சொர்க்கவாசல் திறப்பாய் ரங்கநாதா!



பக்தி என்னும் ராகம்
மீட்டும் ரங்கநாதா! எங்கள்
மனராகம் கேட்கிறதா ரங்கநாதா!
புன்னகை பூ தொடுக்கும் ரங்கநாதா!
எங்கள் பூமாலை தோள்
சேர்ப்பாய் ரங்கநாதா!

ஆசை காற்று வீசும் போது ரங்கநாதா!
வாழ்க்கை படகு தத்தளிக்கும் ரங்கநாதா!
தீயவினையற்ற மூச்சுக்காற்று ரங்கநாதா -உன்
சொர்க்கவாசல் முன் நிற்கும் ரங்கநாதா!

பாவக்கணக்கு கழித்துவிடு ரங்கநாதா!
பரமபதத்தில் ஒளி ஏற்று ரங்கநாதா!
நோயில்லாத வாழ்வு ரங்கநாதா!
பூவுலகில் சொர்க்கமப்பா ரங்கநாதா!

வசதியாய் வாழத்தானே ரங்கநாதா!
பாடுபட்டு பணம் சேர்ப்பார் ரங்கநாதா!
வாசல்தேடி காலன் வந்தால் ரங்கநாதா!
சேர்த்த பணம் சிரிக்குதப்பா ரங்கநாதா!

கடல் போன்ற சோதனையில் ரங்கநாதா!
கரை ஒதுங்கும் நத்தை ஞானம் ரங்கநாதா!
இதயத்துடிப்புடன் பேர் பாடும் ரங்கநாதா!
மனமெல்லாம் சொர்க்கமன்றோ ரங்கநாதா!

ஏரோட்டும் விவசாயி ரங்கநாதா!
அவன் வாசல் உன் சொர்க்கம் ரங்கநாதா!
உலகெங்கும் காற்றாய் உலவும் ரங்கநாதா!
கோயிலில் சிலையானாய் ரங்கநாதா!

ஆழியில் பள்ளிகொண்டு ரங்கநாதா!
நிலம், மனம் ஆள்கிறாய் ரங்கநாதா!
ஊழியில் நீ பொங்கி ரங்கநாதா!
புதுயுகம் படைத்திடுவாய் ரங்கநாதா!

திருவரங்கம் சேர்ந்தோம் ரங்கநாதா!
திருமுகம் அமுதம் என்போம் ரங்கநாதா!
திருமலையில் பக்தி போராட்டம் ரங்கநாதா!
சொர்க்கவாசல் திறந்தருள்வாய் ரங்கநாதா!

சேவையும், தர்மமும் உலகில் ரங்கநாதா!
சொர்க்கமதை அழைத்துவரும் ரங்கநாதா!
ஏழைக்கு சொர்க்கம் எது ரங்கநாதா?
ஏழ்மையிலும் நேர்மையன்றோ ரங்கநாதா!

நடந்தவைக்கு யார் பொறுப்பு ரங்கநாதா!
நாளை நடப்பதற்கு யார் பொறுப்பு ரங்கநாதா!
நடப்பது உன் நாடகம் ரங்கநாதா!
நானறிவேன்; நீ விளையாடு ரங்கநாதா!

- விஷ்ணுதாசன்