அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே!



வைகுண்ட ஏகாதசி: 18-12-2018

திருவரங்கம் என்பது 108 வைணவ திவ்யதேசங்களுள் முதல் திவ்யதேசம் ஆகும். திருவரங்கம் ஸ்வயம்வக்த க்ஷேத்ரங்களுள் ஒன்று.

* திருவரங்கம் கோயிலில் தற்போதுள்ள விமானத்துடன், ரங்கநாத ஸ்வாமியை பிரம்ம தேவன் ஆராதனம் செய்து வந்தார். பின்னர் இந்த பெருமானை  இக்ஷ்வாகு மன்னனுக்கு கொடுத்தார்.  இக்ஷ்வாகு மன்னன் வம்சமே இக்ஷ்வாகு வம்சம் என்று ஆகி, அந்த வம்சத்தில் ஸ்ரீராமர் அவதரித்தார்.

பின்னர் அந்த ராமபிரான் விபீஷணனுக்கு இந்த ரங்கநாதரை விமானத்துடன் அளித்தார். விபீஷணன் காவேரி கரையில் தன் அனுஷ்டானங்களை முடிக்க, எண்ணி தற்போதுள்ள திருவரங்கம் என்னும் க்ஷேத்ரத்தில் விமானத்தை இறக்கினார். தன்னுடைய அனுஷ்டானத்திற்காக சென்றார்.

* சோழ அரசன் தர்மவர்மன், ஸ்ரீமன் நாராயணன் தன் நாட்டிற்கு வர வேண்டும் என்று தவம் இருந்தான். அந்த பெருமாளைக் கண்டு தன் தவத்திற்கு மகிழ்ந்து எம்பெருமான் இங்கு வந்தார் என்று எண்ணி பூஜை செய்ய ஆரம்பித்தான்.

* திரும்பி வந்த விபீஷணனுக்கும் தர்மவர்மனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது இது யாருடைய பெருமாள் என்று. இருவரும் ஸ்ரீராமரையே கேட்டு விட எண்ணி அயோத்தி சென்றனர்.

* ராமர், நான் அனைவருக்கும் சமம். நீங்கள் இருவருமே என் பக்தர்கள். இருப்பினும் விபீஷணன் அரக்கன். அவனுக்கு  வானில் பறக்கும் சக்தி உண்டு. அதனால் இலங்கை நோக்கி நான் பள்ளி கொள்கிறேன். தினம் விபீஷணன் பறந்து வந்து திருவரங்கனை தரிசிக்கட்டும் என்று கூறி திருவரங்கத்தில்  அருட் பாலிக்கின்றார்.

* பின்னர் அந்த தர்மவர்மன் தான் பெருமாளுக்கு முதற்கண் கோயிலைக் கட்டி வழிபட்டான். இன்றளவும் வைணவ பெரியோர்கள் கோயில் என்று சொன்னாலே அது திருவரங்கத்தை தான் குறிக்கும்.

* இந்த கோயிலில் எல்லாமே பெரிய என்று தொடங்கும் சிறப்பு உடையது. பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய பிராட்டி, பெரிய ஜீயர் ( ஸ்வாமி மணவாள மாமுனிகள்), பெரிய ஆழ்வார், பெரிய கருடன், அகண்ட காவேரி, பெரிய அவசரம் (சமையல்) இது போன்று கோயிலின் விமானம் ப்ரணவ விமானம்.

* கோயிலின் ராமர் சந்நதி அருகில் சந்திர புஷ்கரணி அமைத்துள்ளது.   

* அங்குள்ள புன்னை மரத்தடியில், பல ஆன்மீக சொற்பொழிவுகள் வைணவ ஆசார்யர் ஸ்வாமி ஆளவந்தார் காலத்தில் இருந்து நடந்தேறின.

* சைதன்ய மகாபிரபு சரித்திரத்திலே, அவர் திருவரங்கம் வந்ததற்கான குறிப்புகள் உள்ளன. அங்குள்ள சந்திரபுஷ்கரணியில் பீச்சாங்குழல் கொண்டு விளையாடும் கண்ணன் ராதை இருவரும் அவருக்கு ப்ரத்யக்ஷம். அந்த சந்நதி இன்றும் உள்ளது புஷ்கரணியில். மகாபிரபு, அந்த காட்சியைக் கண்டு சில நாட்கள் மூர்ச்சித்த நிலையில் இருந்தார்.

