அனந்தனுக்கு 1000 நாமங்கள்



99. ஸித்தயே நமஹ (Siddhaye namaha)

யசோதைக்கு முக்தி அளிக்க விரும்பினான் கண்ணன். ஆனால் அவளுக்கோ முக்தி என்றால் என்னவென்றே தெரியாது. அவளுக்கு எப்படி முக்திஅளிப்பது எனச் சிந்தித்தான். “முக்தி கொடு!” என்று கூட அவள் கேட்க வேண்டாம். ‘முக்தி’ என்ற வார்த்தையை ஒரு முறை அவள் உச்சரித்தால் கூட போதும், அவளுக்கு அதை அளித்து விடலாம். ஆனாலும், அவள் கேட்பதாகத் தெரியவில்லையே! என்ன செய்வது எனச் சிந்தித்தபடி கண்ணன் அமர்ந்திருந்தான். அப்போது அங்கே வந்த யசோதை, “கண்ணா! படிக்காமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உன் வயது வரம்பில் உள்ள உன் நண்பர்கள் உயிரெழுத்து, மெய்யெழுத்து அனைத்தையும் கற்றுவிட்டார்கள்.

நீ இன்னும் ஒன்றும் தெரியாமலே இருக்கிறாயே!” என்றாள்.“படிப்பதால் என்ன கிடைக்கும்?” என்று கேட்டான் கண்ணன். “ஞானம்!” என்றாள் யசோதை. “ஞானத்தால் என்ன கிடைக்கும்?” என்று கேட்டான் கண்ணன். “திருமாலிடம் ஆழ்ந்த பக்தி சித்திக்கும்!” என்றாள். “பக்தியால் என்ன கிட்டும்?” என்றான். “முக்தி!” என்றாள். மகிழ்ச்சியுடன், “இப்போதே அந்த முக்தியை உனக்குத் தரட்டுமா?” என்று கேட்டான். “இப்போதே வைகுந்தம் சென்று விட்டால் உன் திருமணத்தைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டாமல் போய்விடுமே. உனது திருமணத்துக்கான ஏற்பாடுகளை நானே முன்னிருந்து செய்து, உன் திருமணத்தைக் கண்டு களித்து விட்டு முக்தி பெற்றால் போதும்!” என்றாள் யசோதை.

சிலகாலம் கழிந்தது. மதுராவுக்குச் சென்ற கண்ணன் ஆய்ப்பாடிக்கு வரவேயில்லை. பதினாறாயிரத்து எட்டுப் பெண்களைக் கண்ணன் மணம் புரிந்தான். அதில் ஒரு திருமணத்தைக் கூட யசோதை காணவில்லை. தனது ஆசை நிறைவேறாமல் உயிர் நீத்தாள் யசோதை. ஆனால், அந்த நிறை வேறாத ஆசையை நிறைவேற்ற எண்ணினார் திருமால். பத்மாவதியை மணந்து கொள்வதற்காகத் திருமலையில் ஸ்ரீநிவாசனாக அவதரிக்கையில், யசோதையை வகுளமாலிகை என்னும் பெண்ணாகப் பிறக்கச் செய்தார். ஸ்ரீநிவாசனின் சார்பில் வகுளமாலிகையே பத்மாவதியின் தந்தையான ஆகாசராஜனிடம் சென்று பெண் கேட்டாள்.

தானே முன்னிருந்து ஸ்ரீநிவாச கல்யாணத்தையும் நடத்தி வைத்தாள். “உனது திருமணத்துக்கான ஏற்பாடுகளை நானே முன்னிருந்து செய்து, உன் திருமணத்தைக் கண்டு களித்து விட்டு முக்தி பெற்றால் போதும்!” என்று கிருஷ்ணாவதாரத்தில் சொல்லி இருந்தாளல்லவா? இப்போது அது ஈடேறிய திருப்தியுடன் பூத உடலை நீத்து வைகுந்தத்தை அடைந்து அங்கே திருமாலுக்கு நித்ய கைங்கரியம் செய்யும் பேறு பெற்றாள். அந்தமில் பேரின்பம் நிறைந்த திருநாடான வைகுந்தத்தை யசோதைக்கு அளித்தாரே திருமால், அதைப் பெறுவதற்கு யசோதை செய்த முயற்சி என்ன? முக்தி என்ற சொல்லை ஒருமுறை உச்சரித்ததே ஆகும். முக்தி அளிப்பதற்கு நம்மிடம் எந்தத் தகுதியையும் திருமால் எதிர்பார்ப்பதில்லை.

