முடத்தெங்கு என்றால் என்ன தெரியுமா?



திருமூலர் திருமந்திர ரகசியம்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! இளமையில் கல்! நேரத்தையும், காலத்தையும் பற்றி, எவ்வளவு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். நேரம் குறுகியது; காலம் சற்று நீண்டது. இளமை குறுகியது; அதை உள்ளடக்கிய வாழ்வு சற்று நீண்டது. அவ்வளவுதான்! இதை வைத்து திருமூலர் என்ன சொல்கிறார்?

நிற்கின்ற போதே நிலையு
டையான் கழல்
கற்கின்ற செய்மின்; கழிந்த
னும் பாவங்கள்
சொற்குன்றல் இன்றித்
தொழுமின்; தொழுதபின்
மற்றொன்றிலாத மணி விளக்காமே (திருமந்திரம்  291)

கருத்து: இளமை உள்ளபோதே நிலையான பரம்பொருளின் திருவடிகளை உணர்த்தும் நூல்களைத் தவறாமல் படியுங்கள்! அவ்வாறு கற்பதால், பாவங்கள் எல்லாம் முழுமையாக நீங்கும். அக்கல்வியை, வெறும் ஏட்டளவில் இல்லாமல், அனுபவத்தில் கொண்டு வாருங்கள்! இறைவன் திருவடிகளை வணங்குங்கள்! அவ்வாறு வணங்கினால், வேறு எதையும் வேண்டாமல், இயல்பாகவே ஒளி வீசும் மணியைப் போல, அத்திருவடிகள், உங்களுக்கு நின்று உதவும். இளமையிலேயே நல்ல நூல்களைப் படித்து, அனுபவத்தில் கொண்டு வரவேண்டும். அவை என்றும் உதவும் என்பதே, இப்பாடலின் சுருக்கமான கருத்து.

கி.ஆ.பெ. விசுவநாதம், ஒரு பெரிய தமிழ் அறிஞர். முத்தமிழிலும் வித்தகர். அவர் சொன்ன அற்புதமான உதாரணம், இதோ: தென்னை மரம் வளரும்போது, அதைத் தினந்தோறும் ஒவ்வோர் உதை உதைப்பார்கள். நேராக நிமிர்ந்து உயரமாக வளர வேண்டிய தென்னை மரம், நாளா வட்டத்தில் அப்படியே வளைந்து  வளர்ந்து  தரையில் இருந்தபடியே தேங்காய்களைப் பறிக்கும் நிலையில் இருக்கும். அது,‘முடத்தெங்கு’ எனப்படும். அதுபோல நேராக நிமிர்ந்து இருக்க வேண்டிய நம் மனது சிறுவயதில் இருந்தே தீமையின் பக்கம் சாய்ந்து சாய்ந்து, நிமிர முடியாதபடி ஆகிவிட்டது.

சிறுவயதிலிருந்தே மனதை நல்வழியில் திருப்பிப் பழக்கப்படுத்தினால், அது நேராக நிமிர்ந்து நிற்கும். இதையே; நாளைக்குத் தேவையானதை இன்றே சேகரித்து வைத்துக் கொள்வதைப் போல என்றும் சொல்லலாம். அதாவது, முதுமைக்குத் தேவையானதை இளமையிலேயே சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும். இங்கே ‘சேகரிப்பு’ என்பது பொருளை மட்டும் குறிப்பது அல்ல! முதுமை என்பது பொருளை மட்டுமே கொண்டு நிறைவு பெற்று விடாது. முதுமைக் காலத்தில், பொருள் உதவி செய்து, வைத்துக் காப்பாற்ற, பலவிதமான இடங்கள் இருக்கின்றன.

