அடுத்த தலைமுறைக்கான பிரசாதம்



கோயில்கள் என்பது பக்தர்களுக்கானதுதான். நிம்மதியை தேடுவோரின் முதல் தேர்வும் கோயிலே. இன்னதென்று விளக்க முடியாத ஒரு அமைதியையும், இதத்தையும், புத்துணர்வையும் ஆலயங்கள் தருகின்றன.
தனித்து விடப்பட்டவன் கோயிலுக்குள் செல்லும்போது தனக்கென்று ஒருவன் இருக்கின்றான் என்கிற ஆதரவை அடைகின்றான். ஆனால், தற்போது கோயில்களை தோஷங்கள் கழுவும் இடமாக மாற்றிக் கொண்டுபோகும் நிலையைக் குறித்து சிந்திக்கப்பட வேண்டும்.

கோயில்கள் என்பவை புராணம், வரலாறு, கலாச்சாரம், பண்பாடு,  பாரம்பரியம், நவகிரகங்கள், சிலைகள், கலைப் பொக்கிஷங்கள், பக்தி, வேதம், ஆகமம், வேதாந்தம் என்று பல்வேறு வித விஷயங்களை தேக்கி வைத்திருக்கின்றன.

அவையெல்லாமுமே தற்காலத்தில் மறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அப்படியெனில், வழிபாடு, பரிகாரம், பக்தி எதுவுமே வேண்டியதில்லையா என்கிற அர்த்தம் இல்லை. மிக நிச்சயமாக எல்லோருமே ஏதேனும் ஒரு பிரச்னைக்காகவோ அமைதிக்காகவோதான் செல்கிறோம். அவரவர்க்கு உரிய வழிபாட்டு விதங்களை யாரும் குறை சொல்லவில்லை.

நம்பிக்கைகள் நிறைந்த மறைபொருளான இடமே கோயில். ஒவ்வொரு கிரியைக்கும் பின்னால் நாம் அறிந்து கொள்ள முடியாத பழங்குடிப் பிணைப்புள்ள காரணங்கள் உள்ளன. பல கிரியைகள் ஆழ்மனதை விழிப்படையச் செய்பவை. அங்கு சரி, தவறு என்பதைத் தாண்டியே பார்க்க வேண்டியிருக்கிறது.

அவசர அவசரமாக அதெல்லாம் முட்டாள்தனமானவை என்றும் சட்டென்று கூற முடியாது. இங்கு நாம் பேசிக் கொண்டிருப்பது புறவயமானது. கோயில்களின் தொன்மையான வரலாற்றுப் பதிவு. ஒரு சிலையின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ளும்போது வரும் ஆர்வமும், இன்பமும் எத்தகையது என்பதை சொல்லில் உரைக்க இயலாது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் மனதை நகர்த்திச் செல்லும் எத்தனையோ கல்வெட்டுக்களும், சிலைகளும் கோயில்களில் நிறைந்து கிடக்கின்றன. அவற்றை கேட்கிறார்களோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது கோயிலைச் சார்ந்த அனைவருடைய கடமையாகும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு எல்லா கோயில்களையும் எளிய பரிகாரங்களுக்கானது என்று மட்டும் சொல்வது தவறானது. பொறுப்பற்ற செயல். அதையும் தாண்டிய வரலாறு, தொன்மம் என்பதையெல்லாம் கூறாது, புத்தகங்களாக பதிப்பிக்காது, அதைத் தெரியப்படுத்தும் விதங்களையும் கைக்கொள்ளாது இருப்பதும் வேதனையானது.

பெருங் கோயில்கள் பற்றி தெரிந்து கொண்டு வந்து பார்க்கிறார்கள். ஆனால், நடுவாந்திரமான கோயில்களைக் குறித்து எந்தத் தகவல்களும் கோயில்களில் இல்லை. எத்தனை நூற்றுக்கணக்கான பழமையான கிராமங்களில் உள்ள தலங்கள் யாருக்கும் தெரியப்படுத்தப்படாமலேயே உள்ளன.

மக்களிடம் தொன்மத்தின் ரத்தினத்தை சொல்லி வைக்கலாமே? இப்போது நீங்கள் அமர்ந்து பிரசாதத்தை உண்ணும் மண்டபச் சிற்பங்கள் சோழர் காலத்தியவை, நாயக்கர்கள் செதுக்கியவை என்று சொல்லும்போது கையில் பிரசாதத்தோடு சிற்பத்தைப் பார்த்து பரவசப்படுவார்களே?

மகா மண்டபம் பிற்காலச் சோழர்கள் என்று ஆண்டை குறிப்பிட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள். வெறும் வரலாற்றோடும் கோயில்கள் முடிவதில்லை. அவை மனங்களின் விசித்திர பிரச்னைகளோடும் பேசுகின்றது. அந்த மூலவர் சிலையை பார்த்துக் கொண்டிருந்தால் மனம் கரைந்து போகிறது.

யாரோ மனதைத் துடைத்து விட்டதுபோல் உள்ளது. எனவே, இவ்விரண்டையும் சமநிலையாக்குவதுதான் முக்கியம். கோயில் என்பதே அகவயமான நம்பிக்கை உலகமும், புறவயமான வரலாற்றையும் கொண்டதேயாகும்.