வைகுந்தத்தை அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலே போதும், அதை அளித்து விடுகிறார். அந்த விருப்பத்தை அவரிடம் தெரிவித்து, “முக்தி கொடு!” என்று கேட்கும் அனைவருக்கும் முக்தி அளிக்கிறார் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம். அதே முக்தியைப் பெறவேண்டி பற்பல தவங்களையும், உபாசனைகளையும், அநுஷ்டானங்களையும் செய்பவர்கள் உண்டு. அவர்களுக்கும் திருமால் அருள் புரிகிறார். ஆனால், அவற்றையெல்லாம் செய்ய இயலாத நம் போன்றவர் மேலும் கருணை கொண்டு முக்தி அடைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அந்த விருப்பத்தையே தகுதியாய்க் கொண்டு முக்தி அளிக்கிறார். இப்படிச் சிறிய முயற்சி செய்வோருக்கும் பெரிய பலனாகத் தன்னையே தரும் திருமால், ‘ஸித்தி:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 99வது திருநாமம். “ஸித்தயே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியவர்கள் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் பன்மடங்கு பலன் கிட்டும் படி திருமால் அருள் புரிவார்.

100. ஸர்வாதயே நமஹ (Sarvaadhaye namaha)


1943ம் வருடம். கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் ‘ஆசுகவி சார்வபௌமர்’ என்று போற்றப்படும் வடமொழிக் கவிச் சக்கரவர்த்தியான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி வாழ்ந்து வந்தார். அவர் வடுவூர் ராமனின் மேல் பேரன்பும் பக்தியும் கொண்டவர். அம்மை நோயால் பலர் மடிந்து வந்த அக்காலக்கட்டத்தில் ஸ்ரீநிதி சுவாமிக்கும் அம்மை நோய் ஏற்பட்டது. மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்த்து விட்டு அவரது மனைவியிடம், “இன்று இரவைத் தாண்டுவதே கடினம்! என்னை மன்னித்துவிடுங்கள்!” என்று சொல்லி விட்டுச் சென்றார். அன்று இரவு அவரது வாழ்க்கையின் இறுதி இரவு என்றே நிச்சயித்த அந்த இரவில் ஸ்ரீநிதி சுவாமி தன் இஷ்ட தெய்வமான ராமனிடம் வேண்டினார்.

“ராமா! என் உயிர் போவதைப் பற்றி நான் கவலைப் படவில்லை. ஏனெனில் உடலை நீத்தவுடன் நான் வைகுந்தத்தை அடையப் போவது நிச்சயம். ஆனால், முப்பதே வயதில் நான் மாண்டு போனால் என் தெய்வமான உனக்கன்றோ அவப்பெயர் ஏற்படும்! ராமன் ஏன் அந்த அடியவனைக் காக்கவில்லை என உலகம் உன்னைப் பழித்துப் பேசுமே! அதனால் உன் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள விழைந்தால் என்னுயிரைக் காப்பாற்று!” என்று சொன்ன அவர், அன்று இரவு நான்கே ஸ்லோகங்களில் முழு ராமாயணத்தையும் எழுதினார். முதல் ஸ்லோகத்தில் ராமன் பிறந்தது முதல் சீதா கல்யாணம் வரை, இரண்டாம் ஸ்லோகத்தில் பரசுராமரை வீழ்த்தியது முதல் சுக்ரீவ பட்டாபிஷேகம் வரை,

