தீர்த்த ராஜம்



கும்பகோணம் மகாமக குளம் நாயக்கர் ஆட்சி காலத்தில் ஸ்ரீகோவிந்தப்ப தீக்ஷிதர் என்பவரால் கட்டப்பட்டது. குளத்தில் கரைகளிலேயே 16 மண்டபங்களை நிறுவினார் அவர். குளத்திற்குள்ளேயே இருபது விதமான தீர்த்தங்கள் அமைந்துள்ளன. அவை முறையே, இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், யமுனை தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவிரி தீர்த்தம், குமரி தீர்த்தம், சிந்து தீர்த்தம், சரயு தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், தாமிரபரணி தீர்த்தம் ஆகும்.

இக்குளத்திற்கு வடபுறத்தில் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, தாமிரபரணி, சரயு, சிந்து ஆகிய நவநதி கன்னியரின் சிலைகளையும் தரிசிக்கலாம். மகாமக நாளில் இந்த ஒன்பது நதிகளும் இங்கு சங்கமமாகின்றன. இக்குளத்தில் வடகரையில் பிரம்ம தீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர்,தனேஸ்வரர்,  இடபேஸ்வரர் ஆகியோர் மேற்கு நோக்கியவாறும், குளத்தில் வடகிழக்கு கோடியில் பாணேஸ்வரரும், கிழக்குக் கரையில் தென்மேற்கு திசையை நோக்கிய கோணேஸ்வரர் சந்நதியும், மேற்கு திசையை நோக்கி குணேஸ்வரர் சந்நதியும் உள்ளன.

தென்கிழக்கில் பைரவேஸ்வரர் வடமேற்கு திசையை நோக்கியும், தெற்குக் கரையில் அகத்தீஸ்வரர், வியாசேஸ்வரர், உபாயிகேசர் ஆகியோர் சந்நதிகளும் அமைந்துள்ளன. இப்பேற்பட்ட அரிய தத்துவமும், அழகும், புராணமும் கொண்ட இந்தக் குளத்தையும், கோயில்களையும் தரிசிக்க நமது பிறவித் துயர் நிச்சயம் அறுபடும். நம்முடைய அகந்தை எனும் மிருக மாயாவியை அழித்து நித்தியமான பிரம்மதோடு கலக்க வைக்க கைகளில் பாணமேந்திய ஈசன் குடந்தை முழுதும் வியாபித்திருக்கிறான். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அமுதம் எனும் திருவருள் நோக்கி நம் மனம் எனும் கும்பத்தை வைத்துக் கொண்டால் அதை அமிர்தத்தால் அநாயாசமாக நிறைத்து விடுவான்.

- லட்சுமி