வெயிலும் தெய்வங்களும்



மனித வாழ்வில் எந்தெந்த நிலைகளில் தெய்வம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் எண்ணினார்களோ, அந்தந்த நிலைகளில் தெய்வத்தை வைத்து அழகு பார்த்தனர். தங்களது எல்லா செயலுக்கும் தெய்வமே உற்ற துணை என கருதினர்.

பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவது முதற்கொண்டு கல்வி புகட்டுவது, முதல் முதலில் வேலைக்கு உட்படுத்துவது, தொழில் செய்ய தொடங்குவது, மணம்புரிதல் என எல்லா நிகழ்வுகளில் தெய்வத்தை முன்னிறுத்தியே செய்து வந்தனர் முன்னோர்கள். உறவுகளை ஒருங்கிணைக்கவும், ஒரே இடத்தில் சமைத்து உண்ணவும் திருவிழா நடத்தினர். தெய்வத்தை போற்றியது போலவே ஒழுக்க நெறிகளில் தவறினாலோ, படைத்தல், விழா எடுத்தல், விரதம் இருத்தல் முதலானவற்றில் தவறு இழைத்தாலோ தெய்வம் தண்டிக்கும் என்று அஞ்சினர்.

குளிர்காலங்களில் காய்ச்சல் வந்தால் கூட தான் செய்த தவறுக்கு சாமி கொடுத்த தண்டனை என்று கருதினர். சிவன் கங்கையை தனது தலையிலே கொண்டதால் தண்ணீரில் வரும் கண்டங்களையும் (கெடுபலன்கள்), நோய்களையும் தடுக்க சிவனால் தான் முடியும் என்று எண்ணினர். அதனால் தான் சிவபெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற நாமத்தையே கொடுத்தனர். ஜலம் என்றால் நீர் என்று பொருள். தண்ணீரால் ஏற்படும் கண்டங்களை நீக்க வல்லவர் என்பதாகும்.

ஜுரத்தை போக்க வல்லவரும் அவரே என்பதால் சிவபெருமானுக்கு ஜுரகரேஸ்வரர் என்றொரு நாமமும் உண்டு. அது போல கோடை காலங்களில் வரும் வெப்ப நோய்களான சின்னம்மை, பெரியம்மை, மஞ்சள் காமாலை முதலான நோய்களை தண்டனையாக தருவது அம்மன் தான். அதைப்போக்க வல்லமை கொண்டவளும் அம்மன் தான் என்று நம்பினர்.

வெப்ப நோய்கள், வெயில் நோய்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த நோய்கள் தட்ப வெப்பநிலை காரணமாக, உடலியல் ரீதியான மாற்றங்களினால் வருகிறது. ஆனால் அந்த நோய்கள் அம்மன் கோபத்தினால் வருவதாக முன்னோர்கள் நம்பினர்.  சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் வரகாரணம் என்னவென்பதற்கு புராணகதை ஒன்றும் சொல்லப்படுகிறது.

அஷ்ட காளிகள் அவதரித்தல்

அசுரர் குலத்து பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள். பிரம்மதேவன் தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் என்ற மகிஷாசுரன் பிறந்தான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்டு அவன் முன் தோன்றிய சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டான். அதனை கேட்ட சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.

வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர்) (மகிஷன் ஆண்ட ஊர் என்பதால் மகிஷா ஊர் என்ற அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ்செயல்கள் புரிந்து வந்தான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

இதனிடையே கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக சிவனுடன் இருக்கையில், பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறு கனமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக்கொண்டு கண்ணை திறந்தார் சிவன். ‘‘என்ன விளையாட்டு இது’’ சினம் கொண்டார் சிவன். பணிந்தார் பார்வதிதேவி, ‘‘சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காக செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்’’ என்றார். இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன், நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் என்று சபித்தார்.

இந்த சிறிய தவறுக்கு மானிட பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா! என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக்கண்ணை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன்.

பாதாள லோகத்தில் நாகக்கன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப்பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைகளாக உருமாறி வெளி வந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடை காத்து வந்தாள். 41 வது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. 2வதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி - என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால் முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று.

4வதாக பிறந்தாள் உலகநாயகி, 5வதாக பிறந்தாள் அரியநாச்சி இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். 6வதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். 7வது பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.

பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்ப, எல்லாம் அந்த சிவனார் செயல் என்றாள் நாகக்கன்னி. உடனே சிவனிடம் எங்களை ஏன், தாயைப்போல் படைக்காமல் மனித குல பெண்களாக படைக்கவேண்டும்.

இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப்பெறப்போகிறோம். அதை அந்த சிவனிடமே கேட்போம் என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அவர்களின் தவத்தைக்கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றி, மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு என்று கூற, மாரி முத்தாரம்மன், தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் வரங்கள் கேட்க, அவர்களுக்கு அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.

சாமுண்டீஸ்வரி

சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரிபர்வத மலைக்கு வந்து, அஷ்ட காளிகள் எட்டுபேரும் ஒரு சேர நின்று சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷா சுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், தாயே என்னை மன்னித்து, கானகத்தில் வாழும் உயிரிகளுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம்
தந்தருள வேண்டும் என்றான்.

மகிஷாசூரமர்த்தினி

ஆங்கார ரூபினியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபினியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டுபேரும் ஒரு சேர நின்ற கோலம் கொண்ட சக்தி. மகிஷாசூரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள். மகிஷா சுரனை வதம் செய்த பின் எட்டுபேரும் சிவபெருமான் தங்களை மணமுடிப்பதாக கூறினாரா, ஆகவே, உடனே சிவனை மணம் முடிக்க கயிலாயம் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கா தங்கை எட்டுபேரும் கயிலாயம் வருகிறார்கள்.

இதையறிந்த சிவன், நந்தி தேவரை அழைத்து ரகசியம் கூற, அதன்படியே நந்திதேவரும் வண்டு மலைக்கு சென்று 8 வண்டுகளை பிடித்து 8 குழந்தைகளாக்கி அஷ்ட காளிகள் வரும் வழியில் வைத்திருந்தார். குழந்தைகள் அழுகுரல் கேட்ட அவர்கள் ஆளுக்கொரு குழந்தையை கையில் எடுத்து அதன் அழுகுரலை நிறுத்தி, அவர்களுடன் கயிலாயம் வருகிறார்கள். சிவபெருமானிடம் தாங்கள் கூறியது போல எங்களை மணமுடிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது சிவபெருமான் நான் உங்களிடம் கூறியது உண்மைதான். ஆனால் நீங்கள் கன்னியர்களாக வரவில்லையே, கையில் குழந்தையோடு அல்லவா வந்திருக்கிறீர்கள் என்றார். அப்படியானால்... என்று ஐயத்துடன் வினா தொடுத்தனர் அஷ்ட காளிகள். நீங்கள் பூலோகம் செல்ல வேண்டும். மனித உயிர்களுக்கு அபயம் அளித்து காக்கவேண்டும். உங்களுக்கு எல்லா வரமும் தந்தருள்வேன் என்றார்.

வரங்களை பெற்றவர்கள் அய்யன் சிவபெருமான் ஆசியோடு பூலோகம் புறப்படுகின்றனர். அப்போது மாரி முத்தாரம்மன், சிவனிடம் சென்று தனக்கு தனியே ஒரு வரம் வேண்டும். அது மற்றவர்கள் பெறாததாக இருக்க வேண்டும் என்றாள். அப்படி என்ன வரம் என்று சிவபெருமான் யோசிக்க, மாரிமுத்தாரம்மன் கூறினாள். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தப்பை உணர்ந்த பின் மன்னிக்கப்பட வேண்டும். அந்த வகையில் எனக்கு முத்து வரம் வேண்டும் என்று கேட்க, சிவபெருமானும் தனது சக்தியால் 108 முத்துக்களை உருவாக்கி, அதை ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் வைத்து அன்னை மாரிமுத்தாரம்மன் கையில் கொடுத்தார்.

முத்துக்கள் சக்தி வாய்ந்தவையா என்று வினா தொடுத்த மாரிமுத்தாரம்மனிடம், நிச்சயமாக சக்தி வாய்ந்தவை தான் என்றார் சிவபெருமான். அப்படியானால் அதை உங்களிடமே சோதித்து பார்க்கட்டுமா என்றாள் அன்னை நகைப்புடன். அய்யனும் புன்னகைத்தார். பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களை வாரி சிவபெருமான் மேல் இறைத்தாள் மாரிமுத்தாரம்மன்.