மூன்றாம் ஸ்லோகத்தில் அநுமனின் தூது முதல் ராவண வதம் வரை, இறுதி ஸ்லோகத்தில் ராம பட்டாபிஷேகத்தைச் சொல்லி, “அந்த ஜானகி ராமன் எப்போதும் என்னுடன் இருக்கையில் நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்!” என்று சொல்லி நிறைவு செய்தார். அடுத்த நாள் காலை அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவரது மனைவியை அழைத்து, “அம்மா! என்ன அதிசயம்! இவர் நன்கு குணமடையத் தொடங்கி விட்டார்!” என்றார். ராமனின் அருளால் வெகு சில நாட்களிலேயே அவர் பூரணமாகக் குணமடைந்தார். மஞ்சு ராமாயணம் என்றும் மந்தஸ்மித ராமாயணம் என்றும் மேலும் இரண்டு ராமாயணங்கள் எழுதினார்.

1986-ம் வருடம் இந்தியக் குடியரசுத் தலைவர் அவருக்கு வடமொழி இலக்கியத்துக்கான சிறப்பு விருதும் வழங்கினார். சுமார் 90 வயது வரை நல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பற்பல ஸ்தோத்திரங்களை இயற்றினார். அம்மை நோயால் தவித்த அந்த இரவில் அவர் எழுதிய நான்கு ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணம் “சதுஸ்ஸ்லோகீ ராமாயணம்” என்றழைக்கப்பட்டது. அதைப் படித்த சிலர் அவரிடம் கேட்டார்களாம், “நீங்கள் எழுதிய இந்தச் சிறிய ராமாயணத்தில் ராவணன் சீதையைக் கடத்திச் சென்றதை எழுதாமல் விட்டுவிட்டீர்களே!” என்று. அதற்கு ஸ்ரீநிதி சுவாமி, “நான் காரணத்தோடுதான் அதை எழுதாமல் விட்டேன். அன்று அம்மை நோயால் உயிர்போகும் அளவு வேதனையுடன் இந்நூலை எழுதினேன்.

அச்சமயத்தில், சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான் என எழுதினால், அந்த துக்கத்திலேயே என் உயிர் பிரிந்திருக்கும். அதனால் அதை எழுதாமல் விட்டுவிட்டு, இலங்கையில் சீதை இருப்பதை அநுமன் மூலம் ராமன் அறிந்து கொண்டான் என மறைமுகமாக ராவணன் சீதையை அபகரித்த செய்தியைத் தெரிவித்தேன்!” என்று கூறினார். “வில் பிடித்த ராமன் விஷயமாக, வில்லூரில் பிறந்த கவிஞன் எழுதிய இந்த நான்கு ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தைப் படிப்பவர்களை அம்மை நோய் ஒன்றும் செய்யாது!” என்று ஐந்தாவதாக ஒரு ஸ்லோகத்தையும் அவர் இணைத்தார். அந்த 5 ஸ்லோகங்களையும் வாசகர் விருந்தாக வழங்குகிறோம். இதைப் படிப்பவர்களை அம்மைநோயிலிருந்து ராமன் காத்தருள்வான்.

ராம ஜனனம் முதல் ஸீதா கல்யாணம் வரை

ராம: கௌசிகம் அன்வகாத் பதிமுனேர் வாசா வதீத் தாடகாம்
ஸத்ரம் தஸ்ய ரரக்ஷ தேன கதிதா: ஸுச்ராவதாஸ்தா: கதா:
கத்வாதோ மிதிலாம் விதாய த்ருஷதம் யோஷிந்மணிம் ஸந்முநே:
பங்க்த்வா தூர்ஜடி சாபமாப ரமணீம் ஸீதாபிதானாமபி ||