ஆனால், அங்கெல்லாம் சகலவசதிகளுடன், பொறுப்பான பராமரிப்பில் இருப்பவர்கள், சிறிதளவு கூட மன நிம்மதி  அமைதி என்பது இல்லாமல் தவிப்பது தெரிந்ததுதானே! அப்படியென்றால் எங்கு ஏமாந்தோம்? சிறுவயதில் இருந்தே, ஒவ்வொன்றாக விரும்பி விரும்பி அவற்றில் எல்லாம் கிடைக்காத மகிழ்ச்சியை, முதுமை அடைந்தபின் முதியோர் இல்லங்களிலும், வீடுகளிலும் தேடிக் கொண்டிருக்கிறோம். தெய்வ சிந்தனை இல்லாமல், அதற்கான செயல்பாடுகளின் உண்மையை உணராமல் துயரப்படுகிறோம். ஆலயங்களுக்குச் செல்வதும், வேண்டுதல் வைப்பதும், வேண்டுதல் பலிக்கப் பரிகாரங்கள் செய்வதும், தெய்வ சிந்தனை அல்ல!

நாம் வணங்கும் எந்தத் தெய்வமும் உழைக்காமல் இருந்ததில்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று அலைந்ததில்லை. அன்பும் இரக்கமும் கொண்டு, அடுத்தவர் துயர் தீர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டுதான், தெய்வங்கள் அனைத்தும் செயல்பட்டிருக்கின்றன. பணம் எடுக்கும் இயந்திரத்திடம் (ஏ.டி.எம்) போய்ப் பணம் எடுக்கிறோம். அதுபோல, எந்தத் தெய்வத்தை வணங்குகிறோமோ, அந்தத் தெய்வத்தின் அருங்குணங்கள் சிறிதளவாவது, நம் உள்ளத்தில் படிந்து செயல்பாட்டில் வர வேண்டும். இது நிச்சயமாக, எடுத்த எடுப்பில் வந்துவிடாது. சிறுவயதில் இருந்தே நல்ல நூல்களைப் படித்து,

அவற்றைச் செயல்பாட்டில் கொணர்ந்து, பக்குவப்பட்டவர்களாலேயே, முதுமையிலும் நிம்மதியாக இருக்க முடியும். பருவத்தே பயிர் செய், இளமையில் கல் என்றெல்லாம் சொன்னது, இதை முன்னிட்டே. இவ்வாறு செயல்பட்டால், பாவங்களை நீக்க நாம் கஷ்டப்பட வேண்டாம். ‘சுவிட்ச்’ போட்டவுடன் இருள் தானாகவே மறைவதைப் போல, பாவங்கள் தாமாகவே நீங்கும். இவ்வாறு சொல்லி வந்த திருமூலர், மற்றொன்றையும் சொல்கிறார். நல்ல நூல்களில் படித்தவை, வெறும் ஏட்டுக் கல்வியாய்ப் போகாதபடி, இறைவன் திருவடியை வணங்குங்கள் என்கிறார்.

இறைவன் திருவடிகளை வணங்குங்கள் என, ஞானநூல்கள் அனைத்தும் கூறுகின்றன, அல்லவா? நல்ல நூல்களைப் படிப்பதும், அதைச் செயல்பாட்டில் கொண்டு வருவதுமே அத்திருவடிகள். நூல்களில் படித்தவற்றை, அனுபவத்தில், செயல்பாட்டில் கொண்டு வாருங்கள் என்கிறார் திருமூலர். அவ்வாறு கொண்டு வந்தால் ஈடு இணையில்லாத தெய்வம், நம் உள்ளத்தில் மணி விளக்காக எழுந்தருளி வழிகாட்டும். ஜோதிமயமான தெய்வம், உள்ளத்தில் எழுந்தருளி வழிகாட்டும்போது, துயரம் ஏது? ‘ஜோதிமயமான தெய்வம் உள்ளத்தில்’ எனச் சொன்ன திருமூலர் இதையே மற்றொரு விதமாகவும் சொல்கிறார்.

