லும் இக்குறள் மூலம் பெண்கள் மணிமாலை அணிந்திருந்ததை அறிய முடிகிறது. தங்க ஆபரணம் பெண்களால் அணியப்படும் வழக்கம் தொன்று தொட்டே இருந்து வந்தாலும் நம் ஆன்மிக மரபு தங்கத்தைப் போற்றவில்லை. காஞ்சனம் என்ற சொல்லால் தங்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் குருதேவர் பரமஹம்சர், பொன்னாசையைத் துறக்க வேண்டும் என்றே வலியுறுத்துகிறார். எளிமையில் தான் இறைவன் உறைகிறார் என்பதை நம் ஆன்மிகம் தொன்று தொட்டுப் பேசி வருகிறது.

குசேலர், விதுரர் போன்றவர்கள் மிக எளியவர்கள். அவர்களைத்தான் பெரிதும் நேசித்தான் கண்ணபிரான். ஸ்ரீராமரால் நேசிக்கப்பட்ட படகோட்டி குகனும், எச்சில் கனி தந்த ஏழைக் கிழவி சபரியும் மிக எளியவர்கள்தான். எளிமையில்தான் இருக்கிறது இறைவனின் சாந்நித்தியம். தொடக்கத்தில் ஆத்திகராக இருந்து பின் நாத்திகராக மாறியவர் பாவேந்தர் பாரதிதாசன். (கண்ணதாசன் தொடக்கத்தில் நாத்திகராக இருந்து பின் ஆத்திகரானவர்.) பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று இறைவன் பகட்டிலும் ஆடம்பரத்திலும் இருக்கமாட்டான் என்பதை ஒரு கதை வடிவில் உணர்த்துகிறது:

ஒரு கிறித்துவ தேவாலயத்தில் இருந்த பாதிரியார், தேவாலயத்திற்கு வருபவர்கள் தங்க நகை, வெள்ளி நகை, ரத்தினம் இழைத்த நகை போன்ற எதையும் அணியாமல் எளிமையாக வரவேண்டும் என அறிவிப்பு வெளியிட்டார். வரும் அன்பர்கள் கூட்டம் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கியது. அவர் மறுசிந்தனை செய்தார். வராமலேயே இருப்பதைவிட அணிகலன்கள் அணிந்து பகட்டாகவேனும் அடியவர்கள் அதிக எண்ணிக்கையில் வருவது நல்லது என்று எண்ணியது அவர் மனம்.

கண் இமை, உதடு, நாக்கு இவற்றில் கூட அணிகலன் அணிந்து வரலாம், கோயிலில் முகம் பார்க்க நிலைக்கண்ணாடியும் வைக்கப்பட்டுள்ளது என்று மறு அறிவிப்பு வெளியிட்டார். அன்றுதொட்டு ஏராளமானோர் தேவாலயத்திற்கு அணிகலன்கள் அணிந்து பகட்டாக வந்தார்கள். ஆனால் தேடித் தேடிப் பார்த்தார் பாதிரியார். ஒரே ஒருவர் மட்டும் வரவில்லை என அந்த அழகிய கவிதை முடிகிறது. வராத அந்த ஒருவர் யார் என அறிந்துகொள்ள வேண்டுமானால் முழுக் கவிதையையும் படித்து அதன் முடிவையும் படிக்க வேண்டும்! பாரதிதாசனின் கதைக் கவிதை இதோ:

'தலைகாது மூக்குக் கழுத்துக் கை மார்பு விரல்
   தாள் என்ற எட்டுறுப்பும்
  தங்க நகை வெள்ளிநகை ரத்தினம் இழைத்த நகை
    தையலர்கள் அணியாமலும்
விலை குறையும் ஆடைகள் அணிந்துமே கோயில் வர
   வேண்டுமென்றே பாதிரி
  விடுத்த ஒருசேதியால் விஷமென்று கோயிலை
    வெறுத்தார்கள் பெண்கள் புருஷர்!
நிலைகண்ட பாதிரி பின் எட்டுறுப் பேயன்றி
    நீள் இமைகள் உதடு நாக்கு
  நிறைய நகை போடலாம் கோயிலில் முகம்பார்க்க
    நிலைக்கண்ணாடியும் உண்டென
இலைபோட் டழைத்ததும் நகைபோட்ட பக்தர்கள்
   எல்லோரும் வந்து சேர்ந்தார்,
 ஏசுநாதர் மட்டும் அங்கு வரவில்லையே
   இனிய பாரத தேசமே!’
 
பார்வதி தேவியிடம் ஒரு விசேஷ அணிகலன் இருந்தது. அது ஒரு முத்து புல்லக்கு. காதில் தொங்கும் ஜிமிக்கி போல் மூக்கில் தொங்கும் அணிகலன். அந்த முத்து புல்லக்கை மையமாக வைத்து தமது 'பிரபுலிங்க லீலை’ என்னும் நூலில் ஓர் அழகிய கற்பனையைத் தீட்டுகிறார் துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள். பரமசிவன் வீதியுலா வந்தாராம். அலங்கரித்துக் கொண்டு அவரைப் பார்க்க வந்தாளாம் அவரின் காதலி பார்வதி. அப்போது அந்த விசேஷ முத்து புல்லக்கையும் அணிந்துகொண்டு வந்திருந்தாள் அவள். தன் உள்ளம் கவர்ந்த கள்வனான சிவபெருமானைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தாள்.

