சரஸ்வதியை ஏன் பிரம்மாவின் மனைவி என்கிறோம்?



வணக்கம் நலந்தானே!

விவேகானந்தரிடம் ஒருவர், ‘‘அதெப்படி வேதசப்தங்களிலிருந்து உலகம் உருவாக முடியும். வெறும் வார்த்தையிலிருந்து சிருஷ்டி வெளிப்பட முடியுமா?’’ என்று கேட்டார். அதற்கு விவேகானந்தர், ‘‘மிக நிச்சயமாக முடியும். உலகம் முழுக்க பானைகள் இருக்கின்றன. மெல்ல மெல்ல பானைகள் முழுவதும் அழிந்து கொண்டே வருகின்றன. ஒருகட்டத்தில் பானை என்பதே எவருக்கும் தெரியாமல் போய்விடும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், இங்கு பானை என்றொரு வார்த்தை மட்டும் இருந்தால் போதுமானது. மீண்டும் பானைகளை உருவாக்கி விடலாம்.

அதுபோலத்தான் ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அதன் மூலத்தில் ஒலி வடிவில்தான் இருக்கின்றன. மெல்ல ஒலியின் அதிர்தல் இறுகி பொருளாக மாறுகின்றன. அதேசமயம் அந்த மூல சப்தங்கள் எந்தவித மாற்றத்தையும் அடைவதில்லை. அந்த மாற்றமடையாத சப்தத்தையே நாம் பீஜம் மற்றும் பீஜாட்சரம் என்கிறோம்’’ என்று பதில் கூறினார். இப்படியாக, ஒன்றிலிருந்து ஒன்றாக பிரம்மா பிரபஞ்சத்தையும் ஜீவராசிகளையும் படைத்ததாகச் சொல்கிறோம். எனவே, சிருஷ்டிக்கு மூலகர்த்தாவாக பிரம்மாவே இருக்கிறார். இங்குதான் படைப்புக்குள் படைப்பாக, உணர்வுகளை வடித்தெடுக்கும் சக்தியாக, பார்க்கும் விஷயங்களில் நுட்பத்தை புகுத்தி ரசனை எனும் கலைவியக்தியாக மாற்றும் ஒரு சக்தி வெளிவருகிறது. அந்தச் சக்திக்கே சரஸ்வதி என்று பெயர்.

சரஸ்வதி எனும் சக்தி அறிவால் உணர்ந்ததை, அனுபவத்தால் தெளிந்ததை அழகு காவியமாக்கி ரசிக்க வைப்பாள். காவிய நாடகங்களை கவினுறு பாணியில் வெளிப்படுத்தி மயங்க வைப்பாள். வெறும் பேச்சுக்கு மட்டுமல்ல வாய். மயக்கும் பாடலையும் அதன் மூலம் பாடலாம் என்று குரல் வழியே கேட்போரை நெக்குருக வைப்பாள். இவ்வாறாகவே ஆடலும், பாடலும், காவியமியற்றலும், சித்திரம் தீட்டலும், உளிகொண்டு சிற்பம் வடித்தலும்... என்று ஆய கலைகளையும் அபரிமிதமாக தன்னிலிருந்து பிரபஞ்சம் முழுதும் சுரக்கச் செய்கின்றாள். பிரம்மா சிருஷ்டி கர்த்தாவெனில், சரஸ்வதி அந்த சிருஷ்டியை அலங்கரித்துக் கொடுக்கின்றவள்.

மூங்கில் பிரம்மாவின் படைப்பெனில் அதை புல்லாங்குழலாக மாற்றி அதிலிருந்து நாதமாக இசையை அருள்பவளே, சரஸ்வதி. எனவேதான், பிரம்மாவை கணவனாகவும் சரஸ்வதியை மனைவியாகவும் இந்து மதம் நிலை நிறுத்துகின்றது. இந்த நவராத்திரியிலேயே கூட சும்ப நிசும்பர்களை வதைப்பதற்காக அந்த மகா சரஸ்வதியே காளி ரூபத்தில் வருகின்றாள். அதாவது எங்கெங்கெல்லாம் அஞ்ஞானம் மிகுந்துள்ளதோ அங்கெல்லாம் தன்னுடைய ஞானமெனும் சூரியனை பரப்பி அறியாமை எனும் இருளை அகற்றுகின்றாள். அதனால் இங்கு அவள் ஞான சரஸ்வதியாகின்றாள். அப்பேற்பட்டவளை என்றும் வணங்கி தியானிப்போம்.

- கிருஷ்ணா