நார்த்தாமலை நீருக்குள் ஜுரஹரேஸ்வரர்



கல்வெட்டு சொல்லும் கதைகள்

காவிரியின் வடகரை தேவாரத் தலங்கள் வரிசையில் தலையாய பெருமையுடைய திருத்தலம் திருவானைக்காவாகும். இது சிலந்தியும் (கோச்செங்கணான்) யானையும் வெண்ணாவல் மரத்தின்கீழ் இருந்த சிவலிங்கத்தை பூஜை செய்து முக்தி பெற்ற திருத்தலமுமாகும்.  இத்தலத்தில் திருப்பதிகம் பாடிய திருநாவுக்கரசு பெருமானார்,

சேறுபட்ட தண்வயல் சென்றுசென்று சேண் உலாவு
ஆறுபட்ட நுண்துறை ஆனைக்காவில் அண்ணலார்
நிறுபட்ட மேனியார் நிகரில் பாதம் ஏத்துவார்
வேறுவட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே

எனப் பாடி ஆறுபட்ட நுண்துறை ஆனைக்கா எனப் பாடுவதோடு, எறிநீர்த் திரை உகளும் காவிரி சூழ் தென் ஆனைக்காவானை, செழுநீர்த்திரளை என்று குறிப்பிட்டு பஞ்ச பூதங்களில் நீரின் வடிவாகத் திகழும் பரமனைப் போற்றிப் பரவுகிறார். அதனால்தான் பண்டு திருவானைக்காவில் மூலவராம் சிவலிங்கம் நீரினுள் இருந்தமையை மூலத்தான கட்டுமான அமைப்பால் அறியலாம். பின்னாளில்தான் லிங்கத் திருமேனியை மேலே அமைத்து வழிபாடு செய்கின்றனர்.

திருச்சிராப்பள்ளிக்கு அருகமைந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் பண்டு இரு தலங்களில் சிவலிங்கப் பெருமானை நீருக்குள்ளேயே அமைத்து ஆனைக்கா அண்ணலின் திருவுருவத்தை உலகுக்கு காட்டியுள்ளனர். முதலாவது தலம் சித்தன்னவாசலாகும். இங்குள்ள மலைமீது வடக்குப் பகுதியில் நாவல் மரங்களுடன் நீள் வடிவில் பெரும் நீர்ச்சுனை ஒன்று அமைந்துள்ளது. வானத்து மழைநீர் தூய்மையாக இம்மலைமீது அமைந்த சுனையில் சேகரமாகி ஆண்டு முழுவதும் நீர் நிரம்பிய நிலையிலேயே இச்சுனை காணப்பெறுகின்றது.

இச்சுனையினுள் சுமார் பத்தடி ஆழத்தில் ஒரு குடைவரைக் கோயிலின் கருவறை அமைந்துள்ளது. நீரினுள் திகழும் பாறையினைக் குடைந்து இதனை அமைத்துள்ளனர். ஏழு அடி அகலம், ஒன்பதடி நீளம், எட்டடி உயரத்தில் இந்த அறை அமைந்துள்ளது. அதனுள் எட்டடி உயரத்தில் பாறையிலேயே குடைந்து அமைக்கப்பெற்ற சிவலிங்கத் திருமேனி இடம் பெற்றுள்ளது.

பெரிய இந்தச் சுனையின் நீரினை முழுதுமாக இறைத்தாலன்றி உள்ளே இருக்கும் குடைவறையையோ லிங்கப் பெருமானையோ நாம் பார்க்க இயலாது. அண்மைக் காலத்தில் ஒருமுறை இச்சுனையின் நீரை முழுதுமாக வெளியேற்றி, ஈசனுக்கு வழிபாடுகள் செய்துள்ளனர். புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவையின் நிறுவநர் புலவர் பு.சி. தமிழரசன் என்ற வரலாற்று ஆய்வாளர் அவர்களிடம் சுனைநீரை வெளியேற்றிய பின்பு அவர்கள் வழிபாடு செய்தபோது எடுக்கப்பெற்ற அரிய புகைப்படங்கள் உள்ளன. சுனையினுள் உள்ள இக்குடைவரைக் கோயிலை சுனையாண்டார் கோயில் என இவ்வூர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

கோயில் மூழ்கியுள்ள சுனையினை நாவற்சுனை என அழைப்பர். சுனையின் கரையில் நாவல் மரங்கள் உள்ளன. இவ்வமைப்பு திருவானைக்கா அப்புலிங்கத்தை நமக்குக் காட்டி நிற்பதாகும். மேலும், சுனைநீர் சிவகங்கையாக கருதப்பெறுவதாகும். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தாமலை எனும் ஊர் புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள நார்த்தாமலை பிரிவுச் சாலையில் சுமார் ஒரு கல் தொலைவு பயணம் செய்தே இந்த ஊரினை அடையலாம்.

