பிரசாதங்கள்



* கோவா கடலை மாவு பர்ஃபி

என்னென்ன தேவை?

பொடித்த கோவா - 1/2 கப்,
கடலை மாவு,
சர்க்கரை - தலா 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
அலங்கரிக்க சீவிய பாதாம் அல்லது பிஸ்தா - தேவைக்கு,
நெய் - 1/4 கப்.

எப்படிச் செய்வது?

கடலை மாவை கட்டியில்லாமல் லேசாக வறுத்து ஆறியதும் சலித்துக் கொள்ளவும். கடாயில் பாதி அளவு நெய் ஊற்றி கடலை மாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். பின்பு கோவா போட்டு கைவிடாமல் கிளறி இடை இடையே மீதியுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு சிறு தீயில் வைத்து கிளறவும். நெய் பிரிந்து கலவை ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி சூடாக இருக்கும்போதே பாதாமை தூவி 1 மணி நேரம் ஆறவிட்டு துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: இனிப்பு கோவாவாக இருந்தால் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்ளவும்.

* கற்கண்டு சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 200 கிராம்,
கற்கண்டு - 500 கிராம்,
தேவையானால் பாசிப்பருப்பு - 50 கிராம்,
நெய் - 200 கிராம்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
பால் - 1/2 லிட்டர்,
முந்திரி - 8-10, குங்குமப்பூ - சிறிது.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பை லேசாக வறுத்து அரிசியுடன் சேர்த்து சுத்தம் செய்து பால், தண்ணீர் ஊற்றி வேகவிடவும். பாத்திரத்தில் கற்கண்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி கம்பி பதம் வந்ததும் இறக்கவும். அரிசி, பாசிப்பருப்பு வெந்ததும் கற்கண்டு பாகு சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கவும்.

* பனீர் லட்டு

என்னென்ன தேவை?

ஃப்ரெஷ் பனீர் - 200 கிராம்,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
குங்குமப்பூ - சிறிது,
நெய் - 1 டீஸ்பூன்,
சீவிய பாதாம்,
பிஸ்தா - தலா 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பனீர், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிக்சியில் அடித்து, நான்ஸ்டிக் தவாவில் ஊற்றி மிதமான தீயில் வைத்து நெய் சேர்த்து கைவிடாமல் அடிபிடிக்காமல் கிளறவும். கலவை சுருண்டு உருட்டும் பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும். சிறிது ஆறியதும் கைப்பொறுக்கும் சூட்டில் உருண்டைகள் பிடித்து குங்குமப்பூ, நட்ஸ் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

* கதம்ப சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 200 கிராம்,
துவரம்பருப்பு - 100 கிராம்,
சாம்பார் பொடி - 6 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
புளி - கோலி அளவு,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
விருப்பமான காய்கள் கத்தரிக்காய் - 2,
முருங்கைக்காய் - 1,
பீன்ஸ், அவரைக்காய் - தலா 4,
கேரட் - 2,
பூசணிக்காய் - 1 துண்டு,
தக்காளி - 2,
வறுத்து அரைத்த கடலைப்பருப்பு,
தனியா - தலா 1 டீஸ்பூன்.

தாளிக்க...

பெருங்காயத்தூள் - சிறிது,
சின்ன வெங்காயம் - 10,
கடுகு - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பை சேர்த்து சுத்தம் செய்து கழுவி வேகவிடவும். பாதி வெந்ததும் காய்கள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் வெறும் கடாயில் வறுத்து அரைத்த கடலைப்பருப்பு, தனியா பொடியை சேர்க்கவும். சாம்பார் பொடி, உப்பு, புளிக்கரைசல் ஊற்றி கலந்து கதம்ப சாதமாக வரும்பொழுது தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கொட்டி நன்றாக கிளறி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.

* காப்பரிசி

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
வெல்லம் - 1/2 கப்,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் அல்லது கொப்பரை - 1/4 கப்,
வேர்க்கடலை, பொட்டுக்கடலை - தலா 1/4 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - 2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

பச்சரிசியை சுத்தம் செய்து 15 நிமிடம் ஊறவைத்து வடித்து, ஒரு சுத்தமான துணியில் போட்டு நன்றாக ஈரம் போக உலர்த்தி எடுக்கவும். கடாயை சூடாக்கி அரிசியை போட்டு பொரி அரிசியை போல் கைவிடாமல் வறுக்கவும். அரிசி சிவந்து நன்றாக வறுபட்டதும் நெய் ஊற்றி லேசாக வதக்கி எடுத்து தாம்பாளத்தில் கொட்டவும். அதனுடன் வறுத்து தோலுரித்த வேர்க்கடலை, லேசாக வறுத்த பொட்டுக்கடலை, கொப்பரை சேர்த்து கலந்து கொள்ளவும். பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து உருட்டும் பதம் வந்ததும் அரிசி கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கைவிடாமல் கிளறி இறக்கவும்.

* சிகப்பு, வெள்ளை காராமணி சுண்டல்

என்னென்ன தேவை?

சிகப்பு காராமணி, வெள்ளை காராமணி - தலா 1 கப்,
காய்ந்தமிளகாய் - 6,
உப்பு - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்.

தாளிக்க...

கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
பொடித்த பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - தேவையான அளவு,
விரும்பினால் பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

இரண்டு காராமணியையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு உப்பு சேர்த்து குழையாமல் வேகவைத்து வடித்துக் கொள்ளவும். மிக்சியில் வறுத்த உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாயை பொடித்து கடைசியில் வறுத்த தேங்காய்த்துருவலையும் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து காராமணியில் கொட்டி ஐந்து நிமிடம் கிளறி, அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் பொடித்த மாங்காய் அல்லது எலுமிச்சைச்சாறு கலந்து பரிமாறவும்.

- சந்திரலேகா ராமமூர்த்தி