ஆற்றிலிட்டுக் குளத்தில்தேடினால் கிடைக்குமா?



அருணகிரி உலா - 68

சிதம்பரம் விருத்தாச்சலம் பாதையில் 35 கி.மீ தொைலவிலுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் எனும் திருத்தலம் பெயரைக் கேட்டதும் நமக்கு நினைவுக்கு வருவது பூவராகசுவாமியின் பிரம்மாண்டமான திருக்கோயில், இக்கோயிலுக்கு நேரே பின்புறம் 1000 வருடங்கள் பழமையான நித்திலேஸ்வரர் கோயில் இருப்பதைப் பலர் அறிய மாட்டார்கள் இறைவி பெரியநாயகி, பெரியதொரு குளக்கரையில் அமைந்துள்ளது, ஆளரவமே இல்லாத கோயிலுக்குள் நுழைந்து கொடிமரம், பலிபீடம், நந்தி தரிசித்து உள்ளே செல்கிறோம், கருவறை பூட்டியிருந்தது, திறந்த வெளிப் பிராகாரத்தில் மிக அழகிய ஆறுமுகன்சிலை இருந்ததைப் பார்த்து அருகில் சென்றபோதுதான் அது மிகவும் பின்னமடைந்திருந்ததைக் காண்கிறோம்,

முருகன் இருக்க வேண்டிய சந்நதியில் தட்டுமுட்டுச் சாமான்கள் கிடந்தது கண்டு மனம் நொந்தது, கருவறைக் கோட்டத்திலுள்ள விநாயகர் சிலையும் முகம் சிதைந்து காணப்பட்டது. உமா மகேஸ்வரர், லிங்கோத்பவர், தேவார மூவர். தட்சிணாமூர்த்தி. துர்கை.

அர்த்தநாரீஸ்வரர். அம்பிகை பிரஹந்நாயகி ஆகியோரைத் தரிசிக்கிறோம், வெட்டவெளியில் வெயிலும் மழையும் கொண்டு நிற்கும் அறுமுகன் முன் தலத்திற்குரிய இரண்டு திருப்புகழ்ப் பாக்களை சமர்ப்பிக்கிறோம், முருகன் பலவித முத்து மாலையும் அணிந்து வர வேண்டும் என்று விரும்பும் அருணகிரியார். அம்முத்து பிறக்கும் இடங்களைப் பற்றியும் பாடுவது குறிப்பிடத்தக்கது,

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
     கரிமுத்து மாலை ...... மலைமேவுங்
கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
     கடல்முத்து மாலை ...... யரவீனும்
அழல்முத்து மாலை யிவைமுற்று மார்பி
     னடைவொத்து லாவ ...... அடியேன்முன்
அடர்பச்சை மாவி லருளிற்பெ ணோடு
     மடிமைக்கு ழாமொ ...... டருள்வாயே

பொருள்: மூங்கில் அல்லது கரும்பு தரும் முத்தினாலான மாலை, மேகம் தருகின்ற முத்தாலாகிய மாலை, யானை மத்தகத்திலிருந்து பெறப்படும் முத்தினால் ஆன மலை. மாலையில் கிடைக்கும் முத்து.

சங்கில் கிடைக்கும் முத்து. கடலில் கிடைப்பது. பாம்பு தரும் சூடுள்ள முத்து இவற்றால் ஆன மாலைகள் - இப்படிப்பட்ட எல்லா மாலைகளும் மார்பிலே புரண்ட சைய அடியேன் முன். பச்சை நிறக் குதிரை போன்ற மயில் மேல். இச்சா சக்தியாம் வள்ளியோடும். அடியார் குழாத்துடனும் வந்து அருள்புரிவாயாக,

மழையொத்த சோதி குயில்தத்தை போலு
     மழலைச்சொ லாயி ...... யெமையீனு
மதமத்த நீல களநித்த நாதர்
     மகிழ்சத்தி யீனு ...... முருகோனே
செழுமுத்து மார்பி னமுதத்தெய் வானை
     திருமுத்தி மாதின் ...... மணவாளா
சிறையிட்ட சூரர் தளைவெட்டி ஞான
     திருமுட்ட மேவு ...... பெருமாளே.