ஈசன் அருளும் இறப்பையும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமும் ஆகும் திகழொளியாய் நின்று
வாச மலர்க் கந்தம் மன்னி நின்றானே (திருமந்திரம்  303)

கருத்து: இறப்பு  பிறப்பு என்பவற்றை தெய்வமே அருள்கிறது. ஆகையால் தெய்வம் தந்த இப்பிறவி இருக்கும்போதே, தெய்வத்தைப் பற்றிப் பேச வேண்டும். தெய்வத்தைப் பற்றி பிதற்றி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தெய்வம் அன்போடு அருள் செய்யும். பூவில் வாசம் கலந்திருப்பதைப் போல, தெய்வம் நம் உள்ளத்தில் நிலையாக இருக்கும். பிறந்து விட்டோம். ஆனால் இது சாதாரணமாக நடந்து விடவில்லை. ‘ஐந்தூனாம் நரஜன்மம் துர்லபம்’ எனும் ஆதிசங்கரர் வாக்குப்படியும், ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனும் ஒளவையாரின் வாக்குப்படியும், மனிதப்பிறவி என்பது மிகவும் உயர்ந்தது.

உயர்ந்ததான இப்பிறவியில், அனைத்துமே கிடைத்தாலும், இவை எல்லாம் எவ்வளவு காலத்திற்குத்தான் நம்முடன் இருக்கும்? ஒரு வேளை, நாம் விரும்பும் அனைத்தும் நம்முடன் கடைசிவரை இருந்தாலும், எவ்வளவு தான் உயர்ந்ததாக இருந்தாலும், குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம் உடம்பு ஏற்க மாட்டேன் என்கிறது. துக்கத்தைக் கூட ஓரளவிற்குத் தாங்கி விடலாம். ஆனால், சுகத்தை, சந்தோஷத்தைத் தாங்க முடியாது. முதுமையை எட்டிப் பார்த்த பலர்,‘‘எப்பத்தான் என்னை அழைத்துக்கொள்ளப் போகிறாய் இறைவா!’’ என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம்!

ஆகவே, இறப்பு என்பதும் ஒரு பெரும் விடுதலைதான். ஆகையால் பிறப்பையும், இறப்பையும் தந்து அருளும் இறைவனை, இடைப்பட்ட காலத்தில் அதாவது பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலமான வாழும் காலத்தில் நினைக்க வேண்டும். அவ்வாறு நினைத்தால், துன்பங்கள் உண்டாகாது. நம்புகிறோமோ இல்லையோ, இதுதான் உண்மை. தெய்வத்தைப் பற்றிப் பேசினால் போதும். நம்மைச் சுற்றி இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி விடுவார்கள். ‘இந்த ஆள் பக்கத்துல போனாப் போதும். சாமியப் பத்திப் பேச ஆரம்பிச்சிடுவான். சரியான அறுவ!’ என்று விலகி விடுவார்கள்.

அப்புறம் என்ன? அவர்களால் வரும் துன்பங்கள் வராது! ஆகவே, தெய்வீகமாகப் பார்ப்பது மட்டுமல்ல; உலகியல் ரீதியாகப் பார்த்தாலும், ‘‘தெய்வத்தைப் பற்றிப் பேசுங்கள்!’’ எனத் திருமூலர் சொன்னது, மிகவும் பொருத்தமானதே. இவ்வாறு சொன்ன திருமூலர் அடுத்து, ‘‘தெய்வத்தைப் பற்றிப் பிதற்றுங்கள்! ’’என்கிறார். பிதற்றுதல் என்பது, தன்னை மறந்த நிலையிலும், இறைவனைப் பற்றிப் பேசுவது அல்லது இறைவனோடு பேசுவது! இந்த நிலை, சாதாரணமாக அனைவருக்கும் வாய்த்து விடாது. மிக மிக உத்தமர்களுக்கே வாய்க்கும்.