நார்த்தாமலை மாரியம்மன்கோயில் திருவிழா புதுக்கோட்டை மாவட்டத்துப் பெருவிழாக்களில் ஒன்றாகும். மேலமலை, பறைமலை, கோட்டை மலை, ஆளுருட்டி மலை, கடம்பர் மலை, உவச்சன் மலை, பொம்மடி மலை என்ற மலைகள் சூழ்ந்த ஒரு ஊரே நார்த்தாமலைப் பகுதியாகும். இவற்றுள் மிகு சிறப்புடைய மலை மேலமலையேயாகும். இம்மலைமீது விஜயாலய சோழன் எடுத்த விஜயாலய சோழீஸ்வரம் எனும் கட்டுமானக் கோயிலும், மலையில் குடையப்பெற்ற பழியிலி ஈஸ்வரம், சமணர் குடகு எனும் இரண்டு குடைவரைக் கோயில்களும், தலையருவிசிங்கம் எனும் முக்கியமான சுனையும் அமைந்துள்ளன.

மேலமலையின் சரிவில் அமைந்துள்ள விஜயாலய சோழீஸ்வரம் எனும் கட்டுமானக் கோயில் சோழர் கோயிற்கலை மரபின் முதற்கோயிலாகக் கருதப்பெறுகின்றது. கி.பி. 846லிருந்து 881 வரை ஆட்சி செய்து பிற்காலச் சோழர் மரபை உருவாக்கிய விஜயாலய சோழனால் எடுக்கப்பெற்ற சிவாலயம் இது என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். மற்ற சிவாலயங்களின் கருவறை அமைப்பிலிருந்து இவ்வாலய அமைப்பு வேறுபட்டதாகும். வெளியிலிருந்து பார்க்கும்போது சதுர வடிவ கருவறை போன்று தோற்றமளித்தாலும் உள்ளே வட்ட வடிவில் கருவறை அமைந்து அதற்கு வெளியே சாந்தாரப் பகுதி மட்டும் சதுர வடிவில் காணப்பெறுகின்றது.

அப்பகுதியில் நான்கு தூண்கள் உள்ளன. வட்ட வடிவ கருவறைக்கு முன்பே திகழும் மண்டபம் நடுவில் ஆறு தூண்களோடு காணப்பெறுகின்றது. பக்கச் சுவர்களில் ஆறு அரைத்தூண்கள் இடம்பெற்றுள்ளன. விமானத்தின் சிகரம் வட்ட வடிவில் காணப் பெறுகின்றது. மூலவர் கோயிலைச் சுற்றி எட்டு பரிவாராலயங்களும், திருமதிலும் இருந்து அழிந்த சுவடுகளே உள்ளன. கோயில் வாயிலில் திகழும் துவாரபாலகர் சிற்பங்களும், ஸ்ரீவிமானத்தின்மேல் காணப்பெறும் சிற்பங்களும் முற்காலச் சோழர் கலையின் முத்திரைகளாகத் திகழ்கின்றன.

விஜயாலய சோழீஸ்வரத்திற்கு அருகே மலையினைக் குடைந்து உருவாக்கப்பெற்ற சமணர்குடகு எனப்பெறும் திருமால் குடைவரை உள்ளது. அதனுள் கருவறை ஒன்றும், நீண்ட முகமண்டபமும் உள்ளன. கருவறையில் தெய்வத்திருமேனி ஏதும் இல்லை. ஒரு பீடம் மட்டுமே உள்ளது. முன்புற மண்டபத்தில் திருமாலின் பன்னிரு திருமேனிகள் சுவரில் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்பெறுகின்றன. கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், த்ரிவிக்கிரமன், வாமனன், அச்சுதன், தரன், பத்மநாபன், தாமோதரன், வாசுதேவன், மதுசூதனன் எனும் திருமாலின் பன்னிரு வடிவங்களே இங்கு காட்சி நல்குகின்றன.

இதற்கு அருகே தென்புறம் அமைந்த சிறிய குடைவரை கல்வெட்டுகளில் பழியிலி ஈஸ்வரம் எனக் குறிக்கப்பெறுகின்றது. நிருபதுங்கபல்லவனின் ஏழாம் ஆட்சியாண்டில் (கி.பி. 862) விடேல் விடுகு முத்தரையனின் மகன் சாத்தன் பழியிலி என்ற முத்தரைய மன்னன் இக்குடைவரையை எடுப்பித்தான் என அங்குள்ள கல்வெட்டுச் சாசனம் எடுத்துரைக்கின்றது. சிறிய இச்சிவாலயத்தின் முன்புறம் “ரிஷபக்கொட்டில்” என்ற இடப மண்டபம் எடுக்கப் பெற்றது பற்றியும், முத்தரைய மன்னனின் மகள் பழியிலி சிறிய நங்கை அளித்த நிலக்கொடை பற்றியும் அங்குள்ள மற்றொரு கல்வெட்டு விவரிக்கின்றது.