* மகாபாரத காலத்தில் பீஷ்மரின் தந்தை சந்தனு இந்த தலம் வந்து பெருமானை பூஜித்துள்ளார். அவர் பெயரால் இங்கு சந்தனு மண்டபம் என்று ஒரு மண்டபம் உண்டு. நாளடைவில் அது சந்தன மண்டபம் என்று ஆகி விட்டது.

* பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இங்கு வந்து தவம் செய்தான் என்று பாரதம் கூறுகிறது. இன்றும் அர்ஜுன மண்டபம் என்று அவன் தவம் மேற்கொண்ட மண்டபத்திற்கு பெயர் உண்டு.

* ஆழ்வார்கள் பதினொருவர் (மதுரகவிகள் தவிர) இந்த ரங்கநாதஸ்வாமியை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

* ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்கள் ஆளவந்தார், பெரிய நம்பிகள், ஸ்வாமி ராமானுஜர்,எம்பார், கூரத்தாழ்வான், முதலியாண்டான், பராசர பட்டர், நம் ஜீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, வள்ளல் வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளை லோகாச்சார்யார், அழகியமணவாள பெருமாள் நாயனார், ஸ்ருத ப்ரகாசிகா பட்டர், ஸ்வாமி மணவாள மாமுனிகள் முதலிய ஏனையோர் அரங்கன்மேல் அபிமானத்துடன் வாழ்ந்த ஊர் இந்த  திருவரங்கம்.

* 14 ஆம் நூற்றாண்டில், சுல்தானியர் படை எடுப்பின்போது  இத்தகைய பெருமை வாய்ந்த இந்த திருவரங்கத்தின் உற்சவ மூர்த்தி நம்பெருமாள் சுமார் 48 வருட காலம் திருவரங்கத்தை விட்டு அகதி போல் அலைந்தார். சுல்தானியர்களுக்கு நம்பெருமாளை எப்படியும் அபகரிக்க வேண்டும் என்ற அவா பிறந்தது. வைணவ ஆச்சார்யர் பிள்ளை லோகாச்சார்யார் மற்றும் அவரது சீடர்கள்  பெருமாளை எடுத்துக்கொண்டு சுல்தானியர்களுக்கு பயந்து ஓடினார்கள்.

* திருவரங்கம் கோயிலில் பன்னிராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டார்கள். இவை அனைத்தும் ‘கோயிலொழுகு’  ‘பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்’ ‘திருவரங்கன் உலா’ போன்றவற்றின் மூலம் நாம் அறியலாம்.

* திருவரங்கம் பெருமானுக்கு மொத்தம் 247 பாசுரங்களால் மங்களாசாசனம் உண்டு.

* பொய்கையாழ்வார் இந்த பெருமாள் இருக்கும் திசை நோக்கி சேவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.
* பூதத்தாழ்வார் கூறும் போது , இந்த எம்பெருமானை நம்பினால் சம்சார பந்தம் நீக்கி நம்மைக் காப்பாற்றுவார் என்று கூறுகிறார்.
* பேயாழ்வார் கூறும் போது, தேன் சொட்டும் சோலைகளை உடைய திருவரங்கம் என்கிறார்.
* திருமழிசையாழ்வார் மங்களாசாசனம் செய்வதோ, எந்த எம்பெருமான் ராவணனின் பத்து தலையை கொய்தானோ, எந்த எம்பெருமானை பிரம்மன் பூஜித்தானோ அந்த எம்பெருமான் தான் திருவரங்க ரங்கநாத ஸ்வாமி என்கிறார்.

* ஆழ்வார்களில் பரிபூரணர் என்று சொல்லப்படும் ஸ்வாமி நம்மாழ்வார், இந்த அரங்கனை நினைத்து தனக்கு இரவு பகல் கூட தெரியவில்லை. அத்தனை ஆசை அவர் வடிவழகிலே வருகிறது என்று கூறுகிறார்.