அப்பைய தீட்சிதர் என்றொரு மகான் இருந்தார். அவரை ஈஸ்வர அவதார மாகவே மதித்த மக்கள், ‘இவர் மகாஞானி. மிகவும் உயர்ந்தவர்’ எனப் புகழ்ந்து போற்றினார்கள். பார்த்தார் தீட்சிதர், ‘இது உண்மைதானா? நம்மிடம் நற்குணங்கள் இருக்கின்றனவா? நம்மிடம் இருப்பது, உண்மையான தெய்வ பக்தியா? இதை எவ்வாறு சோதித்து அறிவது?’ எனச் சிந்தனை செய்தார் தீட்சிதர். ஒரு வழி புலப்பட்டது. ‘ஊமத்தங்காயை அரைத்துத் தின்றால், பைத்தியம் பிடித்து விடும். அவ்வாறு பைத்தியம் பிடித்தால், பிதற்றுவோம்; உளறுவோம். அப்படிப் பிதற்றும் போதும், நம் வாயில் தெய்வ நாமா வந்தால் தான்,

நமக்கு இருக்கும் பக்தி உண்மையானது, இல்லையேல்...’ என்று சிந்தித்தவருக்குப் ‘பகீர்’ என்றது. ‘ஒருவேளை, பைத்தியம் பிடித்த நிலையில் நம் வாயில் தெய்வ நாமா வரவில்லையென்றால், இந்த ஜன்மாவே, பிறவியே வீணாகிப் போய் விடுமே!’ என்று சிந்தித்த தீட்சிதர் ஒரு முடிவுக்கு வந்தார். பைத்தியம் பிடிப்பதற்கான ஊமத்தங்காயை அரைத்து வைத்துக் கொண்டார்; கூடவே பைத்தியம் தெளிவதற்கான மருந்தையும் தயாராக வைத்துக் கொண்டார். அதன் பின் சீடர்களை அழைத்த தீட்சிதர், ‘நான் இந்த ஊமத்தங்காயைத் தின்று விடுகிறேன். பைத்தியம் பிடிக்கும்.

பைத்தியம் பிடித்த அந்நிலையில், நான் என்னென்ன உளறுகிறேனோ, அதை அப்படியே எழுதி வையுங்கள். சற்று நேரம் ஆனதும், பைத்தியம் தெளிய வைக்கும் மருந்தைத் தாருங்கள் எனக்கு’ என்றார். ஊமத்தங்காய்க் கரைசலை அவர் அருந்தியதும், அவரது வாயில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகளை, தீட்சிதரின் சீடர்கள் எழுதி வைத்தார்கள். சற்று நேரத்தில், மாற்று மருந்து கொடுக்க, தீட்சிதரின் பைத்தியம் தெளிந்தது. பைத்தியம் பிடித்த நிலையில் தீட்சிதர் பிதற்றியவை, அற்புதமான சிவத்துதிப் பாடல்களாக இருந்தன. அப்பாடல்கள், ‘ஆத்மார்ப்பண ஸ்துதி’ என அழைக்கப்பட்டன.

தன்னை மறந்த நிலையிலும் தீட்சிதர், சிவனைப் பற்றித் தான் பிதற்றியிருக்கிறார். இவ்வாறு, ‘தன்னை மறந்த நிலையிலும் தெய்வ நாமத்தைச் சொல்ல வேண்டும்’ என்கிறார் திருமூலர். இந்த நிலை அடைந்தால், தெய்வம் தானே வந்து அருள் செய்யாதா? பாடலை நிறைவு செய்யும்போது, தெய்வம் வந்து நம் உள்ளத்தில் இருக்கும் நிலையை மிகவும் அழகாகச் சொல்கிறார் திருமூலர். பூவில் வாசம் கலந்திருப்பதைப் போல, தெய்வம் வந்து நம் உள்ளத்தில் இரண்டறக் கலக்கும் என்கிறார். பூவை விட்டுப் பிரிக்க முடியாதபடி இருக்கும் நறுமணம் போல, தெய்வம் அடியாருடன் இணைந்து விடுமாம். திருமூலர் வாக்கை, இயன்ற அளவு செயல்படுத்த முனைவோம்! தீவினைகள் தாமே விலகும்!

(மந்திரம் ஒலிக்கும்)

- பி.என்.பரசுராமன்