பரசுராமரை வெல்வது முதல் சுக்ரீவ பட்டாபிஷேகம் வரை
ஸீதாயா: கரலாலனேன ஸ க்ருதி ஜித்வா முனிம் பார்கவம்
ஸாகேதம் தரஸா ப்ரவிச்ய ஜனனீம் ஆனந்தயன் மத்யமாம் |

ஆஸீத் யோ விபினே சதுர்தச ஸமா ரக்ஷன் முனீன் ஆனதான்
ரக்ஷஸ்ஸங்கம் அதாவதீத் அகடயத் ராஜ்யம் ச ஸூர்யாத்மஜே ||

அநுமன் தூது செல்வது முதல் ராவண வதம் வரை
வாயோராத்ம புவா ததோ ஹநூமதா பாதோதி பார ஸ்திதாம்
ப்ராணேப்யோபி கரீயஸீம் ப்ரியதமாம் விஜ்ஞாய ரக்ஷோ ஹ்ருதாம் |

ஸேதும் வாரிநிதௌ விதாய விவிதானந்தாக வித்வம்ஸனம்
லங்காயாம் விலுலாவ ராவண சிரோ ப்ருந்தானி வந்தேய தம் ||

சீதா ராம பட்டாபிஷேகம்
ஆருஹ்யாத விபீஷணேன ஸுபகம் பக்த்யா ஸமா வேதிதம்
மான்ய புஷ்பகம் அஞ்ஜஸா நிஜபுரீம் ஆகத்ய மித்ரைர் வ்ருத: |
ஆனந்தாய வஸிஷ்ட காச்யப முகை: பட்டாபிஷிக்தோ விபு:
தஸ்மின் ஜாக்ரதி ஜானகீ ப்ரியதமே கா நாம பீதிர் மம ||

இந்த ஸ்தோத்திரத்தின் பலன்
தநுஷ்கர சதுச்ச்லோகீ தநுஷ்புர கவீரிதா |
மாரீகாதர சித்தானாம் மாரீதிமிதராம் திசேத் ||

சீதையும் பரதனும் உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணிய போது, ஆஞ்ஜநேயர் பாடிய ராமாயணம் அவர்களின் உயிரைக் காத்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் திரேதா யுகத்தில் மட்டுமல்ல, கலியுகத்திலும் ராமாயணம் உயிரைக் காக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். 24000 ஸ்லோகங்கள் முழுவதுமாகக் கூடச் சொல்ல வேண்டாம். நான்கே ஸ்லோகங்களில் சொன்னாலும் ராமாயணம் உயிர் காக்கும் மருந்தாக விளங்கும் என்பதை ஸ்ரீநிதி சுவாமியின் உயிரை ராமன் காத்த இச்சரித்திரம் நமக்கு உணர்த்துகிறது.

எனவே தன் அடியார்கள் விரும்பும் பலன் எதுவாக இருந்தாலும்  இம்மைக்கான பலனாக இருந்தாலும் சரி, மறுமைக்கானதாக இருந்தாலும் சரி  அவற்றைத் தந்தருள்பவராகத் திருமால் விளங்குவதால் ‘ஸர்வாதிஹி என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 100-வது திருநாமம். “ஸர்வாதயே நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள் தர்மத்துக்கு விரோதமின்றி விரும்பும் அனைத்துப் பலன்களையும் திருமால் தந்தருள்வார்.

101. அச்யுதாய நமஹ (Achyuthaaya namaha)

பராசர பட்டர் என்னும் வைணவ ஆசாரியர், ராமாநுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வானின் திருமகன் ஆவார். ரங்கநாயகித் தாயாரும் திருவரங்கநாதனும் அவரைத் தங்கள் மகனாகவே பாவித்து வளர்த்தார்கள். அவர் ஒருமுறை காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார். திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்து விட்டார். நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாமையால், அவரைத் தேடிச் சென்ற சீடர்கள் காட்டில் அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள். அவரைத் தேற்றி மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மயக்கம் தெளிந்து பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? காட்டுவாசிகளால் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து உண்டானதா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.