பொருள்: மழை மேகம் போன்று ஒளி வீசுபவள். குயில். கிளிபோன்ற இனியசொல் உடையவள். மழலை மொழி பேசும் வாலை. எம்மைப்பெற்றவரும். பொன் ஊமத்தை அணிந்தவரும்.

ஆலகால விஷத்தைத் தரித்ததால் நீலம் நிறம் அடைந்த கழுத்தை உடையவரும். என்றும் அழியாதிருப்பவரும் ஆன சிவபிரான் களிப்படைகின்ற பராசக்தி அருளிய குழந்தையே! செழிப்புள்ள முத்துமாலை அணிந்த மார்பை உடையவளும்.

அமுத மயமானவளும் (முற்பிறப்பில் அமுதவல்லி என்ற பெயர் கொண்டவளும்) மங்களகரமான மோட்சத்தை நல்க வல்லவளுமான தேவசேனையின் கணவனே! சூரர்கள், தேவர்களுக்கிட்ட விலங்கைத் தரித்தவனே! ஞானமூர்த்தியே! திருமுட்டம் (ஸ்ரீமுஷ்ணம்) எனும் தலத்தில் வீற்றிருப்பவனே! ஸ்ரீமுஷ்ணத்தில் அருணகிரியார் பாடிய மற்றுமொரு திருப்புகழ் பின்வருமாறு:-

பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
     லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
          புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது
புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
     சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
          புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா
திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
     புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
          சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர்
திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
     மகளைப் பொற்றன வாசையொ டாடிய
திருமுட்டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

பொருள்: எப்பொழுதும் வெற்றியையே காணும், கரும்பாகிய நீண்ட வில்லை உடைய மன்மதனின் உடல் எரிந்து. உலர்ந்த இலை போலக் கீழே விழும்படித் தீச்சிரிப்பைச் சிந்திய சந்திரமௌலியின் இடப் பாகத்திலுள்ள ஒப்பற்ற மாது.

புகழ் மிக்க பராசக்தி. கற்பும், இதமான சிவபக்தியும் நிலை குலையாத உயர்வையும் உடைய சிவபக்தர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பரமேஸ்வரி. மூவுலகத்தையும் முன்பு படைத்த உமாதேவி அருளிய குழந்தையே! அலைகடலில் மேருமலை மத்தாகச் சுழலவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி.

முன்னொரு காலத்தில் சுவை மிக்க அமுதத்தை இது சிவ பக்தர்களுக்குரியது என்று பகிர்ந்தளித்தவரும் லட்சுமி தேவி சென்று பூஜித்த ஆதிவராகப் பெருமாளாம் ஆகிய திருமாலின் மகளாகிய வள்ளி மீது திருமுட்டப்பதியில் வாழ் முருகனே! சுரர் பெருமானே! (ஆதிவராகப் பெருமாள் = ஸ்ரீமுஷ்ணம் தலப் பெருமாளின் திருநாமம்) அறுமுகனையும் பின்னர் நவகிரகங்கள், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரைத் தரிசித்து வெளியே வருகிறோம், பன்னிரண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்கன் கட்டிய அழகிய கோயிலின் இன்றைய நிலை வருத்தத்திற்குரியது, அடுத்ததாக விருத்தாசலம் வந்தடைகிறோம்.

தமிழில் முதுகுன்றம் எனப்படுகிறது, இறைவன்-விருத்தகிரீஸ்வரர்; பழமலைநாதர்; இறைவி விருத்தாம்பிகை, பெரிய நாயகி, தல விநாயகர் ஆழத்துப் பிள்ளையார் மணிமுத்தாற்றின் கரையிலுள்ள இத்தலம் சிவத்தலங்கள் ஆயிரத்தெட்டில் தலைமையான நான்கினுள் ஒன்றாகும், (காசி. சிதம்பரம். காளத்தி என்பன மற்ற மூன்று தலங்கள்) கோயிலிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 72 கல்வெட்டுகளுள் ஒன்றில் ‘திருமுதுகுன்றமுடையார்’ என்றும்.