வரலாற்றுச் சிறப்புடைய கல்வெட்டுகளைச் சுமந்து நிற்கும் விஜயாலய சோழீஸ்வரத்தையும், விஷ்ணு குடைவரையையும், பழியிலி ஈஸ்வரம் எனும் குடபோகக் கோயிலையும் கண்டு தரிசித்தவர்களுக்கு அக்கோயில்களுக்கு மிக அருகில் ஒரு அதிசய படைப்பு இருப்பதை அறிந்திரார். அம்மலையின் சரிவுப் பகுதியில் வடக்காக இரண்டு சுனைகள் இருப்பதைக் காணலாம். சிறிய சுனையினை “தலையருவிசிங்கம் சுனை” என அழைக்கின்றனர்.

சித்தன்னவாசலில் எவ்வாறு நாவற்சுனையினுள் ஒரு குடைவரைச் சிவாலயம் நீரினுள் மூழ்கியுள்ளதோ அதேபோன்று இச்சுனையினுள் ஒரு அற்புத சிவாலயம் அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் பெய்யும் மழைநீர் இச்சுனையினை நிரப்பி நிற்கும். அந்நீர் சிவகங்கையாகப் பாவிக்கப்பெறுவதாகும். அச்சுனை அருகே கி.பி. 1857ஆம் ஆண்டு பொறிக்கப்பெற்ற தமிழ் கிரந்தம் கலந்த கல்வெட்டுப் பொறிப்பு ஒன்று காணப்பெறுகின்றது. 40 வரிகளில் அமைந்த அக்கல்வெட்டை இனி நாம் காண்போம்.

“ஸ்வஸ்திஸ்ரீ சாலிவாகன சகாப்தம் 1781 கலியப்தம் 4958 இதன்மேல் செல்லா நின்ற பிங்கள நாம சம்வத்சரம் வெசாக மாசம் 4(ஆம் நாள்) 1857ம் வருஷம் மே மாதம் 14 இந்திர வம்ச ஜலதி சங்கரனான ப்ரகதாம்பாதாச ராஜா விஜயராய ரகுநாத தொண்டைமானார் பஹதூரவர்கள் பௌத்ரன் பிரகதாம்பாதாச யெக்சல்லன்சி ராஜா ரகுநாத தொண்டைமானார் பகதூரவர்கள் புத்திரன் பிரகதாம்பாதாச ஸ்ரீசிவராமஸ்வாமிதாச யெக்சல்லன்சி ராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூரவர்களும் மேற்படியார் துவிதிய பாரியையாகிய ஜானகி பாயிஸாப்பு அவர்களும் சத்குரு ஸ்ரீசிவராமஸ்வாமி அவர்களுடைய கிருபா கடாக்ஷ பலத்தினால் இந்த தலவர சிங்கமெங்குர தீர்த்தத்தை முழுவதும் இறைத்து நிர்மால்யம் செய்வித்து யிந்த தீர்த்தத்தில் கிருகாவாசியாய் இருக்கிற ஜ்வரஹரேஸ்வரரெங்குற மூலலிங்கத்துக்கு அபிஷேகம் பூஜா நேவேத்தியம் முதலானது நடம்பி வைத்து ஸ்ரீசிவராமஸ்வாமி அவர்கள் முன்னுக்கு தெர்சனம் செய்தார்கள்” என்று அங்குள்ள கல்வெட்டு கூறுகின்றது.

 இதனால் கி.பி. 1857ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் நாளன்று புதுக்கோட்டை அரசர் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் அவர்கள் தன் இரண்டாம் மனைவியாகிய ஜானகி அம்மாளுடன் அங்கு சென்று தலவர சிங்கம் என்கிற சுனையில் உள்ள நீர் முழுவதையும் வெளியேற்றி தன் குலகுரு சிவராம ஸ்வாமி மூலம் அச்சுனையினுள் மூழ்கியிருந்த ஜ்வரஹரேஸ்வரர் என்கிற லிங்கப் பெருமானுக்கு வழிபாடு செய்தார் என்பது இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.

நூற்று அறுபத்திரண்டு ஆண்டுகளாக மீண்டும் நீரினுள் மூழ்கியிருந்த அந்த லிங்கத்திற்கு யாரும் வழிபாடு செய்ததாக எந்தவொரு குறிப்பும் இல்லை. இந்த 2019ஆம் ஆண்டு “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற இளைஞர்கள் அமைப்பினர் இந்திய தொல்லியல் துறையின் அனுமதி பெற்று சுனைநீர் முழுவதையும் வெளியேற்றிவிட்டு அந்த ஜ்வரஹரேஸ்வரர் என்ற லிங்கப் பெருமானுக்கு வழிபாடு செய்துள்ளனர். இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். நீரின் வடிவமாகவே திகழும் அப்பெருமானை மீண்டும் காண வழிவகை செய்த அந்த இளைஞர் கூட்டத்தினருக்கு தமிழகமே நன்றிக் கடன்பட்டுள்ளது.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
படங்கள்: ரமேஷ் முத்தையன்