“ஒன்றுமே இல்லை! நான் ஒரு காட்சியைக் கண்டேன் அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர். “என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல் குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப் பையில் மூட்டை கட்டி எடுத்துச் சென்றான். இதைக் கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச் சென்று அவன் கால்களைப் பிடித்துக் கொண்டு மன்றாடியது. தனது குட்டியை விட்டுவிடும் படிக் கெஞ்சியது. அதைக் கண்டு மனம் இரங்கிய அந்த வேடன் முயல் குட்டியைச் சாக்கு மூட்டையிலிருந்து விடுவித்தான்.

இக்காட்சியைக் கண்டதும் நான் மயங்கி விழுந்துவிட்டேன்!” என்றார் பட்டர். “இந்தக் காட்சியில் மயங்கி விழும் அளவுக்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டார்கள் சீடர்கள். “என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? சரணாகதியை எப்படிச் செய்ய வேண்டும் என்று அந்த முயலுக்கு யாராவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? இல்லை. சரணாகதி செய்தால் அவர்களைக் காப்பாற்றியே தீர வேண்டும் என்ற நீதியை அந்த வேடனுக்கு யாரேனும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? அதற்கும் வாய்ப்பில்லை. ஆனாலும், அந்த முயல் செய்த சரணாகதியை அந்த வேடன் அங்கீகரித்து, அது கேட்டதைத் தந்து விட்டான் அல்லவா?

சரணாகதி என்றால் என்னவென்றே அறியாத ஒரு முயலுக்கு, ஒரு சாமானிய வேடன் இப்படிக் கருணை காட்டுகிறான் என்றால், சரணாகத வத்சலனான எம்பெருமான், அவனே கதி என்ற உறுதியுடன் அவன் திருவடிகளைச் சரணடைந்த நமக்கு எவ்வளவு அனுக்கிரகம் செய்வான்? அவனே கதி என்று அவனைப்பற்றிய நம்மைக் கைவிடுவானா? எம்பெருமானின் அத்தகைய ஒப்பற்ற கருணையை உணராமல் இத்தனை காலம் வீணாகக் கழித்து விட்டேனே என்று வருந்தினேன். இறைவன் நம்மைக் கைவிடவே மாட்டான், காப்பாற்றியே தீருவான் என்ற உறுதி இன்னும் என் மனத்தில் உதிக்கவில்லையே என ஏங்கினேன்.

அதனால்தான் மயங்கி விழுந்து விட்டேன்!” என்று விடையளித்தார் பட்டர். பட்டரின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள். வடமொழியில் ‘ச்யுத’ என்றால் நழுவ விடுதல் என்று பொருள். ‘அச்யுத:’ என்றால் நழுவ விடாதவன் என்று பொருள். சரணம் என்று தன்னை அண்டியவர்களை நழுவ விடாமல் கைவிடாமல் காத்தருளுவதால் திருமால் ‘அச்யுத:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 101வது திருநாமம்.

இந்தத் திருநாமத்தின் பொருளை விளக்கும் விதமாகவே திருமலையப்பன் எழுந்தருளியுள்ளார். அவர் தனது வலது திருக்கையைத் திருவடிகளை நோக்கிக் காட்டி, அந்தத் திருவடிகளில் சரணாகதி செய்யச் சொல்கிறார். இடது திருக்கையைத் தொடையில் வைத்துக் கொண்டு, “நீ அவ்வாறு சரணாகதி செய்தால் பிறவிப் பெருங்கடலையே தொடையளவு வற்றச் செய்வேன். உன்னைக் கைவிடாமல் காப்பேன்!” என உறுதி அளிக்கிறார். அந்தத் திருமலையப்பனின் வடிவைத் தியானித்துக் கொண்டு “அச்யுதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை எந்நிலையிலும் திருமால் கைவிடாமல் காத்தருளுவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

- திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்
படங்கள்: ரமேஷ் முத்தையன்