உச்சி முதல் உள்ளங்கால் வரை முத்துக்கள் விழுந்து வலியால் வேதனைப்பட்டார் சிவன். அதைக்கண்டு பார்வதி தேவி கலங்கினாள். அண்ணன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவரும் தங்கையின் அம்சமான மாரிமுத்தாரம்மனிடம், நீ போட்டதை, நீயே தான் இறக்க வேண்டும் என்றார். எப்படி என்ற மறு கேள்வி கேட்ட மாரிமுத்தாரம்மனிடம், அதற்கான விளக்கமளித்து வழிமுறையை சொல்லி கொடுத்தார் மகாவிஷ்ணு. அதன்படி தலைவாழை இலையை விரித்து, அதன் மேல் தயாபரனான சிவபெருமானை படுக்க வைத்து, சக்தியின் சூலாயுதத்தால் உருவான வேம்பு மரத்தின் இலைகளைக்கொண்டு வந்து அதை வைத்து முத்துவை இறக்கினாள் முத்தாரம்மன்.

அகிலத்தையே ஆளும் சிவபெருமானாலேயே தாங்க முடியவில்லை. மனித உயிர்கள் எப்படி தாங்கிக்கொள்ளும் என்று கருதி மகாவிஷ்ணு அந்த முத்துக்களை வாங்கி, கொப்பரையில் வைத்து வறுத்து, அதன் வீரியத்தை குறைத்து அதன் பின் மாரிமுத்தாரம்மனிடம் எடுத்து கொடுத்தார். முத்து வரமும், தீராத நோய்களை திருநீற்றால் தீர்த்தருளும் வரமும் பெற்ற மாரிமுத்தாரம்மன், முத்துக்கள் பெற்றதால் முத்துமாரி என்றும் முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படலானாள். அஷ்டகாளிகள் அங்கிருந்து பூலோகம் வருகிறார்கள். எட்டு பிள்ளைகளையும் ஒன்றாக்கி, ஒரே பிள்ளையாக உருவாக்கினர். வழியில் கண்டெடுத்த அந்த பிள்ளைக்கு வயிரவன் என்று பெயரிட்டனர்.

வெயில் உக்கிரமாக உள்ள காலங்களில் அம்மன், சாமி என்று ஆண் தெய்வம், பெண் தெய்வம் என்று பாகுபாடு பாராமல் வழிபடும் பக்தர்கள் சாமிக்கு கோடைக்காலங்களில் இளநீர் மற்றும் குளிர்ச்சியை தரும் பழங்களை படைத்து வழிபட்டனர். மேலும் பலவிதமான அபிஷேகங்களை செய்து தெய்வத்தை குளிர வைத்தனர். மேலும் வெப்பத்தோடு, கருவறையில் தெய்வம் இருந்தால் நம்மைப்போல் சாமிக்கும் வெப்பம் தாக்கும் என்பதால் சாமி காற்றோட்டமாக இருக்க வேண்டும் எனக்கருதி கோயிலின் மேற்கூரை மட்டும் விலக்கி வைத்திருந்தனர்.

பின்னர் மழைக்காலம் வந்ததும் மேற்கூரையை அமைத்துக்கொண்டனர். இதில் சில கோயிலில் தெய்வங்கள் தங்களுக்கு பணிவிடை செய்யும் அர்ச்சகர் கனவில் தோன்றியும், கோயில் பணிகளை முன்னின்று செய்யும் நபர்களின் கனவில் தோன்றியும், அருளாளர், (சாமியின் அருள் வந்து ஆடும் நபர்) மூலமாகவும் எனக்கு கூரை வேண்டாம், வெயில் என் மீது பட வேண்டும் என்று கேட்டு கூரையின்றியும், கூரையிருந்தால் அது துவாரங்கள் போடப்பட்டு இருக்கும் நிலையில் பல கோயில்கள் உள்ளன.

இவ்வாறு வெயிலை விரும்பிய தெய்வங்களை அது தொடர்பான பெயர்களிலேயே பக்தர்கள் அழைத்து வந்தனர். அவ்வாறு அழைக்கப்பட்டதன் காரணமாகத்தான் வெயிலு உகந்த உடையார் சாஸ்தா, வெயில் உகந்த அம்மன், வெயில் தாங்கி அம்மன், வெயில் உகந்த பிள்ளையார், வெயில் உகந்த சுடலை, வெயில் விரும்பி வேட்டைக்காரன், வெயில் தாங்கி பேச்சி என பல தெய்வங்கள் உள்ளன.

உச்சி வேளை வெயில் உச்சியை பிளக்கும் வகையில் அடித்தாலும் வெயிலை பொருட்டாக எண்ணாமல் வேலையை பாரு, நம்ம வெயிலுகந்த அம்மன் பார்த்துக்குவா ஒரு நோயும் நம்மை அண்டாது என்று தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர்.

சு.இளம் கலைமாறன்