அப்போது அவள் மூக்கில் தொங்கிக் கொண்டிருந்த புல்லக்கில் இருந்த முத்து அவளது பல்வரிசையை எட்டிப் பார்த்தது. இந்தப் பல் முத்துக்கு நாம் இணையாக இல்லையே என அதற்குத் தாளாத துக்கம் வந்தது. அந்த துக்கத்தின் காரணமாகத்தான் அது அவளின் மூக்கில் தூக்குப் போட்டுக் கொண்டு தொங்குகிறது என்று எழுதுகிறார் சிவப்பிரகாசர்! பிரிவாற்றாமை காரணமாக உடல் மெலிவதும் வளையல்கள் கழன்று விழுவதும் பழைய பாடல்களில் நிறையச் சொல்லப்படுகின்றன.

மோதிரம் தலைவியின் ஒட்டியாணமாக மாறுமளவு அவள் உடல் மெலிந்தது என மிகையாகக் கற்பனை செய்து எழுதியவர்களும் உண்டு! பழைய நூல்கள் பலவற்றின் பெயர்களே ஆபரணங்களைத் தாங்கியவையாக அமைந்துள்ளன. சிலப்பதிகாரம் கால் அணிகலனான சிலம்பைத் தன் தலைப்பில் கொண்டுள்ளது. மணிமேகலையில் மேகலை என்பது இடையில் அணியும் ஓர் அணிகலன். இடைக்கால இலக்கியமான குற்றாலக் குறவஞ்சி ஏராளமான அணிகலன்களைப் பற்றிப் பேசுகிறது. குற்றால நாதரின் காதலியான பார்வதிக்கு,

அவள் விரும்பும் தலைவன் குற்றாலநாதன் வந்து அவள் கரம் பற்றுவான் எனக் குறி சொன்னாள் சிங்கி என்ற குறத்தி. சிவன்தான் குற்றால நாதனாகக் குற்றாலத்தில் வீற்றிருக்கிறான். சிவன் அவளைத் தேடி வருவது நிச்சயம் என்றும் இப்போது வெட்கப்படும் அவள் சிவன் வந்தால், வெட்கத்தை எடுத்துக் கட்கத்தில் வைத்துக் கொள்வாளா என்றும் அந்தக் குறத்தி கேட்கும் நயம் வெகு அழகு.

'கைந்நொடியில் பொன்னிதழி மாலை வரும் காண் அப்போ கக்கத்தில் இடுக்குவையோ வெக்கத்தை அம்மே?’ குறத்தி சிங்கியின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி, ஏராளமான அணிகலன்களைப் பரிசாக அள்ளிக் கொடுக்கிறாள். அந்த அணிகலன்களைப் பட்டியலிடுகிறார் குற்றாலக் குறவஞ்சியை எழுதிய திரிகூடராசப்பக் கவிராயர். திருக்குறளில் தொடி என்ற சொல்லாலும் பிற்காலத்தில் வளை என்ற சொல்லாலும் அழைக்கப்படும் வளையல் பெண்களின் மங்கல அணிகலன்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அன்னை சாரதாதேவி தம் கணவர் குருதேவர் ஸித்தி அடைந்த பின்னர் தன் வளையல்களைக் கழற்ற முயன்றார். அப்படி அவர் முயன்றபோதெல்லாம் குருதேவர் அவர்முன் தோன்றி 'நான் எங்கு போய்விட்டேன், உலகம் என்ற இந்த அறையிலிருந்து மறுஉலகம் என்ற அடுத்த அறைக்குப் போயிருக்கிறேன், அவ்வளவு தானே?’ என்று சொல்லி அவர் வளையல்களைக் கழற்ற அனுமதிக்கவில்லை.

எனவே கணவர் ஸித்தி அடைந்த பின்னரும் அன்னை சாரதாதேவி மங்கல அணிகலனான வளையல்களை அணிந்தே வாழ்ந்தார் என்கிறது அன்னை சாரதையின் புனித வரலாறு. நம் தமிழ்ப் பெண்கள் வளையல்கள் அணிந்து கொள்ளும் மரபு திருவள்ளுவர் காலத்திற்கும் முன்பிருந்தே தொடங்குகிறது என்பது பெருமிதம் கொள்ளத் தக்க செய்தி. காது, மூக்கு, கழுத்து, கால் போன்றவற்றில் அணிகலன்களைப் போட்டுக் கொள்வதுபோல் வள்ளுவர் சொல்லும் கருத்துக்களை நாம் மனத்தில் போட்டுக் கொண்டோமானால் நம் வாழ்வு சிறக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!
 
(குறள் உரைக்கும்)

- திருப்பூர் கிருஷ்ணன்