* பெரியாழ்வார் எனும் விஷ்ணுசித்தர், கரு மேகங்களைக் கண்டால் கரிய உருவம் கொண்ட அந்த திருவரங்கன் தான் தன் சித்தத்திலே வருகிறார் என்று கூறுகிறார்.

* குலசேகராழ்வார் என்னும் கேரளா நாட்டு அரசர், ‘தூராத மனக்காதல்’ என்னும் பாசுரத்திலே திருவரங்கத்தில் பெருமாளின் திருநாமங்களை பாடி ஆடி  புரள வேண்டும்  என்று கூறுகிறார்.

* தொண்டரடிப்பொடி ஆழ்வார் என்னும் விப்ர நாராயணர், இந்த அரங்கனுக்காகவே திருப்பள்ளியெழுச்சி (சுப்ரபாதம்) தன்னை சமர்ப்பித்தார்.

* இவர் அரங்கனைத் தவிர வேறு எந்த எம்பெருமானையும் பாடாதவர். இவர் திருப்பள்ளியெழுச்சி தவிர திருமாலை எனும் ப்ரபந்தமும் செய்துள்ளார்.

* திருப்பாணாழ்வார் என்பார் அமலனாதிபிரான் என்னும் பத்தே பாசுரங்கள் இந்த ரங்கநாதருக்காக பாடினார். கடைசி பாசுரத்தில் ‘என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே’ என்று கூறி அந்த சந்நதியிலேயே ஐக்கியம் ஆகி விட்டார்.

* திருமங்கையாழ்வார் என்னும் கலியன், இந்த திருவரங்கக் கோயிலில் பல திருப்பணிகள் செய்தார். இவர் ஆலி நாடு என்னும் திருவாலிக்கு அரசர். அதனால் இவருக்கு ஆலிநாடான் என்று பெயர் உண்டு. இவர் செய்த திருப்பணிக்காக திருவரங்கத்தில் ஆலிநாடான் திருச்சுற்று என்றே ஒரு பிராகாரம் உண்டு.

* ஏகாதசிகளில் முக்கியமான ஏகாதசி வைகுண்ட ஏகாதசி. இந்த ஒரு ஏகாதசிக்கு உபவாசம் செய்து எம்பெருமானை வழிபட்டால் எல்லா ஏகாதசிகளுக்கும் உபவாசம் இருந்த பலன் கிடைத்து விடும். வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல் பத்து ராப்பத்து என்று தத்தம் பத்து நாட்கள் உற்சவம் மற்றும் ஒரு நாள் இயற்ப்பா சாற்று என்னும் ஒரு நாள் ஆக மொத்தம் 21 நாட்கள் உற்சவம்  எல்லா வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படும்.

* பகல் பத்து உற்சவம் பத்தாம் நாள் (வைகுந்த ஏகாதசிக்கு முந்தைய நாள்) நாச்சியார் திருக்கோலம் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும்.

* ஒரு சமயம், வைணவ ஆச்சார்யர் ஸ்வாமி பராசர பட்டர், இந்த எம்பெருமானைப் பார்த்து தாயாரின் வடிவழகு தான் சிறந்தது. தாயாரைப் போல் வெட்கப்பட எம்பெருமானுக்கு வரவில்லை என்று நகைச்சுவையாக கூறினார்.

* ராப்பத்து உற்சவம் என்பது, தமிழ் மறை திருவாய்மொழிக்கே சிறப்பு அளித்து, எம்பெருமான் பத்து நாட்கள் திருவாய்மொழி கேட்கிறார். இந்த ராப்பத்து உற்சவத்தில் சேவிக்கப்படும்

* திருவாய்மொழியைக் கேட்கவும், பெருமாளை தரிசிக்கவும், பரமபதத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்தக் கோயிலுக்கு வருவதாக ஐதீகம். ராப்பத்து உற்சவத்தின் கடைசி நாள், ஸ்வாமி நம்மாழ்வார் திருவடி தொழல் என்னும் வைபவம் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

- கோமடம் கிருஷ்ணப்ரியா