‘ராசேந்திர சிம்ம வளநாட்டு இருங்கொள்ளிப்பாடி பழவூர்க் கூற்றத்து நெற்குப்பை முதுகுன்றமுடையார்‘ என்றும் இறைவன் குறிப்பிட்டுள்ளார், இத்தலத்தில் இறப்பவரது உயிரைத் தன் மடி மீது கிடத்தி இறைவன் உபதேசம் செய்ய, இறைவி தன் புடவைத்லைப்பங் விசிறி இளைப்பாற வைப்பாள் என்று கூறப்பட்டுள்ளது, பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குருநமசிவாயர்.

நள்ளிரவில் பசி ஏற்பட்ட போது ‘மலைக் கிழத்தி சோறு கொண்டு வா’ என நிறைவுறும் வெண்பாவைப் பாடியபோது ‘கிழத்தி எப்படி சோறு சுமந்து கொண்டு வருவாள்’ என்று நகைச்சுவையுடன் கேட்ட அம்பிகையைப் போற்றி மீண்டும் பாடி ‘முற்றா இளமுலை மேலார வடக்காலே சோறு கொண்டு வா’ என்ற போது அம்பிகை இளம் நாயகியாக வந்து உணவளித்தாளாம்!

எனவே, கோயிலில் பாலாம்பிகைக்க்கு என தனிச்சந்நதியும் உள்ளது, விருத்தாசலத்துப் பிள்ளையார். ‘ஆழத்துப் பிள்ளையார்’ என்றழைக்கப்படுவதன் பின் சுவையான வரலாறு ஒன்று உண்டு, பரவை நாச்சியாரின் சிவத் தொண்டிற்கு உதவுவதற்காக இறைவனிடம் பொன்னும் பொருளும் வேண்டிப் பெற்றார் சுந்தரர்.

திருடர்களிடமிருந்து இவற்றைக் காக்க வேண்டுமே என்று சுந்தரர் கவலைப்பட்டபோது. இறைவன் அவற்றை மணிமுத்தாறு நதியில் வீசி விட்டுத் திருவாரூர்க் கமலாலயக் குளத்தில் பெற்றுக் கொள்ளுமாறு ஆணையிட்டார் சுந்தரர். பொன்னை ஆற்றில் இடத் தயங்கியபோது ஒரு பள்ளமான பகுதியிலிருந்து சிரிப்பொலி கேட்டது, ‘கவலைப்படாதே சுந்தரா.

நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார், உள்ளேயிருந்த விநாயகர். ஆற்றிலிட்ட பொன்னின் ஒரு பகுதியைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டார் சுந்தரர். ஆரூர்க் குளத்தில் பொன் திரும்பக் கிடைத்தது, குளக்கரையிலிருந்த விநாயகர் அதை மாற்றுரைத்துப் பார்த்து.

சுந்தரர் வைத்திருந்த பொன்னுடன் ஒத்துப் போகிறது என்று உறுதி அளித்தார். பள்ளத்திலிருந்த விருத்தாசலப் பிள்ளையார் ஆழத்துப் பிள்ளையார் என்றும். ‘ஆரூர்க் குளக்கரை விநாயகர்’, ‘மாற்றுரைத்த பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகின்றனர், ‘ஆற்றிலிட்டுக் குளத்தில் தேடினால் கிடைக்குமா?’ என்ற பழமொழியும் ஏற்பட்டது, (,இவ்வாறு கேலி செய்தவர் பரவை நாச்சியார் என்பர்) மிகவும் விசாலமான கோயில்.

