ஜீவ காருண்யம்



கிராமங்களில் ஆடு, மாடு மேய்க்கும் இடங்களிலெல்லாம் அக்காலத்தில் ஒரு கல் கம்பம் நட்டு வைத்திருப்பார்கள். அந்தக் கல்லுக்கு திணவுக் கல் என்று பெயர். மெல்ல அதனருகே வந்து மாடுகள் தோலின் திணவுக்கு இதமாக தேய்த்துக்கொண்டுவிட்டு அப்பால் நகரும். இதுபோல சிறுசிறு விஷயங்களெல்லாம் கூட அந்தக் காலத்தில் பார்த்துப் பார்த்து செய்தனர். நகரங்கள் விரிவாகும்போது விளை நிலங்களெல்லாம் வீடுகளாகும்போது சிறுசிறு பறவைகள் முதல் கால்நடைகள் வரை என்ன செய்வதென்று தடுமாறிப் போகின்றன.

கோடையின் உக்கிரத்தில் நீர் நிலைகள் கிராமப் புறங்களிலேயே காய்ந்துபோய் வெடித்து வானம் பார்க்க இருக்கும். கான்க்ரீட் காடுகளாகிவிட்ட பெருநகரங்களில் இருக்கும் பறவைகள் எங்கு செல்லும். நீர் நிலைகளே அற்றுப்போன இடங்களிலிருந்து எப்படி இடப் பெயர்ச்சி மேற்கொள்ளும் என்பதெல்லாம் சவாலான விஷயங்கள். ஆனால், பெரியோர்கள் புண்ணியம் எனும் மதத்தின் அடிப்படையை முன்னே வைத்து காக்கைக்கு தினமும் சோறு போடுங்கள் என்றார்கள். எறும்பு முதல் குருவி வரை ஏதேனும் ஒருவிதத்தில் மனிதர்கள் தினசரி உணவிட்ட படி இருந்தார்கள்.

இந்தக் கோடையில் நாம் பறவைகளுக்கு உணவிடுகிறோமா இல்லையோ, முக்கியமாக பறவைகள் நீர் அருந்த ஏதேனும் ஏற்பாடு செய்யலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியில் அகன்ற சற்றே பெரிய மண் சட்டியையோ அல்லது சிமெண்ட் தொட்டியையோ வைத்து அதில் பறவைகள் அதன் விளிம்பில் அமர்ந்து நீர் பருகிவிட்டு செல்லுமாறு செய்யலாம். அதனருகேயே சிறு சிறு தானியங்களை தூவி வைக்கலாம். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அதைச் சுத்தம் செய்து மீண்டும் நீர் நிரப்பி வைக்கலாம்.

மாடியில் செடிகள் வைத்து வளர்த்து வருபவர்கள் இதையும் சேர்த்துச் செய்யலாம். நீங்கள் ஓரிரு நாட்கள் தொடர்ச்சியாக இதைச் செய்தாலே நாளடைவில் நிறைய பறவைகள் வந்தமர்ந்து நீர் அருந்திவிட்டுச் சென்றபடி இருக்கும். இதை ஒரு அடிப்படையாகக் கொண்டு மேலதிகமாக அவரவர் வசதியைப் பொறுத்துச் செய்யலாம்.

வள்ளலார், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார். இதனூடாக சொல்வதற்கு இன்னொன்றும் உண்டு. தெருவோரங்களில் காலில் செருப்பின்றியும், குடையின்றி நடந்து வரும் வயதான கைவிடப்பட்ட மனிதர்களுக்கு நாம் காலணியும், குடையும் வாங்கிக் கொடுக்கலாம். அலுவலகத்திற்கு செல்லும்போதே நான்கைந்து மோர் பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக்கொண்டு நம் கண்களில் படும் இதுபோன்று வாடும் மானிடர்களுக்கு அளிக்கலாம். நான் செய்தால் பிரமாண்டமாகத்தான் செய்வேன் என்று சிலர் இதுபோன்ற விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே வருவார்கள்.

‘‘எனக்கு நிறைய சமூக சேவை செய்யணும்னு ஆசை. நிச்சயம் ஒருநாள் செய்வேன்’’ என்று ஆண்டுக்கணக்காக சொன்னபடி இருப்பார்கள். அது ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை. சிறுசிறு செயல்களில்தான் தொடக்கமே உள்ளது. பின்னர் தானாக அது பெருகும். ஜீவ காருண்யம் என்பது நமது கடமை மட்டுமல்ல. அது நம்முடைய இயல்பு என்பது செய்து பார்த்தால்தான் புரியும். இதைத் தெளிந்து சொன்னதால்தான் அவர் வள்ளலார் ஆனார்.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர் )