நான்கு கோபுரங்களும் ஏழு நிலைகளுடன் காட்சி அளிக்கின்றன. திருச்சி ஜி.எஸ்.டி. சாலையில் இடப்புறம் வரும் வேப்பூரில் திரும்பி, புறவழிச் சாலை வழியே கும்பகோணம் செல்லும்போது, வெகு தொலைவிலிருந்தே விருத்தாசலம் கோயில் கோபுரத்தைத் தரிசிக்கலாம். ஆழத்துப் பிள்ளையாரை வணங்கி கோயிலுள் வருகிறோம். இருபுறமும் வேலைப்பாடுடைய தூண்கள் உள்ளன.

உள் வாயிலில் நுழைந்ததும் வருவது கைலாயத் திருச்சுற்று. முன்னால் உள்ள கருங்கல் மண்டபம், தீபாராதனை மண்டபம் எனப்படுகிறது. பின்னர் வருவது நந்தி மண்டபம். இதன் தெற்கிலுள்ளது விபச்சித்து முனிவர் மண்டப அருகில் சொற்பொழிவு மண்டபம் உள்ளது.

ஆழத்துப் பிள்ளையாரைத் தரிசிக்கப் படிக்கட்டில் இறங்கிக் கீழே செல்லவேண்டும். தனிச்சுற்று மதிலும் கோபுரமும் உண்டு. ஒரு மூலையில் முருகக் கடவுள் 28 ஆகமங்களையும் சிவலிங்கங்களாகப் பாவித்துப் பூசித்த 28 ஆகமக் கோயில் உள்ளது.

கயிலாயத் திருச்சுற்றின் முடிவில் மிகப் பழமையான நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. வன்னியடிப் பிராகாரம் எனும் உட் பிராகாரத்திற்கு வருகிறோம். தலமரமான வன்னிமரம் இங்கு உள்ளது.

இங்குள்ள மேடையில் விபச்சித்து முனிவர், ரோமச முனிவர், விதர்ஷண செட்டியார் (இங்கு வழிபட்டுச் சிவகணமான ஒரு அன்பர்) முதலானோர் உருவங்கள் உள்ளன. பஞ்சலிங்கங்கள் வல்லப கணபதி, மீனாட்சி-சொக்கலிங்கம், விஸ்வநாத லிங்கம் போன்றோரை தரிசித்து சுப்ரமண்யரை வணங்குகிறோம். அருணகிரிநாதர் பாடிய மூன்று திருப்புகழ்ப்பாக்கள் இத்தலத்திற்குரியவை.

திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
     செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
     தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
     னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
     ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
     கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
     கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
     முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
     முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.

பிரணவப் பொருளை, உன்னை வணங்கிய சிவபெருமானுக்கு உபதேசித்தவனே! (குளம்=சரவணப் பொய்கை, குளம் என்பது நெற்றி என்றும் பொருள்படும். சரவணபவனே (அ) நெற்றிக் கண்ணில் தோன்றியவனே).

ஒளி மிக்க மதுரைப்பதியில் சமணர்களைக் கழுவேறச் செய்தவனே! அரிதான உன் அருள் விலாசத்தில் அன்பும் நம்பிக்கையுமற்றவரைப் போலத் துன்புறும் என்னைக் கண்பார்த்து அருள மாட்டாயா? திருவண்ணாமலையில் அனைவரும் வியக்கும்படிக் கம்பத்திளையனாராக ஒரு நொடி காட்சி அளித்து மறைந்தவனே!

கரியரேகைகள் பொருந்தி, போர் செய்ய வல்ல அம்புகள் போன்ற கண்களை உடைய வள்ளியின் கண் எதிரே வேங்கை மரமாக நின்றவனே! மேக வண்ண திருமாலின் மருகனே! கருணையுடன் உபதேசிக்கும் முதன்மைப் பொருளே! நறுமணம் வீசும் கற்பக நிழலில் வாழும் தேவர்களின் சிறையை மீட்க எதிரியான சூரனைக் கோபித்தவனே! தனது தலத்தில் இறக்கின்றவர்கள் மீண்டும் உடல் எடுக்காதவாறு பிறவியை ஒழிக்கின்ற வல்லமை பெற்ற, முத்தமிழ் விளங்கும் முதுகிரியில் உறையும் பெரியோனே‘‘

(உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி